Published : 27 May 2018 10:00 AM
Last Updated : 27 May 2018 10:00 AM
திரும்பிய பக்கமெல்லாம் அழுகையும் கண்ணீருமாய் நிற்கிறார்கள் மக்கள். தூத்துக்குடி துயரக்குடியாகி நிற்கிறது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நூறாவது நாள் போராட்டம் இப்படித்தான் முடியும் என்று யாருமே நினைத்திருக்க மாட்டார்கள். கலவரத்திலும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டிலும் பலியான உயிர்களின் எண்ணிக்கை 13. மேலும், 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்திருக்கிறார்கள்.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த 23 ஆண்டுகளாகத் தூத்துக்குடி மக்கள் போராடிவருகிறார்கள். இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், ஆலை விரிவாக்கத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டம் நடத்திவந்தனர் தூத்துக்குடி மக்கள். இந்தப் போராட்டத்தின் நூறாவது நாளில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு மாவட்ட மக்கள் கூட்டமைப்பு’ அறிவித்தது.
அ.குமரெட்டியாபுரத்தில் 100 நாட்களாகப் போராட்டம் நடந்தும் மாவட்ட ஆட்சியரோ, அமைச்சர்களோ போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் குறைந்தபட்ச பேச்சுவார்த்தைகூட நடத்தவில்லை. ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்ட அறிவிப்புக்குப் பின்னர் ஏ.எஸ்.பி செல்வநாகரத்தினன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதுகூட போராட்டக்காரர்களைப் பிளவுபடுத்தும் வேலைகள்தான் நடந்தன. பேச்சுவார்த்தையின் இறுதியில், முற்றுகைப் போராட்டத்தைக் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமாக நடத்தலாம் என யோசனை சொன்னார் ஏ.எஸ்.பி. இதை ஒரு பிரிவினர் ஏற்றாலும், பெரும்பகுதியினர் முற்றுகைப் போராட்டம் நடத்துவதில் குறியாக இருந்தனர். முகம் தெரியாத நபர்கள் குறிப்பிட்ட வண்ணங்களில் உடையணிந்து ஆங்காங்கே வன்முறையைத் தூண்டிவிட்டதாக போலீஸ் தரப்பிலும் பொதுமக்கள் தரப்பிலும் சொல்கிறார்கள். அதேபோல், போராட்டத்தை முன்னின்று வழிநடத்திய நபர்களைக் குறிவைத்து சுட்டது போலீஸ் என்ற தகவலும் மிரள வைக்கிறது. “தவிர்க்க முடியாமல் துப்பாக்கிச் சூடு நடத்தினாலும் முழங்காலுக்குக் கீழ்தான் சுடப்படவேண்டும் என்பதுதானே விதி. அப்படியிருக்க இடுப்புக்கு மேலே குறிவைத்தது ஏன்?” என்றும் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
இது குறித்து நம்மிடம் பேசிய ஓய்வுபெற்ற காவல் துறை உயரதிகாரி ஒருவர், “100 நாள் போராட்டத்தை அரசு கவனித்ததுபோல ஆலை நிர்வாகமும் கவனித்திருக்கும். இந்தக் கால அவகாசத்தில் ஆலை தரப்பில் தங்களுக்கான ஆதரவாளர்களையும் எப்படியும் உருவாக்கி இருப்பார்கள். அப்படி அவர்களால் வளைக்கப்பட்ட நபர்கள் மூலம் வன்முறை தூண்டிவிடப்பட்டிருக்கலாம். இதுபோன்ற போராட்டக்களத்தில் திட்டமிட்டு நான்கு பேர் ஒரு வாகனத்துக்குத் தீ வைக்கும்போது எதுவுமறியாத அப்பாவிகள் சிலரும் அவர்களோடு சேர்ந்துகொள்வது இயற்கை. அப்படித்தான் கலவரம் பரவியிருக்க வேண்டும். இங்கே இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். காவல் துறை பணிக்கு வருபவர்களுக்கு முன்பெல்லாம் ஓராண்டுகாலம் கட்டாயப் பயிற்சி கொடுத்தார்கள். ஆனால், இப்போது மூன்று மாதம் பயிற்சி முடிவதற்குள்ளாகவே பந்தோபஸ்து உள்ளிட்ட பணிகளுக்கு அனுப்பிவிடுகிறார்கள். இதனால், அவர்கள் முழுமையான பயிற்சி ஏதுமில்லாமல் சராசரி மனிதர்களாகவே பணிக்கு வந்துவிடுகிறார்கள். அதனால், இக்கட்டான நேரங்களில் பிரச்சினைகளை சமாளிக்கும் உத்திகள் தெரியாமல் திணறுகிறார்கள்” என்று சொன்னார்.
“ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் கலவரமாக வெடித்ததற்கு காரணம் வெளியாட்கள் ஊடுருவலே” என்கிறார் நெல்லை சரக டிஐஜி கபில்குமார் சரத்கார். அதில் எத்தனை உண்மையோ... துப்பாக்கிக் குண்டுகளுக்குப் பலியானவர்களுக்குப் பின்னால் ஏகப்பட்ட சோகக் கதைகள்.
வக்கீலாகி கோர்ட்டுக்குப் போவான்னு நெனச்சேனே..!
துப்பாக்கிச் சூட்டில் வாயில் குண்டுபாய்ந்து உயிரிழந்த ஸ்னோலினுக்கு 17 வயதுதான்! 12-ம் வகுப்பு தேர்வெழுதிவிட்டு கல்லூரி கனவில் இருந்தவர். ஸ்னோலினின் தந்தை ஜாக்சன் மீன்பிடி தொழிலாளி. “வக்கீலாகி, மீனவர்கள் பிரச்சினைக்காக, சட்டப்படி போராடுவேன்னு அடிக்கடி சொல்லுவா என் மவ. பாளையங்கோட்டை சட்டக் கல்லூரியில் சேர்க்குறதுக்கு என்ன வழின்னு விசாரிச்சுட்டு இருந்தேன். இப்படிப் பிணவறைக்கு போவான்னு நினைச்சுகூட பார்க்கலியே..!” என்று அழுத ஜாக்சனை நம்மால் தேற்ற முடியவில்லை.
தாயைத் தூக்கிக் குடுத்துட்டு துடிக்குது இந்தப் பிள்ளைக..!
திரேஸ்புரம் ஜான்சி துப்பாக்கிச் சூட்டுக்கு பலியான இன்னொரு பெண். அவரது அண்ணன் ரெஜி நம்மிடம், “எஸ்.பி வண்டியை மறிச்சு, நின்னு பிரச்சினை செய்ததால சுட்டோம்னு போலீஸ் பொய் சொல்றாங்க. மூத்த மக வீட்டுக்கு மீன் கொண்டு போனா என் தங்கச்சி. கலவரத்தைப் பார்த்து, பயந்துபோய் நின்னவ, என்ன நடக்குதுன்னு சுத்திச் சுத்தி பார்த்துட்டு இருந்துருக்கா. அந்தக் கணமே பாஞ்சுவந்த தோட்டா ஒண்ணு அவ மூளைய சிதைச்சுருச்சு. தங்கச்சி வீட்டுக்காரரு ஜேசுபாலன் மீன்பிடி தொழிலாளி. இவுகளுக்கு ஒரு ஆணும், மூணு பொண்ணுமா நாலு பிள்ளைங்க. தாயைத் தூக்கிக் குடுத்துட்டு பிள்ளைங்க துடிக்குற துடியத்தான் பார்க்கவே முடியல” என்றார்.
கடைசி வரைக்கும் ஓட்டு வீட்டை மாத்த முடியலியே..!
லூர்தம்மாள்புரம் கிளாஸ்ட்டனுக்கும் பெரிய வசதி ஒன்றும் இல்லை. ஓட்டு வீட்டை இடித்துவிட்டு, கான்கிரீட் வீடு கட்ட வேண்டும் என்பது அவரது நெடுநாள் கனவு. அது நிறைவேறுவதற்குள் துப்பாக்கிச் சூட்டில் பலியாகிவிட்டார் கிளாஸ்ட்டன். அவரது நண்பர் ராஜா நம்மிடம், “கிளாஸ்ட்டனுக்கு ஒரு மகனும் மகளும் இருக்காங்க. மகனை இன்ஜினீயரிங்கும், மகளை நர்சிங்கும் படிக்க வைக்கணும்ன்னு ஆசைப்பட்டான். ஆனா, பெருசா வருமானம் இல்லாததால பையனைப் படிக்க வைக்க முடியல. ‘இந்த ஓட்டு வீடு மழைக்கு ஒழுகுது. அதை மாத்திட்டு கான்கிரீட் வீடா போடணும்’ன்னு அவன் சொல்லிக்கிட்டே இருந்தது இன்னும் என் காதுல கேட்டுட்டே இருக்கு சார்” என்றார். கிளாஸ்ட்டனை நினைத்து நினைத்து அழுது புலம்பி அவ்வப்போது மயங்கி விழுகிறார் அவரது தாய் எஸ்தர்.
சடங்குக்குப் பத்திரிகை கொடுத்தவருக்கு சடங்கு செய்ய வெச்சுட்டாங்க..!
கிருஷ்ணராஜபுரம் அந்தோணி செல்வராஜின் மரணம் கொடூரமான ரணம். மகளுக்கு அடுத்த மாதம் 18-ம் தேதி பூப்புனித நீராட்டு விழா. அதற்காக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்கள் வீட்டின் மூலையில் கிடக்கின்றன. அந்தோணி செல்வராஜின் சகோதரர் ராஜேஷ், “ஒரு தனியார் கம்பெனியில் அண்ணன் வேலை செஞ்சாரு. துப்பாக்கிச் சூடு நடந்த இடத்துக்குப் பக்கத்துலதான் அண்ணனோட ஆபீஸ். சத்தம் கேட்டு வெளியே, சும்மா வந்து நின்னவரைச் சுட்டுக் கொன்னுருக்காங்க. மகளோட சடங்குக்குப் பத்திரிகை கொடுத்துட்டு இருந்தவருக்கு, சடங்கு செய்ய வச்சுட்டாங்க” என்று புலம்பினார். பூப்புனித நீராட்டு விழாவுக்காக எடுத்திருந்த புதுத்துணிகள், அந்த வீட்டின் ஒரு மூலையில் கவனிப்பாரின்றி கிடந்தன.
மணம் முடித்த மூன்றே மாதத்தில் மரணக் கோலம்!
மூன்று மாதங்களுக்கு முன்பும் அந்த வீட்டின் வாசலில் புதுப் பந்தலும் கொண்டாட்டமுமாய் இருந்தது. காரணம், அப்போது மணிராஜின் திருமணம். ஆனால், இப்போது மணிராஜின் வீட்டில் போடப்பட்டிருக்கும் பந்தல் சோகத்தின் குறியீடு. அவரது சகோதரர் ரமேஷ்கண்ணன், “அண்ணியைக் கூட்டிட்டு வாரேன்னு சொல்லிட்டு அண்ணன் கிளம்புனான். போற வழியில் பைபாஸ் ரோட்டுல பேரணியைப் பார்த்து நின்னவன், பைக்க நிறுத்திட்டு என்ன நடக்குதுன்னு பார்த்துருக்கான். நொடிப் பொழுதுல சுட்டுக் கொன்னுட்டாங்க சார். அண்ணனுக்குக் கல்யாணம் ஆகி மூணு மாசம்தான் ஆகுது” என்றார்.
இதுக்கா இலங்கையிலருந்து இங்க வந்தோம்..?
தூத்துக்குடி, மில்லர்புரம் சிலோன் காலனியைச் சேர்ந்த பி.கே.கந்தையாவும் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் ஒருவர். 40 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் இருந்து வந்து இங்கு குடியேறியவர்களில் இவரும் ஒருவர். கந்தையாவின் மனைவி செல்வமணியால் பேசக்கூட முடியவில்லை. ஒரே மகன் ஜெகதீஷ்வரன் கால் மேல் கால் போட்டபடி ஏதோ யோசித்தும், சிரித்தும் கொண்டிருக்கிறார். மனநலம் பாதித்த அவருக்கு, தந்தை இறந்ததையே இன்னும் உணர முடியவில்லை. இவரது எதிர்காலத்தையும் வாழ்வியல் உத்திரவாதத்தையும் சேர்ந்தே அந்தத் தோட்டா பறித்துள்ளது!
ஒரு போராளியா அவரோட ஆசை நிறைவேறிருச்சு... ஆனா, நாங்க..?
குறுக்குச்சாலை பகுதியைச் சேர்ந்த தமிழரசன் தமிழ்ப்பற்றால் தனக்குத்தானே இந்தப் பெயரைச் சூட்டிக்கொண்டவர். இவரது இயற்பெயர் மாரிச்சாமி. புரட்சிகர இளைஞர் முன்னணி அமைப்பைச் சேர்ந்த தமிழரசனை போலீஸார் குறிவைத்து சுட்டிருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. “தமிழரசன், ஸ்டெர்லைட் தொடங்க திட்டம் போட்ட காலத்திலிருந்தே எதிர்த்துப் போராடிட்டு இருக்கார். என் வீட்டுக்காரர் இறந்த பின்னாடி, எங்கக் குடும்பத்துக்கும் பாதுகாப்பா இருந்தவர். போராட்டமே வாழ்க்கைன்னு திருமணமும் செஞ்சுக்கல. இப்போ 44 வயசு ஆச்சு. ‘ஒரு போராளியா களத்துல நிக்கும்போதே சாகணும்கிறதுதான் ஆசை’ன்னு அடிக்கடி சொல்லுவாரு. ஒரு போராளியா அவரோட ஆசை நிறைவேறிடுச்சு. ஆனா, நாங்கதான் ஆதரவை இழந்து நிக்கிறோம்” என்று சொல்லிவிட்டு அழுதார் அவருடைய அண்ணி வளர்மதி.
‘வருங்காலம் நம்மைப் போற்றுமடா!’
சிவந்தாகுளம் சாலையில் கார்த்திக்கின் வீடு. கார்த்திக்கின் அப்பா முத்துப்பாண்டியிடம் பேசினோம். “பி.ஏ., மூணாவது வருசம் படிக்க இருந்தான். எப்பவும் தமிழ், தமிழர்ன்னுதான் சொல்லிட்டு இருப்பான். ஃபாரினுக்குப் போகணும்… நிறைய சம்பாதிக்கணும்... தமிழுக்குப் பாடுபடணும்னு சொல்லிக்கிட்டே இருப்பான். காலேஜ் படிப்பு இன்னும் ஒரு வருசம் இருக்கும்போதே பாஸ்போர்ட்டுக்கு அலைஞ்சான். வெளிநாடு போயிருக்கக் கூடாதான்னு இப்பத் தோணுதே…” வார்த்தைகளில் உடைந்துபோகிறார் அவர். ‘வருங்காலம் நம்மைப் போற்றுமடா...’ இதுதான் கார்த்திக் கடைசியாகப் போட்ட முகநூல் பதிவு!
ராணுவத்தில் சேர ஆசைப்பட்ட ரஞ்சித்!
புஷ்பாநகர் பாஸ்கரின் மனைவி முத்துலெட்சுமி, மகன் ரஞ்சித்குமாரின் மரணச் செய்தி கேட்டதிலிருந்தே மயங்கி மயங்கி விழுகிறார். மகனின் சட்டையை எடுத்து நெஞ்சோடு அணைத்து விம்முகிறார். ரஞ்சித்குமாரின் தந்தை பாஸ்கரிடம் பேசினேன். “நான் வீடுகளுக்கு கான்கிரீட் போடுற கான்ட்ராக்டர். ரஞ்சித் எலக்ட்ரிக்கல் டிப்ளமோ படிச்சிருந்தான். ராணுவத்தில் சேரணும்ன்னுதான் ரொம்ப ஆசைப்பட்டான். செவ்வாய்க்கிழமை எம்புள்ள குண்டடிபட்டுச் செத்துருக்கான். அதுக்கு முந்துன வெள்ளிக்கிழமைகூட ரத்ததானம் பண்ணிருக்கான். இதுவரை பத்துத் தடவைக்கு மேல ரத்ததானம் பண்ணிருப்பான். சமூக சேவையில் அவனுக்கு ஈடுபாடு ஜாஸ்தி. கை கால்ல சுட்டுப்போட்டுருந்தாக்கூட, முடமாகியாச்சும் எங்ககூட இருந்திருப்பான். தலையிலயே சுட்டுருக்காங்க…” என்றவரால் மேற்கொண்டு பேச முடியவில்லை.
பால் காய்ச்ச இருந்தவனுக்கு பால் ஊத்த வெச்சுட்டாங்களே..!
அண்ணாநகரில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலியான காளியப்பன் 22 வயது இளைஞர்! கூலி வேலை பார்க்கும் அப்பா கோபாலகிருஷ்ணன் அடிக்கடி உடல் சுகவீனத்திலும் படுத்துக்கொள்ள, அந்தக் குடும்பத்தின் ஒரே நம்பிக்கையாய் இருந்தவர் காளியப்பன். இப்போது அவர் இல்லாத சோகத்தில் அடித்துப் புலம்புகிறது அந்தக் குடும்பம். கோபாலகிருஷ்ணனிடம் பேசினோம். “இப்போதான் புதுசா வீடு கட்ட ஆரம்பிச்சோம். ‘அப்பா, கொஞ்சம், கொஞ்சமா காசு சேர்த்து இந்த வீடு கட்டுறோம். மேல தங்கச்சிகளுக்கு தனி ரூம், அது, இது’ன்னு பட்டாம்பூச்சி மாதிரி படபடன்னு பேசிக்கிட்டே இருப்பான். வீடு அஸ்திவாரம் போட்டு, நிலை நாட்டுனதோட நிக்குது. குலக் கொழுந்தை தூக்கிக் கொடுத்துட்டு இனி யாருக்கு வீடு கட்டப் போறோம்? அவனுக்கு நிச்சயதார்த்தம் முடிச்சு அக்டோபர்ல கல்யாணம் வச்சுருந்தோம். வீடும் கட்டி முடிக்கல… கல்யாணமும் முடிக்கல… பால் காய்ச்ச இருந்தவனுக்கு பால் ஊத்த வெச்சுட்டாங்களே..!” என்று கதறினார். முதல்நாள் நடந்த துப்பாக்கிச் சூட்டின் போது பலத்த காயம் அடைந்த காளியப்பன், மறுநாள் அண்ணாநகர் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியாகி உள்ளார்.
கடைசி நிமிடங்களிலும் கெஞ்சிய செல்வசேகர்!
பேய்க்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வசேகர் முதல் நாள் போராட்டத்தின்போது போலீஸாரின் தடியடியால் படுகாயம் அடைந்தார். பலத்த காயங்களுடன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர், சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். சிகிச்சையில் தங்களைப் பார்க்க வந்த மு.க.ஸ்டாலின், கமல்ஹாசன் உள்ளிட்டவர்களைப் பார்த்து, “நாசகார ஸ்டெர்லைட்டை எப்படியாச்சும் மூடுங்கய்யா...” என்று கெஞ்சியிருக்கிறார் செல்வசேகர். நம்மிடம் பேசிய அவரது சித்தி மகன் ஜெயக்குமார், “செல்வசேகர் இன்னும் கல்யாணம்கூட பண்ணல. பொதுசேவைன்னா முன்னாடி நிப்பான். சின்ன வயசுல இருந்தே பொதுக்காரியத்தில் அவனுக்கு ஈடுபாடு அதிகம். போலீஸ் லத்தியால தாக்கிக் கீழே தள்ளி, நெஞ்சுலயே மிதிச்சுருக்காங்க. தலையில் பலத்த காயம் இருந்ததால், அதுக்கு சிகிச்சை நடந்த நேரத்துலயே செத்துட்டாப்ல… போலீஸ் மிருகத்தனமா மிதிச்சே கொன்னுருக்காங்க… செல்வசேகர்கூட பிறந்தது ரெண்டு அக்கா. ஒரு அக்காவுக்கு இன்னும் கல்யாணம் ஆகல… அப்பாவும் இறந்துட்ட நிலையில, அம்மாவுக்கும் அக்காவுக்கும் ஆறுதலா இருந்தவன அநியாயமா அடிச்சுக் கொன்னுட்டாங்க” என்றார்.
என்ன பேசி என்னத்த செய்யப் போறோம்...
துப்பாக்கிச் சூட்டில் பலியான ஆசிரியர் காலனி, சண்முகத்தின் வீட்டுக்கும் சென்றேன். அந்த வீட்டுக்குள் இருந்து, பீறிட்டுவரும் அழுகையுடன் வெளியில் வந்த உறவுகள், “என்ன பேசி என்னத்த செய்யப் போறோம்... நாங்க யாருக்கிட்டயும் எதுவும் பேசுறதா இல்ல...” என்று ஆற்றாமையுடன் சொல்லிவிட்டுக் கதவைச் சாத்திக்கொண்டனர்.
ஊருவிட்டு ஊருவந்து உயிரைவிட்ட பரிதாபம்!
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே ஆரியபட்டியைச் சேர்ந்த ஜெயராமனும் கலவரத்தில் பலியாகியிருக்கிறார். இரு சக்கர வாகனத்தில் ஊர், ஊராகச் சென்று ஜவுளி வியாபாரம் செய்துவந்த இவர், ‘மக்கள் அதிகாரம்’ அமைப்பின் களப்பணியாளர். ஸ்டெர்லைட் போராட்டத்துக்காக ஊருவிட்டு ஊருவந்த இவரும் உயிரைவிட்டது தாங்க முடியாத சோகம். ஜெயராமனின் இறப்பால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திக்குத் தெரியாத காட்டில்விட்டதுபோல் நிற்கிறார்கள் அவரது மனைவி பாலம்மாளும் மகள் நந்தினியும்!
காட்சிகள் வேகவேகமாக மாறுகின்றன. ஆளுக்கொன்று பேசுகிறார்கள். ஆனால், ‘ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்’ என்ற அரசின் ஒற்றை வரி அறிவிப்பை மட்டுமே அந்த மக்கள் எதிர்பார்க்கிறார்கள். அதுதான் அவர்களின் ரணத்துக்குக் கொஞ்சமாவது ஆறுதல் சொல்லும். இப்போதாவது தமிழக அரசு அத்தகைய நடவடிக்கையை முன்னெடுக்குமா?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT