Last Updated : 29 Feb, 2024 07:45 PM

 

Published : 29 Feb 2024 07:45 PM
Last Updated : 29 Feb 2024 07:45 PM

உத்தராகண்ட்டில் உக்கிரமான பாஜக Vs காங். போட்டி | மாநில நிலவர அலசல் @ மக்களவைத் தேர்தல்

உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் யஷ்பால் ஆர்யா

மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு பல்வேறு மாநிலங்களின் கள நிலவரம் குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் உத்தராகண்ட் குறித்து தற்போது பார்ப்போம்.

கடந்த 2000-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி உத்தரப் பிரதேசத்தில் இருந்து பிரித்து உருவாக்கப்பட்ட நாட்டின் 27-வது மாநிலம்தான் உத்தராகண்ட். இமயமலை அடிவாரத்தில் உள்ள இந்த மாநிலம் 53,483 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த மாநிலத்தின் எல்லையில் வடக்கே சீனாவும், கிழக்கே நேபாளமும் உள்ளது. தெற்கே உத்தரப் பிரதேசமும், வட மேற்கே இமாச்சலப் பிரதேசமும் உள்ளது.

இயற்கை வளங்கள் நிறைந்த மாநிலம் உத்தராகண்ட். கங்கா, யமுனா, காளி, ராம்கங்கா, தோன் ஆகிய ஆறுகள் இந்த மாநிலத்தை வளமாக்குகின்றன. பனிப்பாறைகளும், பனி மூடிய மலை சிகரங்களும் இங்கே அதிகம். மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 71% காடுகள் உள்ளன. பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு புனித தலங்கள் இந்த மாநிலத்தில் உள்ளன. அந்த வகையில் இது கடவுளின் பூமி என வர்ணிக்கப்படுகிறது.

உத்தராகண்ட் மாநிலத்தின் தலைநகரம் டேராடுன். கங்கை மற்றும் யமுனை நதிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் அமைந்துள்ள இந்த நகரம் இயற்கை எழிலுக்குப் பெயர் பெற்றது. இந்த மாநிலம் கார்வாள், குமோன் எனும் இரண்டு பிராந்தியங்களையும், டேராடுன், ஹரித்துவார், சமோலி, உத்தரகாசி, நைனிடால், அல்மோரா, உதம் சிங் நகர் என 13 மாவட்டங்களையும் கொண்டது.

அல்மோரா, பாரி - கார்வாள், நைனிடால் - உதம்சிங் நகர், ஹரித்துவார், தேசி கார்வாள் ஆகிய 5 மக்களவைத் தொகுதிகளையும், கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கர்ணபிரயாக், ருத்ரபிரயாக், தரம்பூர், முசோரி, ரிஷிகேஷ், பகவான்பூர், ரூர்கீ, சோமேஸ்வர், காட்டிமா என 70 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது உத்தராகண்ட் மாநிலம்.

மாநிலத்தின் முதல்வராக பாஜகவின் புஷ்கர் சிங் தாமி உள்ளார். ஆளுநராக குர்மித் சிங்கும், சபாநாயகராக ரிது கந்தூரி பூஷனும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் கட்சியின் யஷ்பால் ஆர்யாவும் உள்ளனர்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநிலத்தின் மக்கள் தொகை ஒரு கோடியே 86 ஆயிரத்து 292 பேர். இவர்களில் இந்துக்கள் 82.97% ஆகவும், முஸ்லிம்கள் 13.95% ஆகவும், சீக்கியர்கள் 2.34% ஆகவும் உள்ளனர். கார்வாளி, குமோனி, இந்தி ஆகிய மொழிகளை மக்கள் பேசுகிறார்கள். அலுவலக மொழியாக இந்தியும், சமஸ்கிருதமும் இருக்கிறது. கல்வி அறிவு 78.82%. இதில், ஆண்களின் கல்வி அறிவு 87.40% ஆகவும், பெண்களின் கல்வி அறிவு 70.01% ஆகவும் உள்ளது. ஆயிரம் ஆண்களுக்கு 963 பெண்கள் வீதம் உள்ளனர்.

இந்த மாநிலம் தோற்றுவிக்கப்பட்டது முதல் தேசிய கட்சிகளான பாஜகவும் காங்கிரஸுமே மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. பகுஜன் சமாஜ், சிபிஎம் போன்ற கட்சிகள் தேர்தல் அரசியலில் இருந்தாலும், அக்கட்சிகளுக்கு மக்கள் செல்வாக்கு இல்லை. உத்தராகண்ட் மாநிலத்திற்கென்று சில மாநில கட்சிகள் உள்ளன. அவற்றுக்கும் மக்கள் செல்வாக்கு இல்லை.

2019-ம் ஆண்டு கணக்கின்படி இந்த மாநிலத்தில் மொத்தம் 78,56,318 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 41,42,856 பேர் ஆண் வாக்காளர்கள், 37,13,219 பேர் பெண் வாக்காளர்கள், 243 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள். 2019 மக்களவைத் தேர்தலில் 47,91,979 பேர் வாக்களித்தனர். இதில், 61.66% வாக்குகளைப் பெற்ற பாஜக மொத்தமுள்ள 5 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. 31.73% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. 4.52% வாக்குகளைப் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சியும் அனைத்திலும் தோல்வியைத் தழுவியது.

2014 மக்களவைத் தேர்தலின்போது மொத்தமுள்ள 71,27,057 வாக்காளர்களில் 43,43,847 வாக்காளர்கள் வாக்களித்தனர். இதில், 55.93% வாக்குகளைப் பெற்ற பாஜக 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. 34.40% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இந்தத் தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சி 4.78% வாக்குகளையும், சிபிஐ மற்றும் சிபிஎம் தலா 0.15% வாக்குகளையும் பெற்றன.

2009 மக்களவைத் தேர்தலின்போது, மொத்தமுள்ள 58,87,724 வாக்காளர்களில், 53.43% வாக்காளர்கள் அதாவது 31 லட்சத்து 40 ஆயிரத்து 45 பேர் வாக்களித்தனர். இதில், காங்கிரஸ் கட்சி 43.14% வாக்குகளைப் பெற்று 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

2004 மக்களவைத் தேர்தலின்போது, மொத்தமுள்ள 55,62,637 வாக்காளர்களில் 26,73,832 பேர் அதாவது 48.07% வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில், மொத்தமுள்ள 5 தொகுதிகளில் பாஜக 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கடசிகள் தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. தேர்தலில் பதிவான வாக்குகளில் பாஜக 40.98% வாக்குகளையும், காங்கிரஸ் 38.31% வாக்குகளையும் பெற்றன. சமாஜ்வாதி கட்சி 7.93% வாக்குகளைப் பெற்றது. ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாத பகுஜன் சமாஜ் கட்சி 6.77% வாக்குகளைப் பெற்றது.

இந்த புள்ளி விவரங்கள் ஒரு விஷயத்தை உறுதிப்படுத்துகின்றன. உத்தராகண்ட் உருவான பிறகு நடைபெற்ற 4 மக்களவைத் தேர்தல்களில் பாஜக 3-ல் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிலும், கடந்த 2 மக்களவைத் தேர்தல்களிலும் அக்கட்சி 100% வெற்றியை பெற்றுள்ளது.

2022-ல் நடைபெற்ற உத்தராகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் பாஜக 47-ல் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்துள்ளது. இந்தத் தேர்தலில் அக்கட்சி பதிவான வாக்குகளில் 44.33 சதவீதத்தைப் பெற்றுள்ளது. இரண்டாவது இடம் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சி 37.91 சதவீத வாக்குகளையும், 19 தொகுதிகளையும் பெற்றுள்ளது. 5.79% வாக்குகளுடன் பகுஜன் சமாஜ் கட்சி 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. சுயேட்சைகள் இருவர் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர்.

2017 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்தத் தேர்தலில் அக்கட்சி, பதிவான வாக்குகளில் 46.51% வாக்குகளையும், 56 தொகுதிகளையும் பெற்றது. 33.49% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சி, 11 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி 7.04 சதவீத வாக்குகளைப் பெற்ற போதிலும் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. இந்தத் தேர்தலில் சுயேட்சைகள் இருவர் வெற்றி பெற்றனர்.

2012 சட்டமன்றத் தேர்தலின்போது, மொத்தமுள்ள 63,77,330 வாக்காளர்களில் 66.17% பேர் வாக்களித்தனர். இந்த தேர்தலில், 33.79% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் கட்சி 32 தொகுதிகளிலும், 33.13% வாக்குகளைப் பெற்ற பாஜக 31 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. பகுஜன் சமாஜ் கட்சி 12.19% வாக்குகளுடன் 3 தொகுதிகளிலும், உத்தரகாண்ட் கிராந்தி தல் கட்சி 1.93% வாக்குகளுடன் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. சுயேட்சைகள் 3 தொகுதிகளில் வெற்றி பெற்றனர். இந்த தேர்தலை அடுத்து காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.

2007 சட்டப்பேரவைத் தேர்தலின்போது மொத்தமுள்ள 59,85,302 வாக்காளர்களில் 59.45% பேர் அதாவது, 35,58,043 பேர் வாக்களித்தனர். இதில், 31.90% வாக்குகளைப் பெற்ற பாஜக, 34 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 29.59% வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் 21 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை இழந்தது. இந்த தேர்தலில், 11.76% வாக்குகளைப் பெற்ற பகுஜன் சமாஜ் கட்சி, 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. உத்தராகண்ட் கிராந்தி தல் கட்சி 6.38% வாக்குகளையும், 3 தொகுதிகளையும் பெற்றது. சுயேட்சைகள் மூன்று பேர் வெற்றி பெற்றனர்.

மாநிலம் உருவான பிறகு 2002-ல் நடைபெற்ற முதல் சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மொத்தமுள்ள 52,70,375 வாக்காளர்களில் 28,63,886 பேர் அதாவது 54.34% பேர் வாக்களித்தனர். இந்தத் தேர்தலில், 26.91% வாக்குகளுடன் 36 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. 25.81% வாக்குகளைப் பெற்ற பாஜக, 19 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றது. 11.20% வாக்குகளுடன் பகுஜன் சமாஜ் கட்சி 7 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி 4.02% வாக்குகளுடன் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. உத்தராகண்ட் கிராந்தி தல் கட்சி 5.49% வாக்குகளையும், 4 தொகுதிகளையும் பெற்றது. சுயேட்சைகள் மூன்று பேர் வெற்றி பெற்றனர்.

உத்தராகண்ட்டில் இதுவரை 5 சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடந்துள்ளன. இவற்றில், 2002, 2012 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 2007, 2017, 2022 ஆகிய 3 தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

நாட்டின் பிரதான இரு கட்சிகளான பாஜகவும், காங்கிரஸும் வலிமையோடு மோதும் களமாக உத்தராகண்ட் உள்ளது. இவ்விரு கட்சிகளைத் தவிர பிற கட்சிகள் வலிமையுடன் இல்லாதது இவ்விரு கட்சிகளுக்கும் சாதகமான அம்சம். இதன் காரணமாக, தற்போதே மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இங்கு சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது.

பிப்ரவரி 27-ம் தேதி உத்தராகண்ட்டில் ரூ.89,230 கோடி அளவுக்கு 2024-25-க்கான மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில், உள்கட்டமைப்பு, பெண்கள் நலம், சுகாதாரம் மற்றும் கல்விக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டை தாக்கல் செய்து உரை நிகழ்த்திய நிதி அமைச்சர் பிரேம் சந்த் அகர்வால், பெண்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்காக ரூ. 574 கோடியும், கல்வி மற்றும் சுகாதாரத்துக்காக ரூ.15,376 கோடியும், ஏழைகள் நலனுக்காக ரூ. 5,658 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்புக்காக ரூ. 13,780 கோடி, கிராமப்புற வளர்ச்சிக்காக ரூ. 2,910 கோடி, நகர்ப்புற வளர்ச்சிக்காக ரூ. 2,565 கோடி, விவசாயிகள் நலனுக்காக ரூ. 2,415 கோடி, தொழில்நுட்ப கல்வி மற்றும் உயர்கல்விக்காக ரூ. 1,145 கோடி, இளைஞர் நலனுக்காக ரூ. 1,145 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அனைவருடனும் இணைந்து அனைவருக்கான வளர்ச்சி எனும் கொள்கையை முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையிலான அரசு பின்பற்றி வருகிறது எனக் குறிப்பிட்டார்.

இதனையடுத்துப் பேசிய முதல்வர் புஷ்கர் சிங் தாமி, 2022-23 நிதி ஆண்டில் உத்தராகண்ட்டின் பொருளாதார வளர்ச்சி 7.63% ஆக இருந்தது. இது தேசிய சராசரியைவிட அதிகம். 2023-24 நிதி ஆண்டிலும் இதே வளர்ச்சி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, உத்தராகண்ட்டில் 9 லட்சத்து 17 ஆயிரத்து 299 பேர் வறுமையில் இருந்து விடுபட்டுள்ளனர். இந்த பட்ஜெட்டில் ஏழைகள் நலனுக்காக ரூ. 5,658 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ரூ. 600 கோடி உணவுப் பொருட்கள் விநியோகத்துக்காகவும், ரூ. 93 கோடி இலவச வீட்டு வசதி திட்டத்துக்காகவும், ரூ. 55 கோடி இலவச சமையல் எரிவாயு திட்டத்துக்காகவும் செலவிடப்படும் என குறிப்பிட்டார்.

இந்த பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு அறிக்கை வெளியிட்ட சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைரவ் யஷ்பால் ஆர்யா, உத்தராகண்ட்டில் விவசாயம், தோட்டக்கலை போன்ற துறைகள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்துள்ளன. மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து விட்டது. வரிகள் அதிகப்படியாக விதிக்கப்படுகின்றன. பொருளாதாரம் மந்த நிலையில் இருக்கிறது.

போதைப்பொருள் புழக்கமும், குற்றங்களும் அதிகரித்துள்ளன. சுகாதார வசதிகள் நலிவடைந்து வருகின்றன. இவற்றால் உத்தராகண்ட் மக்கள் பெரும் துயரத்தில் இருக்கிறார்கள். பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அது குறித்து அறிவிக்காதது அவர்களை ஏமாற்றமடையச் செய்திருக்கிறது. அதேபோல், விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்படாததால், விவசாயிகளும் ஏமாற்றமடைந்துள்ளனர் என குற்றம் சாட்டி உள்ளார்.

பட்ஜெட்டைத் தாண்டி, மூன்று மாதங்களுக்கு முன்பு உத்தராகண்ட்டில் சுரங்க விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களை 17 நாட்களுக்குப் பிறகு பத்திரமாக மீட்டது, பொது சிவில் சட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியது, வீடுதோறும் குழாய் வழி குடிநீர் விநியோகித்து வருவது உள்ளிட்டவற்றை பாஜக விளம்பரப்படுத்தி வருகிறது. இரு துருவ அரசியல் களம் என்பதால், இம்மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை இப்போதே கணிப்பது கடினம்.

முந்தைய அத்தியாயம் > பாஜக Vs காங்கிரஸ் - வலுவான மோதல் களமாக ராஜஸ்தான் | மாநில நிலவர அலசல் @ மக்களவைத் தேர்தல்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x