Published : 14 May 2018 08:51 AM
Last Updated : 14 May 2018 08:51 AM

வாங்கிய பணத்தை வாக்காளர்கள் என்ன செய்கிறார்கள்?

தே

ர்தலின்போது அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு வாக்குறுதிகளைத் தாண்டி என்னென்னவெல்லாம் கொடுக்கின்றன என்பதைப் பற்றி கட்சிகளும் வாய் திறப்பதில்லை. வாக்காளர்களும் வாய் திறப்பதில்லை. எல்லோருக்கும் தெரிந்த இந்த ரகசியம் தேர்தலில் செலுத்தும் தாக்கம் என்ன என்பதைப் பற்றிய ஆய்வை பெங்களூரு ஐ.ஐ.எம், பிரிட்டனில் உள்ள கென்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் இணைந்து நடத்தியிருக்கிறார்கள்.

‘கேஷ் பார் வோட்ஸ்: எவிடென்ஸ் ஃப்ரம் இந்தியா’ என்ற தலைப்பில் கடந்த ஆண்டு வெளியான அந்த ஆய்வின் முடிவுகள் தற்போது பொதுவெளிக்கு வந்திருக்கின்றன. ‘இது தேர்தலின்போது அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கிறார்களா என்பதைப் பற்றிய ஆய்வு அல்ல. மக்களின் வாழ்வில் தேர்தலையொட்டி நடக்கும் நுகர்வு மாற்றங்களைப் பற்றிய ஆய்வுதான்’ என்று பொறுப்புத் துறப்பு ஒன்றையும் முன்கூட்டியே வெளியிட்டிருக்கிறார்கள்.

தேர்தல் நேரங்களில் மதுபானங்களின் விற்பனை அதிகமாகிறது. அதேநேரத்தில் பருப்பு, மாமிசம் என்று உணவுப் பொருட்களின் விற்பனையும் அதிகரிக்கிறது. குறிப்பாக பருப்புப் பொருட்களின் பயன்பாடு வழக்கத்தைக் காட்டிலும் 10% அதிகரிக்கிறது. பள்ளிக் குழந்தைகளுக் கான பாடநூல்கள், சீருடைகளும்கூட அதிகமாக விற்பனையாகின்றன என்கிறது ஆய்வு முடிவு. முக்கியமாக, இந்தியா முழுவதும் உள்ள 4,210 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால், ரூ.12 லட்சம் கோடி கறுப்புப் பணம் புழக்கத்துக்கு வரும் என்றும் இந்த ஆய்வு கணித்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் கட்டுமானத் துறை கொஞ்சம் அமைதியாக இருப்பதும், தேர்தல் முடிந்து இயல்பு நிலைக்குத் திரும்புவதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேர்தல் நேரப் ‘பொருளாதார உதவிகள்’, வாக்குகளாக மாறுகின்றனவா? இந்தக் கேள்விக்கு ‘ஏதோ கொஞ்சம்’ அல்லது ‘இல்லை’ என்பதே பதிலாக இருக்கிறது. அதாவது, மக்கள் தங்கள் வாக்குகளைப் பணத்துக்காக விற்கிறார்கள் என்று நேரடியாகக் குற்றம்சாட்ட முடியாது என்பதுதான் இந்த ஆய்வு தரும் முடிவு!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x