Published : 25 Apr 2018 10:26 AM
Last Updated : 25 Apr 2018 10:26 AM
நா
ம் வாழும் காலத்தை அசாதாரணங்களின் காலம் என்று சொல்லலாம். இந்தக் காலத்துக்கு முன்னுதாரணம் எதுவும் இல்லை என்பதுபோலவே இப்போது நடக்கும் நிகழ்வுகளுக்கும் முன்னுதாரணம் ஏதுமில்லை. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி மீது முன்னுதாரணமே இல்லாத வகையில் தகுதி நீக்கத் தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. முன்னுதாரணமே இல்லாத வகையில் அதை மாநிலங்களவைத் தலைவரான வெங்கய்ய நாயுடு நிராகரித்துள்ளார்.
என்னென்ன குற்றச்சாட்டுகள்?
மாநிலங்களவையைச் சேர்ந்த 64 எம்.பி.க்கள் கையெழுத்திட்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற மனு ஒன்றை மாநிலங்களவைத் தலைவரிடம் அளித்தனர். அதில் ஐந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. மருத்துவக் கல்லூரி ஒன்றுக்கு அனுமதி பெறுவதற்காக நீதிபதிகளுக்கு லஞ்சம் தர முயன்ற ‘பிரசாத் எஜூகேஷன் டிரஸ்ட்’ வழக்கில் தலைமை நீதிபதி சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதற்கு முகாந்திரம் உள்ளதாகவும், அது தொடர்பாக நீதி விசாரணை கேட்டு் தொடுக்கப்பட்ட வழக்கில் அவரே நீதிபதியாக இருந்து தீர்ப்பளித்தது நீதிபதிகளுக்கான நடத்தை விதிகளுக்கு எதிரானதென்றும், பிரசாத் எஜூகேஷன் டிரஸ்ட் வழக்கில் நீதிமன்ற ஆவணத்தை முன் தேதியிட்டு தலைமை நீதிபதியே திருத்தம் செய்தது மோசடிக் குற்றம் எனவும் முதல் மூன்று குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா வழக்கறிஞராகப் பணிபுரிந்தபோது பொய்யான பிரமாண வாக்குமூலம் அளித்து அரசாங்க நிலத்தைப் பெற்றதும் அதற்கான உத்தரவு 1985-ல் ரத்து செய்யப்பட்டாலும், நிலத்தை ஒப்படைக்காமல் 2012-ல் உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்படும் வரை அதைத் தனது பொறுப்பிலேயே வைத்திருந்ததும் நான்காவது குற்றச்சாட்டாகும்.
‘மாஸ்டர் ஆஃப் தி ரோஸ்டர்’ என்ற முறையில் வழக்குகளை ஒதுக்கீடுசெய்வதில் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைத் தலைமை நீதிபதி துஷ்பிரயோகம் செய்கிறார்; அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளைக் குறிப்பிட்ட சில நீதிபதிகளுக்கு ஒதுக்குவதன் மூலம் முன்பே தீர்மானிக்கப்பட்ட தீர்ப்புகள் வழங்கப்படுவதற்கு வழிவகுக்கிறார் என்பது ஐந்தாவது குற்றச்சாட்டு. 39 பக்கங்களில் இதற்கான விளக்கங்களும், 125 பக்கங்களில் ஆதாரங்களும் மனுவோடு அளிக்கப்பட்டிருந்தன.
நீதிபதி ஒருவரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்றால் மாநிலங்களவையில் 50 உறுப்பினர்கள் அல்லது மக்களவையில் 100 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு அதற்கான புகாரை மாநிலங்களவைத் தலைவரிடம் அளிக்க வேண்டும். அவர், அதிலுள்ள குற்றச்சாட்டுக்களின் உண்மைத்தன்மையை ஆராய மூன்று பேர் கொண்ட குழுவை நியமிக்க வேண்டும். அந்தக் குழு விசாரித்து குற்றம் நிரூபிக்கப்படுகிறது என்று சொன்னால் அதன் பின்னர் தகுதி நீக்கத் தீர்மானம் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் கொண்டுவரப்படும். அதற்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் நீதிபதி தகுதி நீக்கம்செய்யப்படுவார். இதுதான் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 124 (4) மற்றும் நீதிபதிகள் விசாரணைச் சட்டம் 1968 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள நடைமுறையாகும். இதற்கு முன்னர் பல்வேறு நீதிபதிகளுக்கு எதிராகத் தகுதி நீக்கத் தீர்மானங்கள் அப்படித்தான் கொண்டு வரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டன.
மரபு பின்பற்றப்படவில்லை
மாநிலங்களவைத் தலைவரிடம் புகார் அளித்தால் அதை ஏற்கவோ, நிராகரிக்கவோ அவருக்கு உரிமை உள்ளது என்று நீதிபதிகள் விசாரணைச் சட்டத்தின் பிரிவு 3(1) கூறியிருக்கிறது. ஆனால், நிராகரிப்பதற்கு முன்பு அவர் சட்ட வல்லுநர்களைக் கலந்தாலோசிக்க வேண்டும். அதன் பின்னரே அவர் அதில் முடிவெடுக்க முடியும். சட்டம் தொடர்பான சந்தேகம் எழும்போது மாநிலங்களவைத் தலைவர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் விளக்கம் கோருவது மரபு. ஆனால், இந்த வழக்கைப் பொறுத்தமட்டில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பதால், கொலீஜியத்தில் அவருக்கு அடுத்ததாக இருக்கும் மூத்த நீதிபதிகளை மாநிலங்களவைத் தலைவர் கலந்தாலோசித்து இருக்க வேண்டும். இந்த மரபை வெங்கய்ய நாயுடு பின்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
“தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை, புகார் மனுவில் கையெழுத்திட்ட எம்.பி.க்களுக்கு அதுகுறித்த தெளிவில்லை” என வெங்கய்ய நாயுடு குறிப்பிட்டுள்ளார். ஒரு குற்றச்சாட்டு உண்மையா இல்லையா என்பது விசாரணைக்குப் பிறகே நிரூபணம் ஆகும். மூன்று பேர் கொண்ட குழுவைக் கொண்டு அதை விசாரித்திருந்தால், அந்தக் குற்றச்சாட்டுகளின் உண்மைத்தன்மை வெளிப்பட்டிருக்கும். சிபிஐ பதிவுசெய்த தொலைபேசி உரையாடல் உள்ளிட்ட ஆதாரங்கள் அளிக்கப்பட்டிருந்தும்கூட, ‘குற்றச்சாட்டுகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை’யென வெங்கய்ய நாயுடு சொல்வது பருக்கைக்குள் பானையையே மறைக்க முயல்வதாக உள்ளது.
‘பிரசாத் எஜூகேஷன் டிரஸ்ட்’ வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே தலைமை நீதிபதியின் மீது சந்தேகத்தின் நிழல் படிந்துள்ளது. சிபிஐ பதிவுசெய்திருக்கும் தொலைபேசி உரையாடல்கள் அதை உறுதிசெய்கின்றன. அந்த வழக்கை விசாரிக்கவே கூடாது என்று தள்ளுபடிசெய்வதும், வேறு ஒரு அமர்வில் அந்த வழக்கின் விசாரணை நடந்துகொண்டிருக்கும்போதே அதில் தலையிட்டு தனது அமர்வுக்கு மாற்றி உத்தரவிடுவதும், அந்த உத்தரவின் தேதியில் திருத்தம் செய்து போலியாக ஆவணத்தை உருவாக்குவதும் எவ்வித குற்றமும் செய்யாத நிரபராதி ஒருவரின் செயல்படாக இருக்க முடியாது. இப்போது டெல்லியில் உள்ள விசாரணை நீதிமன்றம் ஒன்றில் அந்த வழக்கு நடைபெறுகிறது. அதுகுறித்து ஊடகங்களில் செய்தி வெளியிடக் கூடாது என அந்த நீதிமன்றம் ‘வாய்ப்பூட்டு உத்தரவு’ ஒன்றை சில நாட்களுக்கு முன் பிறப்பித்துள்ளது. இதெல்லாம் எதையோ மறைப்பதற்கு செய்யப்படும் முயற்சிகளாகவே தெரிகின்றன.
யார் காரணம்?
வழக்குகளைப் பல்வேறு அமர்வுகளுக்கு ஒதுக்கீடுசெய்வதில் நடந்த முறைகேடுகள் எவையெவை, அவற்றால் அந்த வழக்குகளின் தீர்ப்புகள் எப்படியெல்லாம் மாற்றப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டி மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார். அதில், சிபிஐ சிறப்பு இயக்குநர் நியமன வழக்கு, ஜெய் ஷா வழக்கு, சசி தரூர் வழக்கு, பாஜகவைச் சேர்ந்த சம்பித் பத்ரா ஓஎன்ஜிசியின் இயக்குநராக நியமிக்கப்பட்ட வழக்கு, நீதிபதி லோயா மர்ம மரண வழக்கு உள்ளிட்ட பத்து வழக்குகள் விசாரணைக்கு ஒதுக்கீடுசெய்யப்பட்டதில் உள்ள சந்தேகங்கள் குறித்து விரிவான ஆதாரங்களை அவர் அளித்திருக்கிறார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியைத் தகுதி நீக்கம்செய்ய வேண்டும் என்று கோருவது மிகவும் துரதிர்ஷ்டமான ஒன்றுதான். நீதித் துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை அது பலவீனப்படுத்திவிடும் என்பதும் உண்மைதான். ஆனால், இத்தகைய நிலையை உருவாக்கியது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராதானே தவிர, அரசியல் கட்சிகள் அல்ல. கடந்த ஜனவரி மாதத்தில் உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் நான்கு பேர் வெளிப்படையாக அவர் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்கள். அதற்குப் பிறகாவது அவர் தனது போக்கைத் திருத்திக்கொண்டிருந்தால், இப்போது அவரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை எழுந்திருக்காது.
எம்.பி.க்களின் கோரிக்கையை நிராகரித்ததன் மூலம் தலைமை நீதிபதியைக் காப்பாற்றிவிடலாம் என்று பாஜக அரசு கருதுகிறது. மாநிலங்களவைத் தலைவரின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்துக்குச் செல்வதற்கு வாய்ப்புகள் இருக்கவே செய்கின்றன. அங்கும்கூட தலைமை நீதிபதியின் செல்வாக்கால் அந்த வழக்கு தள்ளுபடிசெய்யப்படலாம். ஆனால், இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் சட்டத்தின் முன்னால் அவர் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். அரசு அன்று கொல்லும், நீதி நின்று கொல்லும்!
- ரவிக்குமார், எழுத்தாளர், வழக்கறிஞர்.
தொடர்புக்கு: adheedhan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT