Last Updated : 21 Aug, 2014 09:26 AM

 

Published : 21 Aug 2014 09:26 AM
Last Updated : 21 Aug 2014 09:26 AM

சென்னை... வாழ வைக்கும் பெரும் கருணை | எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதிய கட்டுரை

1970-களின் ஓர் ஆண்டில்… ஒரு மதியப் பொழுதில்… மவுன்ட் சாலையில் வந்து இறங்கினேன். பி.ஆர்.அன். சன்ஸ் கட்டிடத்துக்கு அருகில் இருந்த ஒரு தூங்குமூஞ்சி மரத்தின் நிழலில் நின்று, நான் வாழ வந்த பூமியை உணரலானேன். இன்று வரை சென்னை மரங்கள் எனக்கு நிழல் தர மறுத்ததில்லை.

என் மனம் நிறைந்து பொங்கி வழிந்தது. சென்னைக்கு வந்து சேர்வது எத்தனை ஆண்டுக் கனவு? என் முன்னால் இருந்த மவுண்ட் சாலையின் நீளத்தையும் அகலத்தையும் அளந்துகொண்டு நின்றேன். மிக விசாலமான ஒரு தெருவை ஒரு சங்கக் கவி ‘ஆறு கிடந்தன்ன அகல நெடுந்தெரு' என்று வர்ணித்தது நினைவில் வந்தது. ஆறு படுத்துக்கிடப்பதுபோல் இருக்கிறதாம் அவன் பார்த்த தெரு. அவன் பார்த்த தெருவில் தேர்கள் ஓடியிருக்கும். புரவிகள், யானைப் படைகள் இடித்துக்கொள்ளாமல் நடந்திருக்கும். எனக்கு முன் வெளிகளை நிறைத்துக்கொண்டு உலோக ரதங்கள் ஓடிக்கொண்டிருந்தன. நான் பார்த்து வியந்த அந்த இயக்கத்தின் ஜீவத்துடிப்பு மிகுந்த கணம் இன்னும் என் நினைவில் நிற்கிறது.

சென்னைக்கு வந்த புதிதில் நான் காலை நேரங்களில் மிகவும் அவஸ்தைப்பட்டுவிட்டேன். உறக்கத்துக்கும் விழிப்புக்கும் இடைப்பட்ட அந்தக் கணங்களை இட்டுநிரப்பும் ஓசைகளும் வாசனைகளும் கிடைக்க வில்லை. சென்னையில் உறங்கி எழுந்த இரண்டாம் நாள் என் அறையைக் கண்டு நான் பயந்துபோனேன். என்னை யாரோ கடத்திக்கொண்டு வந்து இங்கு போட்டது மாதிரி இருந்தது. அது நான் எடுத்த அறை என்பது எனக்கு உறைக்க வெகு நேரம் பிடித்தது.

ஓசையற்ற இரைச்சல்: புதுச்சேரியில் பல விதமான ஓசைகளும் வாசனை களுமே எனக்கு உறக்கம் கலைக்கும் விஷயங்களாக இருந்தன. எங்கள் தோட்டத்து மரங்களில் விடிந்தும் விடியாததுமாக வந்துசேர்ந்து அமர்ந்து கூச்சலிட்டுக்கொண்டிருக்கும் சிட்டுக்குருவிகள். சமையல்கட்டிலிருந்து வரும் வாசனை. இந்த இரண்டும்தான் நான் எழுந்திருக்கும் நேரம் என்பது என் பிரக்ஞையாக இருந்தது. தஞ்சாவூரில் ஐயன் கடைத்தெரு விழித்துக்கொண்டு ஊதுபத்தி வாசனையோடு காலை நேரத்தை வரவேற்கும். வெங்கடேசப் பெருமாள் அக்ரகாரத்துக்கே உரிய சப்தங்கள், காய்கறி வியாபாரிகள், பால் வாங்கப்போகும் மாமிகளின் கால் சரசரப்புச் சத்தங்கள், அவர்களுக்குப் பால் தர நடக்கும் மாடுகளின் குளம்புச் சத்தங்கள், கறப்பவர்களை உசுப்பேற்றும் கிருஷ்ணக் கோனாரின் அதட்டல் குரல்.

சென்னையில் எந்த ஓசையும் வாசனையும் இல்லாமல் பொழுது விடிந்தது. சிட்டுக்குருவிகள் இல்லாத கான்கிரீட் காடு. பொறியில் மாட்டிக்கொண்ட எலி மாதிரி ஆட்டோக்கள் கிறீச்சிட்டன.

இங்குதான் நான் 30 வருஷங்களாக வாழ்கிறேன். இங்கிருந்து போக முடியவில்லை. சென்னைக்கு ஏதோ அமானுஷ்ய, ஆகர்ஷண சக்தி இருக்கிறது.

நாம் வாழும் வீடுகளுக்கு முகம் இருக்கிறது; அவை பேசும் என்று எழுதினார் ரஷ்ய எழுத்தாளர் தஸ்தா யெவ்ஸ்கி. எனக்குத் தோன்றுகிறது, வாசனையும் இருக்கிறது என்று. ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பிரதேசத்துக்கும் தனியாக அவற்றை ஞாபகப்படுத்தும் அல்லது பிரதிநிதித்துவப்படுத்தும் வாசனை இருக்கிறது என்றே நான் நம்புகிறேன்.

சென்னையின் வாசனை என்ன? முதலில் சென்னை என்பதுதான் என்ன? இன்று செயின்ட் ஜார்ஜ் கோட்டையும் அதைச் சுற்றி இருந்த மீனவர் குடி யிருப்பே தொடக்ககாலச் சென்னை. ஒரு தீப்பெட்டி அளவுக்குச் சின்ன ஊர் அல்லது பேட்டை. அப்போதே கோட்டைக்கு வெளியே இருந்த எழும்பூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் எல்லாம் வரலாற்றுப் புகழ் பெற்ற ஊர்கள். வெள்ளையர் அதிகாரமும் ஆதிக்கமும் வளர வளர, எல்லா ஊர்களும் அவர்களின் ஜேபிகளில் வந்து விழுந்தன. இன்று வட சென்னை என்று அறியப்படும் புறக்கணிக்கப்பட்ட பகுதியே வெள்ளையர் மற்றும் அவர்களுக்கு முந்தைய காலகட்டத்தில் பல புகழாளர்கள் வாழ்ந்த பகுதியாக இருந்தது. இராமலிங்க அடிகள், பி.டி. தியாகராயர், வள்ளல் பச்சையப்பர் முதலான பலரும் வாழ்ந்த பகுதி அது.

எதுதான் சென்னை? - சென்னை என்று இன்று அறியப்படுவது பல ஊர்களின் தொகுதியே. அந்த ஊர்களும் சாதி, வர்க்கம், செய்தொழில் காரணங்களால் தனித்தனி வாழ்க்கை முறை கொண்ட சிற்றூர்களாகும். எனவே, பன்மைப் பண்பாட்டு அடையாளம் கொண்ட சென்னை என்னும் ஊர்த் தொகுதியை ஒரு சிமிழுக்குள் அடக்குதல் சாத்தியம் இல்லை.

ஆர்க்காடு நவாபுகள் காலத்து சையது கான் பேட்டையும் (சைதாப்பேட்டை), பார்த்தசாரதிப் பெருமாளை லட்சியமாகக் கொண்ட ஒரு பக்கத் திருவல்லிக்கேணியும், ஆர்க்காடு இளவரசர்கள், வாலாஜா மரபினைச் சார்ந்த இசுலாமியர்க் குடியிருப்புத் திருவல்லிக்கேணியும், கபாலீசுவரரை மையம் கொண்ட பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதார், கடற்கரையை ஒட்டிய கிறித்துவர்களின் வாழிடமான மயிலாப்பூரும், சாந்தோமும் என்று எல்லாராலும் அடர்த்தி கொண்ட ஊர்களின் ஒட்டுமொத்தத் தொகுதியே இன்று சென்னை எனப்படுவது.

இந்து, சமணம், பொளத்தம் போன்ற பல்வேறு மதத்தினருக்கும் வாழிடமாகச் சென்னை விளங்குவதே அதன் சிறப்பு. எழுத்தாளர்கள் பலர் சென்னையை ருசித்து, சென்னையின் பயன் கொண்டு வாழ்ந்தாலும், சென்னையைப் பற்றி ஒரு நரகத்தின் சித்திரத்தையே இன்னும் தந்துகொண்டிருக்கிறர்கள். தன்னிடம் இருக்கும்படி சென்னை யாரையும் கட்டாயப் படுத்தியதே இல்லை. வெறுப்பாளிகள் சென்னையின் மண்ணைத் தட்டிவிட்டு ஊர் போய்ச்சேர வேண்டியதுதானே? யாரும் போவதாகத் தெரியவில்லை. காரணம், சென்னையின் ருசியை உணர்ந்தவர்கள் சென்னையை விட்டுப் பிரிதல் சாத்தியமே இல்லை.

எல்லோருக்குமான நகரம்: நீங்கள் யாராக இருக்கிறீர்களோ, யாராக இருக்க விரும்புகிறீர்களோ அதற்குத் தக தன்னைத் தகவமைத்துக்கொண்ட சீர்மை மிக்கது சென்னை. இரண்டு ரூபாய்க்கும் நல்ல தேநீர் உங்களுக்குக் குடிக்கக் கிடைக்கும். 75 ரூபாய்க்கும் ஒரு கப் தேநீரை அருந்த முடியும். மாடிப்படியின் கீழ் ‘மாது’ மாதிரியும் காலம் தள்ள முடியும். நட்சத்திர விடுதிகளிலும் உங்களைச் சீராட்டிக்கொள்ள முடியும். கூடைச் சோறும், தள்ளுவண்டி உணவும், உயர் ரக சர்வதேசத் தர உணவும் நீங்கள் பெறக்கூடிய இடம் சென்னை.

அடுத்த வேளை உணவுக்கும் உத்தரவாதமில்லாத மக்கள், சென்னையில் காற்று வெளியில் நீட்டப்படும் கருணைக் கரத்தைப் பற்றிக்கொண்டுதான் வாழ்வதற்கான போராட்டத்தை நடத்துகிறார்கள். அதற்கும் அடுத்த வேளை அவர்களுக்கு உணவு வழங்கத் தேவதூதர்கள் வருவதில்லைதான். அவர்களை விடவும் உன்னதமான சக மனிதர்கள் வந்துவிடவே செய்கிறார்கள்.

நீங்கள் யாராக இருந்தாலும் உங்களுக்கான சொர்க்க பூமி சென்னைதான். நாடாக இருந்தால் என்ன, காடாக இருந்தால் என்ன, மேட்டு நிலமோ, பள்ளமோ எதுவானாலும் என்ன, மக்கள் எப்படியோ அப்படித்தான் ஊரும் இருக்கும். மக்களிடம் இருந்து ஊருக்கும் ஊர்க் குணம் மக்களுக்கும் பரிமாற்றம் கொள்வதுதானே இயற்கை. சென்னையின் வண்ணத்தை மக்களும், மக்களின் வண்ணத்தைச் சென்னையும் பூசிக்கொள்கிறார்கள்.

எல்லோரையும் தனக்குள் உள்ளடக்கிக்கொண்டு, எல்லோருக்கும் ஏற்ப தன்னைத் தகவமைத்துக்கொண்டு, எல்லோருக்கும் பங்களித்து எல்லோரையும் வாழ வைக்கும் பெரும் கருணையே சென்னையின் வாசனை.

கௌரவமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு சென்னை வந்து, அகௌரவமாக வாழ நேர்ந்தவர்கள், இந்த ஊர் தம்மை வஞ்சித்துவிட்டதாக நினைக்கிறவர்கள், எல்லோரும் விடிந்து எழுவது சென்னையாகத்தான் இருக் கிறது. ஏதோ ஒரு மந்திரக் கயிற்றால் சென்னை அவர்களைக் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. என்னையும்தான்.

- பிரபஞ்சன், எழுத்தாளர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x