Last Updated : 07 Aug, 2014 12:00 AM

 

Published : 07 Aug 2014 12:00 AM
Last Updated : 07 Aug 2014 12:00 AM

அறிவோம் நம் மொழியை: கண்ணுக்குத் தமிழ் அழகு - 2

>‘கண்ணுக்குத் தமிழ் அழகு' என்ற தலைப்பில் சென்ற வாரம் எழுதப்பட்ட பதிவைப் படித்து விட்டு, புதுச்சேரியைச் சேர்ந்த வாசகர் அ. அமரநாதன், கி. ராஜநாராயணனின் வழக்குச் சொல்லகராதியிலிருந்து கண் தொடர்பான சில சொற்களையும் மரபுத் தொடர்களையும் அனுப்பியிருந்தார். அவர் அனுப்பிய பட்டியலிலிருந்து சில சொற்களும் தொடர்களும் இங்கே கொடுக்கப்பட்டிருக்கின்றன (அடைப்புக்குறிகளுக்குள் உள்ள குறிப்புகள் புத்தகத்தில் உள்ளவை):

கண் அகப்பை

கண்கூச்சம்

கண் சல்லடை

கண் சிமிட்டி (ஒரு கண்நோய்)

கண்ணடி (கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாதாம். ஒரு சொலவம்)

கண்ணடையாது (இதெ உடைச்சாத்தாம் ஒங்கண்ணடையும்)

கண்ணாம்பட்டை (கண்ரெப்பை)

கண்ணுக்குப் பிறகு (காலமான பிறகு)

கண்ணெ மிஞ்சிப் போகுதப்பா செலவு (பார்த்துப் பார்த்துச் செலவு பண்ணினாலும்)

கண்ணேறல்: (ஒரு குருட்டு நம்பிக்கை) கண்திருஷ்டி

கண்ணோட்டம்: கவனிப்பு. மேல்பார்த்தல்

கண்மருட்டு: (கயிறும் பாம்புபோல் தெரியும்)

ஒரு கண்ணுக்கு உறங்கி: (கோழித்தூக்கம்)

சென்ற வாரப் பகுதியில் கண்ணின் பாகங்கள், கண் தொடர்பான பிரச்சினைகள் போன்ற வற்றைக் குறிக்கும் சொற்கள் சிலவற்றைக் கொடுத்திருந்தோம். பெரும்பாலும் பொது வழக்கில் உள்ள சொற்களையும் பயன்பாட்டுக்கு எளிதான சொற்களையும் கொடுத்திருந்தோம். ஒரு வாசகர் அவற்றில் சில சொற்களுக்கு மாற்றாக, கண்மருத்துவத் துறையில் பயன்படுத்தப்பட்டுவரும் கலைச்சொற்களை அனுப்பியிருக்கிறார். கலைச்சொற்களை உருவாக்குபவர்கள் சில சமயங்களில் துல்லியத்தை மட்டும் மனதில் கொண்டு, பயன்படுத்த முடியாத வகையிலான சொற்களை உருவாக்கிவிடுகிறார்கள். எடுத்துக்காட்டாக, கேடராக்ட் (cataract) என்ற சொல்லுக்குப் பொது வழக்கில் இருக்கும் கண்புரை என்ற சொல் எளிமையானது. ஆனால், அதற்குக் கலைச்சொல்லாக வாசக அன்பர் குறிப்பிட்டிருக்கும் சொல்: விழியாடி வெளுப்பு.

அதேபோல், கருமணி, பாவை, கண்மணி (பியூப்பில்) ஆகிய சொற்களுக்கு மாற்றாக கருந் திரைத்துளை என்ற சொல்லை அந்த வாசகர் பரிந்துரைத்திருக்கிறார். ஒரு பொருளையோ விஷயத்தையோ குறிப்பதற்குத் தமிழில் சொற்கள் இல்லையென்றாலோ, இருக்கும் சொற்கள் துல்லியமானவையாக இல்லையென்றாலோ புதிதாகச் சொற்களை உருவாக்கலாம். ஆனால், காலம்காலமாகப் பொதுவழக்கில் இருக்கும் சொற்களைப் புறம்தள்ளிவிட்டுப் புதிய சொற்களை, அதுவும் பயன்பாட்டுக்கு எளிமையாக இல்லாத சொற்களை உருவாக்குவதைத் தவிர்க்கலாம் அருவி என்ற சொல் இருக்கும்போது நீர்வீழ்ச்சி என்ற சொல்லை உருவாக்கியதுபோல்தான் இதுவும்.

தூரப்பார்வையும் வெள்ளெழுத்தும் ஒன்றல்ல என்பதை அந்த வாசகரும், மருத்துவர் கு. கணேசனும் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள். வெள்ளெழுத்து என்பது நாற்பது வயதுக்கு மேல் ஏற்படும் தூரப்பார்வை என்று அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

சொல்தேடல்: ‘ஜிகினா' என்னும் சொல்லுக்கு கிரிஜா மணாளன், கே எஸ் முகமத் ஷூஐப், கோ. மன்றவாணன் உள்ளிட்ட பலரும் அனுப்பியிருக்கும் சொல்: மினுக்கி. கா.மு. சிதம்பரத்தின் பரிந்துரை: பொன்பிதிர் (தேவாரத்திலிருந்து). இது தவிர, கோ. மன்றவாணன் வழக்கம்போல பெரும் பட்டியலை அனுப்பித் திக்குமுக்காடச் செய்துவிட்டார்.

அவருடைய பட்டியலிலிருந்து: குருநாத்தகடு, மின்னி, ஒளிரி, மிளிரி, ஒளிரிழை, மிளிரிழை, மின்மினுத் தகடு, மினுமினு, மின்மினு, ஒளிசிமிட்டி. ஜிகினாப் பொடிக்கு அவருடைய பரிந்துரைகள்: ஒளிர்பொடி, மிளிர்பொடி, ஒளிர்தூள், மிளிர்தூள், மின்மினுப்பூச்சு.

வாசகர்களின் பரிந்துரைகளில் மினுக்கி என்ற சொல் மிகவும் அழகானது. இதுதவிர, ஜிகினாவுக்கு ‘காக்கைப்பொன்' என்ற அழகான சொல்லும் தமிழில் இருக்கிறது.

இந்த வாரத்துக்கான சொல் தேடல்: ‘விசில்' வாங்கித்தரச் சொல்லி உங்கள் குழந்தைகள் அடம்பிடிக்குமல்லவா? விசில் என்ற பொருளுக்கு கிராமப்புறச் சிறுவர்கள் அழகான சொல் ஒன்று வைத்திருக்கிறார்கள். உங்கள் நினைவுக்கு வருகிறதா?

- ஆசை, தொடர்புக்கு: asaithambi.d@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x