Published : 07 May 2018 09:17 AM
Last Updated : 07 May 2018 09:17 AM
உ
லக நலனைவிட அமெரிக்காவின் நலனே முக்கியம் என்று கூறி, பிற நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்குக் காப்புவரி விதிக்கும் கொள்கையால் அமெரிக்கப் பொருளாதாரமே சீரழியும், 1930-களில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு அது இட்டுச்செல்லும் என்று நோபல் விருதுபெற்றவர்கள் உட்பட 1,140 பொருளாதார அறிஞர்கள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை எச்சரித்துள்ளனர்.
‘பல்வேறு நாடுகளுடன் செய்துகொண்ட வர்த்தக ஒப்பந்தங்கள் உள்ளிட்டவற்றை மதிக்க மாட்டேன், வடஅமெரிக்க தாராள வர்த்தக ஒப்பந்தத்திலிருந்தும் விலகிவிடுவேன் (நாஃப்டா)’ என்றும் டிரம்ப் எச்சரித்து வரு கிறார். வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களும் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பைப் பறித்துக்கொள்வதால், அவர்களை வெளியேற்றிவிட வேண்டும் என்றும் தீவிர மாக முனை கிறார். அரசியல் நோக்கத்துடனான இந்த நடவடிக்கை கள் அவரை ஆதரித்த வாக்காளர்களுக்குத் திருப்தியை அளித்தாலும், அவர்களும்கூட பின்னர் வருந்தும் அளவுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று அறிஞர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனர்.
1930 வீழ்ச்சி எப்படி ஏற்பட்டது?
1929-ல் அமெரிக்கர்கள் மிகவும் மகிழ்ச்சியாகவே ஆண்டைத் தொடங்கினர். உலகிலேயே தாங்கள்தான் சொர்க்கத்தைப் படைத்து அனுபவிப்பதாகவே இறுமாந்திருந்தனர். ஹெர்பர்ட் ஹூவர் அமெரிக்க நாட்டின் புதிய அதிபராக அந்த ஆண்டுதான் பதவியேற்றிருந்தார். அவருமே, உலகிலேயே வறுமையை வென்ற ஒரு நாட்டு மக்கள் நாம்தான் என்ற சாதனையைப் படைக்கப்போகிறோம், மிகப் பெரிய பணக்கார நாடாக நாம் மாறிவிட்டோம் என்று கர்வத்தோடு அறிவித்தார்.
அப்போது வங்கிகள் மீது அமெரிக்க அரசுக்குக் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை. வங்கிகள் அனைத்தும் தனியார் வங்கிகள். அதிலும் வங்கிகளுக்கு இடையே வர்த்தகத் தில் கடும் போட்டி வேறு. எனவே, கார் வாங்க, வீடு கட்ட, தொழிற்சாலை தொடங்க, வியாபாரத்தை விரிவுபடுத்த என்று வங்கிகள் மனம்போன போக்கில், உரிய ஈடு இல்லாமல் கடன்களை வாரிக் கொடுத்தன. மக்களும் நுகர்வுக் கலாச்சாரத்துக்குத் தங்களைப் பழக்கிக்கொண்டனர். அதே சமயம், நிறைய சம்பாதித்தவர்கள் - சேமித்தவர்கள் அனைவரும் வங்கிகளில்தான் பணத்தைப் போட்டு வைத்தனர். வங்கிகளில் போடப்பட்ட வைப்புத்தொகைகளையும் வங்கி நிர்வாகங்கள் காப்பீடு செய்யவில்லை.
பொருளாதார நடவடிக்கைகள் இப்படி இருந்த நிலையில், 1929-ம் ஆண்டு அக்டோபர் 29-ம் நாள் திடீரெனச் சில அமெரிக்க முதலீட்டாளர்கள், இனம் தெரியாத அச்சம் பிடரியைப் பிடித்துத் தள்ள.. தங்களிடமிருந்த பங்குகளையெல்லாம் வந்த விலைக்கு பங்குச் சந்தைகளில் விற்கத் தொடங்கினார்கள். ‘இவர்கள் எல்லாம் ஏதோ ரகசியம் தெரிந்து, நஷ்டப்படக் கூடாது என்று விற்கிறார்கள், நாமும் கையில் இருப்பனவற்றை விற்றுவிடுவோம்’ என்று மற்றவர்களும் போட்டி போட பங்குச் சந்தைகள் வரலாறு காணாத அளவுக்குக் குழப்பத்திலும் பதற்றத்திலும் பெரும் சரிவில் வீழ்ந்தன.
பங்குச் சந்தைகள் சரிந்ததும், வங்கிகளும் நிதி நிறுவனங்களும் திவாலாகின. அதைத் தொடர்ந்து தொழில், வர்த்தக நிறுவனங்களும் ஆட்டம் காணத் தொடங்கின.வேலையில்லாத் திண்டாட்டம் எல்லா துறைகளுக்கும் பரவியது. இதற்கிடையே அமெரிக்க அதிபர் ஹெர்பர்ட் ஹூவர் , ஏழை - பணக்காரர்களிடையே வேற்றுமையைப் போக்கவும் உள்நாட்டுத் தொழில்களைக் காக்கவும் இறக்குமதி ஆகும் பண்டங்கள் மீதான வரியைக் கடுமை யாக உயர்த்தினார். இதனால், இறக்குமதிதான் குறைந்ததே தவிர, அரசுக்கு வரிவருவாய் பெருகவில்லை. இதனால் பண்டங்களுக்கான தட்டுப்பாடு மேலும் அதிகரித்தது.
எங்கெங்கு காணினும் துயரம்
விவசாயிகளால் விளைபொருட்களை விற்கவும் முடியவில்லை, மக்களால் வாங்கவும் முடியவில்லை. குடித் தனக்காரர்களால் வாடகை தர முடியவில்லை என்றதும் வீட்டு உரிமையாளர்கள் தங்களுக்கே ஏற்பட்டுவிட்ட நெருக்கடி காரணமாக, வீடுகளைக் காலி செய்யச் சொன்னார்கள். இதனால், லட்சக்கணக்கான குடும்பங் கள் வாடகை வீடுகளைவிட்டு வீதிக்கு வந்தன. பொதுச் சந்தைகள் போன்ற இடங்களிலும் ஒதுக்குப்புறமான சேரிகளிலும் கோணிப்பைகளைக் கூரையாகப் போட்டு மக்கள் வசிக்கத் தொடங்கினர். இந்த வீடுகளை ‘அதிபர் ஹூவர்ட்டின் குடில்கள்’ என்று இகழ்ச்சியாக மக்கள் அழைத்தனர். வேலையும் ஊதியமும் இல்லாததால் பட்டினி கிடந்தனர். எல்லோர் குடும்பங் களிலும் குழந்தைகள் உணவு, உடை, மருத்துவ வசதி, படிப்பு இல்லாமல் பரிதவித்தனர்.
1929-ல் தொடங்கிய வீழ்ச்சி 1939 வரை நீடித்தது. இனி உலகமே அவ்வளவுதானோ, முடிவுக்கு வந்துவிடுமோ என்றுகூட அஞ்சினர். இதற்கிடையே இயற்கையும் தன் பங்குக்கு வஞ்சித்தது. திடீரென தூசுப் புயல் கிளம்பி, சில மாநிலங்களில் 10 கோடி ஏக்கர் நிலங்களை மூடியது. இதனால் வளர்ந்த பயிர்கள் நாசமாகின. அடுத்த பருவத்துக்கு விதைக்க முடியாமல் நஷ்டமும் விளைச்சல் இழப்பும் ஏற்பட்டது. 1929-லேயே 20,000 பெரிய தொழிற் சாலைகளும் வியாபார நிறுவனங்களும் மூடப்பட்டன. 1933-ல் இது மேலும் அதிகரித்து 70,000 தொழிற்சாலைகள் இழுத்து மூடப்பட்டன. 1.2 கோடிப் பேர் வேலைஇழந்தனர். 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தற்காலிகக் குடிசைகளில் வசித்தனர்.
பிரிட்டனைச் சேர்ந்த பொருளாதார அறிஞர் ஜான் மேனார்ட் கீன்ஸ் அடுத்த அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சனுக்கு ஆலோசகராக வந்தார். அரசுதான் வேலைவாய்ப்பை வழங்க முடியும், வழங்க வேண்டும். அப்போதுதான் பொருளாதாரம் வளர்ச்சி பெறும் என்று வலியுறுத்தினார். அதன் பிறகு, அரசே முன்முயற்சி எடுத்து சாலை போடுவது, அணைகள், பாலங்கள் கட்டுவது, மின்பாதை அமைப்பது என்றெல்லாம் பணிகளைத் தொடங்கிய பிறகு வேலைவாய்ப்பு பெருகியது. மக்களிடையே செலவுக்குப் பணம் கிடைத்ததும் பொருளாதாரம் எழுந்து நிற்கத் தொடங்கியது.
பொருளாதார நடவடிக்கைகளை அரசு கண்காணிப் பதுடன், தொய்வு ஏற்படும்போது தலையிட்டு முதலீடுகளை நேரடியாக மேற்கொள்ள வேண்டும் என்ற பாடம் அப்போதுதான் கற்றுத்தரப்பட்டது. இதைத்தான் இப்போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருளாதார அறிஞர்கள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு நினைவூட்டிஉள்ளனர். வரலாற்று அனுபவங்கள் கற்றுத் தந்த பாடத்தை டிரம்ப் மறந்துவிடக் கூடாது.
வ.ரங்காசாரி,
தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT