Published : 09 May 2018 08:55 AM
Last Updated : 09 May 2018 08:55 AM
பே
ராசிரியர் ஸ்டீவன் பிங்கர், ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் அறிவாற்றல் உளவியலாளர். மொழியை நாம் எப்படிக் கற்றுக்கொள்கிறோம், உலகை நம் மனது எப்படிப் புரிந்துகொள்கிறது ஆகியவை தொடர்பான புத்தகங்களை எழுதியவர். சமீபத்தில் ‘என்லைட்டன்மென்ட் நவ்: தி சேஸ் ஃபார் ரீஸன், சயின்ஸ், ஹியூமனிஸம் அண்ட் ப்ராக்ரஸ்’ எனும் தலைப்பில் புத்தகம் எழுதியிருக்கிறார். ஐரோப்பிய புத்தொளிக்கால விழுமியங்கள்தான் 20-வது நூற்றாண்டை மிகுந்த வளமாக்கின என்று அந்நூலில் குறிப்பிட்டிருக்கிறார். அவருடனான பேட்டி:
மனித குலம் முன்னேற்றம் அடைந்துவருகிறது என்று கருதுகிறீர்கள்; இதுகுறித்து விளக்க முடியுமா?
மனிதர்களின் வாழ்க்கை நிலை குறித்து அறிவதில் எப்போதும் ஆர்வமாக இருந்துவருகிறேன். பகுத்தறிவாளர்கள், பண்டைய கிரேக்க சிந்தனையாளர்களால் விடை காணப்பட்ட கேள்விகள் எனக்கும் ஆர்வம் ஊட்டுபவையாகவே இருக்கின்றன. மனித மனம் எப்படி வேலை செய்கிறது என்ற விவாதம் தொடர்பாகத் தரவுகளையும் பரிசோதனைகளை யும் கொண்டு விடை காண முயல்வதே அறிவாற்றல் அறிவியல். மனித சுபாவம் என்று ஒன்றுமே இல்லை என்று மக்களை நம்ப வைக்க ஏன் அரசியல், தார்மிக அழுத்தம் தரப்படுகிறது என்ற கேள்வி எனக்குள் எழுந்தது. ஏன் பிரபல மான அறிவுஜீவிகள் சிலர் இதை மறுக்கின்றனர் என்று கேட்டுக்கொண்டேன். மனிதனின் இயற்கையான சுபாவத்தை நம்புவதாக இருந்தால், முன்னேற்றம் - சமூகத்தை மேம் படுத்துவது ஆகியவற்றிலும் நம்பிக்கை இழந்துவிடுவோம் என்று பேசப்படாத ஒரு கருத்தியல் இருப்பதாக எனக்குத் தோன்றியது. அடக்கியாளும் சுபாவம், ஆக்ரோஷம், பொறாமை என்ற எதிர்சமூகச் சிந்தனைகளே மக்களிடம் அதிகம் என்றால், மனித சமூகம் முன்னேற வாய்ப்பே கிடையாது. இந்தச் சிந்தனை தவறானது என்று நான் வாதிட்டேன். மனித மனம் பல்வேறு பகுதிகளினால் ஆனது. அதில் தீய குணங்கள் மட்டுமே கிடையாது. புதிய சூழலுக்கேற்ற முடிவுகளை எடுக்கும் ஆற்றல், எண்ணங்களை மற்றவர்களுக்கு மொழிவழியாக எடுத்துச்சொல்லும் ஆற்றல், அடுத்தவர்களின் இன்னல் கண்டு அனுதாபம் கொள்ளும் குணம், மற்றவர்களின் நல்வாழ்வுக்காக அக்கறை செலுத்தும் பண்பு ஆகியவையும் சேர்ந்ததுதான் மனிதர்களின் மனம். மனிதர்களின் எந்தக் குணம் மேலோங்கி நிற்கிறதோ அது அந்த சமூகத்தில் எதிரொலிக்கிறது. சமூக முன்னேற்றம் என்பது சாத்தியமானதே, அது கடந்த காலத்திலும் நிகழ்ந்திருக் கிறது. மனிதனை மனிதன் அடிமையாக நடத்தும் அடிமை வியாபாரம் ஒழிக்கப்பட்டது; அதிக வன்செயல்கள் ஏதும் இல்லாமல் சோவியத் ஒன்றிய நாடுகள் சுதந்திரமாகப் பிரிந்தன. ரோமானியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு ஐரோப்பா வில் கொலைகள் குறையத் தொடங்கின. மனிதர்களின் சுபாவங்களில் அதிக மாற்றம் ஏற்படாவிட்டாலும் சமூகங்கள் மாறியிருப்பதை வரலாறு தெரிவிக்கிறது. உலகத்தைப் பற்றி தனி மனிதனின் கண்ணோட்டத்தின் மூலம் பார்ப்பதைவிட, வரலாறு எப்படி மாறிக்கொண்டிருக்கிறது என்று பார்த்தால் வேற்றுமை புலப்படும். மனித குலத்தின் உண்மையான நிலை நாம் நினைப்பதைப் போல மோசமாகிவிடவில்லை.
மனித குலத்தின் எதிர்காலம் குறித்து அவநம்பிக்கை கொள்ள வேண்டாம் என்கிறீர்கள்; டொனால்டு டிரம்பின் வளர்ச்சிதான் உங்களுடைய நம்பிக்கைக்குக் காரணமா?
மனித குல முன்னேற்றம் குறித்து நான் புத்தகம் எழுதத் தொடங்கியபோது, டொனால்டு டிரம்ப் தொலைக்காட்சி நட்சத்திரமாகத்தான் இருந்தார், அரசியலுக்கு வரவில்லை. யார் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் கனவு காண முடியாதோ அவர்தான் அமெரிக்க அதிபர் ஆவார் என்றே நகைச்சுவையாகப் பேசப்பட்ட காலம் அது. உலகில் மனித குலம் ஒட்டுமொத்தமாக மோசமாகவில்லை, கெட்டுவிடவில்லை என்று ஆதாரங்கள் நிறைந்த, உண்மையை அடிப்படையாகக் கொண்ட தகவல்களால் புத்தகத்தை எழுதிக்கொண்டிருந்தேன். அமெரிக்கச் சமூகம் நாற்றமெடுத்து அழுகிக்கொண்டிருப்பதைப் போலவும், வன்செயல்கள் அதிகரிப்பதைப் போலவும், மக்கள் அதிக எண்ணிக்கையில் ஏழ்மையில் தள்ளப்படுவதாகவும் டிரம்ப் விளம்பரம் செய்துகொண்டிருந்தார். உண்மை அதற்கு நேர்மாறாக இருந்தது. அமெரிக்காவில் குற்றச் செயல்கள் குறைந்துவருகின்றன, பிற நாடுகளில் அமெரிக்கா செய்துவரும் போர்களின் எண்ணிக்கை யும் குறைந்துவருகிறது, பிற அம்சங்களால் இறப்பதைவிட பயங்கரவாதச் செயல்களால் ஏற்படும் உயிர்ப் பலிகளின் எண்ணிக்கையும் குறைவு. எனவே, டிரம்பும் வேறு சிலரும் மனித குலம் குறித்தும் உலக எதிர்காலம் குறித்தும் பரப்பிவரும் எதிர்மறைச் சிந்தனைகள் தவறு என்பதை உணர்த்தவே புத்தகம் எழுதத் தலைப்பட்டேன்.
பல நாடுகளில் வலதுசாரி வெகுஜன மக்கள் இயக்கம் அதிகரித்துவருவதாகக் கூறியிருக்கிறீர்கள்; அதேசமயம், அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இடதுசாரி சார்பு அதிகரித்துவருவதாகவும் எழுதியிருக்கிறீர்கள். இது முரணாகத் தெரியவில்லையா?
இதை முரணாகப் பார்க்கவில்லை. இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது. மதச்சார்பற்ற, தாராள ஜனநாயக நடைமுறைகளால் விளைந்த நன்மைகளையும் முன்னேற்றத்தையும் இருதரப்பும் கவனித்து பாராட்டத் தவறிவிட்டன. அறிவியல், ஜனநாயகம், வர்த்தகம், சர்வதேசச் சமூகத்தால் நாம் நன்மைகளைப் பெற்றிருக்கிறோம். இந்த உண்மை கள் பத்திரிகைகளிலோ, பல்கலைக்கழகங்களிலோ, அறிவுஜீவிகளின் பத்திரிகைகளிலோ முக்கியத்துவம் தந்து எழுதப்படவில்லை. எல்லாப் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஓலமிடுவதும் சமூக விமர்சகராக மாறுவதும் எளிது; இதைக் கைவிட்டு எங்கே தவறு நடந்தது என்று சுட்டிக்காட்டினால் அதைச் சரிசெய்ய முடியும்.
மேற்கத்திய நாடுகளின் காலனிகளாக இருந்த நாடுகளின் மக்கள், சிறுபான்மையோர், மகளிர் ஆகியோரின் நலனுக்காகப் புத்தொளிக் கால அறிவுஜீவிகள் அதிகம் மெனக்கெட்டதில்லை; புத்தொளிக் காலத்துக்கு உரியதைவிட அதிக பாராட்டுகளை நாம் வழங்குகிறோமோ?
நாடுகளைக் காலனிகளாகப் பிடித்ததற்கும் புத்தொளி பரவியதற்கும் தொடர்பு எதையும் பார்க்கவில்லை; அமெரிக்கக் கண்டம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு காலனியாக்கம் தொடங்கிவிட்டது. கடல் பயணத் தொழில்நுட்பங்களில் ஏற்பட்ட மேம்பாடும் கப்பல் கட்டுவதில் ஏற்பட்ட நவீனத்துவமும் கடல் பயண அனுபவ அதிகரிப்பும் அதிகரித்ததால் உலகின் பிற நாடுகளை ஐரோப்பிய நாடுகள் தங்களுடைய காலனிகளாகப் பிடிப்பது தொடங்கிவிட்டது. புத்தொளி இயக்கம் பிறந்த பிறகுதான் ஏகாதிபத்தியத்தை விமர்சிப்பது தொடங்கியது - குறிப்பாக அமெரிக்காவில்! பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற எண்ணம் பரவியது. அடிமைகளை விலைக்கு வாங்குவது தொடர்பாகவும், பெண்களுக்கு அதிக உரிமைகளைத் தருவது பற்றியும் கேள்விகள் முன்வைக்கப்பட்டபோது, புத்தொளி காலத்தைச் சேர்ந்த மக்களுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை.
பொருளாதார ஏற்றத்தாழ்வு பற்றிய அத்தியாயத்தில், ‘ஏற்றத்தாழ்வுகள் அதிகரித்துவருகின்றன, இதனால் உலக முறைமையே சீர்குலைந்துவிடும் என்ற அச்சமெல்லாம் மிகைப்படுத்தப்பட்டவை’ என்கிறீர்கள்; உலகம் முழுவதுமே மக்கள் சராசரியாக பணக்காரர்களாகிவருகின்றனர் என்கிறீர்கள். அப்படியென்றால் வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கங்களாகத் திகழும் நாடுகள் வெளிப்படையாக நடக்க வேண்டும் என்று கேட்கக் கூடாதா? செல்வந்தர்கள் மீது சொத்துக் குவிப்புக்காக வரி விதிக்கக் கூடாதா?
வரி ஏய்ப்புப் புகலிடங்களும் வரி ஏய்ப்பும் முறையற்ற செயல்களின் இருவேறு வடிவங்கள். ஏற்றத்தாழ்வு என்ப தைப் பிற பிரச்சினைகளிலிருந்து பிரித்துப் பார்க்க வேண்டும். நல்வாழ்வு நடவடிக்கை என்பது ஏழைகளின் நிலையை மேம்படுத்துவது. ஏற்றத்தாழ்வு என்பது ஏழை - பணக்காரர் இடையிலான பொருளாதார வேறுபாட்டைப் பற்றியது. வறுமையையும் ஏற்றத்தாழ்வையும் ஒன்றென்று கருதிக் குழப்பம் அடையக் கூடாது. எல்லோரும் சமமாக இருக்க வேண்டும் என்றால் எல்லோரும் ஏழைகளாக இருக்க வேண்டும் என்பதல்ல; அரசு அமைப்பைப் பணக்காரர்கள் பயன்படுத்திக்கொண்டு தங்களை மேலும் மேலும் பணக் காரர்களாக்கிக்கொண்டால் அதை எதிர்க்க வேண்டும். வரிச் சலுகை காட்டும் நாடுகளும், அரசியல் மீது பணக்காரர்கள் அதிக செல்வாக்கு செலுத்துவதும் மிகவும் தீவிரமான பிரச்சினைகள். பணக்காரர்கள் மீது அதிக வரி விதிப்பதால், அரசியல் மீது பணக்காரர்கள் செலுத்தும் செல்வாக்கு சரிந்துவிடாது.
இயந்திர மனிதர்கள் காலப்போக்கில் சாதாரண மனிதர்களை வேலைகளிலிருந்து வெளியேற்றிவிடுவார்கள் என்ற அச்சம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
இது தொடர்பாக நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பொறுமையாக ஆராய வேண்டும். சில வேலைகள் மனிதர்களுக்கே கிடையாது என்று இயந்திர மனிதர்கள் செய்துவிடுவார்களா என்று பார்க்க வேண்டும். இயந்திர மனிதர்கள் எல்லா இடங்களிலும் அமர்த்தப்பட்டுவிட்டால் சாமானியர்கள் அடிமைகளாகிவிடுவார்களா, மனித குலமே முடிவுக்கு வந்துவிடுமா என்றெல்லாம் ஆராய வேண்டும். உயர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதற்கு முன்னால் எல்லா அலுவலகங்களிலும் டெலிபோன் ஆபரேட்டர்கள் என்ற பதவி இருந்து, இப்போது ஒழிக்கப்பட்டுவிட்டதைப் போல நாளை லாரி டிரைவர் வேலைக்கு மனிதர்களே தேவைப்படாமல் போய்விடலாம். அது அணு ஆயுதம் மூலமான அழிவைவிட ஆபத்தானதாக அமைந்துவிடும். இதன் சாதக பாதகங்களை நிபுணர்களும் நிபுணர்களையே எடைபோடுபவர்களும் அமர்ந்து விவாதிக்க வேண்டும். தொழில் துறையில் என்னவெல்லாம் மாற்றம் வரும் என்று முன்கூட்டியே ஊகித்து எழுதப்பட்டவை குறித்து சமூக விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள், நிபுணர்கள் கருத்து ஏதும் சொல்லாமல் மவுனமாக இருந்தனர். எதிர்காலம் பற்றிய என்னுடைய அறிவியல் நூலில் இதை நான் விவாதித்திருக்கிறேன்.
அறிவியல் துறையில் வல்லரசாக சீனா உருவாகிவருகிறது. சுதந்திரமான ஜனநாயகம் குறித்து அது அதிகம் கவலைப்படுவதில்லை. ஜப்பான் இன்னொரு அறிவியல் வல்லரசு. அது பெண் ஆராய்ச்சியாளர்களுக்குக் குறைவான சம்பளத்தையே கொடுக்கிறது. ஒரு நாடு முன்னேற்றம் அடைவதற்குச் சுதந்திரமும், சம வேலைக்கு சம ஊதியம் என்பதும் முக்கியம் இல்லை என்று நாடுகள் நினைப்பதை இது காட்டவில்லையா?
அப்படி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. மக்க ளில் சரிபாதியாக இருக்கும் பெண்களின் திறனை பயன் படுத்தத் தவறிவிட்டதை ஜப்பான் வெகு விரைவில் உணரும். சீனா சுதந்திரமான ஜனநாயகத்தை அனுமதிக் கும் நாடு அல்ல. ஆனால், மாவோ வாழ்ந்த காலத்தைவிட இப்போது மக்களின் நலன் குறித்து அதிகம் அக்கறை காட்டுகிறது. சுதந்திரம், பொருளாதார வளர்ச்சி, மக்களுடைய நலன் ஆகியவற்றை மேம்படுத்த விழைகிறது. சீன அரசின் அதிகாரபூர்வ அறிக்கைகள் கம்யூனிசத்தை விரிவுபடுத்துவதாக இருக்கும். நடைமுறையில் அதற்கு எதிரான செயல் களில்தான் இறங்கியுள்ளது. ஜனநாயக உரிமைகளே இல்லாமல் சீனா எந்த அளவுக்குத்தான் முன்னேற முடியும்? பிரச்சினை என்றால் மக்கள் வேலையிலிருந்து நீக்கப்படு கிறார்கள், ஒடுக்கப்படுகிறார்கள் அல்லது சிறையில் அடைக்கப்படுகிறார்கள். தனக்குள்ள தளைகளை அறுத்துக்கொண்டு அது மேலே வர வாய்ப்பு இருக்கிறது. முன்பைவிட அதிக சீன மாணவர்கள் உயர் கல்வி பயில அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் வருகிறார்கள். அமெரிக்க, ஐரோப்பிய மாணவர்கள் சீனாவுக்குச் செல்வதில்லை.
தமிழில்: ஜூரி, © ‘தி இந்து’ ஆங்கிலம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT