Published : 29 Jun 2024 03:10 PM
Last Updated : 29 Jun 2024 03:10 PM
ஜூன் 30 - உலக சமூக ஊடக நாள் | ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டகிராம் போன்ற சமூக வலைதளங்கள் எல்லாம் ‘ஸ்க்ரால்’ செய்துவிட்டு நேரத்தை வீணடிப்பதற்கு மட்டும்தானா? இல்லை என்கின்றனர் இளம் படைப்பாளிகள். சமூக வலைதளத்தைப் பயன்படுத்தி ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டும், பயனுள்ளதைப் பகிர்ந்தும் வருகிறார்கள் இந்த படைப்பாளிகள். பயணம், விவசாயம், கலை, வாசிப்பு எனப் பல துறையைச் சேர்ந்த, தேர்ந்த படைப்பாளிகளில் கவனிக்க வைத்த சிலர்...
‘பேசி வாசி’ ஆர்ஜே ஆனந்தி: ‘பாட்காஸ்ட்’ கலாச்சாரம் பெருகி வரும் இந்த காலத்தில், வாசிப்பு குறித்தும், புத்தகங்கள் குறித்தும் தொடர்ச்சியாகப் பேசி வருகிறார் ஆர்ஜேவும் நடிகையுமான ஆனந்தி. இவர் நடத்தும் ‘தி புக் ஷோ' யூடியூப் அலைவரிசையை 6 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்கின்றனர்.
புத்தக விமர்சனங்கள், பரிந்துரைகள், விளக்கங்கள் ஆகியவற்றைச் சுருக்கமாகவும், சுவாரசியமாகவும் தனது ‘புக் ஷோ’ நிகழ்ச்சியில் பேசிப் பதிவிடுகிறார் ஆனந்தி. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது சமூக வலைதளத்தில் எழுதப்படாத விதி! யூடியூப் அலைவரிசை: The Book Show.
‘நவீன உழவன்’ தினேஷ்குமார்: சிவகாசி மாவட்டம் பூவாகபுரத்தைச் சேர்ந்தவர் தினேஷ் குமார். இவர் விவசாயத்தைப் பற்றி தமிழில் எளிமையாக விளக்கி காணொலிகளைப் பதிவு செய்கிறார். 600க்கும் அதிகமான காணொலிகள் அடங்கிய இவரது ‘நவீன உழவன்’ யூடியூப் அலைவரிசையை 12 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். விவசாயத்துக்கு உதவும் தொழில்நுட்பம், நேரடி சந்தை விற்பனை, மாடித் தோட்டம், பண்ணைகள், ஒருங்கிணைந்த பண்ணைகள், சந்தைப்படுத்துதல் எனப் பல விஷயங்களைச் சுவாரசியமாக வழங்குகிறார்.
பயணங்களைத் திட்டமிடுவது, காணொளிகளைப் படம் பிடிப்பது, தொகுப்பது என ஒரு காணொளியைத் தயார் செய்வதற்கான அனைத்து வேலைகளையும் தனி ஒருவனாய் நிர்வகித்து அசத்துகிறார் தினேஷ். எழுத்து, ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, படத்தொகுப்பு எனப் பல துறைகளிலும் அடிப்படை அனுபவம் இருந்தால் நீங்களும் ஆகலாம் ‘சோஷியல்’ புலி!யூடியூப் அலைவரிசை: Naveena Uzhavan.
‘சிம்பிளா படிக்கலாம்’ எல்.எம்.இ.எஸ்: அறிவியல், கணிதம், பொறியியல், தொழில்நுட்பம் தொடர்பான தகவல்களை எளிய முறையில் தமிழில் விளங்கச் செய்கிறது ஒரு யூடியூப் குழு. பல சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் அறிவியல் ரீதியான பதில்களைத் தேடித் தெரிந்து காணொளிகளாகப் பதிவு செய்கிறது இந்த ‘எல்.எம்.இ.எஸ்’ யூடியூப் குழு.
வண்ணமயமான படங்களும், விறுவிறுப்பான படத்தொகுப்பும், தமிழில் விளக்கங்களும் என கற்றலை எளிமையாக்கும் நோக்கில் இயங்குகிறது இந்த யூடியூப் குழு. யூடியூபிலும் தொடங்கலாம் காணொளி வழி கற்றல்! யூடியூப் அலைவரிசை: Let's Make Education Simple
‘பட்ஜெட் பயணி’ செந்தில் குமார்: 2008ஆம் ஆண்டு முதல் உலக நாடுகளுக்கு ‘பட்ஜெட்’ பயணம் மேற்கொண்டு வருகிறார் ஈரோட்டைச் சேர்ந்த செந்தில் குமார். குறைந்த பட்ஜெட்டில் உலக நாடுகளுக்குப் பயணம் செய்வது எப்படி? என்பதன் ரகசியத்தைப் பகிரும் இவரது விளக்கக் காணொலிகளுக்கு பார்வையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு. வழக்கமான ‘டிராவல் விளாகர்’ பாணியைப் பின்பற்றாமல், நிறைய தகவல்களுடனும், அனுபவப் பகிர்வுகளுடனும் காணொலிகளைப் பதிவு செய்வது இவரது தனித்துவத்தைக் காட்டுகிறது.
2021ஆம் ஆண்டு இவர் தொடங்கிய ‘பேக்பேக்கர் குமார்’ என்கிற யூடியூப் அலைவரிசையைத் தற்போது 3.5 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். சமூக வலைதளத்தில் தனித்துவமான படைப்புகள் என்றும் கவனிக்கப்படும். யூடியூப் அலைவரிசை: Backpacker Kumar
‘குறள் ஓவியம்’ செளமியா: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செளமியா. இவர் சென்னையில் தனியார் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக ஈடுபாட்டுடன் ஓவியம் வரைந்து வரும் இவர், புது முயற்சியாக இன்ஸ்டகிராமில் ‘திருக்குறள்’ ஓவியங்களைப் பதிவு செய்துள்ளார்.
ஒரு நாள், ஒரு குறள், ஒரு ஓவியம் என இடைவெளி இல்லாமல் 1,330 குறள்களுக்கும் பொருள் விளங்கும் வகையில் ஓவியங்கள் வரைந்து ஆச்சரியப்பட வைக்கிறார். எந்நேரமும் திறன்பேசியோடு சுற்றித்திரியும் இந்தக் காலத்து தலைமுறையினரிடம் இன்ஸ்டகிராம் வழியே திருக்குறளைக் கொண்டு சேர்த்திருக்கிறார் செளமியா. சமூக வலைதளத்தில் சமூக பொறுப்பும் சேர்ந்து இருந்தால் மிக நல்லது! இன்ஸ்டகிராம் பக்கம்: Iyal Artinsta
சமூக ஊடக ராஜா தெரியுமா? - மனிதன் ஒரு சமூக விலங்கு என்று சொன்ன கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில் இன்றிருந்தால், மனிதன் ஒரு சமூக ஊடக விலங்கு என்றல்லவா சொல்லியிருப்பார்! அந்த அளவுக்கு உலகை நெருக்கமாக கொண்டு வந்திருக்கும் சமூக ஊடகத்தின் தாக்கத்தை கொண்டாடும் நாள் ஜூன் 30 ஆம் தேதியாகும். சமூக ஊடகம் பற்றி மேலும் சில குட்டி தகவல்கள் இதோ:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT