Last Updated : 22 Mar, 2024 08:53 AM

2  

Published : 22 Mar 2024 08:53 AM
Last Updated : 22 Mar 2024 08:53 AM

தமிழ்நாட்டுக் கூட்டணிகளின் கணக்கு | மக்களவை மகா யுத்தம்

தமிழ்நாடு தேர்தல் களம் கடந்த 50 ஆண்டுகளாக திமுக - அதிமுக ஆகிய கட்சிகளைச் சுற்றியே அமைந்திருக்கின்றது. தேர்தல்களும் இவற்றுக்கு இடையிலான போட்டியாகவே இருந்துள்ளன. சில நேரம், இவ்விரு திராவிடக் கட்சிகளுக்கு அப்பால் மூன்றாவது அணிகளும் அமைவதுண்டு. அந்த வகையில், 2024 மக்களவைத் தேர்தல் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் தலைமையில் தேர்தல் கூட்டணிகள் உறுதியாகிவிட்டன. இந்த தேர்தலில் மூன்று கூட்டணிகள் எதிர்கொள்ளும் சாதக, பாதகங்கள் என்னென்ன?

திமுக கூட்டணி: தமிழ்நாட்டில் 2018இல் திமுக தலைமையில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகள் அடங்கிய கூட்டணி அமைந்தது. 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து 2024 மக்களவைத் தேர்தலிலும் தொடர்கிறது. கடந்த 30 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசியல் களத்தில் இல்லாத ஓர் நிகழ்வு இது. தொகுதிகளைப் பெறுவதிலும் மாற்றிக்கொள்வதிலும் சில சங்கடங்களும் சலசலப்புகளும் இருந்தாலும், 2019 மக்களவைத் தேர்தல் போலவே இந்த முறையும் வெற்றிகரமாகத் தொகுதி உடன்பாடு செய்துகொண்டது திமுக கூட்டணிக்கு நேர்மறையான ஓர் அம்சம்.

குறிப்பாக, இக்கூட்டணியில் உள்ள எல்லா கட்சிகளுமே பாஜக எதிர்ப்பு என்கிற மையப்புள்ளியில் இணைந்து செயல்படுகின்றன. அகில இந்திய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக ‘இண்டியா’ அணி செயல்படுவதால், முதன்மையாக பாஜகவை எதிர்ப்பதிலேயே திமுக கூட்டணி கவனம் செலுத்துகிறது. 2019, 2021 பொதுத் தேர்தல்களில் பாஜக – அதிமுக ஒரே கூட்டணியில் இருந்ததால், இக்கட்சிகளை ஒருசேர விமர்சித்து திமுக கூட்டணியால் வாக்குகளைக் கவர முடிந்தது. ஆனால், அதிமுக இந்த முறை தனித்துச் சென்றுவிட்டதால், இரண்டு கட்சிகளையும் தனித்தனியாக எதிர்க்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் திமுக அரசு செயல்படுத்திய மகளிர் நலன் உள்பட மக்கள் நலத் திட்டங்கள் தங்களுக்கு வாக்குகளைப் பெற்று தரும் என்கிற எதிர்பார்ப்பு திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு இருக்கிறது. ஆனால், பொதுவாக எந்த ஓர் ஆளுங்கட்சியும் மக்களிடையே உருவாகும் அதிருப்தியின் விளைவாக எதிர்ப்பு வாக்குகளை எதிர்கொள்ள நேரிடும். மத்தியில் 10 ஆண்டு கால ஆட்சிக்கு எதிர்ப்பு வாக்குகள் உருவாவது திமுக கூட்டணிக்குச் சாதகம் என்றால், மாநிலத்தில் மூன்று ஆண்டு கால ஆட்சிக்கு எதிராகத் திரும்பும் எதிர்ப்பு வாக்குகள் பாதகம்.

அதை திமுக கூட்டணி எதிர்கொண்டு ஆக வேண்டும் என்றாலும், அகில இந்திய அளவில் பாஜகவுக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சிகள் இல்லை என்கிற குறை நிலவுவதைப் போலவே, தமிழ்நாட்டிலும் திமுகவுக்கு எதிராக வலுவான எதிர்க்கட்சிகள் இல்லை என்கிற குறை இங்கும் உண்டு. இது திமுக கூட்டணிக்கு சாதகமான அம்சம். தேர்தல் களத்திலும் சமூக வலைதளங்களிலும் அதிமுகவைவிட பாஜகவையே திமுக கூட்டணிக் கட்சிகள் அதிகம் விமர்சிக்கும் நிலையில், தேர்தலில் யாருக்கு இடையே போட்டி என்பதை திமுக கூட்டணிக் கட்சிகள் குறிப்பால் உணர்த்திவருகின்றன.

அதிமுக கூட்டணி: 2014 மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி என்று அறிவித்துவிட்டுத் தேர்தலைச் சந்தித்த ஜெயலலிதா தலைமை வகித்த அதிமுகவா இது என்கிற கேள்வியை எழுப்பியிருக்கிறது இன்றைய அதிமுகவின் நிலை. அதிமுகவின் கூட்டணிக்காகக் கட்சிகள் காத்திருந்த காலம் மாறி, கூட்டணிக்காக அதிமுக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டிருப்பதை 2024 மக்களவைத் தேர்தல் களம் பார்க்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிய எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக, அதே வேகத்தில் மக்களவைத் தேர்தலில் மெகா கூட்டணி அமைப்போம் என்று அறிவித்தது. ஆனால், அதுபோன்ற ஒரு கூட்டணியை உருவாக்க முடியாமல் எடப்பாடி பழனிசாமி சறுக்கியிருக்கிறார்.

தேமுதிக, புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. போன்ற சிறிய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைத்துக் களம் காணும் நிலைக்கு அதிமுக தள்ளப்பட்டிருக்கிறது. திமுக எதிர்ப்பு வாக்குகள் பாஜக கூட்டணிக்குச் செல்லாமல் தடுக்கும் உத்திகளையும் அதிமுக வகுக்க வேண்டியிருக்கும். இன்னொரு புறம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பதில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போன்றோர் பாஜகவுடன் கைகோத்திருப்பதையும் அதிமுக எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

2006 – 2011 காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக, திமுக அரசுக்கு எதிராகத் தொடர் போராட்டங்களை அறிவித்துக்கொண்டே இருந்தது. ஜெயலலிதாவின் அறிக்கைகள் வராத நாளே இல்லை என்கிற நிலையும் இருந்தது. இவையெல்லாம் அன்றைய திமுக அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டவும் அதிமுகவை நோக்கி கூட்டணிக் கட்சிகளை வரவைக்கவும் உதவின.

ஆனால், இன்றைய நிலவரத்தில்,சொந்த கட்சிக்குள்ளிருந்தே கிளம்பியஎதிர்ப்புகளைச் சமாளிப்பதற்கே எடப்பாடி பழனிசாமி தனது பெரும்பாலான நேரத்தையும், சக்தியையும் செலவிட நேர்ந்துவிட்டது. அதேசமயம், ‘அடிமை அதிமுக’ என்று தன்னைக் கேலி பேசிக்கொண்டிருந்த திமுக-வுக்குத் தக்க பதிலடி கொடுக்கும் விதமாக, பாஜக கூட்டணியை விட்டு வெளியேறுவதில் அவர் காட்டிய உறுதியையும் துணிச்சலையும், திமுக-வின் மூன்றாண்டு கால ஆட்சி மீது அதிருப்தி கொண்டிருக்கும் பாஜக எதிர்ப்பு வாக்காளர்கள் ரசிக்கவே செய்கிறார்கள்.

அதோடு, இரட்டை இலை என்ற சின்னத்துக்கு இருக்கும் பிரபலமும் வாக்கு பலமும் தாமரைச் சின்னத்துக்கு இன்னும் வந்துவிடவில்லை என்பது எடப்பாடி பழனிசாமிக்கு நம்பிக்கை தரும் ஓர் அம்சம். அதனால்தானோ என்னவோ, தனது தலைவியின் பாணியில் ஏராளமான புதுமுகங்களைத் துணிச்சலோடு இம்முறை களம் இறக்கி இருக்கிறார் அவர்.

ஆனால், பாஜகவை எதிர்ப்பதில் அதிமுகவுக்குத் தயக்கம் இருப்பதையும் உணர முடிகிறது. தேர்தல் பத்திரம் குறித்த விவகாரத்தில் திமுகவைக் கடுமையாக விமர்சிக்கும் அதிமுக, பாஜக பற்றி வாய் திறக்காமல் இருப்பது ஓர் உதாரணம். பாஜக - அதிமுக இடையே மறைமுகக் கூட்டணி தொடர்கிறது என்று திமுக கூட்டணி வைக்கும் குற்றச்சாட்டை முறியடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது அதிமுக. அப்போதுதான் பாஜக, திமுக இரண்டுக்கும் எதிரான மனநிலையில் உள்ள வாக்காளர்களை அக்கட்சியால் ஈர்க்க முடியும்

பாஜக கூட்டணி: தமிழ்நாட்டில் பாஜக – அதிமுக கூட்டணி என்பது இயற்கையான கூட்டணி என்கிற எண்ணம் பாஜக மேலிடத் தலைவர்களுக்கு எப்போதுமே உண்டு. அதனால்தான், கூட்டணியை விட்டு அதிமுக சென்றபோதும் அக்கட்சிக்குக் கதவு திறந்திருக்கிறது என்று பாஜக தலைவர்கள் சொல்லிக்கொண்டிருந்தார்கள். அதே நேரத்தில், அதிமுக கூட்டணிக் கதவை மூடினாலும்கூட, தங்கள் தலைமையில் ஒரு கூட்டணியை உருவாக்கும் அளவுக்கு தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்திருக்கிறது. முன்புபோல அல்லாமல், எப்போதும் ஊடகங்களில் பேசுபொருளாக இருக்கும் அண்ணாமலை போன்றோரின் தலைமையும் இதற்கு ஒரு காரணம்.

2019இலிருந்து பாஜக - அதிமுக கூட்டணி தொடங்கிவிட்டாலும் தன்னைப் பிரதான எதிர்க்கட்சியாகக் காட்டிக்கொள்ள பாஜக எப்போதும் தயங்கியதில்லை. 2021 தேர்தலுக்குப் பிறகு அதிகாரபூர்வ சட்டமன்ற எதிர்க்கட்சியாக அதிமுக இருந்தபோதிலும், தங்களையே எதிர்க்கட்சி என்று பாஜக பதிவுசெய்து வந்தது. கட்சியை வலுப்படுத்தப் பிற கட்சிகளிலிருந்து ஆள்களை இழுப்பது, பிரபலங்களை இணைப்பது என பாஜக தமிழ்நாட்டில் வேகம் காட்டுகிறது.

தொடர் முயற்சியின் விளைவாக 2014இல் அமைத்ததுபோல ஒரு கூட்டணியைப் பாஜகவால் கட்டமைக்க முடிந்திருக்கிறது. குறிப்பாக, அதிமுகவுடன் கூட்டணியை மறுத்து பாமக, தமாகா ஆகிய கட்சிகள் பாஜகவை நோக்கி வந்திருக்கின்றன. இதற்கு வேறு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், கூட்டணி அமைப்பதில் அதிமுகவை ஓரங்கட்டி பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. பாஜகவின் பலம் பிரதமர் நரேந்திர மோடியின் பிரச்சாரங்கள். இதுவரை இல்லாத அளவுக்குத் தமிழ்நாட்டில் திமுகவை நேரடியாகத் தாக்கி நரேந்திர மோடி பிரச்சாரம் செய்துவருகிறார். கருத்தியல்ரீதியாகவும் திமுகவை எதிர்கொள்ள வேண்டிய தேவை பாஜகவுக்கு இருப்பதால், அதையும் தயக்கமின்றிச் செய்வது வசதியாக உள்ளது.

ஆனால், அதிமுகவைப் பற்றி எதுவுமே பேசாமல் திமுகவைப் பற்றி மட்டும் பேசி வாக்குச் சேகரிக்க முயல்வது பல ஊகங்களுக்கு வழிவகுக்கும் என்பதை பாஜக மறந்துவிடுகிறது. ஓபிஎஸ், டி.டி.வி. தினகரனை வைத்துக்கொண்டு திராவிட அரசியலை எதிர்ப்பது; ஜி.கே.வாசன். அன்புமணி ராமதாஸ் ஆகியோரை வைத்துக்கொண்டு வாரிசு அரசியலை எதிர்ப்பது; டிடிவி தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை வைத்துக்கொண்டு ஊழலை எதிர்ப்பது போன்ற விவகாரங்களில் பாஜகவுக்குச் சிக்கல் இல்லாமல் இல்லை.

இந்த முறை கூட்டணிகள் இப்படி அமைந்தாலும், எந்தக் கூட்டணி அதிக தொகுதிகளில் வெல்லப் போகிறது என்பது அடுத்து வரும் வாரங்களில் வாக்காளர்களின் மனநிலை எப்படி இருக்கிறது என்பதைப் பொருத்தே அமையும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x