Published : 28 Apr 2024 07:18 AM
Last Updated : 28 Apr 2024 07:18 AM
சில நூல்கள் காலங்களைக் கடந்து வாசகர் மனங்களில் நிலைத்து நிற்கின்றன. அவற்றின் பின்னணியில் ஊனும் உயிருமாக ஒரு கதை உள்ளது. நெருக்கடியின் ஊடாக எழுதப்பட்ட நூல்களையும் வரலாற்றில் காண்கிறோம். ரஷ்ய எழுத்தாளர் தாஸ்தாவெஸ்கியின் புகழ்பெற்ற புதினங்களில் ஒன்றான ‘சூதாடி’ எழுதப்பட்ட சூழலும் அத்தகையதுதான்.
1864இல் அவருடைய மனைவி மரியா இறந்தார். அதையடுத்து சகோதரர் இறந்தார். தாஸ்தாவெஸ்கி நடத்தி வந்த இலக்கிய இதழ் நிதியின்றி நிறுத்தப்பட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, சூதாட்டம் அவரை அலைக்கழித்தது. தாஸ்தாவெஸ்கி, சூதாட்டத்தால் பட்ட கடன்களை அடைப்பதற்காக ஸ்டெல்லோவ்ஸ்கி என்கிற வெளியீட்டாளரிடம் 3000 ரூபிள்கள் முன்கூட்டியே வாங்கியிருந்தார். அவருக்கு தாஸ்தாவெஸ்கி ஒரு ஆண்டுக்குள் ஒரு புதினம் (160 பக்கங்களுக்குக் குறையாமல்) எழுதித் தர வேண்டும்; இல்லையெனில் அவர் ஏற்கனவே எழுதிய நூல்களையும் எதிர்காலத்தில் எழுதவிருக்கும் நூல்களையும் அடுத்த 9 ஆண்டுகளுக்கு அச்சிடும் உரிமை வெளியீட்டாளரைச் சேரும். இந்தக் கெடுவே சூதாட்டத்துக்கு இணையாக இருந்தது. இச்சூழலில்தான் புதிய புதினம் எழுதும் வேலை தொடங்கியது. சூதாட்டவிடுதியில் இருந்தபோது, தாஸ்தாவெஸ்கிக்கு ஒரு கதைக்கரு தோன்றியிருந்தது. வாழ்வில் பல அடிகள் வாங்கினாலும், நம்பிக்கையைக் கைவிடாத, அதிகாரத்தைக் கேள்வி கேட்கிற சூதாடி ஒருவனைக் குறித்த கதை அது. காலையில் ‘குற்றமும் தண்டனையும்’ புதினமும் மாலையில் சூதாடி குறித்த புதினமும் எழுதுவதென அவர் திட்டமிட்டார். பிந்தைய வேலை நகரவே இல்லை. கெடு முடிய ஒரு மாதமே இருந்தது. ஸ்டெல்லோவ்ஸ்கி குறித்த நினைவுகள் அவரைத் தொந்தரவு செய்தன. தாஸ்தாவெஸ்கியின் நண்பர், இவ்வேலைக்காகச் சுருக்கெழுத்தாளரைப் பணிக்கு அமர்த்தும்படி கூறினார். அந்த நாளில் இது வழக்கத்தில் இல்லை. நீண்ட தயக்கத்துக்குப் பிறகுதான் தாஸ்தாவெஸ்கி சுருக்கெழுத்தாளரை வைத்துக்கொள்ளச் சம்மதித்தார். இதையடுத்துதான் அன்னா கிரிகோர்யேவ்னா, தாஸ்தாவெஸ்கிக்கு அறிமுகமானார். தாஸ்தாவெஸ்கி மீது அன்னா கிரிகோர்யேவ்னாவுக்கு மதிப்பு இருந்தாலும், அவரை ஏனோ பிடிக்கவில்லை. தனக்கு மனச்சோர்வு அளிக்கும்வகையில் தாஸ்தாவெஸ்கி நடந்துகொள்வதாக அவருக் குத் தோன்றியது. எனினும் அந்தப் புதினம் 26 நாள்களில் எழுதி முடிக்கப்பட்டது. இதற்கிடையே ஸ்டெல்லோவ்ஸ்கி அலுவலகத்தை மூடிவிட்டு வெளியூருக்குச் சென்றுவிட்டார். தாஸ்தாவெஸ்கியைக் கடன்காரராகவே நீடிக்கவைப்பதற்கான முயற்சி அது. ஒரு ‘நோட்டரி’ யிடம் சென்று கதையை ஒப்படைத்துப் பதிவு செய்துகொள்ளும்படி அன்னா கிரிகோர்யேவ்னா கூறிய ஆலோசனை, தாஸ்தாவெஸ்கியின் நூல்உரிமைகளைக் காப்பாற்றியது. ‘சூதாடி’ , தாஸ்தாவெஸ்கியையும் அன்னா கிரிகோர்யேவ்னா வையும் இணைத்து வைத்ததுடன், தாஸ்தாவெஸ்கியை ஒழுங்குக்குள் கொண்டு வந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT