Published : 08 Feb 2018 09:01 AM
Last Updated : 08 Feb 2018 09:01 AM
தெ
ன்னாப்பிரிக்க நகரமான கேப் டவுன், முற்றிலும் குடிநீர் இல்லாத கடும் வறட்சி நிலையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. ஏப்.16-ல் அந்நகரத்தில் குடிநீர் முழுமையும் தீர்ந்துபோய் ‘டே ஜீரோ’ எனப்படும் பூஜ்ஜிய நாளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அச்சம் உருவாகியிருந்தது. இந்நிலையில், கேப் டவுன் அருகிலுள்ள கிரபவ் நகரைச் சேர்ந்த விவசாயிகள் அமைப்பு உதவிக்கரம் நீட்டியிருக்கிறது. தங்களது உபரிநீரான 1,000 கோடி லிட்டர் நீரை கேப் டவுனுக்கு அளித்து உதவியுள்ளது.
வெஸ்டர்ன் கேப் மாகாணம், தென்னாப்பிரிக்காவின் தென்மேற்கு முனையில் கடற் கரையோரமாக அமைந்திருக்கிறது. அம் மாகாணத்தில் வசிக்கும் மக்கள்தொகை யில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு பேர், அதாவது 40 லட்சம் பேர், அம்மாகாணத்தின் தலைநகரான கேப் டவுனில்தான் வசித்துக்கொண்டிருக்கிறார்கள்.
கடந்த மூன்றாண்டுகளாகப் பருவமழை பொய்த்ததால் கேப் டவுன் நகருக்குக் குடிநீர் வழங்கும் ஆறு நீர்த் தேக்கங்களும் வறண்டுவிட்டன. நாளொன்றுக்கு 100 கோடி லிட்ட ராக நகரின் தண்ணீர்ப் பயன்பாடு பாதியாகக் குறைந்துவிட்டது. ஒரு நாளைக்கு ஒரு நபர் 87 லிட்டர் நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பருவநிலை மாற்றத்தின் விளைவுகள் என்னவாக இருக்கும் என்பதற்கு அறிகுறியாக கேப் டவுன் குடிநீர் பிரச்சினை அமைந்துள்ளது. எனவே, உலகம் முழுவதும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கவனம் கேப் டவுன் மீது குவிந்திருக்கிறது. இந்நிலையில்தான் கிரபவ் நகரின் வழியே ஓடும் பால்மியட் நதியின் உபரிநீரை க்ரோன்லேன்ட் நீர் உபயோகிப்பாளர் சங்கம் என்ற விவசாயிகள் அமைப்பு, கேப் டவுனுக்கு தானாக முன்வந்து அளித்துள்ளது.
பால்மியட் நதியின் நீர்ப் பகிர்வு, மேலாண்மை, மாசுக் கட்டுப்பாடு என முக்கியப் பணிகள் அனைத்தையும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட இந்த விவசாயிகள் அமைப்பே மேற்கொண்டுவருகிறது. உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் 20 பேர் கொண்ட நிர்வாகக் குழுவுக்கு, இச்சங்கத்தின் சார்பாக முடிவெடுக்கவும் செயல் படுத்தவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. கிரபவ் நகரம் கேப் டவுனிலிருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ளது. அந்நகரின் ஐகென்ஹாப் நீர்த்தேக்கத்திலிருந்து அனுப்பப்பட்டுவரும் இந்நீரானது, கேப் டவுனின் குடிநீர்க் குழாய்களுடன் இணைக்கப்பட உள்ளது.
இதன்மூலம், கேப் டவுனின் தண்ணீர் இல்லாத நாள் மே-11க்கு தள்ளிப்போடப்பட்டுள்ளது. இது நிரந்தரத் தீர்வு அல்ல. தொண்டை வறண்ட நிலையில் நாக்கில் சில சொட்டு தண்ணீரை விடுகின்ற முயற்சிதான். ஆனால், இந்த காலத்தினால் செய்த உதவியினால் கிரபவ் விவசாயிகளின் கருணை மனதை உலகம் அறிந்துகொண்டிருக்கிறது. பழ வகைகள் சாகுபடியை மட்டுமே நம்பி யிருக்கும் வெஸ்டர்ன் கேப் மாகாணம் முழுமையுமே வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கிறது. கால்நடை வளர்ப்பும்கூட சிரமமாயிருக்கிறது. எனினும் விவசாயத்துக்குப் போக, மிச்சமிருக்கும் நீரை தலைநகரின் தண்ணீர்ப் பிரச்சினையைத் தீர்த்துவைக்க கிரபவ் விவசாயிகள் முன்வந்திருக்கிறார்கள். பூமியின் வட பகுதியில் அமைந்துள்ள முதலாளித்துவ நாடுகளின் மிதமிஞ்சிய உற்பத்தியும் எரிபொருள் பயன்பாடும்தான் பருவநிலை மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. ஆனால், அதன் விளைவுகளைத் தென் பகுதியில் அமைந்துள்ள ஆப்பிரிக்கக் கண்டம் அனுபவித்துக்கொண்டிருக்கிறது.
ஆப்பிரிக்காவின் தென்முனையில் இன்று ஏற்பட்டிருக்கும் குடிநீர்ப் பற்றாக்குறை சிக்கல், ஆசியாவின் தென்முனையில் அமைந்திருக்கும் நம்மையும் ஒருநாள் தாக்கக்கூடும். ஒருவேளை, அப்படியொரு சிக்கலை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தால்...? நம் நாட்டில் நதிநீர்ப் பங்கீடு விஷயத்தில் நிலவும் நடைமுறையைப் பற்றி யோசித்தால் வருத்தமாய்த்தானிருக்கிறது.
- செல்வ புவியரசன், தொடர்புக்கு:
puviyarasan.s@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT