Published : 07 May 2024 10:19 AM
Last Updated : 07 May 2024 10:19 AM
‘கரோனாவுக்கு எதிராக ‘கோவிஷீல்டு’ (Covishield) தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு மிக அரிதாக ரத்த உறைவு ஏற்படலாம்’ என்று அதைத் தயாரித்த ஆஸ்ட்ரா ஜெனெகா நிறுவனம், பிரிட்டனில் தடுப்பூசி தொடர்பாக நடைபெற்றுவரும் வழக்கு ஒன்றில் ஒப்புக்கொண்டுள்ளது.
ஊடகங்களில் உலா வரும் இந்தத் தகவலானது, இந்தத் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எல்லோருக்கும் ரத்த உறைவு உண்டாகி, மாரடைப்பு வந்துவிடுமோ என்கிற தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இவ்வளவுக்கும் இது ஏற்கெனவே 2021இல் பல ஆய்வாளர்களால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்தான். நீதிமன்ற விசாரணையில் இதைத் தெரிவிக்க வேண்டியது இப்போது அவசியமானது.
உயிர் காத்த தடுப்பூசி: கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் உலகெங்கிலும் லட்சக்கணக்கில் உயிர்ப் பலிகள் ஆனதைப் பார்த்தும் கேட்டும்கதிகலங்கிப்போன பொதுச் சமூகம் ‘இதனிடமிருந்து விடுதலை கிடைக்காதா?’ என ஏங்கத் தொடங்கியபோது, வாராது வந்த மாமணிபோல் வந்தது ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி! இதை பிரிட்டனைச் சேர்ந்த ஆஸ்ட்ரா ஜெனெகா நிறுவனமும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் இணைந்து தயாரித்தன.
இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் இதைத் தயாரித்தது. இந்தியாவில் இதுவரை 170 கோடிக்கும் அதிகமான தவணைகள் இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அவற்றில் என் பங்கு மூன்று தவணைகள். நான் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை மூன்று தவணைகள் செலுத்திக்கொண்டிருக்கிறேன். எனக்கு இந்தத் தடுப்பூசி தொடர்பாக எவ்வித அச்சமும் இல்லை.
வழக்கத்தில், ஒரு நோய்க்கிருமியை அழிப்பதற்கு நம் உடலில் எதிர்ப்பு சக்தி கிடைக்க வேண்டுமானால், அந்தக் கிருமியை வீரியம் இழக்கவைத்து மிகச் சிறிய அளவில் உடலுக்குள் செலுத்த வேண்டும். இதன்படி, கரோனா கிருமியின் கூர்ப்புரதத்தை (Spike protein) அடினோ வைரஸ் மரபணுவில் மாற்றியமைத்து ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி வழியாகச் செலுத்தினார்கள். அது உலகெங்கிலும் கோடிக்கணக்கானவர்களின் உயிரைக் காப்பாற்றியது.
பாதுகாப்பு அதிகம்... பாதிப்பு குறைவு! இங்கு புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. கரோனா வைரஸ் தாக்கியதால் நுரையீரல் பாதிக்கப்பட்டு மூச்சுவிட முடியாமல் இறந்தார்கள் என்று பொதுவாகத்தான் பலரும் தெரிந்துகொண்டிருக்கிறார்கள்.
உண்மையில், நுரையீரலில் மட்டுமல்லாமல், பல்வேறு உடல்உறுப்புகளில் சிரை ரத்தக்குழாய்களில் (Veins) ரத்த உறைவு ஏற்பட்டுத்தான் அவர்கள் உயிரிழந்தார்கள். அதாவது. 10 லட்சம் பேருக்குக் கரோனா வைரஸ் தாக்கியது என்றால், அவர்களில் ஒன்றரை லட்சம் பேர் (15%) இப்படி ரத்தம் உறையும் பிரச்சினையால் அவதிப்பட்டார்கள் அல்லது உயிரிழந்தார்கள்.
அதேவேளை, 10 லட்சம் பேர் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார்கள் என்றால், அவர்களில் நான்கு அல்லது ஐந்து பேர்தான் (0.0005%) ரத்தம் உறையும் பிரச்சினையால் அவதிப்பட்டார்கள். ஆக, இந்தத் தடுப்பூசியால் கரோனாவின் இரும்புப் பிடியிலிருந்து காப்பாற்றப்பட்டவர்கள்தான் அதிகம்; பாதிக்கப்பட்டவர்கள் மிக மிகக் குறைவு.
இந்தியாவில் கோடிக்கணக்கானவர்களுக்கு ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி செலுத்தப்பட்டதில், பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டதாகப் புள்ளிவிவரம் எதுவும் இல்லை. இதிலிருந்தே இதன் பாதுகாப்புத் தன்மையைப் புரிந்துகொள்ளலாம்.
இன்னொன்றையும் இங்கு சொல்ல வேண்டும். தடுப்பூசியால் ஏற்படும் ரத்த உறைவு என்பது தடுப்பூசியின் பக்க விளைவு (Side effect) அல்ல! எந்த வைரஸ் உடலைத் தாக்கும்போது ரத்தத்தை உறைய வைத்ததோ, அதே வைரஸின் உடல் பாகம்தான் தடுப்பூசியிலும் இருக்கிறது. எனவே, அவரவர் உடல் தன்மையைப் பொறுத்து, தடுப்பூசியில் இருக்கும் வைரஸ் மிக அரிதாக ரத்த உறைவை ஏற்படுத்துகிறது.
இது காலங்காலமாக ரத்த உறைவை ஏற்படுத்துமா என்று கேட்டால், அதுவும் இல்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட 42 நாள்களுக்குள் இந்த ரத்த உறைவு ஏற்பட்டுவிடும். அதற்குப் பிறகு அது ஏற்பட வாய்ப்பே இல்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்டு, மூன்று ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ரத்த உறைவு குறித்த அச்சம் தேவையே இல்லை.
பிரச்சினை புதிது அல்ல! - பொதுச் சமூகத்துக்குத் தடுப்பூசிகள் பிரச்சினை ஆவது இது முதல்முறையல்ல. நெடுங்காலமாக நாம் பயன்படுத்திக்கொண்டிருக்கும் பல தடுப்பூசிகள் இப்படிப் பிரச்சினை ஆகியுள்ளன. உதாரணமாக, போலியோ சொட்டு மருந்து கொடுத்த பல குழந்தைகளுக்கு அந்த மருந்தின் காரணமாகப் போலியோ வந்திருக்கிறது. உயிர் காக்கும் வெறிநாய்க்கடி தடுப்பூசியால் நரம்புப் பிரச்சினைகள் வந்திருக்கின்றன.
நவீன மருத்துவத்தில் மருந்தானாலும் சரி, தடுப்பூசியானாலும் சரி, எத்தனை பேருக்குப் பலன் கிடைக்கும், எத்தனை பேருக்குப் பாதிப்பு ஏற்படும் என்பதைக் கவனித்து, பலன் மிக அதிகமாகவும் பாதிப்பு மிக மிகக் குறைவாகவும் உள்ளவை மட்டுமே நடைமுறைக்கு வருகின்றன. அப்படிப் பாதிப்பு உள்ளவற்றையும் மறுபடி மறுபடி ஆய்வுக்கு உள்படுத்தி, பாதிப்பைக் குறைக்கும் பணியைத்தான் நவீன மருத்துவம் முன்னெடுக்கிறது.
கரோனாவுக்குப் பிறகு மாரடைப்பு அதிகம் ஏன்? - இப்போதெல்லாம் திடீர் உயிரிழப்பு என்றதும் அநேகருக்கும் கரோனா தடுப்பூசி மீது சந்தேகம் வருகிறது. மாரடைப்பைத் தூண்டும் நவீன வாழ்க்கைமுறைகளில் கவனம் செலுத்த அவர்கள் தவறுகிறார்கள். உணவுமுறை நவீனமடைந்துள்ளது.
உடற்பயிற்சி குறைந்தே போனது. உடல் பருமன் அதிகரித்துள்ளது. உறக்கம் தொலைந்துள்ளது. இளம் வயதில் மது, புகை, போதைப்பழக்கங்கள் ரொம்பவே அதிகரித்திருக்கின்றன. இன்றைய பணிச் சூழலில் எல்லாத் துறைகளிலும் பணி அழுத்தம் அதிகரித்திருக்கிறது. அது மன அழுத்தமாக மாறிவிடுகிறது. ரத்த அழுத்தம் எகிறுகிறது; நீரிழிவு வருகிறது.
மருத்துவ ஆலோசனை இல்லாமல் ஜிம் போன்ற கடுமையான உடற்பயிற்சிகளை இளையோர் மேற்கொள்கின்றனர். இவ்வளவும் சேர்ந்துதான் திடீர் மாரடைப்பை வரவேற்கின்றன. கரோனாவுக்குப் பிந்தைய நம் வாழ்க்கைமுறையும் பெரிதும் மாறியுள்ளது. உளவியல் சிக்கல்கள் மேலும் கூடியுள்ளன. இவற்றோடு இப்போது புதிதாக கரோனாவின் நீண்ட காலப் பாதிப்பும் (Long covid) சேர்ந்துள்ளது.
கரோனா தாக்குதலுக்குப் பிறகு அநேகரின் இதயத்தில் தசைப் பெருக்கமும் (Myopathy), தசை அழற்சியும் (Myocarditis) அதிகரித்திருக்கின்றன. கரோனா ஏற்படுத்திய இவ்வகைப் பாதிப்புதான் திடீர் மாரடைப்புக்குக் காரணமே தவிர, கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதால் இல்லை. இப்போது விவாதப்பொருள் ஆகியிருக்கும் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை எடுத்துக்கொண்டால், அது அரிதாக ரத்தத்தில் தட்டணுக்களைக் குறைத்து ரத்த உறைவை உண்டாக்குகிறது (TTS).
அந்த ரத்த உறைவு ஏற்படுவது பெரும்பாலும் சிரை ரத்தக்குழாய்களில் (Veins) மட்டுமே! தமனிக் குழாய்களில் (Arteries) அவ்வளவாக இல்லை. இந்த வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இதன்படி மூளை, நுரையீரல், கால்கள், வயிறு போன்றவற்றில்தான் ரத்த உறைவு ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த ரத்த உறைவு இதயத்தில் ஏற்படுவதில்லை. மாரடைப்பு என்பது இதயத் தமனிக் குழாய்களில் ஏற்படும் ரத்த உறைவு. ஆகவே, ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படும் என்கிற அச்சத்துக்கு இடமில்லை.
ஊடகங்களுக்கு ஒரு வேண்டுகோள்: செய்தி ஊடகங்கள் எப்போதும் அறிவியலின் பக்கம் நிற்க வேண்டும். நவீன மருத்துவம் குறித்த சந்தேகங்களும் தவறான தகவல்களும் சமூக ஊடகங்கள் மூலம் வேகமாகப் பரவிவரும் இன்றைய சூழலில், தடுப்பூசிகள் குறித்த அவநம்பிக்கை மக்களிடம் அதிகரித்துவருகிறது. தடுப்பூசியைத் திட்டமிட்டு எதிர்க்கும் கூட்டமும் உலக அளவில் செயல்பட்டுவருகிறது.
அறிவியலுக்குப் புறம்பாகச் செயல்படும் இவர்களுக்குத் தீனிபோடும் விதமாகத் தடுப்பூசி குறித்த தகவல்களைத் தராதீர்கள். பூமியில் அறிவியல் வளர்ச்சி இல்லாமல் மானுட வளர்ச்சி இல்லை. ஆகவே, அறிவியலின் துணையோடு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். அதுதான் சமூக அறம்.
- தொடர்புக்கு: gganesan95@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...