Published : 16 Apr 2018 08:52 AM
Last Updated : 16 Apr 2018 08:52 AM

காவிரியில் பெற வேண்டிய தண்ணீருக்காக மட்டும் அல்ல; கொடுக்க வேண்டியதற்கும் சேர்த்தே போராடுகிறது தமிழகம்!- வாரியம் அமைக்கப்பட்டால் நாமும் பவானி நீரில் கேரளத்துக்கு பங்கு கொடுக்க வேண்டும்

கா

விரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் முழுக்கப் போராட்டங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. மேலாண்மை வாரியம் அமைப்பதானது காவிரியில் தமிழகம் தன்னுடைய பங்கைப் பெற மட்டும் அல்ல; புதுச்சேரிக்கும் கேரளத்துக்கும் காவிரி நீரில் பங்கிருக்கிறது. கர்நாடகத்திலிருந்து பெறுவதுபோல நாமும் இந்த மாநிலங்களுக்குத் தர வேண்டும். ஒரு வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைவது மாநிலங்கள் இடையேயான நதிநீர் விவகாரங்கள் பலவும் முடிவுக்கு வர வழிவகுக்கும்.

என்ன சொல்கிறது தீர்ப்பு?

காவிரி நடுவர் மன்ற இறுதி உத்தரவின்படி தமிழகத்துக்குக் கர்நாடகம் கொடுக்க வேண்டிய நீரின் அளவு 177.25 டி.எம்.சி.. இதேபோல, கேரளத்துக்கு 30 டி.எம்.சி.; புதுச்சேரிக்கு 7 டி.எம்.சி. தண்ணீரை நாம் அளிக்க வேண்டும். இந்தத் தண்ணீர் போய்ச்சேர்வதிலும் பிரச்சினை இருக்கிறது. “காவிரியில் கர்நாடகத்தோடு தமிழகமும் சேர்ந்துகொண்டுதான் புதுச்சேரியை வஞ்சிக்கிறது” என்று சமீபத்தில்கூட புதுவை முதல்வர் நாராயணசாமி பேட்டியளித்தது நினைவில் இருக்கலாம்.

காவிரி மேலாண்மை வாரியம் அமையும்போது காவிரியின் துணை ஆறுகளும் வாரியத்தின் கட்டுப்பாட்டுக்குள் வரும். தீர்ப்பின்படி, கேரளத்துக்குக் கொடுக்க வேண்டிய தண்ணீரில், கபினி ஆற்றிலிருந்து 21 டி.எம்.சி., அமராவதியின் துணை ஆறான பம்பாற்றிலிருந்து 3 டி.எம்.சி., பவானியிலிருந்து 6 டி.எம்.சி. கொடுக்கச் சொல்கிறது உத்தரவு. அதன்படி, பவானி ஆற்றில் 6 டி.எம்.சி. நீரை கேரளத்துக்குக் கொடுக்க வேண்டும்.

பவானி எதிர்கொள்ளும் சிக்கல்

பவானி ஆற்றை நம்பித்தான் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மட்டும் சுமார் 2 லட்சத்து 70 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. தவிர, பவானிக்குக் குறுக்கே கட்டப்பட்டுள்ள பில்லூர் அணையிலிருந்து மின் உற்பத்திசெய்யப்படுவது மட்டுமின்றி, கோவை முதலாம், இரண்டாம், மூன்றாம் கூட்டுக்குடிநீர்த் திட்டங்கள், திருப்பூர் குடிநீர்த் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. மேட்டுப்பாளையம் தொடங்கி வழியோர கிராமங்களில் 30-க்கும் மேற்பட்ட குடிநீர்த் திட்டங்கள் பவானி ஆற்றை நம்பியே இருக்கிறது. பவானியும் ஏற்கெனவே கடுமையான நீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொள்கிறது என்பதுதான் பிரச்சினை.

இதற்கிடையே, பவானியில் தனக்குரிய 6 டி.எம்.சி. உரிமையை முன்னிறுத்தி அட்டப்பாடி முக்காலி, சித்தூர் ஆகிய இடங்களில் பவானி, சிறுவாணிக்குக் குறுக்காக அணைகள் கட்ட கேரள அரசு முயன்றது. மத்திய அரசின் சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்கவில்லை. இருப்பினும் பவானி, சிறுவாணிக்குக் குறுக்காக ஆறு தடுப்பணைகளைக் கட்ட திட்டமிட்டு, அதில் இரண்டு தடுப்பணைகளைக் கடந்த ஆண்டு கட்டி முடித்துவிட்டது. இதனால், பில்லூர், பவானி சாகர் அணைகளுக்கு வர வேண்டிய தண்ணீர் வரத்து குறைந்துவிட்டது. கேரளா மேலும் நான்கு தடுப்பணைகளைக் கட்டிவிட்டால் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்று இப்பகுதி விவசாயிகள் கவலைப்படுகிறார்கள்.

ஒலிக்கும் பல்வேறு குரல்கள்

“2002, 2012-ம் ஆண்டுகளில் கொங்கு மண்டலம் கடும் வறட்சியைச் சந்தித்தது. கடந்த மூன்றாண்டுகளாகவே இங்கு வறட்சி நிலைமைதான். இதில் மட்டும் 10 லட்சம் தென்னை மரங்களை இழந்துவிட்டோம். காளிங்கராயன் வாய்க்கால் பாசனப் பகுதியில் நிலவும் வறட்சியால் தற்கொலைசெய்துகொண்ட விவசாயிகள் ஏராளம். இப்போது வாரியம் அமைந்து சட்டப்படி 6 டி.எம்.சி. நீரைக் கேரளா முழுமையாக எடுத்தால் நிலைமை என்னவாகும்?” என்று கேட்கிறார் காளிங்கராயன் பாசன சபைத் தலைவர் வி.எம்.வேலாயுதம். ஆனால், கர்நாடகத்திலிருந்து நமக்கு தண்ணீர் வரும்பட்சத்தில் இது சிக்கல் அல்ல என்கிறார் மதிமுக மாநில இளைஞரணி அமைப்பாளரான வே.ஈஸ்வரன்.

“கேரளத்துக்கான 6 டி.எம்.சி. தண்ணீர் உரிமை எந்த வகையிலும் பவானியைப் பாதிக்காது. அட்டப்பாடியில் ஓடும் சிறுவாணி, பவானி நதிக்கரைகளில் ஆயிரக்கணக்கான பம்ப் செட் மோட்டார்கள் வைத்து தண்ணீர் உறிஞ்சி விவசாயம்செய்கிறார்கள் கேரள விவசாயிகள்.

தவிர, தடுப்பணையிலும் தண்ணீர் தேக்கி எடுக்கிறார்கள். வாரியம் அமைக்கப்பட்டால் அவையும் கண்காணிப்புக்குள் வரும். நமக்கான தண்ணீர் வரும்போது நாமும் தண்ணீரைப் பகிர்வதில் பிரச்சினை இல்லை. நதிநீர்ப் பங்கீடு முறைப்படி நடக்கும். ஆனால், பவானியில் ஏற்பட்டுவரும் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளவும் தேவைகளை எதிர்கொள்ளவும் புதிய தீர்வுகளையும் நாம் யோசிக்க வேண்டும்” என்கிறார் அவர்.

இங்கே மழைதான் முக்கியப் பிரச்சினை என்கிறார் தமிழ்நாடு விவசாய சங்க கோவை மாவட்ட துணைத் தலைவர் வெள்ளியங்காடு மூர்த்தி. “பொதுவாகவே ஜனவரி தொடங்கி ஏப்ரல் வரை பவானியில் தண்ணீர் வரத்து குறைவாக இருக்கும். கோடை மழை ஏமாற்றிவிட்டால் ஜூன் மாதம் வரை கடும் வறட்சி நிலவும். மழை பெய்தால், கேரளத்துக்கான தண்ணீரை வழங்குவதில் சிக்கல் இருக்கப்போவதில்லை. மழை இல்லாவிட்டால் தண்ணீரே இருக்கப்போவதில்லை. வாரியம் மட்டும் எங்கிருந்து தண்ணீரைத் திறக்க முடியும்? எப்படியும் நாம் வைத்துக்கொண்டு வஞ்சிக்கப்போவதில்லை” என்கிறார்.

அச்சப்பட வேண்டியது அவசியம்தானா?

இதுகுறித்த அச்சமும் கொங்கு விவசாயிகளிடம் இருக்கத்தான் செய்கிறது. அதேபோல, கொங்கு பகுதி விவசாயிகள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது தஞ்சை பகுதி விவசாயிகள் அங்கு அதை எதிரொலிக்காத வருத்தமும் இருக்கிறது. “இப்போதைய போராட்டங்களில் கொங்கு பகுதியில் அதிக பங்கு இல்லாததற்கும்கூட இதெல்லாம் ஒரு காரணம்” என்கிறார் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத் தலைவர் கந்தசாமி.

தமிழக விவசாயிகளின் அச்சம் தேவையற்றது என்கிறார்கள் கேரள விவசாயிகள். “அட்டப்பாடியில் 6 டி.எம்.சி. தண்ணீர் எடுக்கவே வாய்ப்பில்லை. சொல்லப்போனால் போன வருஷம் கட்டி முடிக்கப்பட்ட இரண்டு தடுப்பணைகளுக்கு எதிராகவே இங்குள்ள மக்களும் உள்ளார்கள்” என்கிறார் கேரள மாநிலம் அட்டப்பாடி தேக்குவட்டை கிராமத்தில் வசிக்கும் விவசாயி ராதாகிருஷ்ணன்.

“20 நாட்களுக்கு முன்பு மஞ்சிக்கண்டி தடுப்பணையின் நான்கைந்து கதவுகளை உடைத்து எறிந்துள்ளார்கள். இங்கே தேங்கும் தண்ணீர், கழிவுகள் நிறைந்து அசுத்தமாக இருக்கிறது. குடிநீருக்கும் பயன்படுத்த இயலவில்லை. தவிர, விவசாய மோட்டார்களில் குப்பை புகுந்துகொள்வதால் இயங்குவதில்லை. இப்படி நிறைய பிரச்சினைகள். இப்படியிருக்க, இங்கே 6 டி.எம்.சி. தண்ணீரைத் தேக்க எப்படி அணை கட்டுவார்கள் என்று தெரியவில்லை” என்றார். தமிழகம், கேரளம் என்று எந்தப் பகுதி விவசாயிகளாக இருந்தாலும் விவசாயத்துக்கும் குடிநீர்த் தேவைகளுக்கும் போதுமான தண்ணீர் அவசியம். முறைப்படி நாம் கர்நாடகத்திலிருந்து நீர் பெறுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல, கேரளத்துக்கும் புதுச்சேரிக்கும் நீர் தருவதும் முக்கியம். பற்றாக்குறை காலத்தில் விகிதாச்சாரப்படி பங்கீடு குறைந்தால், அதற்கேற்ப தயாராகவும் நாம் சிக்கன நீர் மேலாண்மைக்கான தீர்வுகளை யோசிக்க வேண்டும்!

- கா.சு.வேலாயுதன்,

தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x