Last Updated : 19 Feb, 2024 05:23 PM

 

Published : 19 Feb 2024 05:23 PM
Last Updated : 19 Feb 2024 05:23 PM

பாஜக Vs காங்கிரஸ் - வலுவான மோதல் களமாக ராஜஸ்தான் | மாநில நிலவர அலசல் @ மக்களவைத் தேர்தல்

மக்களவைத் தேர்தல் 2024-ஐ முன்னிட்டு மாநில வாரியாக கள நிலவரம் குறித்து பார்த்து வருகிறோம். கடந்த பகுதியில் மகாராஷ்டிர மாநில நிலவரம் குறித்து பார்த்தோம். இப்போது ராஜஸ்தான் மாநிலத்தை அலசுவோம்.

இந்தியாவின் வட மேற்கே பாகிஸ்தானை ஒட்டி உள்ள மாநிலம் ராஜஸ்தான். இந்த மாநிலத்தில் கங்காநகர், பிகானிர், ஜெய்ப்பூர், ஆல்வார், பாரத்பூர், அஜ்மிர், ஜோத்பூர், பார்மெர், உதய்பூர் என மொத்தம் 25 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் 4 எஸ்சி தொகுதிகளும், 3 எஸ்டி தொகுதிகளும் அடங்கும். இதேபோல், இந்த மாநிலத்தில் கரண்பூர், சூரத்கர், சூரஜ்கர், சங்காரியா, ஹனுமன்கர், பத்ரா, தாராநகர், ஆம்பெர், பன்சூர், ராம்கர், தோல்பூர், மால்புரா, போக்கரான், லத்புரா என 200 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் 34 எஸ்சி தொகுதிகளும், 25 எஸ்டி தொகுதிகளும் அடங்கும்.

இந்த மாநிலத்தில் 2 கோடியே 76 லட்சத்து 12 ஆயிரத்து 224 ஆண் வாக்காளர்கள், 2 கோடியே 53 லட்சத்து 18 ஆயிரத்து 304 பெண் வாக்காளர்கள், 624 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 5 கோடியே 29 லட்சத்து 31 ஆயிரத்து 152 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின்போது 74.45 சதவீத வாக்குகள் பதிவாகின. அந்த வகையில், அதிக அளவில் வாக்காளர்கள் வாக்களிக்க வரும் மாநிலங்களில் ஒன்றாக ராஜஸ்தான் உள்ளது.

இந்த மாநிலத்தில் கடந்த பல பத்தாண்டுகளாகவே பாஜக, காங்கிரஸ் என இருமுனை அரசியல்தான் உள்ளது. இவ்விரு கட்சிகள்தான் மாநிலத்தின் அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன. அதேநேரத்தில், பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஹனுமன் பெனிவால் தலைமையிலான ராஷ்ட்ரிய லோக் தந்திரிக் கட்சி, மோகன் லால் ராவத் தலைமையிலான பாரதிய ஆதிவாசி கட்சி ஆகிய கட்சிகள் குறைந்த செல்வாக்குடன் மாநிலத்தில் இயங்கி வருகின்றன.

2023 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: ராஜஸ்தானில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 42.10 சதவீத வாக்குகளுடன் 115 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்முறை சட்டமன்ற உறுப்பினரான பஜன்லால் ஷர்மா மாநிலத்தின் முதல்வராக உள்ளார். ராஜ வம்சத்தைச் சேர்ந்த தியாகுமாரியும், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பிரேம் சந்த் பைரவாவும் துணை முதல்வர்களாக உள்ளனர்.

இந்தத் தேர்தலில், இரண்டாம் இடம் பிடித்த காங்கிரஸ் 39.96 சதவீத வாக்குகளுடன் 70 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாரத் ஆதிவாசி கட்சி 2.36 சதவீத வாக்குகளுடன் 3 இடங்களில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி 1.83 சதவீத வாக்குகளுடன் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ராஷ்ட்ரிய லோக் தந்திரிக் கட்சி 2.40 சதவீத வாக்குகளைப் பெற்று ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சி 0.21 சதவீத வாக்குகளைப் பெற்று ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.

2018 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள்: கடந்த 2018-ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 39.30 சதவீத வாக்குகளுடன் 100 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 38.77 சதவீத வாக்குகளுடன் 73 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பகுஜன் சமாஜ் கட்சி 4.26 சதவீத வாக்குகளுடன் 6 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக் தந்திரிக் கட்சி 2.40 சதவீத வாக்குகளுடன் 3 தொகுதிகளிலும், பாரதிய ஆதிவாசி கட்சி 0.72 சதவீத வக்குகளுடன் 2 தொகுதிகளிலும், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 1.22 சதவீத வாக்குகளுடன் 2 தொகுதிகளிலும், ராஷ்ட்ரிய லோக் தள் கட்சி 0.33 சதவீத வாக்குகளுடன் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன.

2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: மக்களவைத் தேர்தலை பொறுத்தவரை, கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் பாஜக 24 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் பாஜக 59 சதவீத வாக்குகளைப் பெற்றது. ராஷ்ட்ரிய லோக் தந்திரிக் கட்சி 2 சதவீத வாக்குகளுடன் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 34.56 சதவீத வாக்குகளை பெற்றபோதும், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. வேறு எந்த கட்சியும் ஒரு சதவீத வாக்கைக்கூட பெறவில்லை.

2014 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது மொத்தமுள்ள 25 தொகுதிகளிலும் பாஜகவே வெற்றி பெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளில் அக்கட்சி 55.61 சதவீத வாக்குகளைப் பெற்றது. காங்கிரஸ் கட்சி 30.73 சதவீத வாக்குகளைப் பெற்றபோதும் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறவில்லை. இந்தத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி 2.37 சதவீத வாக்குகளைப் பெற்றது. வேறு எந்தக் கட்சியும் ஒரு சதவீத வாக்கைக்கூட பெறவில்லை.

2009 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: கடந்த 2009 மக்களவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 47.19 சதவீத வாக்குகளைப் பெற்று 20 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 36.57 சதவீத வாக்குகளைப் பெற்ற போதிலும், 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. சுயேட்சை ஒருவர் 9.31 சதவீத வாக்குகளுடன் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றார்.

2004 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: 2004 மக்களவைத் தேர்தலின்போது பாஜக 49.01 சதவீத வாக்குகளுடன் 21 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 41.42 சதவீத வாக்குகளைப் பெற்ற போதிலும், 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

1999 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: கடந்த 1999 மக்களவைத் தேர்தலில் பாஜக 47.23 சதவீத வாக்குகளுடன் 16 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சி 45.12 சதவீத வாக்குகளுடன் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

1998 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: கடந்த 1998 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் 44.45 சதவீத வாக்குகளுடன் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக, 41.65 சதவீத வாக்குகளுடன் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

கடந்த 6 மக்களவைத் தேர்தல்களை கணக்கில் எடுத்துக்கொண்டால் 4 முறை பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு முறை (1998 மற்றும் 2009) மட்டும் காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில், சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை கடந்த 1993 முதல் கடந்த 30 ஆண்டுகளாக பாஜகவும் காங்கிரஸும் மாறி மாறி ஆட்சிக்கு வந்துள்ளன. இதில் ஒரு தேர்தல்கூட விதிவிலக்கல்ல.

மக்கள் தொகை விகிதம்: மத ரீதியாக மக்கள் தொகை: 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ராஜஸ்தானில் இந்துக்கள் 88.49 சதவீதமும், முஸ்லிம்கள் 9.07 சதவீதமும், சீக்கியர்கள் 1.27 சதவீதமும், சமணர்கள் 0.91 சதவீதமும், கிறிஸ்தவர்கள் 0.14 சதவீதமும் உள்ளனர்.

கல்வியறிவு: ராஜஸ்தானில் எழுத்தறிவு 66.10 சதவீதம். நகர்ப்புறங்களில் 79.70 சதவீதமும், கிராமப்புறங்களில் 61.40 சதவீதமும் உள்ளது. ஆண்கள் எழுத்தறிவு 79.20 சதவீதம் உள்ளது. இதில், நகர்ப்புறங்களில் 87.90 சதவீதமும், கிராமப்புறங்களில் 76.20 சதவீதமும் உள்ளது. பெண்களின் எழுத்தறிவு 52.10 சதவீதமாக உள்ளது. இதில், நகர்ப்புறங்களில் 70.70 சதவீதமும், கிராமப்புறங்களில் 45.80 சதவீதமும் உள்ளது.

அரசியல் சூழல்: ராஜஸ்தான் மாநில முதல்வராக கடந்த ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி பஜன்லால் ஷர்மா பதவியேற்றார். அவரது தலைமையிலான அரசு பதவியேற்று 2 மாதங்கள்தான் நிறைவடைந்திருக்கின்றன. 6 மாதங்கள் நிறைவடைவதற்குள் மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்துவிடும் என்பதால், பஜன்லால் ஷர்மா அரசின் தாக்கம் வரக்கூடிய மக்களவைத் தேர்தலில் பெரிதாக எதிரொலிக்காது என்றே கருதப்படுகிறது.

புதிதாக ஆட்சிக்கு வருபவர்கள் முந்தைய ஆட்சியாளர்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைப்பது வழக்கம். தற்போது அவரது அரசு அதைத்தான் செய்து வருகிறது. சமீபத்தில் ராஜஸ்தான் சட்டமன்றத்தில் நிகழ்ந்த பட்ஜெட் உரையில் கூட, முந்தைய அரசு மீது பல்வேறு புகார்கள் முன்வைக்கப்பட்டன. இதனால் அசோக் கெலாட், சச்சின் பைலட் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் தற்போது அடக்கி வாசித்து வருகிறார்கள்.

காங்கிரஸுக்கு 'கை' கொடுக்குமா ராஜஸ்தான்? - கட்சியின் செல்வாக்கு நிறைந்த மாநிலம் என்பதால் காங்கிரஸுக்கு ராஜஸ்தான் மிக முக்கியமான மாநிலம். கடந்த காலங்களில் மக்களவைத் தேர்தல்களில் பல தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் காங்கிரஸ் தனது வாக்கு பலத்தை இழந்தது இல்லை. கடந்த காலங்களில் மக்களவைத் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி இம்முறை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது.

அதன் ஒரு பகுதியாகவே, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார் எனக் கூறப்படுகிறது. அதோடு, மாநில காங்கிரஸின் இரு பெரும் தலைவர்களான அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே வெற்றிகரமான சமரசத்தை காங்கிரஸ் மேலிடம் மேற்கொண்டதையும் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள். இதனால், மிகுந்த நம்பிக்கையுடன் இந்த மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள ராஜஸ்தான் காங்கிரஸ் தயாராகி வருகிறது.

களத்தில் வலிமையுடன் நிற்கும் பாஜக: அதேநேரத்தில், பாஜகவும் மிகுந்த வலிமையுடன் களத்தில் உள்ளது. பாஜக மட்டுமின்றி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளும் வலிமையாக இருக்கக் கூடியதாக கருதப்படும் மாநிலம் ராஜஸ்தான்.

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா இம்முறையும் முதல்வராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக பஜன்லால் ஷர்மா முதல்வரானார். அவரது தேர்வு ஏற்படுத்தும் அதிருப்தியை மட்டுப்படுத்தவே ராஜ வம்சத்தைச் சேர்ந்த தியாகுமாரியும், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த பிரேம் சந்த் பைரவாவும் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டதாக ஒரு கருத்து நிலவுகிறது. அந்த வகையில், இந்த நாடாளுமன்றத் தேர்தல் என்பது பஜன்லால் ஷர்மாவுக்கான ஒரு பரிட்சையாகவே பார்க்கப்படுகிறது.

பாஜகவில் இணைந்த பழங்குடியின தலைவர்: இதனிடையே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பழங்குடியின தலைவரான மகேந்திரஜீத் மாளவியா பாஜகவில் இணைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியைவிட பாஜக செல்வாக்காக உள்ள பகுதி தெற்கு ராஜஸ்தான் பகுதியைச் சேர்ந்தவர் இவர். பன்ஸ்வாரா மாவட்டத்தில் உள்ள பகிதோரா சட்டமன்றத் தொகுதியில் இருந்து கடந்த 2008 முதல் தொடர்ந்து 4 சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்றவர் மகேந்திரஜீத் மாளவியா. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், மகேந்திரஜீத் மாளவியா பாஜகவில் இணைந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

தற்போதைய சூழலில், பாஜக, காங்கிரஸ் எனும் வலிமையான இரு சிங்கங்கள் மோதும் களமாகவே ராஜஸ்தான் உள்ளது. இதில், எந்த சிங்கம் வெற்றி பெறும் என்பது போகப்போகத் தெரியும்?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x