Published : 29 Apr 2018 08:53 AM
Last Updated : 29 Apr 2018 08:53 AM
கே
ரளத்து லாட்டரியில் பம்பர் பரிசு அடித்ததைப் போல, ஒரே பாடலில் புகழின் உச்சத்திற்கே சென்றவர் ஷெரில்! அட, ‘ஜிமிக்கி கம்மல்’ புகழ் ஷெரிலேதான். கம்மல் கலக்கிய கலக்கலுக்குத் திரைத்துறையில் ஒரு ரவுண்ட் வருவார் என எதிர்பார்த்தால், அம்மணியோ கல்யாணத்துக்குத் தயாராகிவிட்டார்!
ஜிமிக்கி கம்மல் வெற்றிக்குப் பின்பு, மலையாளத்தில் மாதம் இரு முறை வெளிவரும் இதழான வனிதாவின் அட்டைப்பட சூட்டிங்கில் கடந்த ஜனவரி மாதம் பங்கேற்றார் ஷெரில். மலையாள நடிகர் ஜெயசூர்யா, டப்ஸ்மேஷ் புகழ் செளபாக்யா, ஜிமிக்கி கம்மல் ஷெரில் மூவரின் செல்ல அரட்டை அட்டைப்படமாக புகைப்படத்தை வெளியிட்டது வனிதா. இதற்கென நடந்த பிரத்யேக போட்டோ ஷூட்களும், வீடீயோ மேக்கிங்கும்கூட வைரலாகின. இதில், ஜெயசூர்யா நடித்து ஹிட்டான ‘சங்காதி நன்னாயால் கண்ணாடி வேண்டடா… சங்காதி நீயானால் கல்யாணம் வேண்டடா’ எனும் பாடலுக்கு நடனம் ஆடினார் ஷெரில். ‘நண்பன் நன்றாக இருந்தால் கண்ணாடியே வேண்டாம்… நல்ல நண்பன் நீயாக இருந்தால் கல்யாணமே வேண்டாம்’ என்பது இதன் அர்த்தம். கல்யாணம் வேண்டாம் என்று ஆடிய முகூர்த்தமோ என்னவோ, ஷெரில் வீடு, கெட்டிமேளச் சத்தத்துக்குத் தயாராகிவிட்டது.
நெருங்கிய உறவுகள், நண்பர்கள் புடைசூழ, எர்ணாகுளம் மாவட்டம், வாழக்குளத்தில் ஷெரில், ப்ரஃபுல் டாமி திருமண நிச்சயதார்த்தம் அண்மையில் நடந்தது. இதை ஷெரில் தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவேற்றியிருந்தார். அதைத் தொடர்ந்து பல ஊடகங்களும், ஷெரிலைப் பேட்டிக்காக துரத்த, ‘நிச்சயதார்த்தம் தனிப்பட்ட விசயம் தானே! இன்னொரு சந்தர்ப்பத்தில் சந்திக்கலாம்’ எனச் செல்லமாய் குறுந்தகவல் அனுப்பி இன்னமும் எஸ்கேப் ஆகிவருகிறார்.
“இப்பவே, ஷெரிலுக்குக் கட்டுப்பாடு ஏதும் போட்டுருக்கீங்களா, மீடியாக்களிடம் சிக்காம ஜூட் விடுறாங்களே’’ என்ற கேள்வியுடன் ஷெரிலின் வருங்கால மாப்பிள்ளை ப்ரஃபுல் டாமியைச் சந்தித்தேன். “அப்படியெல்லாம் இல்லை. நான் ரொம்ப ஜாலியான கேரக்டர்தான்” என நெருங்கிய நண்பனைப் போல ஒட்டிக்கொள்கிறார் ஜிமிக்கி கம்மல் பிரியர். கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள தொடுபுழா இவரது பூர்வீகம். எம்.பி.ஏ பட்டதாரியான டாமி, பெங்களூருவில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்க்கிறார். பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் இவர்களுடையது.
நிச்சயதார்த்தம் முடிந்த கையோடு பெங்களூருவில் வேலைக்குச் சென்றுவிட்டார் ப்ரஃபுல் டாமி. “ஷெரிலை ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனம் ஆடியபோதே, யூடியூபில் பார்த்தேன்(நீங்க மட்டுமா பார்த்தீங்க?). ‘குட் பர்ஃபார்மன்ஸ்’னு யூடியூபிலேயே கமென்ட்செய்திருந்தேன். ஆனால், அவரே மனைவியாக வருவார் என்றெல்லாம் யோசித்ததுகூட இல்லை. வீட்ல எனக்குப் பொண்ணு பார்த்துட்டு இருந்தாங்க. அப்போ, குடும்ப நண்பர் ஒருத்தர் மூலமாத்தான் ஷெரிலோட வரம் வந்துச்சு. அவங்க குடும்பமும் நல்ல பாரம்பரியப் பின்புலம் உள்ள குடும்பம். இரண்டு வீட்டுக்கும் ரொம்பவே பிடிச்சுப் போச்சு. முதல்ல நிச்சயதார்த்தம்... ஒரு சின்ன இடைவெளிக்கு அப்புறம் கல்யாணம்னு பிளான் பண்ணாங்க. சீக்கிரமே கல்யாண தேதியும் சொல்றோம்.
பொதுவாகவே, பசங்களுக்குக் கல்யாணம்னா, கூட இருக்கிற ஃப்ரெண்ட்ஸ்ங்க பொண்ணு போட்டோ காட்டச் சொல்வாங்க. ஆனா, எனக்கு அந்தச் சிக்கல் இல்லை. என் ஆபீஸ்ல தென்னிந்தியாவோட நிறைய பகுதியில இருந்தும் நண்பர்கள் வேலைசெய்றாங்க.
எல்லாருக்குமே அவங்களைத் தெரியுது. அப்படியே ஷெரிலைத் தெரியாதவங்ககிட்ட, யூடியூபில போய் ஜிமிக்கி கம்மல்னு போடுங்கன்னு சொல்லிட்டு இருக்கேன். சினிமா வாய்ப்புகளில் நடிப்பதா, வேண்டாமா என்பதை ஷெரிலே முடிவுசெய்வார். இதையெல்லாம் தாண்டி ஒரு விசயம் சொல்லணும்னா, ஜிமிக்கி கம்மல் பாடல் இவ்வளவு வைரல் ஆகும்ன்னு ஷெரிலே நினைச்சுப் பார்த்ததில்லைன்னு சொன்னாங்க. அதுக்கு தமிழ்நாடு இளைஞர் பட்டாளத்துக்கு ரொம்பவே நன்றி சொல்லணும்.
அந்த வீடீயோ மேக்கிங்கும் தற்செயலா அமைஞ்சதுதான். கல்லூரி வளாகத்தில சும்மா ஒரு ரிலாக்ஸுக்கான முயற்சியாத்தான் பண்ணிருக்காங்க. ஜிமிக்கி கம்மல் வீடியோ வந்தபோது, கொச்சினில் கல்லூரி ஆசிரியர் வேலையில் ஷெரில் இருந்தாங்க. அதிலிருந்து இப்போ விலகிட்டாங்க. எனக்கு பெங்களூருவில் வேலை என்பதால், அவங்களும் அங்க வேலை தேடிட்டு இருக்காங்க. திருமணத்துக்குப் பின்னாடி பெங்களூருவில் செட்டிலாகிற பிளான் வெச்சுருக்கோம். கேரளாவில் இருந்து, ஒவ்வொரு தடவையும் தமிழகம் வழியாத்தான் பெங்களூரு போகணும். திருமணம் முடிஞ்சதும், தமிழ்நாட்டில் வேளாங்கண்ணி கோயிலுக்குப் போகணும்னு நினைச்சுருக்கோம்.
எனக்கு ஒரு தம்பியும், தங்கச்சியும் இருக்காங்க. அவங்ககூடவும் ஷெரில் நல்ல ஃப்ரெண்ட் ஆகிட்டாங்க” என்கிறார் ப்ரஃபுல் டாமி. மோகன்லால் நடித்த ‘வெளிப்பாடிண்டே புஸ்தகம்’ படப் பாடலுக்குப் பட்டையைக் கிளப்பிய ஷெரில், தீவிரமான தல ரசிகை. ப்ரஃபுல் டாமியோ அதி தீவிர தளபதி ரசிகர். இருவருமே மலையாள தேசத்தின் மத்தியப் பகுதியில் இருந்தாலும் அழகுத் தமிழில் பேசுகிறார்கள். `“இது எப்படி பாஸ்?’’ என்று ஆச்சரியமானால், “எனக்கு விஜய் தமிழ் டீச்சர். அவங்களுக்கு அஜித்! இவங்களோட படங்களைப் பார்த்துதான் நாங்க சரளமாத் தமிழ்ப் பேசப் பழகிருக்கோம்” என்ற டாமி, “அடுத்த முறை ஷெரிலைச் சந்திக்கும்போது கொடுக்கிறதுக்கு சர்ப்ரைஸா ஒரு ஜிமிக்கி கம்மல் வாங்கி வெச்சுருக்கேன்” என்றார்.
சாருக்கு இப்போதே முகத்தில் மாப்பிள்ளைக்களை தாண்டவமாடுகிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT