Published : 12 Apr 2018 09:23 AM
Last Updated : 12 Apr 2018 09:23 AM
ரோ
ம் நகரம் பற்றியெரியும்போது பிடில் வாசித்த நீரோ மன்னனை நாம் பல உதாரணங்களுக்குப் பயன்படுத்தியிருக்கிறோம். ஆனால், நம் காலத்தில் சமூகத்தில் கொந்தளிப்பான நிகழ்வுகள் நடந்துகொண்டிருக்கும்போது, ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் அவை பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கும்போது அவற்றின் தாக்கம் துளியும் இல்லாமல் தங்கள் உலகத்தில் இயங்கிக்கொண்டிருப்பவர்கள் தங்களை நீரோக்களோடு ஒப்பிட்டுக்கொள்வதே இல்லை. தங்கள் வாழ்வாதாரமே நிலைகுலைந்துவிட்டது என்று கதறியபடி சாலைக்கு வந்து மக்கள் மன்றாடும்போது, ‘என்ன தொந்தரவு இது?’ என்று சலித்துக்கொள்பவர்களை வேறு எப்படி குறிப்பிடுவது?
கால் நூற்றாண்டு காலம் இழுக்கப்படிக்கப்பட்டு காவிரி பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பைத் தருகிறது. நமக்கான பங்கீடாக உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கும் தண்ணீரின் அளவே காலங்காலமாக நாம் பயன்படுத்திவந்த தண்ணீரின் அளவோடு ஒப்பிடுகையில் இழப்புதான். என்றாலும், இறுதித் தீர்ப்பு என்ற வகையில் உச்ச நீதிமன்றத்தின் வார்த்தைகளுக்கு மதிப்பளித்தோம். கர்நாடகத்தின் நீர்த் தேவையும் இடைப்பட்ட காலகட்டத்தில் வளர்ந்திருப்பதைப் புரிந்து இழப்பை எதிர்கொள்ள நம்மை நாமே தயாராக்கிக்கொண்டோம். தமிழகத்துக்கு உரிய தண்ணீரை முறையாகக் கொடுக்கும் மாநிலமாக கர்நாடகம் இருந்திருந்தால் பிரச்சினையே இல்லை. அப்படி இல்லாததால்தான் வழக்கு! ஆக, உச்ச நீதிமன்றம் பங்கீடு செய்த தண்ணீர் தமிழகத்தை வந்தடைய வேண்டும் என்றால் பங்கீடு செய்ய மேலாண்மை வாரியம் அவசியம் வேண்டும். இது குழந்தைக்கும் தெரியும்.
மத்திய அரசோ எல்லோருக்குமான மத்திய அரசாகச் செயல்படவில்லை. தன்னுடைய குறுகிய அரசியல் நோக்கங்களுக்கேற்ப செயல்படுகிறது. மத்திய அரசின் பிரதிநிதிகள் ஒவ்வொரு இடத்திலும் இதுகுறித்து ஆளுக்கொன்றாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பகிரங்கமாக வஞ்சிக்கப்படுகிறது தமிழகம். இந்நிலையில்தான் மாநிலம் முழுக்க போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. கொடுங்கோடையையும் பொருட்படுத்தாமல் அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் வெவ்வேறு வடிவங்களில் போராட்டங்களை முன்னெடுத்துவருகிறார்கள்.
ஊர் பற்றியெரியும்போது யாரும் திருவிழா கொண்டாட மாட்டார்கள். அவ்வகையில், “ஐபிஎல் போட்டியை இங்கே ரத்துசெய்யுங்கள்” என்று கேட்டது அநியாயமானது அல்ல. பாகிஸ்தான் அரசு மோசமாக நடந்துகொள்ளும்போது எத்தனையோ முறை பாகிஸ்தானுடனான கிரிக்கெட் தொடரை ரத்துசெய்யும் முடிவுக்கு இந்திய அரசே அழுத்தம் கொடுத்திருக்கிறது. உள்ளூர் பிரச்சினைகளை முன்னிறுத்தி அறிவிக்கப்பட்ட போராட்டங்களுக்கும் மக்களின் உணர்வுக்கும் மதிப்பளித்து நடக்கவிருந்த எத்தனையோ போட்டிகள் கிரிக்கெட் வாரியத்தால் ரத்துசெய்யப்பட்டிருக்கின்றன. இப்போதும்கூட கடைசியாக அந்த முடிவுக்கே வந்திருக்கிறது கிரிக்கெட் வாரியம்.
தங்களைப் புறக்கணிக்கும் மத்திய அரசுக்கு எதிர்ப்பைத் தெரிவிக்கவும் நாடு முழுக்க இந்தச் செய்தியும் தமிழக மக்களின் உணர்வும் சென்றடையவும் ஒரு உத்தியாகவே இப்படி ஒரு கோரிக்கையை வைத்தார்கள் போராட்டக்காரர்கள். போட்டி நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றுதான் இல்லை; போட்டி நடத்தப்பட்டு அதனூடாகவே மக்கள் தங்கள் உணர்வை அறவழியில் தெரிவிக்கவும் அனுமதிக்கப்பட்டிருக்கலாம். ஓர் உதாரணம், கறுப்பு உடை அல்லது கறுப்புப் பட்டையோடு ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கலாம். விளையாட்டுப் போட்டிகளின்போது, விளையாட்டு வீரர்களே தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் கறுப்புப் பட்டை அணிந்துகொள்வது சர்வதேச அளவில் வழக்கமாக இருக்கையில், பார்வையாளர்களிடமிருந்து அந்த உரிமை மறுக்கப்பட்டது எந்த வகையில் நியாயம்?
கிரிக்கெட் என்பது விளையாட்டு. ஐபிஎல் என்பது பிசிசிஐ எனும் தனி அமைப்பால் நடத்தப்படுவது; அதற்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என்ற வியாக்கியானங்கள் எல்லாம் யாருக்குத் தெரியாதது? ஐபிஎல் ஒரு சாதாரண தனியார் அமைப்பு நடத்தும் விளையாட்டு போட்டி என்றால், அதை நடத்த ஏன் இவ்வளவு போலீஸார்? தண்ணீரை எடுத்துவரக்கூட அனுமதி இல்லாத அளவுக்குப் பார்வையாளர்களிடம் ஏன் இவ்வளவு கட்டுப்பாடு? அறவழியில் போராடிய மக்கள் மீது ஏன் தடியடி?
நிச்சயமாக போலீஸாரையோ, ஐபிஎல் போட்டிகளைக் காணச் சென்ற ரசிகர்களையோ தாக்கியவர்களை நான் நியாயப்படுத்தவில்லை. மைதானத்துக்குள் காலணியை வீசியவரையும் நியாயப்படுத்தவில்லை. ஒரு சிலர் என்றாலும் ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் அறவழிப் போராட்டக்காரர்களுக்கும் அவப்பெயரைச் சம்பாதித்துக் கொடுத்துவிட்டவர்கள் அவர்கள். கடுமையான கண்டனத்துக்குரியவர்கள். ஆனால், மக்களுக்கான நியாயமான எல்லா எதிர்ப்பு வழிகளையும் இந்த அரசு மறுப்பது பெரிய அடக்குமுறை. “ஐபிஎல் போட்டியை எதிர்ப்பதால் என்ன பயன்?” என்று கேட்பவர்கள் இந்த எதிர்ப்பின் தொடர்ச்சியாகத்தான் கடந்த இரண்டு நாட்களாக தேசிய தொலைக்காட்சிகள் தமிழகப் போராட்டங்கள் குறித்துப் பேச ஆரம்பித்திருக்கின்றன என்பதை எப்படிப் பார்க்கிறார்கள்?
உண்மையில் இந்தப் போட்டியை நடத்துவதை கவுரவப் பிரச்சினையாகக் கருதியது மத்திய அரசு. தமிழ்நாட்டு அரசு டெல்லியின் கைப்பாவை ஆனது. அதனால்தான், காவல் துறையைக் கொண்டு இந்தப் பிரச்சினை அணுகப்பட்டது. போராட்ட அறிவிப்பை வெளியிட்டவர்களுடன் பேசுவது குறித்து எவருமே அக்கறை காட்டவில்லை. ஐபிஎல் அமைப்புகள் எப்போதும் நிதி, மூலதனத்தோடு பிணைக்கப்பட்டவை. அவற்றின் அறம், நியாயத்துக்கு எல்லாம் அறைகூவல் விடுத்து பெரிய அளவில் பிரயோஜனம் இருக்காது.
எனக்கு அரசு, கிரிக்கெட் வாரியம் இவற்றின் மீதுள்ள அதிருப்தியைக் காட்டிலும் அதிகமான கோபம் வருவது நம்மவர்கள் மீதுதான். ரசிகர்களிடம் கேட்கிறேன். ஐபிஎல் டிக்கெட் விலை எவ்வளவு இருக்கும்? எத்தனை ஆயிரம் பெரிய இழப்பாகிவிடும்? விவசாயிகளுக்காகப் போட்டியைப் புறக்கணிப்பது என்ற முடிவை ரசிகர்கள் எடுத்திருந்தால் அது எவ்வளவு மகத்தான செய்தியாக இருந்திருக்கும்? சமூகம் என்பது நான்கு பேர் என்பதைப் பள்ளிக்கூடங்களிலிருந்து திரும்பத் திரும்பப் படிக்கிறோம். சமூகம் என்பது எந்த நான்கு பேர்?
- வெ.சந்திரமோகன்,
தொடர்புக்கு:
chandramohan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT