Published : 14 May 2018 08:50 AM
Last Updated : 14 May 2018 08:50 AM
கர்நாடகத்தில் காங்கிரஸ் சந்திக்கும் பிரதான சவால் எது?
எல்லோரையும் சேர்த்துக்கொண்டு, எல்லோருக்குமான வளர்ச்சியை அடைய வேண்டும் என்பது எங்களுடைய முதன்மையான நோக்கம். அத்துடன் மாநிலம் மீது பாஜக நடத்தும் தாக்குதலும், அவர்கள் நிறுவ நினைக்கும் மையவாத ஒற்றை இந்தியப் பார்வையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
தென்னிந்திய மாநிலங்களிலேயே பாஜக ஆண்ட ஒரே மாநிலம் கர்நாடகா மட்டுமே. ஒரு தேசம் - ஒரு கலாசார நடைமுறையை இங்குள்ள மக்கள் மீது பாஜக சுமத்த முயற்சிப்பதாக நீங்கள் உணர்கிறீர்களா?
பாஜகவின் திட்டம் அதுதான். அதனால்தான் எல்லா மாநில விஷயங்களிலும் பாஜக அதிகம் தலை நுழைக்கிறது. ஒற்றைமையப் பார்வையை வலியுறுத்தி அமைப்புகளைக் கைப்பற்றும் எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது.
கர்நாடகத்தில் எத்தனை இடங்களை நீங்கள் பிடிப்பீர்கள்?
நான் குறிசொல்பவன் அல்ல. வெல்லப்போகும் தொகுதிகளின் எண்ணிக்கையை என்னால் சொல்ல முடியாது. ஆனால், தேர்தலில் வெற்றிபெறப் போகிறோம் என்பதைச் சொல்ல முடியும்.
பிரதமர் மோடி, ‘சித்தராமையா எதிர் மோடி’ என்ற நிலையை உருவாக்குகிறாரா?
மோடியின் அரசியல் பாணியே பிரிவினை செய்து கொந்தளிப்பை உருவாக்குவதுதான். அதை அவர் ஒவ்வொரு தேர்தலிலும் செய்துவருகிறார். தேர்தல் நெருங்க நெருங்க அதை மூர்க்கமாகச் செய்வார். அந்த பாணி கர்நாடகாவில் வெற்றி யைக் கொடுக்கப்போவதில்லை. மோடியின் பிரச்சாரத்தை நீங்கள் பார்த்தீர்களா? ஊழல் எதிர்ப்பு என்று பேச முற்பட்டவர் தோல்வி அடைந்தார். ஏன்? ஏனென்றால், பாஜகவின் தலைவர் அமித் ஷாவே, ‘எடியூரப்பாவின் அரசுதான் அதிகபட்சமாக ஊழலானது’ என்று குறிப்பிட்டார். இன்னொருபுறம் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, இப்போது காங்கிரஸ் ஆளும் ‘கர்நாடகத்தில்தான் சிறந்த சாலைகள் போடப்பட்டிருக்கின்றன’ என்று கூறினார். வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் பிரமாதமான சாதனை படைத்திருப்பதை மோடியே முன்பு ஒப்புக்கொண்டிருக்கிறார். அவருக்கு இங்குள்ள காங்கிரஸ் ஆட்சியைப் பற்றிக் கூற ஒன்றுமில்லை. அதனால் என்னையும் சித்தராமையாவையும் தனிப்பட்ட முறையில் தாக்குகிறார்கள். அது மோடியின் பாணி.. திசை திருப்பும் பாணி.
ஊழல் பற்றியும் குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் பற்றியும் நீங்கள் பேசிவருகிறீர்கள். அதே குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடியும் சித்தராமையா அரசு மீது ‘10% தரகு அரசு’ என்று வைக்கிறாரே?
எடியூரப்பா சிறையில் இருந்தவர் என்பது உண்மை. ரெட்டி சகோதரர்கள் நிலக்கரி ஊழலில் 35 ஆயிரம் கோடியைத் திருடினார்கள் என்பது இன்னொரு உண்மை. மோடி இந்த மாதிரி யான நபர்களை உடன் வைத்துக்கொண்டுதான் ஊழல் எதிர்ப்பைப் பேசுகிறார் என்பது இன்னொரு உண்மை. அவையெல்லாம் எடுபடப்போவதில்லை. பிரதமர் முன்பு நமக்கு நான்கு உறுதிமொழிகளை அளித்தார். ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்றார். ஆனால், எட்டு ஆண்டுகளில் மோசமான சூழல் இன்று நிலவுவதை அரசே ஒப்புக்கொள்கிறது. விளைபொருட்களுக்குச் சரியான விலை தருவோம் என்று வாக்குறுதி தந்தார். ஆனால், இந்திய விவசாயிகளின் முகத்தைப் பார்த்தால் தெரியும் அவரது உறுதிமொழியின் பலன் எத்தகையது என்று. பிரதமர் ஊழல் ஒழிப்பு வாக்குறுதி அளித்தார். ஆனால், அமித் ஷாவின் மகன் ரூ. 50 ஆயிரத்தை ரூ. 80 கோடியாக மாற்றியுள்ளதைப் பார்க்கிறோம். கடைசியாக, வெளியுறவுக் கொள்கை வாக்குறுதி. அவர் சீனாவுக்குப் போய்விட்டு வந்தார். ஆனால், டோக்லாம் குறித்து ஒரு வார்த்தை பேசவில்லை. சித்தராமையாவுக்குப் பாடம் எடுப்பதற்குப் பதிலாக பிரதமர் தாம் கொடுத்த வாக்குறுதிகள் தொடர்பாக என்ன செய்தார் என்பதை விளக்க வேண்டும்.
பாஜகவின் சாதியவாத அணுகுமுறை குறித்து நீங்கள் ட்வீட் செய்தீர்கள். ஆனால் சித்தராமையா அரசும் லிங்காயத்துகளுக்கு சமயரீதியாக சிறுபான்மை அந்தஸ்து வழங்கவேண்டும் என்று பரிந்துரைத்து, அதே சாதிய அரசியலை முன்னெடுப்பதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து என்ன சொல்கிறீர்கள்?
ஒரு சமூகத்தினருக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பதற்கும் ஒரு சமூகத்தை நசுக்குவதற்கும் வித்தியாசம் உள்ளது. பாஜக அமைப்புரீதியாக ஒரு சமூகத்தை நொறுக்குகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் ஒடுக்கப்பட்டோரும் சிறுபான்மையினரும் அடித்து நொறுக்கப்படுகின்றனர்.. கொல்லப்படுகின்றனர்.
குஜராத் மாநிலத்தைப் போன்றே நீங்கள் இங்கேயும் கோயில்களுக்கு விஜயம் செய்தீர்கள். காங்கிரஸ் குறித்து நிலவும் பிம்பத்தைச் சரி செய்யும் நடவடிக்கையா இது?
இந்தியாவின் மைய அம்சமாக மதம் உள்ளது. ஒரு சமயத் தலத்துக்கு என்னை ஒரு அரசியல் தலைவராக யாராவது அழைத்தால், அவர்கள் மனிதர்கள் மீது மரியாதையும் பரிவும் கொண்டிருந்தால் அங்கே போவேன். வெறுப்பை, வன்முறையை, சமூகப்பிரிவினையைப் பரப்பும் இடங்களுக்கு நான் போக மாட்டேன். எனது வாழ்க்கை முழுவதும் நான் ஆலயங்கள், மசூதிகள், குருத்வாராக்களுக்குப் போய்வருகிறேன்.
இந்தத் தேர்தலில் 224 தொகுதிகளில் 15 இடங்களை மட்டுமே காங்கிரஸ் பெண்களுக்கு அளித்துள்ளது?
பாஜகவைவிட மூன்று மடங்கு அதிகமாகக் கொடுத் திருக்கிறோம். ஆனால் மற்றவர்களோடு ஒப்பிட விரும்பவில்லை. நாங்கள் கூடுதலாகப் பெண்களுக்கு சீட்களை ஒதுக்கியிருக்க வேண்டும். அந்தத் திசையில் அடுத்தடுத்த தேர்தல்களில் கூடுதல் இடம் கொடுப்போம்.
2019-ல் வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திப்பதற்கு கர்நாடகத் தேர்தல் முடிவு எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று நினைக்கிறீர்கள்?
பரஸ்பர மரியாதை, மேம்பாடு, சமத்துவ அடிப்படை யில் அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைக்க முயலும் அமைப்பு காங்கிரஸ். பாஜகவோ இதற்கெல்லாம் நேரெதிரான நிலையில் உள்ளது. பாஜகவைத் தோற்கடிக்கக்கூடிய ஒரே சக்தி காங்கிரஸ்தான். இது கருத்தாக்கங்களுக்கு இடையிலான யுத்தம். வெறுப்பு, வன்மத்தின் அடிப்படையிலான கருத்தியலுக்கு எதிராக நாங்கள் போராடிவருகிறோம். ஏனெனில், பெரும்பாலான இந்திய மக்கள் அமைதி விரும்பிகள். நாங்கள் பாஜகவைத் தோற்கடிப்போம் என்பதில் உறுதியுடன் உள்ளோம்.
‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: ஷங்கர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT