Last Updated : 27 Feb, 2018 09:27 AM

 

Published : 27 Feb 2018 09:27 AM
Last Updated : 27 Feb 2018 09:27 AM

உண்மையிலேயே டொனால்டு டிரம்ப் யார்?

மெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் 2016-ல் ஹிலாரி கிளிண்டன் போட்டியிட்டபோது அவர் யார், அவருடைய வாழ்க்கை வரலாறு என்ன என்று சொல்ல நிறைய புத்தகங்கள் எழுதப்பட்டிருந்தன. அதே பதவிக்குப் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப் குறித்து - அவருக்கு எத்தனை மனைவிகள், அவருடைய தொழில் என்ன, அவர் எப்படி அந்தத் தொழிலில் முக்கியப் பிரமுகரானார் என்று ரீம் ரீமாக பத்திரிகைகளில் ஏராளமான கட்டுரைகள் பிரசுரமாகியிருந்தன.

டிரம்பைப் பற்றிய புத்தகம் என்றால், அது அவரே எழுதிக்கொண்டதுதான். அதிலும் தொழிலைப் பற்றிய அவருடைய கோட்பாடுகள்தான் அதிகம். ‘தி ஆர்ட் ஆஃப் த டீல்’ (வாடிக்கையாளர்களைக் கையாளும் கலை) என்ற புத்தகத்தில், ‘மிகச் சில வாடிக்கையாளர்களை மட்டுமே நேருக்கு நேர் சந்திப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

‘சர்வைவிங் அட் தி டாப்’, ‘ஹௌ டு கெட் ரிச்’, ‘டைம் டு கெட் டஃப்’, ‘தி ஆர்ட் ஆஃப் த கம்-பேக்’ என்ற தலைப்புகளில் புத்தகங்களை எழுதி யிருக்கிறார். இவையெல்லாம், ‘எப்படி...’ என்று தொடங்கும் வியாபார ஆலோசனை ரகப் புத்தகங்கள். உண்மையிலேயே அவர் யார், எப்படிப் பெரிய வியாபாரி ஆனார், அரசியலுக்கு வருவதற்குக் காரணம் என்ன என்ற கேள்விகளுக்கெல்லாம் இந்தப் புத்தகங்களில் பதில் இல்லை.

அவருடைய முதல் மனைவி இவானா டிரம்ப், ‘ரைசிங் டிரம்ப்’ என்ற தலைப்பில் 2017 அக்டோபரில் ஒரு புத்தகம் எழுதினார். மிகவும் சுவாரசியமாகவும் பல்வேறு அந்தரங்கத் தகவல்களுடனும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் நிறையப் பேர் வாங்கிப் படித்து ஏமாந்ததுதான் மிச்சம். டிரம்பின் மனைவியாக இருந்துகொண்டு குழந்தைகளை வளர்க்க தான் பட்ட கஷ்டங் களைத்தான் அதில் விவரித்திருக்கிறார்.

டிரம்பின் சகாக்களும் ஒரு பத்திரிகை யாளரும் ஆளுக்கொரு புத்தகம் எழுதியிருக்கின்றனர். அவையும்கூட, அந்தத் தனி மனிதரின் குணங்களை, ஆளுமையை வெளிக்காட்டுவதாக இல்லை. நாடாளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகர் நியூ கிங்ரிச் எழுதியதில் நிறைய ‘அந்த நாள் ஞாபக’ செய்திகள்தான். டிரம்பின் பிரச்சார மேலாளர் கோரி லெவன்டோவ்ஸ்கி (உடன் டேவிட் பாசி) எழுதியுள்ள ‘லெட் டிரம்ப் பி டிரம்ப்’ என்ற புத்தகமும், ‘மற்றவர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட - உழைக்கும் வர்க்கத்தின் தலைவர் - டிரம்ப்’ என்றே கூறுகிறது. கிறிஸ்தவ ஒலிபரப்பு நிறுவனத்தின் டேவிட் பிராடி (உடன் ஸ்காட் லேம்ப்), டிரம்புடனான நேர்காணல்களைத் தொகுத்து, அவர் எவ்வளவு பக்திமான் என்று (அவருடைய பாவங்களை மன்னித்து!) விவரித்திருக்கிறார். மைக்கேல் உல்ஃப் எழுதிய ‘ஃபயர் அண்ட் ஃபியூரி’ ஓரளவுக் குத் திருப்தியைத் தரும் புத்தகம்.

புலிட்சர் விருதுபெற்ற எழுத்தாளர் டேவிட் கே ஜான்ஸ்டன் எழுதியுள்ள இரு புத்தகங்களும் டிரம்பின் இளமைக்கால வாழ்க்கையைத் தோண்டியெடுக்க முயல்கின்றன. அத்துடன், அதிபராக அவர் ஆட்சிசெய்வதையும் கடுமை யாக விமர்சித்துள்ளன. ‘டிரம்போக்ரசி: தி கரப்ஷன் ஆஃப் த அமெரிக்கன் ரிபப்ளிக்’ என்றொரு புத்தகம் எழுதியிருக்கிறார் டேவிட் ஃப்ரம். ‘டிரம்பின் முதலாண்டு’ என்று அவரு டைய ஓராண்டுச் செயல்பாட்டை விவரித்திருக்கிறார் மைக்கேல் நெல்சன்.

இந்தப் புத்தகங்கள் யாவும், டிரம்ப் என்ன செய்திருக்கிறார் என்று சொல்கின்றனவே தவிர, உண்மையிலேயே டிரம்ப் யார் என்று சொல்லவில்லை. உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த நாட்டின் உயர் பதவிக்கு வருவார் என்று கற்பனை கூடச் செய்து பார்க்கப்படாதவர் டிரம்ப் என்பதே அவருடைய தனிச் சிறப்பு!

தமிழில்: ஜூரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x