Published : 29 Apr 2018 08:53 AM
Last Updated : 29 Apr 2018 08:53 AM

ரஜினி - கமலை என்னோடு கூட்டணி சேரவிட மாட்டார்கள்!- விஜயகாந்த் பேட்டி

கோ

யம்பேடு... தேமுதிக தலைமை அலுவலகத்தை ஒட்டிய ஷெட்டில் தலைவர் விஜயகாந்தின் கார் மறைவாக நிற்கிறது. “கேப்டன் வந்திருக்கிறது தொண்டர்களுக்கோ நிர்வாகிகளுக்கோ தெரியாது. தெரிஞ்சிருந்தா, கூட்டம் பின்னியிருக்கும். நீங்க நிம்மதியா பேட்டி எடுக்க முடியாதில்ல” என்றபடி முதல் மாடிக்கு அழைத்துச்செல்கிறார் வரவேற்பாளர். பெரிய அறை... வெளியே பாயும் வாகனங்களின் ஹாரன் சத்தம் எதுவும் கேட்காத ஏசி சூழல். அறையின் இடது கோடியில் அமர்ந்திருக்கும் விஜயகாந்த், “வாங்க, வாங்க” என்று வாய் நிறைய வரவேற்கிறார். வழக்கமான நாட்டுநடப்பு விசாரிப்புகள் முடிந்ததும், “இந்த கூலிங் கிளாஸைப் போட்டுக்கவா? ரொம்ப வெளிச்சம் பட்டா, கண்ணுலருந்து தண்ணி வந்து, துடைச்சுகிட்டே இருக்கணும்” என்று புன்னகைக்கிறார். பக்கவாட்டில் பொருத்தப்பட்ட டிவி-யின் நியூஸ் சேனலில் ஒரு கண் வைத்தபடியே பேட்டிக்குத் தயாராகிறார்.

ஜெயலலிதா - கருணாநிதி இருவரையுமே ஆதரித்தும் எதிர்த்தும் அரசியல் செஞ்சிருக்கீங்க. எதிர்ப்பின்போது இதில் யார் உங்களுக்கு அதிக நெருக்கடி கொடுத்தது?

கலைஞர்கூட இல்லை. ஜெயலலிதாதான்! அந்தம்மாதான் அதிக நெருக்கடி கொடுத்தாங்க. அதுல ஒரு தர்மமும் இல்லாம இருந்துச்சு. ‘தமிழன் என்று சொல்’ படம் ஏன் நிற்குதுன்னா, அந்தப் படத்தை வரவிடக் கூடாதுனு ஜெயலலிதா உறுதியா நின்னாங்க. ஃபைனான்சியரைக் கூப்பிட்டு மிரட்டினாங்க. எனக்கு என்னென்ன இடைஞ்சல் கொடுக்கணுமோ, அவ்வளவும் கொடுத்தாங்க. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து 100 நாள் சாதனையைக் கொண்டாடினாங்க. அதுக்கு என்னையும் பூங்கொத்து கொடுக்க அவங்க ஆளுங்களே கூப்பிட்டாங்க. அன்னிக்கு ஆகஸ்ட் 25. என் பிறந்த நாள். நான் வர முடியாதுன்னு சொல்லிட்டு, என் பிறந்த நாளுக்காக ஏற்பாடு செய்திருந்த நலத்திட்ட உதவிகள் விழாவில் கலந்துக்கிட்டேன். அதுவும் ஜெயலலிதாவுக்கு என் மேலே கோபம்.

ஜெயலலிதா இல்லாத இன்றைய அதிமுகவின் நிலையை எப்படிப் பார்க்குறீங்க?

அதிமுக வேஸ்ட்! சும்மா என்னவெல்லாமோ சொல்லிட்டு இருக்காங்க, அவ்ளோதான்!

பாஜகவுடன் கூட்டணியில் இருந்தீங்களே... டெல்லி பதவி ஏற்பு விழாவில் உங்களைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டாரே மோடி. இப்போ அவர் ஆட்சிக்கு வந்து 4 வருடம் ஆகியாச்சு. நீங்க ஆதரிச்ச மத்திய அரசின் செயல்பாடு எப்படி இருக்கிறது?

ஆமா... பதவி ஏற்புக்குப் போனேன். நாடியைப் பிடிச்சு, கன்னம் ரெண்டையும் தடவிக் கொடுத்தாரு மோடி. அவருக்குப் பக்கத்துல உட்கார்ந்தேன். அதெல்லாம் வேற. அதோட விடுங்க. ஆனா, இன்றைக்கு தமிழ்நாட்டுக்கு என்ன தேவை? நதியை தேசிய மயமாக்குறதா சொல்லிக்கிட்டே இருக்காங்க. இப்ப வரைக்கும் என்ன செஞ்சிருக்காங்க? ரஜினிகாந்த் 1 கோடி கொடுக்கிறேன்னு சொன்னார். ஆந்திராவுல சந்திரபாபு நாயுடு நதிகளை இணைக்கிற விஷயத்துல வேகமா இருக்காரு. அதனால, முதல்ல தமிழ்நாட்டுக்குள்ள இருக்குற நதிகளை இணைங்க. அணை, ஏரி, வாய்க்காலை எல்லாம் சரி பண்ணுங்க. நீங்க வேணா பாருங்க... ஜுன் வரைக்கும் கர்நாடகாவோட நமக்குக் காவிரி பிரச்னை ஓடிக்கிட்டு இருக்கும். அதுக்குப் பிறகு கேரளாகிட்டே போராடணும். அதான் முல்லை பெரியார் பிரச்சினை... அது ஆரம்பிக்கும். இப்ப பேசுற கம்யூனிஸ்ட்டுங்க அப்போ மட்டும் அமைதியா இருப்பாங்க.

(இன்னும் ஏராளமான கேள்விகள்...

முழு பேட்டியும் படிக்க...

‘காமதேனு’!)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x