Published : 17 May 2018 08:28 AM
Last Updated : 17 May 2018 08:28 AM
க
ர்நாடக சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. காங்கிரஸுக்கு இது வெற்றியா என்றால், ஆமாம். வெற்றிதான். தோல்வியா என்றால், ஆமாம். தோல்வியும்தான். பாஜகவுக்கு அடுத்தபடியாக அதிக தொகுதிகளை வென்று இரண்டாம் இடத்தைப் பிடித்திருந்தாலும் வாக்கு சதவீதத்தில் காங்கிரஸுக்கு முதலிடம். ஆனால், பெற்றிருக்கும் தொகுதிகள் அடிப்படையில் தோல்வி. இந்தத் தோல்விக்கான முக்கியமான காரணங்களில் ஒன்று பாஜகவுக்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைப்பதில் காங்கிரஸ் அடைந்திருக்கும் தோல்வி என்பது முக்கியமானது. குஜராத் தேர்தலில் இதையே பார்த்தோம்.
பாஜகவின் தொடர் வெற்றி ஜனநாயகத்துக்கான சவாலாகிவருவதை நாம் தொடர்ந்து கவனித்துவருகிறோம். எதிர்க்கட்சிகளே இல்லாத சூழலை உருவாக்க அது காட்டிவரும் முனைப்பு ஒரு உதாரணம். இன்று நாட்டின் பெரும்பாலான கட்சிகள் பாஜகவை எதிர்க்கின்றன. அவற்றில் பெரும்பாலானவை ஓரணியில் இணையவும் தயாராகவே இருக்கின்றன. இந்த ஒருங்கிணைப்புப் பணியை காங்கிரஸ்தான் மேற்கொள்ள வேண்டும்.
தேசிய அளவில் தான் பெரிய கட்சியாக இருந்தாலும், மாநிலங்களில் செல்வாக்கு பெற்றிருக்கும் ஒத்தக் கருத்துள்ள கட்சிகளை காங்கிரஸ் இணைத்துக்கொள்ள வேண்டும். இந்தியாவில் நடைமுறையிலிருக்கும் தேர்தல் ஜனநாயகத்தின் தன்மைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். வாய்ப்பிருக்கும் மாநிலங்களில், தனித்துப் போட்டியிட்டு தனிப்பெரும்பான்மை பெற்றுவிடலாம் என்ற முயற்சியும் கனவும் தற்கொலைக்குச் சமம் என்பதையும் அது கவனத்தில்கொள்ள வேண்டும். தேர்தல் வெற்றி என்பது கட்சியின் தனிப்பட்ட செல்வாக்கால் மட்டுமே சாத்தியமில்லை என்பதைக் காலம் மீண்டும் மீண்டும் உணர்த்திய பிறகும் மாநில அளவில் செல்வாக்கு கொண்ட கட்சிகளோடு இணைந்து நிற்பதில் காங்கிரஸ் தயக்கம் காட்டியே வருகிறது.
கர்நாடகா சட்ட மன்றத்தில் தனக்குப் பெரும்பான்மை இல்லையென்றதும், மஜதவுக்கு முதல்வர் பதவியை அளிக்க முன்வந்து, பாஜகவுக்கு பதிலடி கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். ஆனால், இது காலம் கடந்த முடிவு. தேர்தலுக்கு முன்பே இந்தக் கூட்டணி சாத்தியப்பட்டிருந்தால், கர்நாடக தேர்தல் முடிவுகள் முற்றிலும் வேறாக இருந்திருக்கும். கர்நாடகத் தேர்தல் முடிவுகள், ராகுல் காந்திக்குத் திருப்தியளித்திருப்பதாகவே அவரது ட்விட்டர் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், மதச்சார்பின்மைக்குக் குரல்கொடுக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் விடுத்த அறிக்கைகள் நேரடியாகவே ஒரு செய்தியைச் சொல்கின்றன. "நாம் சேர்ந்து நிற்கவேண்டிய நேரமிது!”
நாடு முழுவதும் ஒத்தைக்கு ஒத்தையாக நின்று மல்லுக்கட்டுவதை நிறுத்திவிட்டு, பாஜக வலுவாக இருக்கும் மாநிலங்களில், மாநிலக் கட்சிகளைத் தலைமையேற்கச் செய்ய வேண்டும் என்று காங்கிரஸுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் வங்க முதல்வரும் திரிணமூல் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி. மஜத தலைவர் தேவ கவுடாவிடம் பேசிய மம்தா, மதச்சார்பற்றக் கூட்டணியில் தொடர வேண்டும் என்று அவரைக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிகிறது. கர்நாடகத் தேர்தலில் மஜதவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட பகுஜன் சமாஜன் கட்சியின் தலைவர் மாயாவதி, மதச்சார்பற்ற கூட்டணியில் மஜத தொடர வேண்டும் என்ற நிபந்தனையோடுதான் கூட்டணிக்குச் சம்மதித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சித் தலைவர் டி.ராஜா, மதச்சார்பற்ற மாநிலக் கட்சிகளை காங்கிரஸ் அரவணைத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
காங்கிரஸ்-மஜத வலுவாக ஒன்றிணைந்து நின்றால், கர்நாடக சட்ட மன்றத் தேர்தலில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி. தமிழகத்தின் முக்கியக் கட்சிகளான திமுகவும் விடுதலைச் சிறுத்தைகளும் மதச்சார்பற்ற அணியில்தான் நிற்கின்றன. பிகாரில் ராஷ்ட்ரிய ஜனதா தளம், காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சி என்று அந்தந்த மாநிலத்தின் முக்கியக் கட்சிகள் மதச்சார்பற்ற கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன.
இந்துத்துவத்தை முன்னிறுத்தி இயங்கும் சங்கப் பரிவாரங்களின் இடைவிடாத களப்பணிகளின் பயனை பாஜக இப்போது அறுவடை செய்துகொண்டிருக்கிறது. கருத்தியல்ரீதியாக ஊடுருவ முடியாத இடங்களில் வெற்றிக்கு எது உதவுமோ அந்த சமரசத்தைச் செய்துகொள்ளவும் அது தயாராக இருக்கிறது. தேர்தல் நேரத்தில் மட்டுமே நீள்துயில் கலையும் காங்கிரஸ், மாநிலக் கட்சிகளுடன் இணைந்து தேர்தல்களைச் சந்திப்பது ஒன்றுதான் அதற்கு முன்னால் உள்ள ஒரே வாய்ப்பு. தேர்தல் வெற்றிக்காக எந்த சமரசத்தையும் செய்துகொள்ள அரசியல் எதிரி தயாராக இருக்கும்போது, இந்திய அரசியலமைப்பின் உயிரார்ந்த ஒரு கொள்கையான பன்மைத்துவத்தைக் காக்கும் அடிப்படையில் ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கு ராகுலைத் தடுப்பது என்ன? அது கடந்த கால காங்கிரஸ் மேலாதிக்க மனோபாவத்தின் நிழல்தான் என்றால், அதை அவர் உதறியெறிய வேண்டிய நேரமிது.
காங்கிரஸா, இந்தியாவா இரண்டில் எது வெற்றி பெற வேண்டும் என்பதுதான் காலத்தின் கேள்வி. கருத்தியல்ரீதியான இந்தப் போட்டியை பாஜகவா இல்லை காங்கிரஸா என்று கட்சிகளின் போட்டியாக ராகுல் காந்தி இனியும் சுருக்கிப்பார்க்கக் கூடாது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT