Published : 04 Apr 2018 09:56 AM
Last Updated : 04 Apr 2018 09:56 AM
உ
லகில் சுற்றுச்சூழல் நெருக்கடிகள் சமீபகாலமாக பெருமளவில் அதிகரித்திருக்கின்றன. இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த போராட்டங்களும் கணிசமாக அதிகரித்திருக்கின்றன. சுற்றுச்சூழல், இயற்கை ஆர்வலர்களைத் தாண்டி மக்களும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு எதிராக சமீபத்திய ஆண்டுகளில் போராடத் தொடங்கிவிட்டார்கள். அவர்களுடைய வாழ்க்கை நேரடியாக பாதிக்கப்படவும் வாழ்வாதாரம் பறிக்கப்படவும் ஆரம்பிக்கப்பட்டுவிட்டதன் வெளிப்பாடு இது.
நிலம், நீர், காற்று, வானம் ஆகியவை எந்த ஒரு மனிதரின் வாழ்க்கைக்கும் அடிப்படையாக இருப்பவை. சுற்றுச்சூழல் சீர்கேட்டால் இந்த நான்கும் ஏதோ ஒரு வகையில் சீர்கெடும்போது, மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. தங்கள் வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்ள மக்கள் களத்தில் இறங்க ஆரம்பிக்கிறார்கள்.
எஞ்சியதைக் காப்பாற்ற...
நிலம், நீர், காற்று உள்ளிட்ட அனைத்துமே செலவில்லாத இயற்கைச் சொத்தாக, மக்களின் பொதுச் சொத்தாகத் திகழ்கின்றன. ஏற்கெனவே பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகளால் அவற்றில் பெருமளவு சுரண்டப்பட்டுவிட்டது. அதைத் தடுப்பதற்கோ பாதுகாப்பதற்கோ அரசு உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. எஞ்சியுள்ள மிகக் குறைந்த இயற்கைச் சொத்தும் பறிபோகக்கூடிய நிலையில் மக்கள் விழித்துக்கொள்கிறார்கள். பழங்குடிகளைத் தாண்டி சமீபகாலத்தில் கிராம, நகர மக்கள் சுற்றுச்சூழல் போராட்டங்களில் களம் காணுவதற்கான அடிப்படை இதுவே.
இந்தப் போராட்டங்கள் நீடிக்கின்றனவா, எப்படி மாறுகின்றன என்பது வாழ்வாதாரம் மீது மக்களுக்கு உள்ள தீவிரப் பிடிப்பையும் அரசு அடக்குமுறையையும் சார்ந்ததாக இருக்கிறது. ஒரு பிரச்சினை சார்ந்த புரிதலும் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கக் கூடாது என்ற தீர்மான உணர்வும் அறிவியல் அடிப்படையிலும் தர்க்கபூர்வமாகவும் அமையும்போதே மக்களின் பிடிப்பு நீடிக்கும். போராட்டங்களில் பங்கேற்கும் பல்வேறு தரப்பினரின் தாக்குப்பிடிக்கும் தன்மை இந்த அஸ்திவாரத்தின் மீது உறுதியாக எழும். தங்கள் எல்லையைத் தாண்டியும் போராட்டத்துக்கான ஆதரவை மக்கள் விரிப்பதற்கும் இது ஆதாரமாகத் திகழும்.
சுற்றுச்சூழல் பிரச்சினை மட்டுமல்ல, சமூக, அரசியல், பொருளாதாரப் பிரச்சினைகள் எதுவானாலும் அறிவியல்பூர்வ அணுகுமுறையுடன் தர்க்கப்பூர்வமாக முன்வைக்கப்படும் வாதமும், அது சார்ந்து மக்களை ஒன்றுதிரட்டுவதும் நாளடைவில் உறுதிப்படும்-சாத்தியப்படும்.
உணர்ச்சிவசப்பட்ட வாதங்கள்
தமிழகத்தில் சமீபகாலமாக நடைபெற்று வரும் சில சுற்றுச்சூழல் போராட்டங்கள் சார்ந்த வாதப் பிரதிவாதங்களும் பார்வைகளும், அறிவியல்பூர்வமாகவும் தர்க்கபூர்வமாகவும் உள்ளனவா என்கிற கேள்வி எழுகிறது. சுற்றுச்சூழல் பிரச்சினைகள் சார்ந்து அரசியல்வாதிகள், ஆர்வலர்களின் பேச்சும் தர்க்கமும் எப்படி அமைந்திருக்கின்றன என்பது இதன் துணைக் கேள்வி.
இவ்வளவு காலம் நம்மை பாதித்து வந்த பொதுப் பிரச்சினைகள், வாழ்வாதாரத்துக்கே பாதிப்பை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைப் பற்றிய பேச்சுகள், விவாதங்கள், கருத்துப் பகிர்வுகள் நிகழ்கின்றன. ஆனால், இந்த விஷயங்கள் பேசப்பட ஆரம்பித்திருப்பதே வெற்றியாகக் கருதப்படும் ஆபத்தை நோக்கிச் செல்கிறோமோ என்கிற சந்தேகம் எழுகிறது. உணர்ச்சிவசப்பட்ட பேச்சும் அறிவியல்பூர்வமற்ற வாதங்களும் சில போராட்டங்களை வழிநடத்துகின்றன. தொடர்ச்சியாக தொலைக்காட்சி 'விவாத நிபுணர்கள்', சமூகஊடகப் 'போராளி'கள், சில அரசியல்வாதிகள் சுற்றுச்சூழல் அறிஞர்களாகவே உருமாறிவருகிறார்கள்.
மேம்போக்கான புரிதல், சமூக ஊடகத் தகவல்கள், கூகுள் போன்ற தேடுபொறிகளின் வழிகாட்டுதல் போன்றவற்றை வைத்துக்கொண்டு உணர்ச்சிபூர்மாகப் பேசுவது போராட்டம் சார்ந்து தற்காலிக ஆள்சேர்ப்புக்கு உதவலாம். ஆனால், ஒரு பிரச்சினையின் தீர்வை நோக்கிய பயணத்தில் பாதையைத் தவறவிடுவதற்கான சாத்தியம் இதில் அதிகம்.
அறிவியல் பார்வை அவசியம்
யார் வேண்டுமானாலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குக் குரல் கொடுக்கலாம். அதேநேரம் அவர்களது குரல் கல்விப்புலம் சார்ந்தோ சாராமலோ புலமையும் நிபுணத்துவமும் பெற்றவர்கள் முன்வைக்கும் வாதங்களின் அடிப்படையில் எழுந்ததா? காரணம், பல துறைகளைப் போலவே 'ஆர்வலர்கள்' என்ற பெயரில் நாளும் புதிய 'நிபுணர்'களும் சமூக ஊடகப் 'போராளி'களும் இத்துறையில் முளைத்துக்கொண்டிருப்பது பிரச்சினையைத் திசைதிருப்புவதற்குப் போதுமான சாத்தியங்களைக் கொண்டிருக்கிறது. இன்னும் சில இடங்களில் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் கவனப்படுத்துபவர்கள் சார்ந்து அவதூறுப் பிரச்சாரங்களும் ஒரு போக்காக மாறிவருகின்றன.
'சிட்டுக்குருவி அழிந்துவருகிறது' என்கிற போலிக் கூப்பாட்டில் ஆரம்பித்து, 'காடுகள் அழிவது பிரச்சினையில்லை, மரம் நட்டால் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்', 'ஆற்றுநீர் வீணாகக் கடலில் கலக்கிறது. அணைகட்டி அதை பயன்படுத்தலாமே' என்பது போன்ற அரைகுறை வாதங்களுக்கும் சில சுற்றுச்சூழல் போராட்டங்கள் சார்ந்து முன்வைக்கப்படும் வாதங்களுக்கும் இடையே அடிப்படை வேறுபாடு தேவைப்படுகிறது.
பூச்சிக்கொல்லிகளால் சுற்றுச்சூழல் சீர்கெடுவது பற்றி முதன்முதலில் உலகுக்கு அறிவித்த அமெரிக்க அறிவியலாளர் ரேச்சல் கார்சன் தன் வாதங்களை முன்வைத்தபோது, தன் நாடெங்கும் தூற்றப்பட்டார். பூச்சிக்கொல்லித் தொழிற்சாலைகளும் நவீன அறிவியலின் ஆராதகர்களும் ‘கம்யூனிஸ்ட்’, ‘போலியானவர்’ என்று அவரைக் குற்றஞ்சாட்டினார்கள். ஆனால், அவருடைய ஆய்வுகள் அறிவியல்பூர்வமாக இருந்ததால் அவரது வாதம் சரியென்று நிரூபிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் சீர்கேடுகளைக் கண்டறிந்து தடுக்க அமெரிக்காவில் அரசு அமைப்பு உருவாக்கப்பட்டது, டி.டி.டி. பூச்சிக்கொல்லியும் பின்னர் தடை செய்யப்பட்டது.
இது நமக்குச் சிறந்ததொரு வரலாற்று ஆதாரமாக இருக்கிறது. இதுபோல சுற்றுச்சூழல் சீர்கேடுகளுக்கான தீர்வு அறிவியல்பூர்வமான வாதங்களில் இருந்தே சூல் கொள்கிறது. சுற்றுச்சூழல் தொடர்பான உரையாடல்களில் நாம் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது!
- ஆதி வள்ளியப்பன்,
தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT