Published : 12 Apr 2024 06:42 AM
Last Updated : 12 Apr 2024 06:42 AM
காந்தி அடிகளே கண்கண்ட தெய்வம்! காண்பதெல்லாம் வெறும் கல், செம்பு தெய்வம்!!! -இந்திய விடுதலை உணர்வைத் தூண்டும் இப்பாடலை இயற்றி, தெரு பொதுக்கூட்டத்தில் பாடியதால் அண்ணல்தங்கோவுக்கு ஆறுமாத கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது.
12-04-1904ல் முருகப்பன்-மாணிக்கம்மாள் இணையருக்கு முதல் மகனாகப் பிறந்த தங்கோவுக்கு முதலில் பெற்றோரிட்ட பெயர் சுவாமிநாதன். பிற்காலத்தில் தமிழுணர்வுமிக்க இவரே தமது வடமொழிப் பெயரை, தூய தனித்தமிழில் அண்ணல்தங்கோ என மாற்றிக்கொண்டது மட்டுமின்றி, தாம் சந்திக்கும் அனைவரின் வடமொழிப் பெயர்களையும் தூய தமிழ்ப்பெயராக மாற்றியமைத்த வரலாற்றுப் பெருமை வாய்க்கப்பெற்றவர்.
காமராசருக்கு-காரழகனார், கருணாநிதிக்கு-அருள்செல்வம், கிருபானந்தவாரியாருக்கு- அருளின்பக்கடலார், சி.பி.சின்ராஜ்வுக்கு--சி.பி.சிற்றரசு, இளமுருகு தனபாக்கியத்துக்கு-இளமுருகு பொற்செல்வி, காந்திமதிக்கு-மணியம்மை, கி.ஆ.பெ.விசுவநாதனுக்கு-- கி.ஆ.பெ.நெடுந்துறைகோ, சி.பா.ஆதித்தனாருக்கு - சி.பா.பகலவனார் மே.வீ.வேணுகோபாலனுக்கு - மே.வீ.குழற்கோமான், நாவலர்.சா.சோமசுந்தரபாரதியாருக்கு - சா.நிலவழகனார், டார்பிடோ ஜனார்த்தனம் - மன்பதைக்கன்பன், சண்டே அப்சர்வர் பி.பாலசுப்பிரமணியம் - ஞாயிறு கண்காணிப்பாளர் பி.இளந்தூயமணி, தருமாம்பாள் - அறச்செல்வியார் என பட்டியல் நீளும்போது, நினைவுகள் என்ற தன் வரலாற்று நூலின், பக்க எண்:10ல் அதன் ஆசிரியர் அரங்கண்ணல் குறிப்பிடும்போது, அரங்கசாமி எனும் பெயரை பெயர்மாற்றப்பிதா அண்ணல்தங்கோவின் அனுமதியோடு ‘அரங்கண்ணல் மாற்றிக்கொண்டேன் எனக் குறிப்பிடுவதை ஆய்வாளர்கள் பதிவு செய்யவேண்டும்.
இளம்வயதிலேயே தந்தையை இழந்து, கல்வி கற்கும் வாய்ப்பை அறவே இழந்த இவர், தன்முயற்சியினால் தமிழ், ஆங்கிலம்,தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, சமஸ்கிருத மொழிகளிலும் கற்றுத் தேர்ச்சியடைந்தார். வடமொழி கலப்பின்றி, தூய தனித்தமிழில் பேசும் வழக்கமுடையவராதலால், பெரும்புலவர் மே.வி.வேணுகோபாற்பிள்ளை, திருக்குறள்பீடம் அழகரடிகள் இருவரும் இணைந்து கையொப்பமிட்டு தூய தமிழ்க் காவலர் கு.மு.அண்ணல்தங்கோஅளித்த சான்றிதழை நீதியரசர் மகாராசன் அவர்களின் கரங்களால் பெற்ற பெருமையுடையவர்.
இந்தியத் துணைக் கண்டம் தொடர்ந்து அந்நியர் ஆளுமையில் அடிமைப்பட்டிருப்பதை எதிர்த்து, தம் 14-ம் அகவையிலேயே காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1923-இல், மதுரை, வக்கீல் புதுத்தெருவில் கள்ளுகடை எதிர்ப்பு மறியலை, வழக்கறிஞர் வைத்தியநாதய்யர். சிதம்பரபாரதியுடன் இவர் தலைமை தாங்கி நடத்தி, 3 மாதங்களென இருமுறை 6 மாத கடுங்காவல் சிறை தண்டனையடைந்தார்.
நாகப்பூர் சிவில் லைனில் தேசியக் கொடியை ஏற்ற வெள்ளைய அரசு விதித்திருந்த தடையைமீறி அண்ணல்தங்கோ, தேசியக்கொடியை ஏந்தி, வெள்ளையனே வெளியேறு! என முழக்கமிட்டு, சிவில் லைனில் தடையுத்தரவை மீறி சென்றதால், 7 மாதங்கள் கடுங்காவல் தண்டனையை நாக்பூர், பிடல் சிறைகளில் மாறிமாறி அனுபவித்தார்.
விடுதலையடைந்தவுடன், வல்லபாய் பட்டேல், ஜமுனாலால் பஜாஜ் இருவரும் நேரடியாக இணைந்தளித்த விருந்தோம்பலை ஏற்று, தமிழ்நாடு திரும்பினார். தமிழுணர்வு ஆழங்காற்பெற்ற இவர், ஈரோடு சென்று பெரியாரின் குடி அரசு இதழில் சிறிது காலம் துணையாசிரியராகப் பணிபுரிந்தார்.
1927-ல், தமது திருமணத்தை, தானே தலைமை தாங்கி, வடமொழி தவிர்த்து, தூய தமிழில் திருக்குறளை முன்மொழிந்து, சிவமணி அம்மாளை வாழ்விணையராக ஏற்றதுதான், தமிழ்நாட்டு வரலாற்றின் முதல் வடமொழி மறுப்புத் தமிழ்த் திருமணமாகும்.
1927-ல், கொடுங்கோலன் நீலன்சிலை உடைப்புப் போராட்டத்தை தலைமையேற்று, சிலையை சுத்தியலால் உடைக்க முயன்றபோது கைதுசெய்யப்பட்டு, நீதியரசர் பம்மல் சம்பந்தனாரால் ஓராண்டு கடுங்காவல் சிறைதண்டனை விதிக்கப்பட்டு கண்ணனூர் சிறையில் அடைக்கப்பட்டார். அந்த சிறையில் அதே பம்மல் சம்பந்தனாரெழுதிய லீலாவதி சுலோக்சனா எனும் நாடகத்தை, அண்ணல்தங்கோ கதை நாயகனாக நடித்து சிறைவாழ்வு கைதிகள் நலநிதியை திரட்டித்தந்தார்.
சிறைத்துறை அதிகாரிகள் விதித்திருந்த அந்நிய ஆதிக்கத்திற்கெதிரான முழக்கத்தடையை மீறி, இவர் நாடகத்திலெழுப்பிய முழக்கத்தைக்கேட்டு சிறை அதிகாரிகள் மிரண்டே போயினர். 1934-ல், பிப்ரவரி 18-ம் தேதி காந்தியாரை குடியேற்றத்திற்கு அழைத்து வந்தார் அண்ணல் தங்கோ. அண்ணல் தங்கோ திரட்டி தந்த தீண்டாமை ஒழிப்பு நல நிதியினை மட்டும் பெற்றுக்கொண்டு இராஜாஜி, டி.எஸ்.எஸ்.இராஜன் இருவருடன் இணைந்து வந்த காந்தியார் அண்ணல்தங்கோ ஏற்பாடு செய்திருந்த அப்பெருங்கூட்டத்தில் பேசாமல், இசைவு தெரிவிக்காத ஆம்பூர் கூட்டத்தில் பேசிச் சென்றார்.
மனமுடைந்த அண்ணல்தங்கோ, காங்கிரசில் தான் செய்த எண்ணற்ற ஈகங்களைத் துறந்து, அன்றே காங்கிரசிலிருந்து வெளியேறினார். அடுத்ததாக உலகத் தமிழ் மக்கள் தற்காப்புப் பேரவை எனும் அமைப்பை உருவாக்கி, தமிழ்நாட்டின் அனைத்து முன்னணி தலைவர்கள், தமிழ்ப் பேரறிஞர்கள் பெருமக்கள், கி.ஆ.பெ.விசுவநாதம், அ.கி.பரந்தாமன், வெள்ளைவாரணனார், பாரதிதாசன், திருக்குறள் முனுசாமி, தேவநேயப்பாவாணர், ஔவை துரைசாமி, சிதம்பரநாதன், ரம்போலா மாசுக்கரனேசு, மே.வி.வேணுகோபால், ஆதித்தனார், திருக்குறள்பீடம் அழகரடிகள், மு.வரதராசன், டாக்டர் தருமாம்பாள், மயிலை சிவமுத்து, க.அப்பா துரை என்ற தமிழ்ப்பெருங்கடலையே வேலூருக்கு அழைத்து வந்து தமிழர் திருநாளான தைத்திரு நாளினை, தமிழர் பொங்கல் திருநாளினை, திருவள்ளுவர் பிறந்தநாளினை மிகச்சிறப்பாகக் கொண்டாடி மக்கள் தமிழுணர்வுபெறக் காரணமானவர்.
1972-ல் இந்திய விடுதலை அடைந்த வெள்ளிவிழா நிகழ்வில் டெல்லி சென்று கலந்துகொண்ட அண்ணல் தங்கோ, அன்றைய தலைமை அமைச்சர் இந்திரா காந்தியிடம் நேரடியாக தாமிரப்பதக்க விருதினைப் பெற்றார். பராசக்தி, பெற்றமனம், பசியின் கொடுமை, கோமதியின் காவலன் போன்ற தமிழ்த் திரைப்படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.
அண்ணல் முத்தம்மாள் பாடல்கள், மும்மூர்த்திகள் உண்மை தெரியுமா?, சிறையில் நான் கண்ட கனவு (அல்லது) தமிழ்மகள் தந்த செய்தி, அறிவுப்பா, என் உள்ளக்கிழவி சொல்லிய சொல்,நூற்றுக்கு நூறு காங்கிரஸ் வெற்றிப்படைப்பாட்டு ஆகிய அண்ணல் தங்கோ எழுதிய நூல்களை, 2008-ல் அன்றைய திமுக அரசு நாட்டுடமை செய்து பெருமைப்படுத்தியது.
1974 சனவரி 4-ஆம் நாள் வேலூர் சி.எம்.சி.மருத்துவமனையில் குடற்புண் அழற்சியினால் தம் மூச்சினை நிறுத்திக்கொண்ட அண்ணல்தங்கோவிற்கு, அவர் ஏற்றிவைத்தத் தமிழ்ச்சுடரை தமிழுலகம் முழுவதும் சுடர்விட பாடுபடுவதே இத்தலைமுறையினரும், அடுத்தத் தலைமுறையினரும் செய்யப்போகும் நன்றியாகும்.
இன்று 12-04-2024 அண்ணல் தங்கோவின் 121-ஆவது பிறந்த நாள்.
- கட்டுரையாளர் கோ.விசுவநாதன், நிறுவுநர் - வேந்தர், விஐடி பல்கலைக்கழகம். நிறுவுநர்- தலைவர், தமிழியக்கம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT