Published : 30 Apr 2018 09:22 AM
Last Updated : 30 Apr 2018 09:22 AM
‘ஜ
னநாயகம் என்பது எல்லா இடங்களிலும் வளரக்கூடிய ஒரு தாவரமல்ல. அது முதலில் முளைவிட்ட இடங்களில்கூடப் பின்னர் அழிந்துபோனது. எனவே, அதை வளர்த்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்’ என்றார் அம்பேத்கர். சட்டங்களைச் சீராய்வுசெய்யும் அதிகாரத்தை அளித்ததன் மூலம் ஜனநாயகத்தை வளர்த்தெடுப்பதில் முதன்மையான பொறுப்பு நீதித் துறைக்கே உள்ளது என அவர் உணர்த்தினார். அந்தப் பொறுப்பை நீதித் துறை நிறைவேற்றுகிறதா என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது.
2017 பிப்ரவரி 18-ல் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், பழனிசாமி தலைமையிலான அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற வழக்கைத் தள்ளுபடிசெய்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களிக்குமாறு கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டதா, குற்றம்சாட்டப்பட்டிருப் பவர்கள் கொறடா உத்தரவை மீறி வாக்களித்திருக்கிறார்களா, பத்தாவது அட்டவணையின் பத்தி 2(1) (பி)-ன் அடிப்படையில் சபாநாயகர் தகுதி நீக்க நடவடிக்கையை எடுக்காதபோது, அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 226 மற்றும் 227-ன்கீழ் உயர் நீதிமன்றமே தகுதிநீக்க நடவடிக்கையை எடுக்க முடியுமா என்ற கேள்விகளை ஆராய்ந்து தீர்ப்பளிப்பதற்காகத்தான் இந்த வழக்கு தொடுக்கப்பட்டது.
கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பதைத் தேர்தல் ஆணையத்தின் முன் 2017 மார்ச் 14-ல் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் பன்னீர்செல்வம் தரப்பே ஒப்புக்கொண்டிருக்கிறது. அந்த உத்தரவுக்கு மாறாக அவர்கள் எதிர்த்து வாக்களித்ததும் சட்டப் பேரவை ஆவணங்களில் உள்ளது. அதை அவர்கள் மறுக்கவும் இல்லை. அப்படி எதிர்த்து வாக்களித்ததைப் பற்றி 15 நாட்களுக்குள் தங்களைக் கட்சி மேலிடம் விசாரித்ததாகவோ, மன்னித்துவிட்டதாகவோ பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து எவ்வித ஆவணமும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. “பழனிசாமியை முதலமைச்சராகத் தேர்ந் தெடுக்கும் தீர்மானத்தில் நாங்கள் கையெழுத்திடவில்லை, அவர்கள் பிறப்பித்த கொறடா உத்தரவுக்கான கடிதமும் எங்களுக்கு வரவில்லை” என்பவைதான் அவர்கள் முன்வைத்த வாதம்.
ஒருவர், எந்தக் கட்சியால் வேட்பாளராக நிறுத்தப்பட்டுத் தேர்ந்தெடுக்கப்படுகிறாரோ அவர் அந்தக் கட்சி யின் உறுப்பினர் ஆவார். உறுப்பினர் என்ற தகுதியை, பத்தாவது அட்டவணை அப்படித்தான் நிர்ணயித்துள்ளதே தவிர, முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்கும் தீர்மானத்தில் கையெழுத்திடுவதை வைத்து அல்ல. நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானம் சட்டப் பேரவையில் ஆளும் கட்சியால் முன்வைக்கப்பட்டாலே அதற்கு அக்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதுதான் பொருள். ‘கொறடா உத்தரவு தனது கையில் கிடைக்கவில்லை. எனவே, அது என்னைக் கட்டுப்படுத்தாது’ என எந்த உறுப்பினரும் வாதிட முடியாது. ‘மஹாசந்த்ர பிரசாத் சிங் எதிர் பிஹார் சட்ட மேலவைத் தலைவர்’ வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், ‘ஒரு உறுப்பினர் நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிராக வாக்களிப்பது கட்சி விரோத நடவடிக்கை மட்டுமல்ல, வாக்காளர்கள் அவர்கள்மீது வைத்த நம்பிக்கைக் கும் எதிரானது’ எனக் கூறியுள்ளது. இந்த அடிப்படையில் பார்த்தால், பன்னீர்செல்வம் தரப்பினர்மீது பத்தாவது அட்டவணையின்கீழ் தகுதிநீக்க நடவடிக்கை எடுப்பதற்குச் சட்டத்தில் எந்தத் தடையுமில்லை.
சபாநாயகர் அந்தக் கடமையைச் செய்யத் தவறும்போது, பத்தாவது அட்டவணையின் பத்தி 6-ல் அளிக்கப்பட்டுள்ள அதிகாரம் அவருக்குக் கவசமாக இருக்காது என ‘ராஜேந்திர சிங் ராணா எதிர் ஸ்வாமி பிரசாத் மௌரியா மற்றும் பிறர்’ என்ற வழக்கிலும் (2007); ‘சபாநாயகரின் முடிவு இறுதியானது என்பது உண்மைதான். ஆனால், உரிய காரணங்கள் இருந்தால் அதில் நீதிமன்றம் தலையிட முடியும்’ என்று ‘ஜி.எஸ்.இக்பால் எதிர் கே.எம்.காதர் மற்றும் பிறர்’ என்ற வழக்கிலும் (2009) உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது. சட்டங்களும் தீர்ப்புகளும் இப்படிக் கூறினாலும் அவற்றையெல்லாம் புறக்கணித்துவிட்டு, இந்த வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கிறது உயர் நீதிமன்றம்.
11 எம்.எல்.ஏ.க்களும் எதிர்த்து வாக்களித்தனர் என்பதை ஒப்புக்கொண்ட நீதிமன்றம், அவர்களுக்குக் கொறடா உத்தரவுக்கான கடிதம் அளிக்கப்பட்டதா இல்லையா என்பதைப் பிரமாணப் பத்திரங்களின் மூலமாக மட்டும் முடிவுசெய்ய முடியாது என்று கூறியிருப்பதையும்,15 நாட்களுக்குள் மன்னிக்கலாம் என பத்தாவது அட்டவணையில் குறிப்பிட்டிருப்பது சட்டப்படிக் கட்டாயமா அல்லது அது வெறும் வழிகாட்டல்தானா என்று வினோதமான சந்தேகம் ஒன்றை எழுப்பியிருப்பதையும் பார்த்தால், வழக்கறிஞர்கள் முன்வைத்த வாதங்களையெல்லாம் நீதிமன்றம் கேட்டதா என்ற சந்தேகம்தான் நமக்கு எழுகிறது.
சபாநாயகருக்கு ஆணை பிறப்பிக்க வேண்டும் என்பது அல்ல, மாறாக நீதிமன்றமே தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்பதுதான் கோரிக்கை. ஆனால், ‘01.12.2017 அன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின்படி சபாநாயகருக்கு உத்தரவிடத் தடை உள்ளது’ என நீதிமன்றம் கைவிரித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது.
சபாநாயகரின் அதிகாரத்தில் தலையிடக் கூடாது என்ற தடை இருக்கும்போது, இதே நீதிமன்றம் புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கில் 22.03.2018 அன்று எப்படி சபாநாயகருக்கு ஆணை பிறப்பிக்கும் தீர்ப்பை வழங்கியது என்ற கேள்வி எழுகிறது. அப்போது அது நீதிமன்றத்தின் நினைவுக்கு வரவில்லையா அல்லது வேண்டுமென்றே மறந்துவிட்டதா?
18 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கை இந்த வழக்கோடு ஒப்பிட்டுள்ள நீதிமன்றம், ‘அவர்களைத் தகுதிநீக்கம் செய்ய வேண்டும் என்ற கடிதம், கொறடா வால் அளிக்கப்பட்டு அதிமுகவால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் முதலமைச்சரின் ஆதரவைப் பெற்றுள்ளது. இந்த வழக்கிலோ தகுதிநீக்கப் புகார் யாரோ ஒரு சில எம்.எல்.ஏ.க்களால் அளிக்கப்பட்டிருக்கிறது. அதைக் கட்சியின் கொறடாவோ பெரும்பான்மை உறுப்பினர்களோ ஆதரிக்கவில்லை. ஒரு உறுப்பினரின் நடவடிக்கைக்குக் கட்சியின் ஆதரவு இருக்கிறதா இல்லையா என்பதைத் தீர்மானிப்பதில் கொறடா அல்லது முதலமைச்சரின் பங்கு முக்கியமானது’ எனக் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில், 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இந்த நீதிமன்றம் வழங்க விருக்கும் தீர்ப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தகுதிநீக்கத்துக்கான காரணங்கள் இருந்தபோதிலும் தான் இதில் தலையிட முடியாது என நீதிமன்றம் கூறி யிருப்பதைப் பார்க்கும்போது, உச்ச நீதிமன்றத்தின் பொன்விழாவின்போது அன்றைய குடியரசுத் தலைவர் கே.ஆர்.நாராயணன் பேசியதுதான் நினைவுக்குவரு கிறது: “நீதியின் வழிமுறைகள் புதிர் நிரம்பியவையாக உள்ளன. அதனால்தான் ‘நீதிமன்றம் என்பது ஒரு தேவாலயம் அல்ல, அது ஒரு சூதாட்ட விடுதி. ஆட்டத்தின் போக்குதான் அங்கு முடிவைத் தீர்மானிக்கிறது’ என்று சொல்கிறார்கள் போலும்.”
- ரவிக்குமார், எழுத்தாளர், வழக்கறிஞர்.
தொடர்புக்கு: adheedhan@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT