Published : 13 Mar 2024 06:19 AM
Last Updated : 13 Mar 2024 06:19 AM
கொண்டாட்ட மனநிலைக்கு ஏங்கும்போக்கு சமீப காலத்தில் மக்களிடம் அதிகரித்திருப்பதைக் காண முடிகிறது. எப்போது விடுமுறை வரும்,பண்டிகைகள் வரும் என எந்நேரமும் காத்திருக்கிறார்கள். தொடர் விடுமுறைகளோ பண்டிகைகளோ வரும் நாள்களில் பேருந்து நிலையங்களும், ரயில் நிலையங்களும் நிரம்பி வழிகின்றன, போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
கடற்கரைகள், சுற்றுலாத் தலங்கள், பொழுதுபோக்குப் பூங்காக்கள், மால்கள் என எங்கேயும் கூட்டம் அலைமோதுகிறது. ஒவ்வொரு வாரமும் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதற்காக நான்கைந்து மணி நேரம்கூடப் பயணித்து மக்கள் செல்கிறார்கள். ஒவ்வொரு இடத்திலும் மூச்சுமுட்டும் அளவுக்கு ஒருவரையொருவர் நெருக்கித்தள்ளுகிறார்கள்.
மக்களிடம் பெருகிவரும் இந்தக் கொண்டாட்ட மனநிலைக்கு என்ன காரணம்? மக்கள் இந்தளவுக்குக் கொண்டாட்டங்களில் திளைக்கிறார்கள் என்றால், அவர்கள் அந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என நண்பர் ஒருவர் சொன்னார். மக்கள் அந்த அளவுக்கு நிறைவான வாழ்க்கையைத்தான் வாழ்கிறார்களா?
அன்றாட வாழ்க்கை மிகவும் அழுத்தமான ஒன்றாக, பொருளீட்டுவதன் மீதான நிர்ப்பந்தம் கொண்ட ஒன்றாக இருக்கும்போது, அதிலிருந்து தற்காலிக விடுதலையை மனம் நாடுவதுகூட இதற்குக் காரணமாக இருக்கலாம். உண்மையில், இதன் பின்னணியில் இன்றைய காலத்தில் மாறியிருக்கும் நமது வாழ்க்கை முறையைத் திரும்பிப் பார்ப்போம்.
இளம் பருவமும் கல்வியும்: சிறு வயது முதலேகுழந்தைகளுக்கு இலக்குகள் நிர்ணயிக்கப்படுகின்றன. நகர்ப்புறச் சூழலில் ஏற்கெனவே சுருங்கியிருக்கும் அவர்களின் உலகம், டிஜிட்டல் சாதனங்களினால் மேலும் சுருங்கிவிடுகிறது. அவர்களுக்கென்று சமூகத் தொடர்புகள் இல்லை. பெற்றோராலும், கல்வியமைப்பாலும் அவர்களுக்குள் விதைக்கப்படும் போட்டி மனப்பான்மையின் விளைவாக நட்பு வட்டம் என்கிற ஒன்று அவர்களுக்கு இல்லாமலேயே போய்விடுகிறது. தனிமையையே அதிகம் உணர்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் மட்டுமே தங்கள் இருப்பை நிறுவுகிறார்கள். போலியான தாகவும், மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகவும் இருக்கும் சமூக வலைதளங்கள் எப்போதும் அவர்களைத் தாழ்வுமனப்பான்மையிலேயே வைத்திருக்கின்றன. கல்வி தொடர்பான அவர்களின் இலக்குகள், நிர்ப்பந்தங்கள், பெற்றோர்களின் அதீத கவனம், சமூக வலைதள அங்கீகாரத்தை நாடும் அவர்களின் ஆபத்தான நிஜவுலக நடவடிக்கைகள் என அவ்வளவும் இன்றைய இளைய தலைமுறையினரை எப்போதும் இறுக்கத்திலேயே வைத்திருக்கின்றன. அதிலிருந்து வெளியேறும் வழியாகப் போதைப்பொருள்கள், நண்பர்களுடனான கேளிக்கை இரவுகள் போன்றவற்றை நாடிச் செல்கிறார்கள்.
அதீத வேலைப்பளு உடல் - மனச்சோர்வு: இன்றைய நடுத்தர வயதினர் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குச் சவால்களுக்கும், சிக்கல்களுக்கும், பொருளாதார அழுத்தங்களுக்கும் ஆளாகின்றனர். கிட்டத்தட்ட எந்த வேலையிலும் வரையறுக்கப்பட்ட வேலை நேரம் என்கிற ஒன்றே இல்லாமல் போய்விட்டது.
வீட்டுக்கு வந்த பிறகும் அந்த வேலை நிமித்தமான சிந்தனைகளும் நடவடிக்கைகளும், அவர்களது அன்றாட வாழ்வை ஆக்கிரமித்திருக்கின்றன. அதுவும் வீட்டிலிருந்தே வேலை என்ற புதிய சூழல் உருவான பிறகு, எந்த நேரமும் வேலையின் பொருட்டே சிந்திக்கும் நிலை உருவாகியிருக்கிறது.
அதனால் அவர்களுக்கென்று தனிப்பட்ட நேரம் என்பதே இல்லை. குடும்பத்துக்கான முழுமையான பங்களிப்பை அவர்களால் தர இயலவில்லை. எந்த நேரமும் அழுத்தும் இந்தச் சுமையிலிருந்து எப்போது தப்பித்து ஓடுவோம் என்கிற மனநிலை எப்போதும் அவர்களுக்கு இருக்கிறது. அதற்கான ஒரு தற்காலிகச் சூழல் உருவாகும்போது அவ்வளவையும் மூடிவைத்துவிட்டு, கதவை அடைத்துவிட்டு வெளியேறுகிறார்கள்.
உறவுச் சிக்கல்கள்: நவீன காலத்தின் மிக முக்கியமான பிரச்சினையாக அதிகரித்துவரும் உறவுச் சிக்கல்களைச் சொல்லலாம். பல்வேறு சமூக, பொருளாதாரச் சூழல்கள் காரணமாக உறவுகளின் மீதான மதிப்பீடுகள் மாறியிருக்கின்றன. பிறரின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதில் தொடங்கி, அவர்களின் தனிப்பட்ட விருப்பங்களை மதிப்பது, சகித்துக்கொள்வது, அரவணைத்துச் செல்வது வரை பல போதாமைகளை இன்றைய உறவுகளில் பார்க்க முடிகிறது.
இதன் விளைவாக எப்போதும் வாக்குவாதங்களும், பரஸ்பர குறை சொல்லலுமாகவே இன்றைய உறவுகள் இருக்கின்றன. ‘எல்லாத்தையும் சகிச்சிக்கிட்டு எதுக்கு வாழணும்?’ என்கிற கேள்விகள் இன்றைய உறவுகளில் தொடர்ந்து கேட்கப்படுகின்றன.
பிறருக்காகச் சகித்துக்கொண்டு வாழ்வதை ஏளனமாகவும், பலவீனமானதாகவும் பார்க்கும் காலகட்டத்தில் இந்தக் கேள்விகளுக்கு உறுதியானபதில் இல்லை. அதனால் உறவுகள் எப்போது வேண்டுமானாலும் உடைந்துவிடும் நிலையிலேயே தொடர்கின்றன.
சாதகமான சூழல் உருவாகும்போது, அதுவரை இருந்த கசப்புகளையெல்லாம் மறந்துவிட்டு உறவை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளலாம் என்று இன்றைய தலைமுறையினர் நம்புகிறார்கள்.அதற்காகக்கூட இந்த விடுமுறை நாள்களையும்,கொண்டாட்டங்களையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
புறக்கணிக்கப்படும் முதியோர் நலன்: இன்றையகுடும்பங்களில் முதியவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்? உலக அளவில் மன அழுத்தமும், தற்கொலைகளும், மறதிநோயும் முதுமையில் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை முதியோரின் தற்கொலைகளில் கேரளமும் தமிழ்நாடும் முன்னணியில் இருக்கின்றன.
பொருளாதாரத்துக்காகப் பிள்ளைகளைச் சார்ந்து வாழ வேண்டிய சூழலில் இருக்கும் முதியோர், பெரும்பாலும் கீழ்மையாக நடத்தப்படுகிறார்கள், அவர்களின் உணர்வுகளும் நலமின்மைகளும் அலட்சியப்படுத்தப்படுகின்றன. சக வயதினருடனான சந்திப்புகளும் உரையாடல்களும் முற்றிலும் இல்லாத சூழலில், அவர்கள் மீதான இந்த அவமதிப்புகளும் அலட்சியங்களும் அவர்களை மேலும் மனச்சோர்வுக்கு உள்ளாக்குகின்றன.
கிட்டத்தட்ட வெளியேறுவதற்கு வழியேயில்லாத சூழலில் தங்களுக்கான குறைந்தபட்ச முக்கியத்துவத் தைப் பண்டிகை நாள்களிலும், திருமணம், பிறந்தநாள் போன்ற சிறுசிறு உறவுக் கூடல்களிலுமே அவர்கள் பெறுகிறார்கள். அந்த நாள் அவர்களுக்கு அவ்வளவு ஆசுவாசம் அளிப்பதாக இருக்கிறது. தற்காலிகமாக அவர்களுக்குக் கிடைக்கும் இந்த ஆசுவாசம், அந்தக் குடும்பத்துக்குத் திருப்தியானதாக இருப்பதால் இந்த நிகழ்வுகளைக் கடமையாகச் செய்துவிடுகிறார்கள்.
இளைஞர்களின் புதிய இயல்புகள்: ‘கொஞ்சம் வைப் (Vibe) தேவையாகயிருக்கிறது’ என்பது இன்றைய இளைஞர்களின் மனநிலையாக இருக்கிறது. இந்த ‘வைப்’ என்றால் என்ன என்று அவர்களுக்கும் புரியவில்லை, நமக்கும் புரியவில்லை. ஒரு இசை நிகழ்ச்சியில் முன்வரிசையில் ஆடிக்கொண்டிருந்த ஓர் இளைஞரிடம் கேட்டேன்.
“அது நமக்கே நமக்குள்வருவது ப்ரோ! எனக்கு வைப் வேணும்னா நான்டிராவல் பண்ணுவேன். இது மாதிரி மியூசிக் நிகழ்ச்சியில வந்து தனியா டான்ஸ் ஆடுவேன்” என்றான். அதாவது, வேறு யாருடனும் பகிர்ந்துகொள்ளாமல் தான் மட்டும் தன்னுடைய விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்வதுதான் இது.
இன்றைய இளைஞர்களிடம் பெருவாரியாகப் பார்க்கக்கூடிய நடவடிக்கை இது. அவர்கள் பெரும்பாலும் சுய விருப்பங்களை முதன்மையாகக் கொண்டிருக்கிறார்கள். ஒன்றாகக் கூடி அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதைவிட, தனிமையில் இருப்பதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள்.
கொண்டாட்டங்கள் மீது மக்களிடம் உருவாகியிருக்கும் இந்தப் புதிய வேட்கை, மாறிவரும் அவர்களின் புதிய வாழ்க்கை முறையோடு நேரடித் தொடர்புடையதாக இருக்கிறது. கிட்டத்தட்ட அனைத்து வயதினரும் ஏதோ ஓர் அழுத்தத்தில், போதாமையில், சிக்கலில், ஏமாற்றத்தில் தவித்துக்கொண்டிருப்பது இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
இது தொடர்பாக சமூகவியலாளர்களும், உளவியலாளர்களும் தொடர் ஆய்வுகளை மேற்கொள்ளும்போது, மக்களின் இந்தப் புதிய மனநிலை பற்றி இன்னும் தெளிவான சித்திரங்கள் கிடைக்கலாம்.
- தொடர்புக்கு: sivabalanela@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT