Published : 07 May 2024 10:11 AM
Last Updated : 07 May 2024 10:11 AM
‘இளவரசர்’ - பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினரால் இப்படி கிண்டலாக விளிக்கப்படுபவர், காங்கிரஸின் ராகுல் காந்தி மட்டுமல்ல; இன்னும் இரண்டு ‘இளவரசர்கள்’ இந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்குக் கடும் சவாலாகக் கருதப்படுகிறார்கள். அவர்கள் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ்; பிஹார் முன்னாள் துணை முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர்.
80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேசமும், 40 தொகுதிகளைக் கொண்ட பிஹாரும் மக்களவைத் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கக்கூடியவை என்பதால், இந்த இளம் தலைவர்களின் நகர்வுகள் மிகுந்த கவனத்துக்குரியவை.
அடித்து ஆடும் அகிலேஷ்: தங்கள் அரசியல் எல்லை எது என்பதில் அகிலேஷ் - தேஜஸ்வி இருவருமே தெளிவாக இருக்கின்றனர். பிரதமர் பதவிக்கான போட்டியில் இவர்கள் (இதுவரை) இல்லை. அதேவேளையில், யாரும் எதிர்பாராத விதமாக கன்னோஜ் தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்கிப் பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் அகிலேஷ்.
உத்தரப் பிரதேச அரசியலில் சமாஜ்வாதி கட்சியின் செல்வாக்கை அதிகரிக்க வேண்டுமானால், நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பாஜகவைத் தோல்வியடையச் செய்ய வேண்டும் என்பதே அகிலேஷின் முதன்மைத் திட்டம்.
மறுபுறம் ஏற்கெனவே அகிலேஷின் குடும்பத்தினர், உறவினர்கள் வேட்பாளர்களாகக் களமிறக்கப்பட்டிருக்கும் நிலையில், கன்னோஜில் அகிலேஷ் போட்டிஇடுவதால் ‘குடும்ப அரசியல்’ விமர்சனத்தைப்பாஜகவினர் இன்னும் உக்கிரமாக முன்னெடுக்கின்றனர். ஆனால், அகிலேஷ் நிகழ்த்தும் அதிரடித் தாக்குதல் பாஜகவினரை நிலைகுலையச் செய்துவருகிறது.
மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்துப் பேசாமல், ராமர் கோயில் திறப்பு,மத அடிப்படையிலான விஷயங்கள் குறித்துமட்டுமே பாஜகவினர் பேசுவதாக விமர்சிக்கும் அகிலேஷ், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவது குறித்துஅதிகம் பேசுகிறார்.
மோடி அரசு இலவச ரேஷன் பொருள்கள் வழங்குதலைத் தொடர்வதைச் சுட்டிக்காட்டும் அகிலேஷ், “நாங்கள்ஆட்சிக்கு வந்தால் ‘ஆட்டா’(மாவு) மட்டுமல்ல ‘டேட்டா’வையும் (இணையவசதி) இலவசமாகவழங்குவோம். அதைப் பயன்படுத்தி நீங்கள் கைபேசி மூலம் நிறையத் தெரிந்துகொள்ளலாம்” என்றும் கூறி, இளைஞர்களை ஈர்க்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான நடவடிக்கைகள், தேர்தல் பத்திர விவகாரம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட சமகாலப் பிரச்சினைகள் மட்டுமல்லாமல், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சாமானியர்கள் பட்ட துயரங்கள், விவசாயிகள் போராட்டத்தை முடக்க மேற்கொள்ளப்பட்ட தந்திரங்கள் என பாஜக ஆட்சியின் பிரச்சினைகளை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திப் பேசுகிறார்.
அக்னிபத் திட்டத்தின் மூலம் ராணுவ வீரர்களுக்கு நான்கே ஆண்டுகளுக்கு மட்டும் வேலை என்று மோடி அரசு கொண்டுவந்த நிலையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், காவல் துறையில் சேர்பவர்களுக்கும் மூன்று ஆண்டுகள்தான் பணி என்ற நிலை ஏற்படலாம் என்று போலீஸாருக்கே கிலியை ஏற்படுத்துகிறார்.
யாதவ் சமூகத்தினருக்கு மட்டுமேயான கட்சியாக சமாஜ்வாதி கட்சி முத்திரை குத்தப்படுவதைக் கடுமையாக எதிர்க்கும் அகிலேஷ், பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியை, பிடிஏ (இதர பிற்படுத்தப்பட்டோர், தலித், பழங்குடி) வீழ்த்தும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கிறார். காங்கிரஸுடனான கூட்டணி விஷயத்தில் சமாஜ்வாதி முன்பைவிடவும் உறுதியாகவே இருக்கிறது.
2027 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் வரையிலும் இந்தக் கூட்டணி தொடரும் என சமாஜ்வாதி கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் ஷிவ்பால் யாதவ் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக 62 இடங்களில் வென்றது. இந்த முறை அகிலேஷின் ஆக்ரோஷப் பிரச்சாரம் அந்த எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தெறிக்கவிடும் தேஜஸ்வி: 2019 தேர்தலில், பிஹாரின் 40 தொகுதிகளில் 39இல் வென்றது பாஜக. இந்த முறை அத்தனை இடங்கள் கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்கின்றன கள நிலவரங்கள். காரணம் தேஜஸ்வி யாதவ். கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் சிறையில் இருந்த காலத்தில், கட்சியை வழிநடத்தும் பெரும் பொறுப்பை தேஜஸ்வி ஏற்றுக்கொண்டார்.
ஆனால், 2019 மக்களவைத் தேர்தலில் ஆர்ஜேடி ஒரு இடத்தில்கூட வெல்ல முடியவில்லை. எனினும், 2020 சட்டமன்றத் தேர்தலில் 75 இடங்களில் வென்று நம்பிக்கைக்குரிய இளம் தலைவராக உருவெடுத்தார். இன்றைக்குத் தனதுஅநாயாசமான உரைவீச்சைக் கொண்டு ஆர்ஜேடி-க்கு மட்டுமல்ல, இண்டியா கூட்டணியின் பிற கட்சிகளுக்காகவும் துறுதுறுவெனப் பிரச்சாரம் செய்துவருகிறார்.
பிஹாரில், இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்க காக்கா காலேல்கர் ஆணையம், மண்டல் ஆணையம் பரிந்துரைத்ததைக் காங்கிரஸ் அரசு புறந்தள்ளியதாகக் குற்றம்சாட்டும் பாஜக, இன்றைக்கு அக்கட்சிசாதிவாரிக் கணக்கெடுப்புக்கு வலியுறுத்துவதைச் சாடுகிறது; காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருக்கும் ஆர்ஜேடியையும் விளாசித் தள்ளுகிறது.
லாலு பிரசாத் யாதவ் ஓபிசி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு மடைமாற்ற முயன்றார் என்றும், கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்ற முயன்றார் என்றும் பாஜக குற்றம்சாட்டுகிறது. இந்திய அரசியலில் சாதி / மதத்தின் பங்கு பற்றி நன்றாகவே அறிந்திருக்கும் தேஜஸ்வி, அவற்றைத் தாண்டி வேலைவாய்ப்பு, அடிப்படைத் தேவைகள் உள்ளிட்ட பிரச்சினைகளே இந்தத் தேர்தலில் முக்கிய அம்சங்களாக இருக்கும் என்பதில் தெளிவாக இருக்கிறார்.
ராணுவத்திலும், ரயில்வேயிலும் பிஹார் இளைஞர்களின் வேலைவாய்ப்பு மோடி ஆட்சியில் கேள்விக்குறியாகியிருப்பதாகக் குற்றம்சாட்டும் தேஜஸ்வி, அக்னிபத் திட்டத்தை அகற்றுவதைத் தனது முக்கியக் குறிக்கோளாக அறிவித்திருக்கிறார்.
மோடியைத் தனிப்பட்ட முறையில் அதிகம்தாக்குவதைத் தவிர்த்துவிட்டு, அவரது ஆட்சியின் தோல்விகளாகப் பல்வேறு விஷயங்களை வாக்காளர்களிடம் பட்டவர்த்தனமாக முன்வைக்கிறார். ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்பு, கறுப்புப் பணம் மீட்பு, பிஹாருக்குச் சிறப்பு அந்தஸ்து என முந்தைய தேர்தல்களில் மோடி வாக்குறுதி அளித்த காணொளிகளை மேடையிலேயே ஒலிவாங்கி மூலம் ‘ஒலிபரப்பி’ அவர் செய்யும் பிரச்சாரத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
நிதீஷின் முந்தைய ஆட்சியில் துணை முதல்வராக இருந்த தேஜஸ்வி, 4 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியது தனது தனிப்பட்ட சாதனை என்றே பேசிவருகிறார். இன்னும் பல வேலைவாய்ப்புகளுக்கான ஏற்பாடுகளைத் தான் ஏற்பாடு திட்டமிட்டிருந்த நிலையில், மீண்டும் பாஜகவுடன் நிதீஷ் குமார் கூட்டணி அமைத்துக்கொண்டதைத் ‘துரோகம்’ எனச் சாடுகிறார்.
நிதீஷை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் கொண்டுவந்தது பாஜகவுக்குப் பலமா, பலவீனமா என விவாதங்கள் நடந்துவந்த நிலையில், எதிர்பார்த்ததுபோலவே நிதீஷால் அக்கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் பாஜக வேட்பாளர்களுக்காக வேலை பார்க்காமல் சுணக்கம் காட்டுவதாகவும் பேசப்படுகிறது.
2020 சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் இருந்தபோதிலும் நிதீஷின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியை (எல்ஜேபி) பாஜக தந்திரமாகப் பயன்படுத்திக்கொண்டதை ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் இன்னும் மறக்காததுதான் இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. என்டிஏ-வுக்குள் நிலவும் இந்த எதிர்மறையான அம்சங்கள் ஆர்ஜேடிக்குச் சாதகமாக அமையக்கூடும்.
நிதீஷ் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி பிஹாருக்குச் சிறப்பு அந்தஸ்து என்பன உள்ளிட்ட மேம்போக்கான வாக்குறுதிகளை முன்வைத்துவரும் நிலையில், மக்களின் அடிப்படைத் தேவைகளை முன்னிறுத்தித் தீவிரப் பிரச்சாரம் செய்கிறார் தேஜஸ்வி.
மத அடிப்படையில் பாஜக முன்னெடுக்கும் பிரச்சாரத்தைக் கடுமையாகச் சாடும் அவர், வேலைவாய்ப்பின்மை, வறுமை, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இந்துக்கள்தான் எனத் திருப்பியடிக்கிறார்.
உத்தரப் பிரதேசத்திலும் பிஹாரிலும் கூட்டணி அமைத்துக்கொண்டதாலேயே காங்கிரஸ் தனது செல்வாக்கை இழந்ததாக அரசியல் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டுவது உண்டு. ஆனால், அதையெல்லாம் கடந்து இந்த முறை மிக உற்சாகமாகவே இரு மாநிலங்களிலும் இரண்டு முக்கியமான கட்சிகளுடன் களமிறங்கியிருக்கிறது காங்கிரஸ். இந்த ஜனநாயக யுத்தத்தில் இளவரசர்கள் கொடி நாட்டுவார்களா எனப் பார்க்கலாம்!
- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT