Last Updated : 05 Jun, 2024 08:28 AM

5  

Published : 05 Jun 2024 08:28 AM
Last Updated : 05 Jun 2024 08:28 AM

‘இண்டியா’வுக்கு வழிகாட்டிய திமுக!

மக்களவைத் தேர்தலைப் பொறுத்தவரை பெரும்பாலும் ஒரு கூட்டணி அல்லது கட்சி சார்பாகவே தமிழ்நாட்டின் தீர்ப்பு அமைந்து வந்திருக்கிறது. இந்தத் தேர்தலிலும் தமிழ்நாடு அதை மீண்டும் நிரூபித்திருக்கிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலைப் போலவே இப்போதும் 39 தொகுதிகளில் முன்னிலை/வெற்றி பெற்று திமுக கூட்டணி ஆதிக்கத்தை நிறுவியிருக்கிறது.

கடந்த 40 ஆண்டுகளில், தமிழ்நாட்டில் ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது இடையில் வரும் மக்களவைத் தேர்தலில் அக்கட்சியோ அல்லது கூட்டணியோ அதிகபட்ச வெற்றியைப் பதிவுசெய்தது 2014 மக்களவைத் தேர்தலில்தான். அந்தத் தேர்தலில் தனித்துக் களமிறங்கிய அதிமுக 37 தொகுதிகளில் வென்று, அந்தச் சாதனையைப் படைத்திருந்தது.

அதன் வெற்றி விகிதம் 94.87%. மாநிலத்தில் திமுக ஆட்சியில் இருக்கும்போது மக்களவைத் தேர்தலில் அதை உள்ளடக்கிய கூட்டணி இப்படியொரு வெற்றியை இதற்கு முன்பு பெற்றதில்லை.

1989இல் ஆட்சியில் இருந்தபோது ஓரிடத்திலும், 1998இல் 9 இடங்களிலும், 1999இல் 26 இடங்களிலும், 2009இல் 27 இடங்களிலும்தான் திமுக கூட்டணி வென்றிருந்தது. இப்போது திமுக தலைமையில் அமைந்த கூட்டணி 39 தொகுதிகளில் முன்னிலை/வெற்றியைப் பெற்று அதிகபட்ச வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது.

வெற்றி விகிதம் 100%. தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும்போது ஒரு கட்சி அல்லது கூட்டணியின் அதிகபட்ச வெற்றி விகிதம் இது. குறிப்பாக, மக்களவைத் தேர்தலில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவும் ஒரே கூட்டணி 38, 39 தொகுதிகளில் வென்றிருப்பதும் தமிழ்நாடு அரசியலுக்குப் புதியதுதான்.

2019இல் திமுக கூட்டணி மக்களவைத் தேர்தலைச் சந்தித்தபோது 8 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாமல் இருந்தது. எனவே, அந்தத் தேர்தலில் அதிமுக ஆட்சி மீதான எதிர்ப்பு மனநிலையோடு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக ஒரு மையப் புள்ளியை உருவாக்கி, கூட்டணியை ஒருங்கிணைத்ததன் மூலம் திமுக வெற்றிபெற்றது.

2021இல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக மாநிலத்தில் ஆட்சிக்கு எதிரான மனநிலை உள்ள வாக்காளர்கள் அதிகரிப்பார்கள் என்கிற எண்ணம் பொதுவாக நிலவியது. ஆனால், 2014இல் ஜெயலலிதாவுக்கு வெற்றியை வாரிக்கொடுத்த தமிழ்நாடு, இந்த முறை மு.க.ஸ்டாலினுக்கு வாரிக்கொடுத்திருக்கிறது.

மேலும், திமுகவின் வெற்றிகரமான கூட்டணி உருவாக்கமும், அதைத் தக்கவைக்கும் அணுகுமுறையும் அக்கட்சியை வெற்றிக்கோட்டிலேயே தொடர்ந்து நிறுத்திவைத்திருக்கிறது. 2018இல் திமுக கட்டமைத்த ஓர் அணி 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல், 2024 மக்களவைத் தேர்தல் என மூன்று பொதுத் தேர்தலிலும் ஒருசேர தேர்தலைச் சந்தித்ததில் திமுகவின் செல்வாக்குக்கும் முக்கியப் பங்கு உண்டு.

அதேநேரத்தில், அதிமுகவின் பலவீனம், சசிகலா, டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தனி ஆவர்த்தனம், கடைசிக் கட்டத்தில் அதிமுக - பாஜக கூட்டணி முறிந்தது போன்றவையும் திமுக கூட்டணியின் வெற்றியில் தாக்கம் செலுத்தின என்பதையும் மறுப்பதற்கில்லை.

என்றாலும், தேர்தல் நேரத்தில் மட்டும் அல்லாமல், எல்லாக் காலத்திலும் ஒரு கூட்டணியாக ஒரே திசைவழியில் பயணித்த திமுக கூட்டணியின் அணுகுமுறையைக் குறைத்து மதிப்பிட முடியாது. இது ஒரு புறம் இருக்க, தமிழ்நாட்டில் இருப்பது போன்ற ஒரு வெற்றிகரமான கூட்டணிதான் அகில இந்திய அளவிலும் எதிர்க்கட்சிகளுக்குத் தேவை என்பதைத் திமுக தொடர்ந்து அழுத்தந்திருத்தமாக வலியுறுத்திவந்தது.

இந்த முறை அது ஓரளவு சாத்தியமானதில், கடந்த இரண்டு தேர்தல்களாக மோசமான தோல்வியைச் சந்தித்துவந்த எதிர்க்கட்சிகளும், இந்த முறை கெளரவமான வெற்றித் தொகுதி எண்ணிக்கையைப் பெற்றிருப்பதில், திமுகவின் கூட்டணிச் சூத்திரமும் கைகொடுத்திருக்கிறது. ஆக, இண்டியா கூட்டணிக்கும் திமுக வழிகாட்டியிருக்கிறது என்று சொல்லலாம்.

கடந்த மே 7ஆம் தேதி அன்றுதான் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று மூன்று ஆண்டுகளை நிறைவுசெய்தது. எந்த ஓர் ஆட்சிக்கும் மக்கள் தரும் நல்மதிப்பெண் என்பது, தேர்தலில் தரும் வெற்றிதான்.

- தொடர்புக்கு: karthikeyan.di@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x