Published : 18 Apr 2018 08:44 AM
Last Updated : 18 Apr 2018 08:44 AM
த
மிழகத்தில் கல்வி கற்றோர் 80.90% என்கிறது 2011-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு. என்றாலும் தமிழகத்தில் உள்ள பழங்குடியினத்தவர்களின் கல்வி அறிவு 54.34% மட்டுமே. தமிழகத்தில் பழங்குடியினத்தவரின் எண்ணிக்கை 7.95 லட்சம். அவர்களில் கல்வி கற்றோர் பாதிப்பேர்தான். ஆனால், வாய்ப்பு கிடைத்தால் பழங்குடியின குழந்தைகளும் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் அளப்பரிய சாதனைகள் படைப்பார்கள் என்பதற்கு உதாரணம் கொங்காடை கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் சின்னக்கண்ணன்.
ஈரோடு மாவட்டத்தின் பர்கூர் மலைக்கிராமங்களில் ஒன்று கொங்காடை. அந்தியூரிலிருந்து கொங்காடைக்குச் செல்ல 60 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவில் மலைப்பகுதிகள் மூன்றில் ஒரு பகுதி. இம்மலைகளில் கணிசமான பழங்குடியினத்தவர்கள் வசித்துவருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்புதான் அந்தப் பகுதிக்கு சாலை வசதி வந்துள்ளது. செங்குத்தான ஏற்ற இறக்கங்களுடன் அமைந்த சாலையில், ‘பிக்-அப்’ வாகனம் எனப்படும் டெம்போ வாகனப் போக்குவரத்து மட்டும்தான்.
குழந்தைத் தொழிலாளர்கள்
வசிக்கும் இடத்தில் ஒரு கிலோ மீட்டருக்குள் ஆரம்பப் பள்ளி அமைக்க வேண்டும், அல்லது அருகில் உள்ள பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வாகன வசதி அளிக்க வேண்டும் என்கிறது இலவச கல்வி உரிமைச் சட்டம். டெல்லி நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட இச்சட்டம் இன்னும் பர்கூர் மலையில் ஏற முடியவில்லை. விளைவு, பள்ளிக்குச் செல்ல வேண்டிய குழந்தைகள் வேலைக்குச் செல்லும் அவலநிலை.
அப்பகுதியில் பள்ளிக்குச் செல்லாத, சென்று இடைநின்ற, குழந்தைத் தொழிலாளர்களுக்கு கல்வி அளிக்கும் ஒரு முயற்சியை அர்ப்பணிப்போடு செய்துவருகிறார் சுடர் தொண்டு நிறுவன இயக்குநர் நடராஜன். அவ்விடத்தில் பள்ளி ஏற்படுத்துவதற்கே எத்தனைப் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது என்பதை அவர் விளக்கினார். ஆசிரியர்கள் இப்பகுதிக்கு வந்து பாடம் சொல்லித்தருவது எளிதாக இல்லை. வெகு சொற்ப ஊதியத்தில், தனிநபர் ஈடுபாடும், அர்ப்பணிப்பும் இருந்தாலும் மட்டுமே இங்கே நீடித்துச் செயல்பட முடியும். பணிக்கு வந்த 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களில் வெகு சிலர் மட்டுமே இப்பணியைத் தொடர்கின்றனர்.
மத்திய தொழிலாளர்கள் நல அமைச்சகத்தின் திட்டத்தின்கீழ் 10 தேசிய குழந்தை தொழிலாளர் பள்ளிகள் பர்கூர் மலையில் இயங்கிவருகின்றன. இப்பள்ளிகளில் 250 பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்கள் பயின்றுவருகின்றனர். கொங்காடை பள்ளிக்குச் சென்று மாணவர்களையும், ஆசிரியர்களையும் சந்தித்தோம். பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஜே.கிருஷ்ணமூர்த்தி, வி.பி.குணசேகரன், மூர்த்தி, அறிவியல் இயக்கத்தைச் சேர்ந்த என்.மணி ஆகியோரும் அங்கே வந்திருந்தனர். ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்கள்.
“இப்பகுதி மக்கள் ஊராளி என்ற மொழியில் பேசுகின்றனர். குழந்தைகளோடு நெருங்க வேண்டுமானால் நாமும் ஊராளி மொழியைப் பேசினால்தான் முடியும். தமிழ் அவர்களுக்கு அந்நியமாக இருக்கிறது. வெளியிலிருந்து இங்கே வந்த பின்னர், மெல்ல மெல்ல ஊர் மக்களோடு நெருங்கி, அவர்களின் மொழியையும் கற்றுக்கொண்டோம். அதன் பின்னர்தான் கற்பித்தலைத் தொடங்கினோம். தமிழில் பேசி பின் ஊராளி மொழியில் விளக்குவோம்."
இளம் விஞ்ஞானி
கொங்காடை தேசிய குழந்தைக் தொழிலாளர் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயிலும் மாணவன் சின்னக்கண்ணணைச் சந்தித்தோம். இம்மாணவன், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்திய மாநில குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் ஆசிரியர் உதவியோடு கலந்துகொண்டு ஒரு ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தான். அவனது கட்டுரை முதன்மையானதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற 25-வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டிலும் அவன் கலந்துகொண்டான். அம்மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகளில் சின்னக்கண்ணன் சமர்ப்பித்துள்ள கட்டுரை சிறந்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அம்மாணவனுக்கு இளம் விஞ்ஞானி விருது வழங்கப்பட்டது.
‘மலைப்பகுதிகளில் போக்குவரத்து வசதியின்மையால் ஏற்படும் ஆற்றல் இழப்பு’ என்பதுதான் சின்னக்கண்ணனின் ஆய்வுத் தலைப்பு. வாழ்க்கையின் அனுபவத்தையே அடிப்படையாகக் கொண்ட தலைப்பு. “எங்கள் பகுதியிலிருந்து நகரம் அல்லது சந்தைக்குச் செல்ல ‘பிக் –அப்’ வாகனம் என்ற போக்குவரத்தே உள்ளது. மாறாக, பேருந்துப் போக்குவரத்து இருக்குமானால் பல லட்சம் வரையில் எங்கள் குடும்பங்களால் சேமிக்க முடியும்" என்று நம்பிக்கையுடன் சொல்கிறான் அந்த இளம் அறிவியல் ஆய்வாளன்.
சின்னக்கண்ணன் வீட்டுக்கு நேரில் சென்றோம். உயர்ந்த குன்றில் வாட்டமான பகுதியில் அமைந்திருந்தது அந்த வீடு. விவசாயமும், சிறுகாட்டுப் பொருள் சேகரமுமே அவர்களின் வாழ்வாதாரம். மதிய வெயிலில் சென்றபோது வேகவைத்த சுவையான மொச்சைக் கொட்டைச் சுண்டலுடன் வரவேற்றார்கள். வீட்டுக்கு ஒரு முறை நடந்துசெல்வதே உடன் வந்த குழுவினர் பலருக்கும் அயர்வூட்டுவதாக அமைந்தது. சுடர் மையத்தின் ஆசிரியர்கள் இப்படி பல வீடுகளுக்குச் சென்றுதான் குழந்தைகளைக் கூட்டிவருகின்றனர்.
ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகள்
தற்போது பர்கூர் மலையில் 6 ஆரம்பப் பள்ளிகள், 22 நடுநிலைப் பள்ளிகள், 2 உயர்நிலைப் பள்ளிகள், 1 மேல்நிலைப் பள்ளி உள்ளன. போதுமான ஆசிரியர்கள் இல்லை. இப்பள்ளிகளுக்குக் குழந்தைகளைக் கொண்டுசேர்க்க வாகன ஏற்பாடுகள் இல்லை. கூலி வேலைக்குச் செல்லாமல் தடுத்து குழந்தைகளைப் பள்ளிக்குக் கொண்டுவரும் ஏற்பாடும் இல்லை. இத்தகைய குறைபாடுகளைப் போக்கிட தொடங்கப்பட்ட பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை.
கொங்காடைப் பகுதியில் முக்கியமான நபர் ஒருவரைச் சந்தித்தோம். அவர் பெரிய கல்வியாளர் அல்ல. ஆனால் கல்வி மையத் தேவையின் முக்கியத்தை உணர்ந்து தனக்குச் சொந்தமான நிலத்தில் ஒரு பகுதியைக் கொடையாக அளித்த முதியவர். தான் வாழும் சமூகம் முன்னேற தன்னால் இயன்றதைச் செய்ய வேண்டும் என்ற அவரின் உணர்வு, வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.
அனைத்துக் குழந்தைகளும் பள்ளிகளுக்குச் செல்வதை உறுதிசெய்யவும், பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்தவும் உறுதிபூண்டுள்ளதாக 2018-19 ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அதிமுக அரசு கூறினாலும் நடைமுறையில் அமலாக்கப்படவில்லை. “உண்மையான கல்வி அனைவருக்கும் சுலபமாகக் கிடைக்க வேண்டும். ஒவ்வொரு கிராமவாசிக்கும் அவரது அன்றாட வாழ்க்கையில் பயன்தரத்தக்கதாக அது அமைய வேண்டும்” என காந்தி வலியுறுத்தினார். நாடு விடுதலையடைந்து 70 ஆண்டுகள் ஆன பின்பும் அவரின் கனவு நனவாகவில்லை என்பதைத்தான் பர்கூர் மலை நமக்குப் பாடமாக உணர்த்துகிறது.
- ஜி.ராமகிருஷ்ணன்,
சிபிஐ (எம்) – அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்.
தொடர்புக்கு: grcpim@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT