Published : 30 May 2018 08:55 AM
Last Updated : 30 May 2018 08:55 AM
மு
ன்பெல்லாம் 11, 12-ம் வகுப்புகளின் பாடநூல் களுக்கே முக்கியத்துவம் தரப்படும். இப்போது 9-ம் வகுப்பிலேயே 11, 12-ம் வகுப்புகளுக்கு அடித்தளம் இடும் வகையில் பாடப்புத்தகங்கள் உருவாக்கப்பட்டிருப்பதை உணர முடிகிறது. குறிப்பாக, பாடநூல்களில் நவீன மனப்பான்மையையும் காண முடிகிறது. சிற்சில குறைகளைத் தாண்டி, இப்போதுதான் சரியான திசையில் நடக்க ஆரம்பித்திருக்கிறோம் என்ற உணர்வை இந்தப் பாடப் புத்தகங்கள் நமக்கு ஏற்படுத்துகின்றன.
தமிழ்
கண்ணில் பட்ட குறைகள்
*‘உலகின் மூத்த மொழியாம் தமிழின்...’ (பக்கம்: viii) என்று ஒரு இடத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு இடத்தில் ‘உலகின் தொன்மையான மொழியாகவும் செவ்வியல் மொழியாகவும் திகழ்வது கிரேக்க மொழியாகும்’ (பக்: 15) என்று வருகிறது.
*பாலினம், மதச் சமத்துவம் போன்றவற்றில் அக்கறையுடன் பாடப்புத்தகத்தை உருவாக்கியிருக்கும் அதே வேளையில், மனிதகுலத்தைக் குறிப்பிடும்போது ‘மனிதன்’ என்றும் ‘மனிதர்’ என்றும் சீரற்ற பயன்பாடு காணப்படுகிறது. பொதுவாக, ‘மனிதர்’ என்ற சொல்லையே பயன்படுத்தியிருக்கலாமே!
*தீண்டாமை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங் களுக்கு முந்தைய பாடநூல்களில் முக்கியக் கவனம் கொடுக்கப்பட்டிருக்கும். தற்போது பத்தோடு பதினொன் றாக இடம்பெற்றுள்ளது.
ஆக்கபூர்வமான அம்சங்கள்
*அறிவியல் அடிப்படையற்ற கருத்துகளை முன்வைத்துத் தமிழைப் பற்றிப் பலரும் பெருமை பேசிவரும் சூழலில் ஆதாரபூர்வமான தகவல்களைச் சொல்லித் தமிழின் பெருமையை மாணவர்களுக்கு உணர வைத்திருக்கிறார்கள். திராவிட மொழி பேசும் இடங்களின் வரைபடம், தமிழின் வரிவடிவ வளர்ச்சி, இலக்கணங்களுக்கும் படங்கள் என்று புத்தகம் முழுவதும் மாணவர்களின் கண்ணைக் கவரும் வகையில் வண்ணப் படங்கள் இடம்பெற்றிருக்கின்றன.
*செய்யுள்கள் சில இடங்களில் தற்காலத் தமிழில் நவீனக் கவிதை வடிவிலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பாடநூல் உருவாக்குபவர்களுக்கு நவீன இலக்கியமும் நவீனக் கலைகளும் அறவே பிடிக்காது என்ற வசை ஒழிந்தது. 57-ம் பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் யூமா வாசுகியின் கவிதையும், புத்தகத்தின் பின்னட்டையில் இடம்பெற்றிருக்கும் ஆதிமூலத்தின் ‘குதிரைவீரன்’ கோட்டோவியமும் பெரிய மாற்றத்தை நமக்கு உணர்த்துகின்றன.
*பல்வேறு துறைகளின் வழியாகத் தமிழையும் தமிழ் வழியாகப் பல்வேறு துறைகளையும் அணுக முயன்றிருப்பது சிறப்பு. மறைநீர் குறித்த பெட்டிச் செய்தி ஓர் எடுத்துக்காட்டு. ‘இயந்திரங்களும் இணைய வழிப் பயன்பாடும்’ என்ற பாடத்தில் கைபேசி, கணினி, இணையம் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் பயன்பாடு புதுப்புதுச் சொற்களின் உதவியுடன் விளக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் என்பது பெருமிதத்துக்கு உரியது மட்டுமல்ல, நடைமுறைப் பயன்பாட்டுக்கும் மிகவும் ஏற்றது என்பதை மாணவர்களுக்கு உணர்த்தும் நல்முயற்சி!
*பாடப் புத்தகங்களில் கற்பனை உரை யாடல்களிலும் எடுத்துக்காட்டு வாக்கியங்களிலும் இடம்பெறும் பெயர்களில் பலகாலமாக சிறுபான்மை மதத்தினரின் பெயரே இடம்பெறுவதில்லை. எட்வர்டு, மும்தாஜ், பாத்திமா என்ற பெயர்களை இந்தப் புத்தகத்தில் பார்க்கும்போது மிகுந்த உற்சாகம் ஏற்படுகிறது. நம் சமூகம் பன்மைத்துவத்தை உயிர்நாடியாகக் கொண்டது என்பதை மாணவர்களின் மனதில் இப்படித்தான் தொடக்கத்திலிருந்தே விதைக்க வேண்டும்.
*வாழும் சாதனையாளர் ஒருவரின் (இஸ்ரோவின் சிவன்) நேர்காணலைப் பாடப்புத்தகத்தில் கொடுத்திருப்பதன் மூலம் பாடநூல் வரலாற்றில் புதிய அத்தியாயம் படைக்கப்பட்டிருக்கிறது.
கணக்கு
கண்ணில் பட்ட குறைகள்
* ‘க்யூ.ஆர். கோட்’ என்பதற்குப் பக்கம் iv-ல் விரைவுக் குறியீடு என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 26, 56-ம் பக்கங்களிலோ ‘துரித துலங்கள்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் ‘துலங்கல்’ என்று வருவதற்குப் பதிலாக ‘துலங்கள்’ என்று வந்திருக்கிறது. சீரான, சரியான சொற்பயன்பாடு முக்கியம்.
*‘நீங்கள், நீ, உன், உங்கள்’ என்று மாறி மாறி விளிக்கப்படுகிறது. ‘நீங்கள்’, ‘உங்கள்’ என்றே குறிப்பிடலாமே!
ஆக்கபூர்வமான அம்சங்கள்
*நல்ல வடிவமைப்புடன் கணக்கின் இறுக்கத்தைச் சற்றுத் தணிக்கிறது இந்த நூல்.
*ஒரு கணிதக் கோட்பாட்டைச் சொல்லி அதை உருவாக்கியவரின் புகைப்படத்தையும் சுருக்கமான வரலாற்றையும் கொடுத்திருப்பது சிறப்பு.
*கலைச்சொற்கள் கூடுமானவரை அக்கறையுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
பொதுவாக... போட்டித் தேர்வுகள், பொது நுழைவுத் தேர்வுகள் என்று கல்விச்சூழல் மாறுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில் நம் குழந்தைகளை மேனிலைக் கல்விக்கு முன்னதாகவே, முன்கூட்டித் தயார்செய்வதில் ஓர் அபாரமான அக்கறை வெளிப்பட்டிருக்கிறது. தவிர, முந்தைய பாடத்திட்டத்தில் 9-ம் வகுப்பை அப்படியே கடந்து சென்றுவிட முடியும். இந்த முறை இந்தப் பாடநூல்கள் அதை உடைக்கின்றன. ஒவ்வொரு மாணவரும் 9-ம் வகுப்புப் பாடங்களை படித்தே தீர வேண்டும். அப்படிப் படிப்பதன் வாயிலாக எதிர்காலத்துக்கு முகம்கொடுக்கத் தயாராக முடியும் எனும் நம்பிக்கையை இந்தப் புத்தகங்கள் கொடுக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT