Published : 22 May 2018 09:11 AM
Last Updated : 22 May 2018 09:11 AM
இ
ந்திய அரசின் முதுகெலும்பு என வர்ணிக்கப்படும் ஆட்சிப் பணிகளில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது மோடி தலைமையிலான பாஜக அரசு. அதாவது, குடிமைப் பணித் தேர்வில் பெற்ற மதிப்பெண்களோடு அடித்தளப் பயிற்சிக்குப் பிறகு நடத்தப்படும் தேர்வில் பெறும் மதிப்பெண்களையும் சேர்த்து அதன் அடிப்படையில் மாநில ஒதுக்கீடுகளைச் செய்யலாம் என்ற கருத்து பிரதமர் அலுவலகத்தால் முன்வைக்கப்படுகிறது. இது சமூக நீதியின் மீதான இன்னொரு தாக்குதலாக அமையும்.
இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) உள்ளிட்ட 27 அரசுத் துறைகளுக்கான மத்திய குடிமைப் பணித் தேர்வுகளை மத்திய பொதுத் தேர்வாணையம் ஆண்டுதோறும் மூன்று கட்டங்களாக (முதல் நிலை, முதன்மை, நேர்முகத் தேர்வுகள் என) நடத்திவருகிறது. இதில் வெற்றி பெறுபவர்களை, அவரவர்களின் தரவரிசைக்கு ஏற்ப, மூன்று மாத கால அடித்தளப் பயிற்சிக்குப் பிறகு சொந்த மாநிலங் களுக்கோ, இதர மாநிலங்களுக்கோ பணிசெய்ய ஒதுக்கீடுசெய்வது வழக்கமாக இருந்துவருகிறது. இதில் பட்டியலின, பழங்குடியின, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான சட்டபூர்வமான ஒதுக்கீடுகளும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தற்போது பிரதமர் அலுவலகம் இதை மாற்ற முயற்சிக்கிறது.
ஒரு சிறுகூட்டம் தீர்மானிக்கும்
இப்போதைய நடைமுறை என்னவென்றால், தேர்வர்கள் முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வுகளில் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப் படையிலும், அவர்கள் விண்ணப்பங்களில் முன்வைத்துள்ள விருப்பத்தின் அடிப்படையிலுமே அவர்களுக்கு உரிய மாநிலங்களும் பணிகளும் ஒதுக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் பயிற்சிக்குச் செல்லும் தேர்வர்களுக்கு முசெளரியில் உள்ள அரசுப் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தற்போது பிரதமர் அலுவலகம் முன்வைத்துள்ள முன்மொழிவு என்ன சொல்கிறது என்றால், “தேர்வர்கள் பொதுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களோடு கூடவே, அடித்தளப் பயிற்சிக்குப் பிறகு நடத்தப்படும் தேர்வில் அவர்கள் பெறும் மதிப்பெண்களையும் சேர்த்து அதன் அடிப்படையில் மாநில ஒதுக்கீடுகளைச் செய்யலாம்” என்கிறது. அதாவது, முசௌரி அரசுப் பயிற்சி மையத்தில் பணியாற்றும் சில அதிகாரிகளின் ஆளுகைக்குள் ‘தேர்ந்தெடுக்கும் உரிமை’யை மறைமுகமாக இந்த உத்தரவு கொண்டுசேர்க்கிறது. பிராந்திய உணர்வு, மத / சாதி உணர்வு எல்லாவற்றுக்கும் இடமளிக்கும் ஆபத்தைக் கொண்டது இது.
நட்புணர்வு முறியும்
இன்னொரு பெரிய ஆபத்து - அரசுப் பயிற்சி மையத்துக்கு வரும் தேர்வர்களை உணர்வுரீதியாக இது பிளக்கும் என்பது! குறிப்பிட்ட ஆண்டில் தேர்ச்சி பெற்றவர்கள் என்ற நிலையில் ஒருவித தோழமை உணர்வுடன், போட்டி மனப்பாங்கு இல்லாமல் இந்தப் பயிற்சிகளில் தேர்வர்கள் கலந்துகொள்வார்கள். ‘ஒரே பேட்ச்’ என்ற இந்த உணர்வு அவர்களின் பணிக்காலம் முடியும் வரையிலும் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தோழமை உணர்வின் மூலம் தங்கள் மாநிலங் களுக்குச் சாதகமான பல செயல்களை அவர்களால் பல நேரங்களில் நிறைவேற்றிக்கொள்ளவும் முடிகிறது என்பதே அனுபவபூர்வமான உண்மை.
உதாரணமாக, வெளி மாநிலங்களில் இயற்கைப் பேரழிவில் சிக்கிக்கொண்ட தமிழக சுற்றுலாப் பயணிகளை மீட்டெடுக்க தமிழகத்தில் உள்ள ஒரு அதிகாரி, ஒரே ஆண்டில் பணியில் சேர்ந்த தனது சக அதிகாரியைத் தொலைபேசி மூலம் அணுகியே மீட்புப் பணியை விரைவுபடுத்த முடியும். இதேபோல மக்கள் நலத் திட்டங்கள் குறித்த விவரங்களை உடனடியாகக் கேட்டுப் பெறுவது என்பன போன்ற பல விஷயங்களையும் சாதிக்க இந்தத் தோழமை உணர்வு இதுவரை பயன்பட்டு வந்துள்ளது.
சொந்த மாநிலமல்லாத வேறொரு மாநிலத்தில் பணியில் அமர்த்தப்படுபவர்களும் காலப்போக்கில் அந்த மாநில மொழி, கலாச்சாரம் போன்றவற்றில் ஆழ்ந்த அறிவு பெறுபவர்களாக, மாநிலங்களிடையே மொழி, கலாச்சார பரிமாற்றத்துக்கு உதவுபவர்களாக உருவாவதையும் அனுபவத்தில் கண்டிருக்கிறோம். ஆனால், பயிற்சிக் காலத்தில் நடக்கும் தேர்வில் பெறும் மதிப்பெண்கள்தான் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் எனும்போது, மாநிலம் தாண்டிய நட்புணர்வில் விரிசல் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.
தவறான முன்னுதாரணம்
சட்டபூர்வமான அமைப்பான மத்திய பொதுத் தேர்வாணையத்தின் தரவரிசை என்பதற்கு மாறாக, மத்திய அரசின் நேரடிப் பொறுப்பில் இருக்கும் பயிற்சி மையத்தில் நடைபெறும் தேர்வுகளில் பெறும் மதிப்பெண்களையும் சேர்த்து அதன் அடிப்படையிலேயே ஒதுக்கீடு என்ற ஏற்பாடு வேறு பல ஐயங்களையும் ஏற்படுத்துகிறது. அரசுக்கு நெருக்கமானவர்கள், வேண்டியவர்கள் எனப் பலரையும் இந்த பயிற்சித் தேர்வில் கணிசமாக வெற்றி பெறவைப்பதன் மூலம் தேர்வர்களின் தரவரிசையில் எளிதாக மாற்றம் கொண்டு வந்துவிடலாம்.
இதுவரையில், குடிமைப்பணித் தேர்வில் வெற்றி பெற்று, நேர்முகத் தேர்விலும் வெற்றி பெற்றவர்கள் அரசு நிர்வாகத்தில் தனித்திறன்களை மேம்படுத்த மட்டுமே அரசுப் பயிற்சி மையம் பயிற்சியளித்துவந்தது. இனி, இந்த மையம் அரசு மட்டத்திலிருந்து பல்வேறு வகையான நிர்ப்பந்தங்களுக்கும் அடிபணிய வேண்டிய நிலை உருவாகும். அது, அந்த மையத்தின் நிர்வாகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். இத்தகையதொரு நிலையில் ஆட்சிப் பணிக்காகத் தேர்வு பெற்றவர்கள் மக்கள் சமூகத்துக்குப் பணிசெய்வதற்குப் பதிலாக தங்கள் நலம் விரும்பிகளுக்கு சேவை செய்வதில் கொண்டுவிடும் வாய்ப்பும் உள்ளது. இது தவறான முன்னுதாரணமாகிவிடும்.
கேள்விக்குறியாகும் சமூக நீதி
பொதுத் தேர்வுகளில் வெற்றி பெற்று இடஒதுக்கீட்டு முறையின் மூலமாக மத்திய பொதுப்பணிகளில் நுழைய வாய்ப்பு பெற்ற பட்டியலின, பழங்குடி, மிகவும் பிற்படுத்தப்பட்ட, மாற்றுத் திறனாளிகள் இதில் பாதிக்கப்படுவார்கள் என்பது மிக முக்கியமான விஷயம்.
கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம், சென்ற ஆண்டு தேர்வு எழுதி வெற்றிபெற்றதாக சமீபத்தில் முடிவுகள் வெளியாகியுள்ள தேர்வர்களுக்கு இந்த ஏற்பாடு பொருந்தலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. மத்திய பொதுத் தேர்வாணையத்தின் இப்போதைய தரவரிசை அடிப்படையில் ஒதுக்கீடு என்பதை உண்மையிலேயே அரசு செழுமைப்படுத்த வேண்டும் என்று நினைத்தால், தற்போதுள்ள தேர்வு முறையை மேலும் செழுமைப்படுத்தும் ஏற்பாடுகளைத் தேர்வாணையம் மேற்கொள்ள பரிந்துரைக்கலாம்.
அதன் முடிவுகளின் அடிப்படையிலேயே தரவரிசை அமையவும் வேண்டும். கல்வித் துறையின் ஒவ்வொரு அடியிலும் கீழ்நிலைச் சமூகங்களைப் பாதிக்கும் மாற்றங்களை எடுப்பதையே ஒரு அரசு வழக்கமாக மாற்றிக்கொண்டிருப்பது மிக அபாயகரமானது.
-வீ.பா.கணேசன், எழுத்தாளர்.
மேற்கு வங்க அரசில் 25 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
தொடர்புக்கு : vbganesan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT