Published : 27 Apr 2024 07:51 PM
Last Updated : 27 Apr 2024 07:51 PM
மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு பல்வேறு மாநிலங்களின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்த்து வருகிறோம். ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பிரதான அரசியல் கட்சிகள் எவை எவை, கடந்த கால தேர்தல்களில் அக்கட்சிகளுக்குக் கிடைத்த வாக்கு சதவீதம் எத்தனை, அந்தக் கட்சிகளுக்கு கிடைத்த தேர்தல் வெற்றிகள் / தோல்விகள், தற்போதைய கள சூழல் யாருக்கு சாதகமாக / பாதகமாக இருக்கிறது என பல்வேறு அம்சங்களை புள்ளி விவரங்களோடு இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது தெலங்கானா மாநிலத்தின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்ப்போம்.
கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 2ம் தேதி ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட மாநிலம் தெலங்கானா. இந்த மாநிலத்தில் 33 மாவட்டங்கள், 17 மக்களவைத் தொகுதிகள், 119 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கின்றன.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த மாநிலத்தில் 3,50,03,674 மக்கள் வசிக்கிறார்கள். கிராமப்புறங்களில் 61.12% மக்களும், நகர்ப்புறங்களில் 38.88% மக்களும் வசிக்கிறார்கள். மாநிலத்தின் எழுத்தறிவு 66.54% ஆக உள்ளது. இதில், ஆண்களின் எழுத்தறிவு 75.04% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு 57.99% ஆகவும் உள்ளது. மாநிலத்தின் அலுவல் மொழியாக தெலுங்கும், கூடுதல் அலுவல் மொழியாக உருதும் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தெலங்கானாவில் இந்துக்கள் 85.09% வசிக்கிறார்கள். இஸ்லாமியர்கள் 12.69 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 1.27 சதவீதமும் வசிக்கிறார்கள்.
தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டதை அடுத்து மாநிலத்தின் முதல்வராக கே. சந்திரசேகர ராவ் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஆண்டு நவம்பரில் நடத்தப்பட்ட 3வது சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சியைச் சேர்ந்த ரேவந்த் ரெட்டி முதல்வராக பொறுப்பேற்றார்.
தெலங்கானாவில் 100க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் இருக்கின்றன. எனினும், கே. சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ர சமிதி, காங்கிரஸ், பாஜக, அசாதுதின் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆகியவையே செல்வாக்குடன் உள்ளன. அதிலும், பாரத் ராஷ்ட்ர சமிதியும், காங்கிரசுமே 30 சதவீதத்துக்கும் அதிகமான வாக்கு வங்கியைக் கொண்டிருக்கின்றன. பாஜக 10 சதவீதத்துக்கும் சற்று கூடுதலான வாக்கு வங்கியைக் கொண்டிருக்கிறது. ஏஐஎம்ஐஎம் கட்சி சுமார் 2 சதவீத வாக்கு வங்கியைக் கொண்டிருக்கிறது.
தெலங்கானாவின் தற்போதைய கள நிலவரம் குறித்து அறிந்து கொள்வதற்கு முன்பாக கடந்த சில தேர்தல்களின் முடிவுகள் குறித்து தற்போது பார்ப்போம்.
2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலில் பாரத் ராஷ்ட்ர சமிதி, பாஜக, காங்கிரஸ், ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிட்டன. மொத்தமுள்ள 17 தொகுதிகளிலும் போட்டியிட்ட பாரத் ராஷ்ட்ர சமிதி 41.71% வாக்குகளுடன் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக, 19.65% வாக்குகளுடன் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 29.79% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2.80% வாக்குகளுடன் ஏஐஎம்ஐஎம் கட்சி ஒரு தொகுதியில் அதாவது ஹைதராபாத் தொகுதியில் வெற்றி பெற்றது.
2023 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: இந்த தேர்தலில் பாரத் ராஷ்ட்ர சமிதி மொத்தமுள்ள 119 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி, சிபிஐ உடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. காங்கிரஸ் 118 தொகுதிகளிலும், சிபிஐ ஒரு தொகுதியிலும் போட்டியிட்டன. பாஜக, ஜன சேனா கட்சியுடன் கூட்டணி அமைத்தது. பாஜக 111 தொகுதிகளில் போட்டியிட்டது. ஜன சேனா கட்சி 8 தொகுதிகளில் போட்டியிட்டது. ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிட்டது.
காங்கிரஸ் கட்சி 39.69% வாக்குகளுடன் 64 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. காங்கிரஸ் கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிட்ட சிபிஐ, அத்தொகுதியில் வெற்றி பெற்றது. அனைத்துத் தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட பாரத் ராஷ்ட்ர சமிதி 37.62% வாக்குகளுடன் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 111 தொகுதியில் போட்டியிட்ட பாஜக 14% வாக்குகளுடன் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஒவைசி கட்சி 2.23% வாக்குகளுடன் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
அடுத்ததாக, தற்போதைய மக்களவைத் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்ப்போம்.
2024 கள நிலவரம்: தெலங்கானாவில் மொத்தமுள்ள 17 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 13ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ், பாஜக, பாரத் ராஷ்ட்ர சமிதி ஆகிய கட்சிகள் தனித்து களம் காண்கின்றன. ஏஐஎம்ஐஎம் கட்சி ஹைதராபாத் தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறது.
கருத்துக்கணிப்புகள்: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தெலங்கானாவில் பல்வேறு கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டுள்ளன. இதில், காங்கிரஸ் கட்சியே அதிக தொகுதிகளில் அதாவது, ஏறக்குறைய 10 தொகுதிகளில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவும், பாரத் ராஷ்ட்ர சமிதியும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
தேர்தல் பிரச்சாரங்கள்: இந்த தேர்தலில் குறைந்தது 14 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற இலக்குடன் காங்கிரஸ் கட்சி தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது. முதல்வர் ரேவந்த் ரெட்டியின் தலைமைக்கும் செல்வாக்குக்குமான பரீட்சையாக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. எனவே, அவரது தலைமையில் காங்கிரஸ் கட்சி தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், மாநிய விலையில் எல்பிஜி சிலிண்டர் விநியோகம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டி காங்கிரஸ் பிரச்சாரம் செய்து வருகிறது. அதோடு, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்றும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உரிய இட ஒதுக்கீடு அனைவருக்கும் வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் பிரச்சாரம் செய்கிறது.
நரேந்திர மோடி தலைமையிலான 10 ஆண்டு கால ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சித் திட்டங்கள், பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் வாக்குறுதிகள் ஆகியவற்றை முன்வைத்து பாஜக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. தெலங்கானா உருவாக்கப்பட்டபோது மாநிலத்தின் முதல் பாஜக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி. கிஷன் ரெட்டி, 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே பொறுப்புக்கு கடந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டார். தனக்கு இருக்கும் சவாலைக் கருத்தில் கொண்டு அவரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் என்னென்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என காங்கிரஸ் கூறியதோ அவற்றில் பெரும்பாலான வாக்குறுதிகளை அக்கட்சி நிறைவேற்றவில்லை என்றும் குற்றம் சாட்டி வரும் கிஷன் ரெட்டி, இட ஒதுக்கீட்டை பாஜக ரத்து செய்யும் என்பது காங்கிரசின் பொய் பிரச்சாரம் என கூறி வருகிறார்.
காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு எதிராக பாரத் ராஷ்ட்ர சமிதி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. 1956 முதல் தெலங்கானாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வந்ததாகவும், 2014 முதல் காங்கிரஸ் கட்சியோடு பாஜகவும் சேர்ந்து கொண்டதாகவும் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான கே. சந்திரசேகர ராவ் குற்றம் சாட்டி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். மருத்துவக் கல்லூரிகள், நவோதையா பள்ளிகள், தேசிய அளவிலான கல்வி நிறுவனங்கள் உள்பட பல்வேறு திட்டங்களை தெலங்கானாவுக்காக தொடர்ந்து கோரிய போதிலும், கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அரசு அவற்றை வழங்க மறுத்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அதேநேரத்தில், பாஜக மற்றும் அதன் நேச கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு பாஜக அரசு, ஆதரவாக செயல்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டி வருகிறார். பாஜக, காங்கிரஸ் இரண்டுமே தெலங்கானா மாநில நலன்களுக்கு எதிரானவை என்றும் அவர் விமர்சித்து வருகிறார். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் 400க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற ரேவந்த் ரெட்டி தவறி விட்டதாகவும், ஆட்சிக்கு வந்த மறு நாளே நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ. 500 கூடுதலாக வழங்கப்படும் என்ற வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப்படவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
மும்முனைப் போட்டி நிலவும் தெலங்கானாவில் யாருக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என்பது ஜூன் 4-ம் தேதி தெரிந்துவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT