Published : 25 Jul 2024 07:59 AM
Last Updated : 25 Jul 2024 07:59 AM
தன்னாட்சி அமைப்பின் பொதுச் செயலாளர் வினோத்குமார் எழுதிய ‘நகரமயத்தால் சாதி ஒழிந்துவிடுமா?’ கட்டுரையைப் படித்தேன். ஜூலை 4 அன்று நான் எழுதிய ‘ஊர் - சேரி - காலனி: மாற்றத்துக்கான தருணம்’ கட்டுரைக்கு ஏறக்குறைய மறுப்புக் கட்டுரையாகவே அவரது கட்டுரை அமைந்துள்ளது. எனவே, சில விளக்கங்களை அளிக்க வேண்டியது எனது கடமை.
முதலில், ஊர் சேரி காலனி என்பது புதிய பிரச்சினை அல்ல. பல நூற்றாண்டுகளாக இருக்கும் பிரச்சினைதான். ஆனால் அதை இணைப்பதற்கு அல்லது பாதிக்கப்பட்டவர்களை அதிகாரப்படுத்துவதற்கு இதுவரை யாரும் எந்தத் திட்டத்தையும் முன்வைக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியிருப்பதுடன், அதற்குச் சில தீர்வுகளையும் முன்வைத்திருக்கிறேன்.
எனது முன்வைப்புகள் சாதியை ஒழித்துவிடும் என்று எங்கேயும் நான் சொல்லவில்லை. நகரமயத்தால் சாதி ஒழிந்துவிடும் என்பது எனது கருத்தே அல்ல. நகரமயத்தால் சாதி தளர்ந்துவிடும் என்பதுதான் எனது முன்வைப்பு.
இரண்டாவது, கட்டுரையாளர் சாதி ஒழிப்பைப் பற்றி வைத்திருக்கும் கண்ணோட்டம் தவறானது. சாதி என்பது ஒரு மனநிலை. அதை ஒரே அடியாக வெட்டி வீழ்த்த முடியாது. அதனால்தான் அம்பேத்கர் Annihilation of Castes என்று பெயரிட்டார். Eradication of Castes என்று அவர் வரையறுக்கவில்லை. அம்பேத்கரின் சாதி ஒழிப்பு என்பது ஒரு பரிணாம மாற்றக் கோட்பாடாகும், அதன்படி சாதி ஒழிப்பு படிப்படியாகத்தான் நிகழும். எனவே, பொத்தாம் பொதுவாக நகர மயமாக்கம் சாதியை ஒழிக்காது என வாதிடுவது சரியல்ல.
மூன்றாவதாக, சேரிகள் தங்களுக்கெனத் தனிப் பெயரைச் சூட்டிக்கொள்வதால் என்ன நிகழும்? முதலில் சேரியை ஒரு தனி கிராமமாக அங்கீகரியுங்கள். பிறகு என்ன மாற்றம் நடக்கிறது என்று பார்ப்பதற்கு ஒரு பத்தாண்டுகள் பொறுத்திருங்கள். அதற்குப் பிறகு முறையான ஆய்வுகளை மேற்கொள்ளுங்கள்.
சேரிகள் பண்பு மாற்றத்தைப் பெற வேண்டுமானால், அவை தங்களுக்கெனப் புதிய அடையாளத்தைப் பெற வேண்டும். தங்களை அதிகாரம் உள்ளவர்களாகத் தகவமைத்துக் கொள்வதற்கான நம்பிக்கையை வழங்க வேண்டும். அதற்கான தூண்டுகோல்தான் பெயர் மாற்றத் திட்டம்.
நான்காவதாக, சாதி ஒழிப்பைப் போல சேரி ஒழிப்பு நடக்காது. சாதி என்பது சாதியை நம்பும் சாதி இந்துக்களின் பிரச்சினை. சாதியை எதிர்க்கும் தலித்துகளின் பிரச்சினை அல்ல. சேரி என்பது தீண்டாமையின் வரையறுக்கப்பட்ட நில அடிப்படையிலான வடிவம். அதைச் சாதி இந்துக்களாலும் ஒழிக்க முடியாது.
எனவேதான், பண்பு மாற்றம் வேண்டும் என்கிறேன். சேரி என்னும் இழித்தன்மையை தலித்துகளே ஒழித்துவிடுவார்கள். அவர்களுக்குத் தனி கிராமத் தகுதியும், தனி உள்ளாட்சி அதிகாரமும், தனி கிராமப் பெயரையும் வழங்குங்கள். பத்தாண்டுகளில் தமிழ்நாட்டில் ஒரு அமைதிப் புரட்சி நடந்திருப்பதைக் காண்பீர்கள்.
ஐந்தாவது, கள்ளக்குறிச்சிக்கு அருகே ஒரு சேரியை ‘பெரிய வேங்கை’ எனப் பெயர் மாற்றம் செய்திருக்கிறார்கள். ‘இந்து தமிழ் திசை’யில் வந்த கட்டுரையின் எதிர்வினை அது. தூத்துக்குடிக்கு அருகே சங்கரலிங்கபுரம் கிராமத்தில் தீண்டாமைச் சுவரால் பாதிக்கப்பட்ட தலித் மக்கள் தங்களது சேரிக்கான பெயரை மாற்றுவதாக என்னிடம் சொன்னார்கள். சுயமரியாதைக்கான ஒரு விதையை விதைத்திருக்கிறோம். விவாதங்கள் தொடரட்டும்!
- தொடர்புக்கு: writersannah@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT