Published : 16 May 2018 08:56 AM
Last Updated : 16 May 2018 08:56 AM
தெ
ன்னிந்திய மாநிலங்களில் தென் மேற்கில் இருப்பது கர்நாடகம். அரசியல்ரீதியாகப் பெரும் முக்கியத்துவம் கொண்ட மாநிலம். கடந்த 20 ஆண்டுகளில் பாஜக, காங்கிரஸ், மஜத என்று மூன்று கட்சிகளின் ஆட்சி நடந்தது. கடந்த மூன்று தேர்தல்களில் பாஜகவும் காங்கிரஸும் மாறி மாறி ஆட்சிக்கு வந்தன. இந்தத் தேர்தலில் மஜத கிங் மேக்கராக இருக்கும் என்று தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளும் பிந்தைய கருத்துக்கணிப்புகளும் தெரிவித்திருந்தன. லிங்காயத்துகள் தனி மதமாக்கப்பட்டது, விவசாயப் பிரச்சினை, காவிரி பிரச்சினை ஆகியவை இந்தத் தேர்தலில் பிரதான காரணிகளாகப் பார்க்கப்பட்டன. பாஜகவின் கடும் பிரச்சாரத்தால் காங்கிரஸை வீழ்த்த முடிந்தது. ஆனால், கடைசி நேரத்தில் காட்சி மாறியது. தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியில் மஜதவுடன் காங்கிரஸ் கைகோக்க, குமாரசாமி ஆட்சியமைக்க உரிமை கோரியிருக்கிறார்.
மாநிலத்தின் பின்னணி
பரப்பளவு - 1,91, 976 சதுர கிலோ மீட்டர். மக்கள்தொகை – 6,11,30,704. தேசிய அளவில், பரப்பளவில் ஏழாவது இடத்திலும் மக்கள் தொகையில் எட்டாவது இடத்திலும் இருக்கிறது. மொத்தம் 30 மாவட்டங்கள் உள்ளன. இந்துக்கள் 84.1%, முஸ்லிம்கள் 12.92%, கிறிஸ்தவர்கள் 0.72% உள்ளனர். கன்னடம், கொடவா, துளு, கொங்கணி, பியாரி, தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகள் பேசப்படுகின்றன. எழுத்தறிவு பெற்றவர்கள் – 75.60%. மாநிலத்தின் ஜிடிபி – ரூ.14.08 லட்சம் கோடி. நபர்வாரி வருமானம் – ரூ.1,46,416.
கர்நாடகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு 11,586 கோடி டாலர்கள். 2014-15-ல் மாநிலத்தின் ஜி.எஸ்.டி.பி. வளர்ச்சி 7%. வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் எண்ணிக்கை 20.91%. வேலையற்றோர் – 1.8%. மாநிலத்தில் விவசாயம், தொழில்துறை இரண்டும் வளர்ச்சி அடைந்துள்ளன. விவசாயத் தொழில் சார்ந்து மக்கள்தொகையில் 56% வாழ்கின்றனர். மொத்தம் 123.10 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி நடக்கிறது. நெல், வாழை, கரும்பு, கேழ்வரகு, கம்பு, சோளம் சாகுபடியாகிறது. தென் மேற்குப் பருவமழையை நம்பித்தான் விவசாயம் இருக்கிறது.
கரிய மண் பூமி என்பதால் ‘கரு’ நாடு என்று அழைக்கப்பட்டதாகவும். மேட்டுப்பாங்கான நிலம் என்பதால் அப்பெயர் பெற்றதாகவும் (கன்னடத்தில் கரு என்றால் மேடு) கூறுகின்றனர். கர்நாடகம் பருத்தி விளைச்சலுக்கு ஏற்ற நிலம் கொண்டது. ‘பாயலு சீமா’ என்றும் கன்னடத்தில் அழைக்கிறார்கள்.
கர்நாடகத்தின் வட பகுதியில் கிருஷ்ணா நதிநீர் ஆயக்கட்டும் தெற்கில் காவிரி நதி நீர் ஆயக்கட்டும் உள்ளது. கிருஷ்ணாவுடன் பீமா, கடபிரபா, மலபிரபா, வேதவதி, துங்கபத்திரை நதிகளும் பாய்கின்றன. தெற்கில் காவிரியுடன் ஹேமவதி, சிம்சா, அர்காவதி, கபினி, லட்சுமணதீர்த்தா நதிகளும் பாய்கின்றன. பெலகாவி மாவட்டத்தில் உற்பத்தியாகும் மகதாயி நதி தொடர்பான பிரச்சினையும் கர்நாடகத்தில் முக்கியமானது. ஆற்று நீர் பெருமளவு அரபிக்கடலில் வீணாகக் கலப்பதால் நடுவில் அணைகட்டி மலபிரபா ஆற்றுக்குத் தண்ணீரைத் திருப்பிவிட 1970-கள் முதல் கர்நாடம் முயல்கிறது. கர்நாடகத்தின் வட மாவட்ட தண்ணீர்த் தேவைக்கு கர்நாடகம் முயல்கிறது. அதை கோவா தடுத்து வந்தது. அது தொடர்பாக இரு மாநிலங்களுக்கும் உடன்பாடு ஏற்பட்டு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
புவியியல்ரீதியாக 1. கரவாலி என்று அழைக்கப்படும் கடலோரப்பகுதி, 2. மலே நாடு என்றழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலை, 3. பாயலு சீமா என்ற தக்காண பீடபூமி ஆகிய மூன்று பகுதிகள் சேர்ந்ததே கர்நாடகம். தலைநகரான பெங்களூருவுக்கு அடுத்ததாக முக்கியமான நகரம் மைசூரு. 152 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட பெரிய நகரம் இது.
கடந்த கால வரலாறு!
கர்நாடகத்தில் இந்துக்கள் அதிகம். அவர்களில் லிங்காயத்துகள் பெரும்பான்மையினர். அடுத்தது ஒக்கலிகர்கள். மூன்றாவது குருபர்கள். இது மட்டுமன்றி, தலித்துகள் 20%. முஸ்லிம்கள் 10% உள்ளனர். இங்கு முதல்வர் பதவி லிங்காயத்துகள், ஒக்கலிகர்களால் மட்டுமே அதிக முறை வகிக்கப்பட்டது. தேவராஜ் அர்ஸ் (பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்), ராமகிருஷ்ண ஹெக்டே (பிராமணர்), சித்தராமையா (குருபர்) ஆகியோர் விதிவிலக்கு.
காங்கிரஸ் பிளவுபட்ட பிறகு ஸ்தாபன காங்கிரஸ், நெருக்கடி நிலை அமலுக்குப் பிறகு ஜனதா, ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மாநிலத்தை ஆண்டன. ஜனதா தளம் இரண்டாகப் பிரிந்தது. கர்நாடகத்தில் மட்டும் மதச்சார்பற்ற ஜனதா தளம் செல்வாக்குடன் இருக்கிறது. ஆனால், இது சாதி, பிரதேசம் சார்ந்த செல்வாக்கு. காங்கிரஸ் கட்சி மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், சிறுபான்மையினர் இணைந்த ‘அகிண்ட’ உத்தியைப் பயன்படுத்தி வெற்றி பெற்றுவருகிறது.
நாடு சுதந்திரம் அடைந்தது முதல் கர்நாடகப் பிரதேசத்தை 20-க்கும் மேற்பட்ட முதலமைச்சர்கள் ஆண்டுள்ளனர். ஆனால், பெரும்பாலானவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவாகவே பதவி வகித்தவர்கள். எஸ். நிஜலிங்கப்பா, தேவராஜ அர்ஸ், சித்தராமைய்யா ஆகியோர் மட்டுமே ஐந்து ஆண்டுகள் பதவி வகித்துள்ளனர். முதல் முதலமைச்சர் செங்கல்ராய ரெட்டி, கே.அனுமந்தய்யா, எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோர் 4 ஆண்டுகள் பதவி வகித்துள்ளனர். கர்நாடகத்தில் ஆட்சி மாற்றங்களும் முதல்வர் மாற்றங்களும் அடிக்கடி நடந்துள்ளன. அத்துடன் குடியரசுத் தலைவர் ஆட்சியும் ஆறு முறை அமலாகியிருக்கிறது.
பேசப்பட்ட விஷயங்கள்
இந்தத் தேர்தலில் ஊழல், வேலைவாய்ப்பு, கன்னட மொழியின் பெருமை, கன்னடர்களின் வரலாற்றுப் பெருமை, மதச்சார்பின்மை ஆகியவை பிரதானமாகப் பேசப்பட்டன. காங்கிரஸ் ஆட்சியில் தலித்துகள் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் விரைவாகவும் சிறப்பாகவும் நடைபெறுவதை சித்தராமையா பெருமையுடன் பேசினார். கர்நாடக மாநில சாலைகளின் தரம் அரசின் நிர்வாகத் திறமை, மத்திய அமைச்சர்களாலேயே பாராட்டப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். பதிலுக்கு, சித்தராமையா அரசில் லஞ்ச ஊழல்கள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் இருந்ததைப் பிரச்சாரத்தில் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சுட்டிக்காட்டினர். மாநில அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரித் துறையினர் சோதனை என்ற பெயரில் அச்சுறுத்தியதாக சித்தராமையா பதிலுக்குக் குற்றம்சாட்டினார். எடியூரப்பா உள்ளிட்ட உள்ளூர் பாஜகவினரின் ஊழலையும் சுட்டிக்காட்டினார்.
எது தீர்மானித்தது?
பாஜகவுக்கு லிங்காயத்துகள், பழங்குடியினர், மத்தியதர வர்க்கத்தினரின் ஆதரவு கணிசமான தொகுதிகளைப் பெற்றுத்தந்திருக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள், இளைஞர்கள் ஆதரவு பெரும் தோல்வி ஏற்படாமல் காங்கிரஸைக் காப்பாற்றியது. கர்நாடகத்தில் கடந்த 30 ஆண்டுகால வரலாற்றில் எந்தக் கட்சியும் தொடர்ந்து இரு முறை ஆட்சிசெய்ததில்லை. அத்துடன், தேர்தலுக்கு முன்பு அரசியல் கட்சிகளுக்கு இடையில் வலுவான கூட்டணி உருவாகாததால் திட்டவட்டமான முடிவு வெளியாகவில்லை. பாஜக 104, காங்கிரஸ் 78, மஜத 37, மற்றவை 3 என்று தேர்தல் முடிவுகள் வெளியாகின. அமித் ஷாவின் வியூகமும் மோடியின் பிரச்சாரமும் எடியூரப்பாவின் லிங்காயத்து பின்புலமும் பாஜகவுக்குக் கைகொடுத்திருக்கின்றன. காங்கிரஸ் எதிர்பார்த்ததைப் போல, கர்நாடகத்துக்குத் தனிக்கொடி, இந்தி எதிர்ப்பு, லிங்காயத்துகளைத் தனி மதத்தினராக அறிவித்தது போன்றவை தேர்தலில் ஒரு செல்வாக்கைச் செலுத்தியிருந்தாலும், ஆட்சியைத் தக்கவைக்க அவை உதவவில்லை. மஜதவின் செல்வாக்கு ஒக்கலிகர்களிடமும் பழைய மைசூரு பிராந்தியத்திலும் மங்கவில்லை. அதேசமயம், பிற பகுதிகளில் கூடவும் இல்லை. விவசாயக் கடன் தள்ளுபடி தருவதாக குமாரசாமி அறிவித்தது அக்கட்சிக்குக் கணிசமான ஆதரவைப் பெற்றுத்தந்தது!
- வ.ரங்காசாரி, தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT