Last Updated : 04 Apr, 2024 07:09 AM

2  

Published : 04 Apr 2024 07:09 AM
Last Updated : 04 Apr 2024 07:09 AM

மக்களவை மகா யுத்தம்: இண்டியாவின் வியூகமும், பாஜகவின் வேகமும்

தேர்தல் நெருங்க நெருங்க தேசிய அரசியல் திரையில் பரபரப்புக் காட்சிகள் அதிகரித்திருக்கின்றன. டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் 15 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருப்பது, ஆறு மாதச் சிறைவாசத்துக்குப் பின்னர் ஆம் ஆத்மி கட்சி எம்.பி.சஞ்சய் சிங்குக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியிருப்பது என்பன உள்ளிட்ட நகர்வுகளை முன்வைத்து பெரும் விவாதங்கள் தொடங்கியிருக்கின்றன.

எதிர்க்கட்சிகள் மீதான பாஜக அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து மார்ச் 31இல் டெல்லி ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணித் தலைவர்கள் நடத்திய கூட்டம் இந்தத் தேர்தல் செல்லும் திசைவழியை ஓரளவுக்குத் தெளிவாக்கியிருக்கிறது.

எதிர்க்கட்சிகள் மீது பாஜக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை உத்தவ் தாக்கரே முதல் தேஜஸ்வி யாதவ் வரை பல தலைவர்கள் விமர்சித்தனர். எனினும், பாஜக அரசை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான செயல் திட்டம் என்ன என்பது குறித்த ஒருங்கிணைந்த குரல் அங்கு ஒலிக்கவில்லை.

அதே நாளில் உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில் நடந்த கூட்டத்தில் மோடி ஆற்றிய உரை குறித்த செய்திகளே அதிக அளவில் சென்றுசேர்க்கப்பட்டன. கூடவே, தேர்தல் பத்திர விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதும் சற்றே மெளன முகம் காட்டிய பாஜக, மீண்டும் வழக்கமான அரசியல் பாணிக்குத் திரும்பியிருக்கிறது.

விட்டுக்கொடுக்காத பாஜக: பிரதமர் மோடி தனது ‘மனதின் குர’லைக்கூட நன்கு திட்டமிட்டுப் பேசும் நிலையில், ராகுல் காந்தி குறிப்புகள் ஏதும் இல்லாமல்மனதில் தோன்றும் விஷயங்களைப் பட்டவர்த்தனமாகப் பேசிவிடுகிறார். மோடியுடன் சேர்ந்து சில தொழிலதிபர்களும் இந்தத் தேர்தலில் மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபடுவதாக ராம்லீலா கூட்டத்தில் ராகுல் விமர்சித்தது வழக்கம்போல சர்ச்சையாகியிருக்கிறது.

பாஜக தேர்தல்ஆணையத்திடம் புகார் செய்திருக்கிறது. பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் நாடே பற்றி எரியும் என்கிற தொனியில் ராகுல் பேசியது, தேர்தல் பத்திர விவகாரத்தில் ஏறத்தாழ ஒன்றரை மாதம் மெளனம் காத்த பிரதமர் மோடிக்குப் பெரும் வாய்ப்பாகிவிட்டது. எதிர்பார்த்தது போலவே ராகுலின் பேச்சை அவர் கடுமையாகக் கண்டித்திருக்கிறார்.

தனியார் செய்தித் தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த மோடி, “2014ஆம் ஆண்டுக்கு முன்னர் அரசியல் கட்சிகள் செய்த செலவு குறித்து நமக்குஎன்ன தெரியும்? தேர்தல் பத்திரம் வந்த பின்னர்தான் யாருக்கு யார் நிதி கொடுத்தார்கள் என்றே தெரியவருகிறது” எனப் பேசியிருக்கிறார்.

ஆனால், “அரசியல் கட்சிகள் பெறும் நிதி குறித்து அறிந்துகொள்ளும் உரிமை பொதுமக்களுக்கு இல்லை” என்று உச்ச நீதிமன்றத்தில் சொன்னது மத்திய அரசுதான் என்பது கவனிக்கத்தக்கது. குறிப்பாக, “தேர்தல் பத்திர முறையானது அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது” என்று உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்திருக்கும் நிலையில், “நான் என்ன தவறு செய்தேன்?” என்று மோடி கேட்கிறார்.

இவ்விவகாரத்தின் நுட்பங்கள் புரியாமல் மேலோட்டமாகப் பார்த்துவரும் சாமானியர்களுக்கு அவரது வாதத்தில் குறை இருப்பதாகத் தோன்றாது.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், “பிற கட்சிகளைச் சேர்ந்த ஊழல் கறைபடிந்த தலைவர்கள் பாஜகவில் சேர்வதை உங்கள்கட்சி வரவேற்கிறதே?” என்று கேள்விஎழுப்பப்பட்டது. அதற்கு, “அரசியல் கட்சிகள் அனைவரையும் வரவேற்கும்.

நாங்களும் அனைவரையும் வரவேற்கிறோம்” என்று இயல்பாகப் பதிலளித்தார். இன்னொருபுறம், “ஊழல் செய்த எதிர்க்கட்சியினரைத் தண்டிப்பதில் என்ன தவறு?” என்று பிரதமர் மோடியும்பாஜகவினரும் தொடர்ந்து கேள்வி எழுப்பிவருகின்றனர்.

திருப்பியடிக்கும் பாஜக: மதுபானக் கொள்கை முறைகேடுவழக்கில் வலுவான ஆதாரம் இருப்பதாலேயே ஆம் ஆத்மி கட்சியினருக்குப் பிணை வழங்கப்படவில்லை என பாஜகவினர் தொடர்ந்து பேசிவந்தனர். சஞ்சய் சிங்குக்கு ஆறு மாதங்களுக்குப் பின்னர் பிணை வழங்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த வழக்கு முற்றிலும் பொய்யானது என்ற பிரச்சாரத்தை இண்டியா கூட்டணி முன்னெடுத்திருக்கிறது.

ஆனால், அவருக்குப் பிணை வழங்கப்பட்டதே அமலாக்கத் துறைக்கு அரசு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை என்பதற்கான அத்தாட்சிதான் என பாஜகவினர் வாதிடத் தொடங்கி யிருக்கிறார்கள். கேஜ்ரிவால் சிறையிலிருந்தே ஆட்சி நடத்துவார் என்று ஆம் ஆத்மி கட்சி உறுதியாக நின்றாலும் - அதற்குச் சட்டரீதியான தடைகள் இல்லை என்றபோதிலும் - நடைமுறையில் அது சாத்தியமா என்பது முக்கியமான கேள்வி.

சில முக்கியக் கோப்புகளில் முதல்வர்தான் கையெழுத்திட்டாக வேண்டும் என்பதால், அவை தேங்கிக்கிடக்கின்றன. ‘கிரிமினல்கள்தான் இப்படி சிறையிலிருந்து உத்தரவு பிறப்பிப்பார்கள்’ என்று பாஜக ஏற்கெனவே கிண்டல் செய்து கொண்டிருந்தது.

இந்தச் சூழலில் ஏப்ரல் 2இல் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதாவின் தலைமையில் 55 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்கள் கூடிப் பேசியிருக்கின்றனர். இதையடுத்து சுனிதா முதல்வர் பொறுப்பை ஏற்பாரா என்றும் பேச்சுக்கள் எழுந்தன. அப்படி நடந்தால் ‘குடும்ப அரசியல்’ என்ற வழக்கமான ஆயுதத்தைப் பாஜக முன்னெடுக்கத் தயங்காது.

கால்நடைத் தீவன வழக்கில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பின்னர் பிஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் தனது மனைவி ராப்ரி தேவியை முதல்வராக்கியதையும் நினைவூட்டி ஆம் ஆத்மி கட்சியைப் பரிகசிக்கிறது பாஜக. கூடவே, பாஜகவில் சேரச் சொல்லி அழுத்தம் தரப்பட்டதாக டெல்லி அமைச்சர் ஆதிஷி முன்வைத்த புகாரை மறுத்திருக்கும் பாஜக, அதை நிரூபிக்கவில்லை என்றால் வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்திருக்கிறது.

தொடரும் குழப்பங்கள்: மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மி அரசு மீது முதலில் குற்றச்சாட்டை முன்வைத்ததே காங்கிரஸ்தான் என்று ஆரம்பத்திலிருந்து பாஜக பேசிவருகிறது. இண்டியா கூட்டணியில் இருக்கும் பினராயி விஜயனும் இதைச் சுட்டிக்காட்டியிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.

ஏற்கெனவே, கேரளத்தின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிடுவதை இடதுசாரிக் கட்சிகள் வெளிப்படையாக விமர்சிக்கின்றன. ஜார்க்கண்டில் உள்ள 14 தொகுதிகளில், இடதுசாரிக் கட்சிகள் 8 இடங்களில் போட்டியிடப்போவதாகத் தன்னிச்சையாக அறிவித்திருப்பது மேலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பிஹாரில் காங்கிரஸ்-ராஷ்ட்ரிய ஜனதா தளம் இடையிலான தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வந்துவிட்டாலும் அது தொடர்பான கசப்புகள் தொடரவே செய்கின்றன.

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் முரண்பாடு இருந்ததாக ரூ.3,567 கோடி அபராதம் விதித்த வருமான வரித் துறை, தேர்தல் முடியும்வரை அது தொடர்பான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துவிட்டது.

இருந்தாலும் இண்டியா கூட்டணிக் கட்சிகளுக்குப் பிரச்சினைகள் தொடராது என உறுதியாகச் சொல்ல முடியாது. அதனால்தான், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்னரும் விசாரணை அமைப்புகள் எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும்; சமவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றெல்லாம் தேர்தல் ஆணையத்தை இண்டியா கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தியிருக்கின்றன.

ஆனாலும் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருப்பதால் காங்கிரஸுக்கு ஏற்பட்டிருக்கும் நிதி நெருக்கடி வெளிப்படையாகவே தெரிகிறது. தேர்தல் நிதி வேண்டும் என்று மத்தியப் பிரதேசக் காங்கிரஸ் தலைவர் ஜீத்து பட்வாரி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்திருப்பதே அதற்குச் சாட்சி. அமலாக்கத் துறை, சிபிஐ ஆகிய அரசு அமைப்புகள் வரம்பை மீறிச் செயல்படுவதாகத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் முன்வைத்திருக்கும் விமர்சனமும் இங்கு கவனிக்கத்தக்கது.

ராம்லீலா கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, “ராவணனுக்கு எதிராகப் போரிட்டு வென்றபோது ராமரிடம் ஆட்சி அதிகாரம் இல்லை; ரதங்கள்கூட இல்லை. அவரிடம் இருந்ததெல்லாம் சத்தியம் மட்டும்தான்” என்று - பாஜகவுக்குப் பிரியமான - ராமாயணத்திலிருந்து உணர்வுபூர்வ மேற்கோள் காட்டிப் பேசினார். இதில், யாரை ராமனாகவும் ராவணனாகவும் வாக்காளர்கள் பார்க்கிறார்கள் என்பதைத் தேர்தல் முடிவு காட்டிவிடும்.

- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in

To Read in English: Parliamentary ballot battle: INDIA’s strategy and BJP’s speed

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x