Published : 15 Apr 2018 11:04 AM
Last Updated : 15 Apr 2018 11:04 AM

ஒடுக்கப்பட்டோர் பாதுகாப்பை பலவீனப்படுத்துகிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு!- பி.எஸ்.கிருஷ்ணன் பேட்டி

ட்டியலின, பழங்குடியின மக்கள் மீதான ஒடுக்குமுறைகள், குற்றங்களைக் கட்டுப்படுத்துவதில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஒரு வலிமையான ஆயுதம். அண்மையில் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் இச்சட்டம் பெரிதும் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறியிருக்கிறது உச்ச நீதிமன்றம். தொடர்ச்சியாக இந்தச் சட்டம் தொடர்பாகச் சில உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது. சட்டம் நீர்த்துப்போகலாம் என்ற அச்சத்தின் விளைவாக தீர்ப்புக்கு எதிராக நடத்தப்பட்ட நாடு தழுவிய போராட்டங்களில் வன்முறை வெடித்து ஒன்பது பேர் உயிரிழந்தனர். தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்தச் சூழலில், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகித்தவரும் முன்னாள் இந்திய அரசுச் செயலருமான பி.எஸ்.கிருஷ்ணனுடன் பேசினேன்.

உச்ச நீதிமன்றத்தின் புதிய தீர்ப்பு ஏன் எதிர்க்கப்படுகிறது?

இந்தத் தீர்ப்பு பெரும் ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தருகிறது. இந்தத் தீர்ப்பின்படி, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு அரசு ஊழியரைக் கைதுசெய்ய, அவரை வேலைக்கு எடுத்த அதிகாரியின் ஒப்புதல் வேண்டும்; மற்றவர்களைக் கைதுசெய்ய மாவட்ட சிறப்புக் காவல் கண்காணிப்பாளரின் ஒப்புதல் வேண்டும்; காரணங்களை ஆராய்ந்த பிறகுதான் குற்றம்சாட்டப்பட்டவரைக் காவலில் வைக்க மாஜிஸ்ட்ரேட் உத்தரவிட வேண்டும். சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டு அப்பாவிகள் கைதுசெய்யப்படுவதைக் கருத்தில்கொண்டு இந்தத் தீர்ப்பை வழங்கியதாக உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இந்தச் சட்டத்தை அதிகம் பேர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்பதற்குப் போதிய அளவு ஆதாரம் இல்லை. ஆக, இந்தப் புதிய தீர்ப்பு பட்டியலின, பழங்குடியினருக்கு இருந்த ஒரேயொரு பாதுகாப்பையும் பலவீனப்படுத்தியிருக்கிறது. வன்கொடுமை வழக்குகளில் முன்ஜாமீனுக்கும் வழிவகுத்திருக்கிறது இந்தத் தீர்ப்பு. இதன் மூலம் வழக்குத் தொடுப்பவர்கள் மிரட்டப்படுவது அதிகரிக்கும்.

பட்டியலின, பழங்குடியின மக்களின் உண்மையான நிலைமை உச்ச நீதிமன்றத்திடம் முன்வைக்கப்பட்டிருக்கிறதா?

இந்திய கிராமங்களில் நிலமற்ற பட்டியலினத்தவரும், ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த நில உரிமையாளர்களும் அருகருகே வசிக்கிறார்கள். நிலமும் அதிகாரமும் ஆதிக்க சாதியினரின் வசம் இருக்கும்போது தங்கள் உரிமைகளுக்காகப் போராடவும், தங்கள் மீது இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராகப் போராடவும் முடியாத சூழலில்தான் அந்த மக்கள் இறுக்கிவைக்கப்பட்டிருக்கிறார்கள். எதிர்ப்புக் குரல் எழுப்பினால் படுகொலை, தீ வைப்பு, சமூகரீதியாகவும் பொருளாதாரரீதியாகவும் ஒதுக்கிவைத்தல் போன்ற வன்கொடுமைகள் பட்டியலின மக்களின் மீது ஏவப்படுகின்றன. கிராமங்கள், சிற்றூர்கள், நகரங்கள் என எல்லா இடத்திலும் இதே கதைதான். பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்துகொண்டிருக்கும் தீண்டாமைக் கொடுமை, பட்டியலின மக்கள் நிலமற்றவர்களாக ஆக்கப்படுவது, பழங்குடியினரின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுவது போன்றவை பற்றிய முழுமையான பார்வை, இந்தத் தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளிடம் முன்வைக்கப்படவில்லை என்றே கருதுகிறேன். மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் இதைச் செய்திருக்க வேண்டும்.

நீதிமன்றம் சில புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டியிருக்கிறதே?

ஆமாம்! ஆனால், அவற்றின் முழு உண்மை நீதிபதிகளிடம் முன்வைக்கப்படவில்லை. எல்லா சட்டங்களின் கீழும் பதியப்படும் வழக்குகளில் காவல் துறையினரால் பொய் வழக்குகள் என்று கணிசமானவை வகைப்படுத்தப்படும். அவற்றின் சதவீதத்தோடு ஒப்பிடும்போது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதியப்படும் பொய் வழக்குகளின் சதவீதம் மிகவும் குறைவு. மேலும், இந்தச் சட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் மிரட்டலாலும், காவல் துறையினரின் வற்புறுத்தலாலும் ‘பொய் வழக்குகள்’ ஆக்கப்பட்டவைதான் அதிகம். கீழவெண்மணி(1968), கரம்சேது(1984), சுந்துரு(1991) போன்ற பல வன்கொடுமை வழக்குகளின் தீர்ப்புகள், விடுவிக்கப்பட்டவர்கள் அனைவரும் குற்றமற்றவர்கள் அல்ல என்பதையே நிரூபிக்கின்றன.

உச்ச நீதிமன்றம் சொல்வதுபோல் இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படும் சூழல் இருந்தால் அதை எப்படிச் சரிசெய்வது?

அப்படித் தவறாகக் குற்றம்சாட்டப்படுபவர்களைப் பாதுகாக்க நமது சட்ட அமைப்பில் ஏற்கெனவே இருக்கும் ஏற்பாடுகளே போதுமானவை.

உச்ச நீதிமன்றத்தில் பட்டியலின, பழங்குடியின நீதிபதிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைத்துவிட்டால் இதுபோன்ற தீர்ப்புகள் தவிர்க்கப்படும் என்ற வாதம் சரியா?

சாதிக் கொடுமைகளை அனுபவித்திருக்கக்கூடிய பட்டியலினத்தவர், பழங்குடியினர் மற்றும் இதர வாய்ப்பு மறுக்கப்பட்ட குழுக்களைச் சேர்ந்த தகுதியான நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்துக்கும் உயர் நீதிமன்றங்களுக்கும் உயர்த்துவது ஒட்டுமொத்த சட்ட அமைப்புக்கே நல்லது. இது தவிர, அரசு வழக்கறிஞர்களுக்கு சமூக நீதி தொடர்பான சட்டங்களில் உரிய நிபுணத்துவத்தை மாநில அரசுகள் வழங்க வேண்டும்!

சாதிரீதியான வன்கொடுமைகளைத் தடுக்க சட்டத்தைத் தாண்டி வேறென்ன நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்?

ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சட்டங்களையும் திட்டங்களையும் அக்கறையுடன் நடைமுறைப்படுத்த வேண்டும். உதாரணமாக, ஒவ்வொரு கிராமப்புறப் பட்டியலினக் குடும்பத்துக்கும், நிலமில்லாத இதர கூலித் தொழிலாளர்களுக்கும் நிலம் வழங்க நாடு தழுவிய திட்டத்தைத் தொடங்கலாம். அவர்கள் நில உரிமையாளர்கள் ஆகிவிட்டால் வன்கொடுமைக்கு ஆளாவது பெருமளவில் குறையும். இதையெல்லாம் உள்ளடக்கி அவர்களின் முன்னேற்றத்துக்கான ஒரு திட்டத்தைத் தயாரித்து மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே அனுப்பியுள்ளேன். பிரதமரும் முதல்வர்களும் இந்தப் பிரச்சினையை முதன்மைப்படுத்தி, தொடர்ந்து இதில் ஆர்வம் காட்டினால் அந்தத் திட்டங்களைச் செயல்படுத்திவிட முடியும்!

- © ‘தி இந்து’ குழுமத்தின் ‘காமதேனு’

கடந்த வார இதழிலிருந்து...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x