Published : 04 Aug 2014 12:00 AM
Last Updated : 04 Aug 2014 12:00 AM
காப்பீட்டுத் துறையில் கூடுதல் அந்நிய முதலீட்டை அனுமதிக்க மறுப்பதற்கான சாட்டையடி ஆதாரங்கள்!
ஆட்சியில் அமர்ந்து 60 நாட்களுக்குள்ளாகக் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீட்டை 26%-லிருந்து 49% ஆக உயர்த்தும் சட்ட வரைவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது மோடி அமைச்சரவை. மாநிலங்களவையில் இன்று இது விவாதத்துக்கு வருகிறது. 2008-ல் ப.சிதம்பரத்தால் தாக்கல் செய்யப்பட்ட சட்ட வரைவு இது. கடந்த ஆறு ஆண்டுகளாக இதை எதிர்த்து அரசியல் செய்தது பாஜக. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற 60 நாட்களில் நிலைப்பாடு தலைகீழாகிவிட்டது. காங்கிரஸைவிட வேகமாக அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாகக் களத்தில் நிற்கிறது பாஜக.
நாடாளுமன்ற மாநிலங்களவை விவாதப் பொருளில், இந்தச் சட்ட வரைவு ஜூலை 31 அன்று இடம்பெற்றிருந்தது. அதே நாளில் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் ஜான் கெர்ரியின் இந்திய வருகையும் அமைந்திருந்தது. செப்டம்பரில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஒபாமாவைச் சந்திக்கச் செல்வதற்கான முன்தயாரிப்பு இது. அமெரிக்க-இந்திய வணிக கவுன்சிலில் தொடர்ந்து வைக்கப்படும் முக்கியக் கோரிக்கை, காப்பீட்டுத் துறையில் கூடுதல் அந்நிய முதலீட்டை அனுமதிக்க வேண்டும் என்பதே! ஜான் கெர்ரி இந்திய மண்ணில் காலடி எடுத்து வைக்கும்போது, அவருக்குப் பூங்கொத்து கொடுப்பதற்குப் பதிலாக இந்தச் சட்ட வரைவைத் தந்திருக்கிறார் அருண் ஜேட்லி.
கேட்பீர்களா... நீங்கள் கேட்பீர்களா?
மோடி அவர்களே! நீங்கள் செப்டம்பர் மாதம் ஒபாமாவைச் சந்திக்கும்போது, “உலகம் முழுவதும் எந்தத் தடைகளும் இல்லாமல் உங்கள் பன்னாட்டுக் காப்பீட்டு நிறுவனங்களும் வங்கிகளும் கடைவிரிக்க வேண்டும் என விரும்புகிறீர்களே! ஆனால், 2008 பொருளாதார நெருக்கடியில் பன்னாட்டுக் காப்பீட்டு நிறுவனங்களும், 500-க்கும் மேற்பட்ட தனியார் வங்கி களும் உங்கள் நாட்டில் சீட்டுக்கட்டு சரிந்ததுபோல் திவாலாகி வீழ்ந்தது ஏன்?” என்ற கேள்வியைக் கேட்பீர்களா?
“எங்கள் நாட்டில் ஆயுள் காப்பீட்டுத் துறையை தேசியமயமாக்கி 57 ஆண்டுகளாகவும், பொதுக் காப் பீட்டுத் துறையைத் தேசியமயமாக்கி 41 ஆண்டுகளாக வும் திவால் என்ற வார்த்தையே எங்கள் காதுகளில் விழவில்லையே! ஆனால், நாங்கள் இந்தியாவில் டாடாவோடு கைகோத்துக் காப்பீட்டு இணைவினைச் செய்ய அனுமதித்த உங்களின் பிரம்மாண்ட நிறு வனம் ஏ.ஐ.ஜி., நிதி நெருக்கடிச் சூறைக் காற்றில் தடுமாறிப்போனதே! இங்கே, அரசுப் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் பங்கு விற்பனைபற்றி பேசுகிறோம். ஆனால், உங்கள் நாட்டிலோ ஏ.ஐ.ஜி-யின் 80% பங்கு களை அரசாங்கம் வாங்கி அல்லவா நெருக்கடியிலிருந்து அதைக் காப்பாற்றினீர்கள்” என்று கேட்பீர்களா?
எல்.ஐ.சி. 57 ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையைப் பெற்றுத் திகழ்கிறது. ஆனால், இந்திய காப்பீட்டுத் துறை அந்நிய முதலீட்டுக்கு 26% என்ற வரையறையோடு திறந்துவிடப்பட்டு 13 ஆண்டுகளுக்குள்ளாக இங்கே வந்த அமெரிக்காவின் ஏ.ஐ.ஜி-யும், ஆஸ்திரேலியாவின் ஏ.எம்.பி-யும் வந்த வழியே திரும்பி ஓடிவிட்டன. ஆயுள் காப்பீடு என்பது பாலிசிதாரரோடு உருவாகும் நீண்ட கால ஒப்பந்தம். 10 ஆண்டுகள்கூட நீடிக்காமல் நடையைக் கட்டும் இவர்களுக்கு எதற்காக, எந்த நம்பிக்கையில் இன்னும் இன்னும் கதவுகளைத் திறக்க வேண்டும்?
இரை தேடி இங்கே…
அந்நிய முதலீடுகள் ஏதோ தர்ம சிந்தனையோடு சமூகத்தின் கடைசி மனிதருக்கும் காப்பீட்டுப் பாது காப்பைத் தருவதற்காக வருகிறது என்பதுபோல இந்திய அரசு பேசுவது பாமரத்தனமானது. உண்மையில், பன்னாட்டு காப்பீட்டு நிறுவனங்களுக்குத் தாய்நாடுகளில் பெரும் நெருக்கடி. வட அமெரிக்காவில் சந்தை -2.9% எனச் சுருங்கியுள்ளது. ஐரோப்பாவில் -0.6%. புகழ்பெற்ற ‘சிக்மா’அறிக்கை தரும் தகவல்கள்தான் இவை. அங்கே குளம் வற்றிப்போனதால் இங்கு இரை தேடி அவர்கள் வருகிறார்கள் என்பதே உண்மை.
இந்தியாவில் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் விற்றுள்ள பாலிசிகளின் ஆண்டு சராசரி பிரிமியம் எவ்வளவு தெரியுமா? ரூ. 30,000! எல்.ஐ.சி-யின் சராசரி பிரிமியம் ரூ. 12,000. மோடிக்கு ஆலோசனை கூறும் நிபுணர்கள் இதையெல்லாம் குறிப்புகளில் எழுதவில்லையா?
கசக்கும் சிற்றூர்கள்
இந்தியாவில் 10,000 பேருக்கும் கீழே வசிக்கும் சிற்றூர்களில் காப்பீட்டு அலுவலகங்கள் திறக்கப்படும் என 2013-ல் நிதிநிலை அறிக்கையில் அப்போதைய அரசு அறிவித்தது. யாரை நம்பி இந்த அறிவிப்பு? எந்தத் தனியார் நிறுவனமாவது இந்தச் சிற்றூர்களுக்குப் போயிருக்கிறதா? முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம் பரத்தின் சொந்தக் கிராமமான கண்டனூரில்கூட எல்.ஐ.சி-தானே தன் அலுவலகத்தைத் திறந்துள்ளது. மோடியின் குஜராத்தில் எப்படி? இந்திய காப்பீட்டுத் துறையை வெறும் வியாபாரம், லாபம் என்று பார்க்கக் கூடாது. அதற்கு மேல் தேச ஒற்றுமை, பொது நீரோட்டத்தில் விளிம்பு நிலை மக்களை இணைத்தல் என்கிற உன்னத இலக்குகள் அதற்கு உள்ளன. எல்.ஐ.சி. ஊற்றி வளர்த்த விழுமியங்கள் அவை.
யாருக்காகக் கூவுகிறீர்கள்?
ஜேட்லி அவர்களே! உங்களுக்கு முந்தைய நிதி அமைச்சர் சமர்ப்பித்துள்ள பொருளாதார ஆண்டு ஆய்வறிக்கைகளைப் புரட்டிப் பாருங்கள். காப்பீட்டுத் துறையில் கடந்த 13 ஆண்டுகளில் 26% வரையறையோடு அந்நிய முதலீடு அனுமதிக்க பட்டுள்ளதே, ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு எவ்வளவு நிதி வந்தது? எல்.ஐ.சி. 11-வது ஐந்தாண்டுத் திட்டத்துக்குத் திரட்டித் தந்துள்ள தொகை ரூ. 7,04,000 கோடி. காப்பீட்டுத் துறையில் 13 ஆண்டுகளில் வந்துள்ள மொத்த அந்நிய முதலீடே ரூ. 6,300 கோடிதான். மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். ஆனால், நீங்கள் மடுவின் மீது ஏறி நின்று அதுதான் பெரிது என்று கூவுவீர்கள் என்றால், நீங்கள் யாருக்காகக் கூவுகிறீர்கள் என்று கேட்க மக்களுக்கு உரிமை இருக்கிறது.
ஹீரோவுக்கே அந்த கதி!
எல்.ஐ.சி-யின் உரிமப் பட்டுவாடா விகிதம் 99.5%. உலகத்தில் எந்தக் காப்பீட்டு நிறுவனமும் செய்யாத சாதனை!
மும்பை தாஜ் ஓட்டல் மீதான தீவிரவாதத் தாக்குதல் எல்லோருக்கும் நினைவில் இருக்கும். அதில், தனது உயிரையே விலையாகக் கொடுத்தவர் தீவிரவாத எதிர்ப்பு அதிரடிப்படைத் தளபதி ஹேமந்த் கர்கரே. அவருடைய பாலிசி உரிமத்தை அவர் இறந்த 48 மணி நேரத்துக்குள் வீடு தேடிச் சென்று கதவைத் தட்டித் தந்தது எல்.ஐ.சி. ஆனால், அவர் ஒரு தனியார் நிறுவனத்திலும் பாலிசி எடுத்திருந்தார். அந்த நிறுவனமோ “எங்கள் பாலிசி விதிமுறைகளில் தீவிரவாதம் உள்ளடங் கவில்லை. அவர் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தே அந்தச் செயலில் ஈடுபட்டார்’’ என்றெல்லாம் கூறி, உரிமத் தொகையை வழங்க மறுத்தது. தேசம் போற்றிய ஹீரோவுக்கே இதுதான் கதி என்றால், சாதாரண மக்களின் கதி என்ன?
இயர்போனைக் கழற்றுங்கள்!
மோடி அவர்களே! ஹை-டெக் பிரதமர் நீங்கள்! பெருநிறுவன ஊடகங்கள் உங்களைப் பாராட்டலாம். ஒபாமா உங்களுக்குத் தடபுடல் வரவேற்பை அளிக்கலாம். ஆனால், உங்கள் காதுகளில் உள்ள இயர்போனை முதலில் கழற்றுங்கள்! அதன் பேரிரைச்சலில், காப்பீட்டுப் பயனுக்காக ஏங்கும் ஒரு சாமானிய மனிதரின் குரல் கேட்காமல் போய்விடக் கூடாது.
- க. சுவாமிநாதன்,தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் பொதுச் செயலர்,
தொடர்புக்கு: swaminathank63@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT