Last Updated : 11 Mar, 2024 05:27 PM

1  

Published : 11 Mar 2024 05:27 PM
Last Updated : 11 Mar 2024 05:27 PM

மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு காங்கிரஸ் கடும் போட்டி என்றாலும்... - | மாநில நிலவர அலசல் @ மக்களவைத் தேர்தல்

மோகன் யாதவ் மற்றும் கமல் நாத்

மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு பல்வேறு மாநிலங்களின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்த்து வருகிறோம். அதாவது, ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் பிரதான அரசியல் கட்சிகள் எவை எவை, அவற்றுக்கான வாக்கு வங்கிகள் எவ்வளவு, கடந்த கால தேர்தல்களில் அந்தக் கட்சிகளுக்கு கிடைத்த வெற்றிகள் / தோல்விகள், தற்போதைய அரசியல் சூழல் யாருக்கு சாதகமாக / பாதகமாக இருக்கிறது என பல்வேறு அம்சங்களை புள்ளி விவரங்களோடு இந்தப் பகுதியில் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது மத்தியப் பிரதேச மாநிலத்தின் தேர்தல் கள நிலவரம் குறித்து பார்ப்போம்.

நமது நாட்டின் மத்திய பகுதியில் உள்ள மாநிலம் மத்தியப் பிரதேசம். பரப்பளவில் ராஜஸ்தானுக்கு அடுத்து இரண்டாவது பெரிய மாநிலம் இது. 3 லட்சத்து 8 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது மத்தியப் பிரதேசம். 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்த மாநிலத்தில் 7.26 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் கிராமப்புறங்களில் வாழ்கிறார்கள். மாநில மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் இந்துக்கள் 90.89 சதவீதமும், இஸ்லாமியர்கள் 6.57 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 0.29 சதவீதமும் இருக்கிறார்கள். மத்தியப் பிரதேச மக்கள் தொகையில் பழங்குடி மக்கள் 20 சதவீதத்துக்கும் மேலாக இருக்கிறார்கள். மத்தியப் பிரதேசத்தில் கல்வி அறிவு 70.63 சதவீதம். இது தேசிய சராசரியான 74.04 சதவீதத்தை விடக் குறைவு.

கனிம வளங்கள் நிறைந்த மாநிலம் மத்தியப் பிரதேசம். இந்த மாநிலத்தின் நிலப்பரப்பில் 30 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிலங்கள் காடுகளாக உள்ளன. மத்தியப் பிரதேசத்தின் அலுவல் மொழி இந்தி. கிராமம் முதல் நகரம் வரை அனைத்துப் பகுதிகளிலும் இந்தி பேசக்கூடிய மக்கள் இருக்கிறார்கள். அதேநேரத்தில், இந்தி இந்த மாநிலத்தின் பிராந்திய மொழி அல்ல. மால்வி, புந்தேலி, பகேலி, நிமாரி ஆகியவையே மத்தியப் பிரதேசத்தின் பிராந்திய மொழிகள். மத்தியப் பிரதேசத்தின் முதல்வராக மோகன் யாதவ் ஆட்சி செய்கிறார். ஜக்தீஷ் தேவ்தா, ராஜேந்திர சுக்லா ஆகியோர் துணை முதல்வர்களாக பதவி வகிக்கிறார்கள்.

அகர் மால்வா, அஷோக் நகர், பாலாகாட், போபால், சிந்த்வாரா, குணா, குவாலியர், இந்தூர், ஜபல்பூர், நர்மதாபுரம், நரசிங்பூர், ராஜ்கர், சாகர், உஜ்ஜெய்ன், விதிஷா என 55 மாவட்டங்கள் இந்த மாநிலத்தில் உள்ளன. பாலாகாட், போபால், குணா, இந்தூர், சாகர், உஜ்ஜெய்ன் என 29 மக்களவைத் தொகுதிகளையும், விஜய்பூர், திமானி, சிவ்புரி, பண்டா, பிரித்விபூர், சித்ரகூட், அனுப்பூர், ஜாவெத் என 230 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் கொண்டது இந்த மாநிலம்.

யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட புராதன கோயிலான கஜுராஹோ, யுனஸ்கோவால் புராதனச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள புத்தவிகார் உள்ள சாஞ்சி, கோயில்கள், அரண்மனைகள், மலைக்கோட்டை ஆகியவற்றைக் கொண்ட மாநகரான குவாலியர், 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றான ஓம்காரேஷ்வர், நாட்டின் மிகப் பெரிய கும்பமேளாக்களை நடத்தும் 4 இடங்களில் ஒன்றான உஜ்ஜைனி என இந்த மாநிலம் ஏராளமான அடையாளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் அரசியல் களத்தில் பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் என 5 தேசிய கட்சிகளும், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம் என 6 பல மாநில கட்சிகளும், அகண்ட பாரத சேத்னா தல், ஆசாத் சமாஜ் கட்சி, பாரதிய ஜன்மோர்ச்சா கட்சி, ஜனதா காங்கிரஸ் என 95 பதிவு செய்யப்பட்ட மாநில கட்சிகளும் உள்ளன. இத்தனை கட்சிகள் இருந்தாலும், பிரதான போட்டி என்னவோ பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் மட்டும்தான்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலை எடுத்துக்கொண்டால், இந்தத் தேர்தலில் மொத்தமுள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 28 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் பதிவான 3 கோடியே 65 லட்சத்து 69 ஆயிரத்து 626 வாக்குகளில் 58.54 சதவீத வாக்குகளை பாஜக பெற்றது. 34.82 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி 2.40% வாக்குகளை மட்டுமே பெற்றது.

2014 மக்களவைத் தேர்தலின்போது மொத்தமுள்ள 4 கோடியே 81 லட்சத்து 21 ஆயிரத்து 301 வாக்காளர்களில் 2 கோடியே 92 லட்சத்து 47 ஆயிரத்து 970 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். இதில், பாஜக 54.76 சதவீத வாக்குகளையும், 27 தொகுதிகளையும் கைப்பற்றியது பாஜக. 35.35 சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி 3.85% வாக்குகளை மட்டுமே பெற்றது.

2009 மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 3 கோடியே 80 லட்சத்து 85 ஆயிரத்து 179 வாக்காளர்களில், ஒரு கோடியே 94 லட்சத்து 84 ஆயிரத்து 608 வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். இதில், 43.45% வாக்குகளைப் பெற்ற பாஜக, 16 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 40.14% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 5.85% வாக்குகளைப் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது.

2004 மக்களவைத் தேர்தலின்போது, மொத்தமுள்ள 3 கோடியே 83 லட்சத்து 90 ஆயிரத்து 101 வாக்காளர்களில் ஒரு கோடியே 84 லட்சத்து 63 ஆயிரத்து 451 வாக்காளர்கள் அதாவது 48.09% வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர். இதில், அதிகபட்சமாக 48.13% வாக்குகளைப் பெற்ற பாஜக 25 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 34.07% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடம் பிடித்த காங்கிரஸ் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கடசி 4.75% வாக்குகளை மட்டுமே பெற்றது.

இதேபோல், இந்த மாநிலத்தில் சமீப காலத்தில் நடைபெற்ற சில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து தற்போது பார்ப்போம். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது, மொத்தமுள்ள 5 கோடியே 60 லட்சத்து 57 ஆயிரத்து 953 வாக்காளர்களில் 4 கோடியே 31 லட்சத்து 94 ஆயிரத்து 459 வாக்காளர்கள் அதாவது 77.05% வாக்காளர்கள் வாக்களித்தனர். இதில், அதிகபட்சமாக 48.55% வாக்குகளைப் பெற்ற பாஜக 163 தொகுதிகளில் வெற்றி பெற்று மோகன் யாதவ் தலைமையில் ஆட்சி அமைத்தது. 40.40% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் 66 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி 4.37% வாக்குகளைப் பெற்ற போதிலும், ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.

2018 சட்டப்பேரவைத் தேர்தலை எடுத்துக்கொண்டால், இந்த தேர்தலில் மொத்தமுள்ள 5 கோடியே 4 லட்சத்து 95 ஆயிரத்து 251 வாக்காளர்களில் 3 கோடியே 78 லட்சத்து 54 ஆயிரத்து 811 வாக்காளர்கள் வாக்களித்தனர். அதாவது, 74.97% பேர் வாக்களித்தனர். இதில், பாஜக மொத்தமுள்ள 230 தொகுதிகளிலும் போட்டியிட்டு 109 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 229 தொகுதிகளில் போட்டியிட்டு 114 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி 227 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சமாஜ்வாதி கட்சி 52 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில், சுயேட்சைகள் 4 இடங்களில் வெற்றி பெற்றனர்.

2013 சட்டப்பேரவைத் தேர்தலை எடுத்துக்கொண்டால், இந்த தேர்தலில் மொத்தமுள்ள 4 கோடியே 66 லட்சத்து 36 ஆயிரத்து 788 வாக்காளர்களில், 3 கோடியே 36 லட்சத்து 12 ஆயிரத்து 951 வாக்காளர்கள் அதாவது 72.07% பேர் வாக்களித்தனர். இதில், மொத்தமுள்ள 230 தொகுதிகளில் போட்டியிட்டு 45.19% வாக்குகளைப் பெற்ற பாஜக, 165 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 229 தொகுதிகளில் போட்டியிட்டு 36.79% வாக்குகளையும், 58 இடங்களையும் கைப்பற்றியது. பகுஜன் சமாஜ் கட்சி 227 தொகுதிகளில் போட்டியிட்டு 6.42% வாக்குகளையும், 4 தொகுதிகளையும் கைப்பற்றியது. சுயேட்சைகள் 3 இடங்களில் வெற்றி பெற்றனர். இந்த தேர்தலில் சமாஜ்வாதி கட்சி 164 தொகுதிகளில் போட்டியிட்டு, 1.70% வாக்குகளை மட்டுமே பெற்றது.

2008 சட்டப்பேரவைத் தேர்தலை எடுத்துக்கொண்டால், 3 கோடியே 62 லட்சத்து 66 ஆயிரத்து 969 வாக்காளர்களில் 2 கோடியே 51 லட்சத்து 27 ஆயிரத்து 120 பேர் வாக்களித்தனர். அதாவது, 69.28% வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 230 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 228 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 38.09% வாக்குகளுடன் 143 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இரண்டாம் இடம் பிடித்த காங்கிரஸ் 228 தொகுதிகளில் போட்டியிட்டு 32.85% வாக்குகளுடன் 71 இடங்களை கைப்பற்றியது. 228 தொகுதிகளில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் கட்சி 9.08% வாக்குகளுடன் 7 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில், 201 தொகுதிகளில் போட்டியிட்ட மாநில கட்சியான பாரதிய ஜன சக்தி 5.43% வாக்குகளுடன் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சமாஜ்வாதி கட்சி 187 தொகுதிகளில் போட்டியிட்டு 2.46% வாக்குகளுடன் ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில், 3 சுயேட்சைகள் வெற்றி பெற்றனர்.

2003 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மொத்தமுள்ள 3 கோடியே 79 லட்சத்து 36 ஆயிரத்து 518 வாக்காளர்களில் 2 கோடியே 55 லட்சத்து 13 ஆயிரத்து 530 வாக்காளர்கள் வாக்களித்தனர். அதாவது, 67.25% வாக்குகள் பதிவாகின. இதில், 42.50% வாக்குகளைப் பெற்ற பாஜக 173 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 31.70% வாக்குகளுடன் 38 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. பகுஜன் சமாஜ் கட்சி 10.61% வாக்குகளுடன் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சமாஜ்வாதி கட்சி 5.26% வாக்குகளுடன் 7 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் கட்சியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் தலா ஒரு தொகுதியில் வெற்றி பெற்றன. இந்த தேர்தலில், சுயேட்சைகள் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றனர்.

நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து 2003 வரை காங்கிரஸ் கட்சிதான் இந்த மாநிலத்தை அதிக காலம் ஆண்டு வந்துள்ளது. 2003 தேர்தலுக்குப் பிறகு பாஜகதான் அதிக காலம் இந்த மாநிலத்தை ஆட்சி செய்து வருகிறது. இடையில், 2018 முதல் 2020 வரை சுமார் 15 மாதங்கள் காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் முதல்வராக இருந்தார்.

மத்தியப் பிரதேசத்தின் கடந்த கால் நூற்றாண்டு கால அரசியலைப் பார்க்கும்போது, சட்டமன்றத் தேர்தல்களிலும், நாடாளுமன்றத் தேர்தல்களிலும் பாஜகவே அதிக வெற்றியை பதிவு செய்திருக்கிறது. கனிசமான வாக்கு வங்கியை காங்கிரஸ் கொண்டுள்ள போதிலும், அதற்கேற்ற வெற்றியை அக்கட்சியால் பதிவு செய்ய முடியவில்லை. இரு துருவ அரசியல் வலிமையாக இருப்பதால், பாஜகவும், காங்கிரஸும் தனித்தே தேர்தலை எதிர்கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றன.

எனினும், இந்த மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. மொத்தமுள்ள 29 தொகுதிகளில் 28 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட இருக்கிறது. கஜுராஹோ தொகுதியில் சமாஜ்வாதி கட்சி போட்டியிட இருக்கிறது. பாஜக வழக்கம்போல் தனித்தே தேர்தலை எதிர்கொள்ள திட்டமிட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, மோகன் யாதவை முதல்வராக்கியது. இதன்மூலம், மத்தியப் பிரதேசம் மட்டுமின்றி, உத்தரப் பிரதேசம், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களிலும் செல்வாக்கு செலுத்தக்கூடிய யாதவர்களின் வாக்குகளை ஈர்க்க அக்கட்சி காய் நகர்த்தியது. அதோடு, ஓபிசி வாக்குகளை ஈர்க்கும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.

துணை முதல்வர்களில் ஒருவரான ராஜேந்திர சுக்லா பிராமண சமூகத்தையும், ஜக்தீஷ் தேவ்தா பட்டியலின சமூகத்தையும் சேர்ந்தவர் என்பதால், சாதிய கணக்குகளை பாஜக கச்சிதமாக நிறைவேற்றி இருப்பதாகவும், இது மக்களவைத் தேர்தலில் அக்கட்சிக்கு சாதகமாக அமையும் என்றும் ஒரு தரப்பினர் கருதுகிறார்கள்.

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் ராஜ வம்சத்தைச் சேர்ந்த ஜோதிராதித்ய சிந்தியா கடந்த மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியில் இருந்தார். தற்போது அவர் பாஜகவில் இருக்கிறார். இது இந்த தேர்தலில் பாஜகவுக்கு கூடுதல் சாதகமாக இருக்கும் என்றும் பார்க்கப்படுகிறது.

அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சிக்கு கமல்நாத், திக்விஜய் சிங் போன்ற முக்கிய தலைவர்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் கமல்நாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணையப் போவதாக செய்தி வெளியாகியது. எனினும், அது பொய்த்துப்போனது. ஊடகங்கள்தான் பொய் செய்திகளை பரப்பியதாகவும் காங்கிரஸ் கட்சியில் தான் உறுதியாக இருப்பதாகவும் கமல்நாத் தெரிவித்தார்.

மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு காங்கிரஸ் கடும் போட்டியைத் தரும்; ஆனால் வெற்றி பெறுமா என்ற கேள்வியை பலரும் முன்வைக்கிறார்கள். கடந்த கால தேர்தல் முடிவுகளும் அந்த கேள்வியில் இருக்கும் நியாயத்தை உணர்த்துகிறது. தற்போதைய நிலையில் தேர்தல் ஓட்டத்தில் பாஜக முந்திச் செல்கிறது. இரண்டாம் இடத்தில் காங்கிரஸ் ஓடிக்கொண்டிருக்கிறது. காங்கிரஸால், பாஜகவை முந்த முடியுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

முந்தைய அத்தியாயம்: உத்தராகண்ட்டில் உக்கிரமான பாஜக Vs காங். போட்டி | மாநில நிலவர அலசல் @ மக்களவைத் தேர்தல்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x