Published : 05 Feb 2018 09:08 AM
Last Updated : 05 Feb 2018 09:08 AM
இ
லங்கையில் பிப்ரவரி 10-ம் தேதி நடைபெறவுள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தல், தேசிய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. அதிபர் மைத்ரிபால சிறிசேனா - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இருவரும் அரசியல் மனமாச்சரியங்களை ஒதுக்கிவைத்து, தேசிய அரசை அமைத்து மூன்று ஆண்டு கள் நிறைவுபெற்றுவிட்டன. இந்நிலையில், கூட்டணி ஆட்சியின் செயல்பாட்டை மக்கள் எடைபோடுவதற்கான வாய்ப்பாக இந்தத் தேர்தல் கருதப்படுகிறது.
மிக முக்கியமாக, சிறிசேனா தலைமையிலான இலங்கை சுதந்திரக் கட்சியும் (எஸ்.எல்.எஃப்.பி), ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் (யுஎன்பி) ஒன்றையொன்று எதிர்த்து, இத்தேர்தலில் போட்டியிடுகின்றன. இவ்விரு கட்சிகளுக்கிடையே நிலவும் பிளவு, பாதுகாப்பற்ற உணர்வு, கசப்பு ஆகியவை அனல் பறக்கும் பிரச்சாரங்களில் வெளிப்படுகின்றன. எனவே, தேர்தல் முடிவு எப்படியிருந்தாலும், உள்ளாட்சித் தேர்தலுக்குப் பிறகு இந்த தேசியக் கூட்டணி அரசு நிலைத்திருக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.
உள்ளுக்குள் மோதல்
‘அரசியல் சட்டத்தைத் திருத்துவோம், போருக்குப் பிறகு இலங்கையின் அனைத்து இன மக்களிடையே யும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம், பத்து லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம், பொருளாதார வளர்ச்சிக்குப் பாடுபடுவோம்’ என்றெல்லாம் இரு கட்சிகளும் இணைந்த பிறகு அளித்த வாக்குறுதி கள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. மகிந்த ராஜபக்ச அதிபராகப் பதவி வகித்த காலத்தில், நிர்வாகத் தில் நடந்த பல்வேறு ஊழல்களை விசாரிக்கவும் ஊழல் பேர்வழிகளைத் தண்டிக்கவும் அதிபர் சிறிசேனா தவறிவிட்டதாக அனைவருமே சாடுகின்றனர். இந்நிலையில், தன்னுடைய அரசில் இடம்பெற்றுள்ள கூட்டணிக் கட்சி யான ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்தவர்களின் ஊழல்களைப் பற்றிப் பேசுவதில் சிறிசேனா அக்கறை காட்டுகிறார். 2015-ல் இலங்கையின் மத்திய வங்கியில் கடன் பத்திர வெளியீட்டில் நடந்த ஊழலில் அரசுக்கு 11,145 மில்லியன் இலங்கை ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அதிபர் நியமித்த விசாரணைக் கமிஷன் கண்டுபிடித் திருக்கிறது. இந்த ஊழலுக்கு மத்திய வங்கியின் தலைவர்தான் காரணம் என்று விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த ஊழலில் முன்னாள் நிதி - வெளியுறவுத் துறை அமைச்சர் ரவி கருணநாயகேவுக்கும் தொடர்பு இருப்பதாக விசாரணை அறிக்கை குற்றம்சாட்டுகிறது. மத்திய வங்கியின் கவர்னரை பிரதமர் ரணில்தான் தேர்ந்தெடுத்தார் என்பதுடன், ரவி கருணநாயகேவும் ரணிலுக்கு மிகவும் வேண்டப்பட்டவர்தான். எனவே, மத்திய வங்கியின் ஊழலைக் கண்டிப்பதன் மூலம் ரணிலைக் கண்டித்துவருகிறார் அதிபர் சிறிசேனா. உள்ளாட்சி மன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னதாக அதாவது, பிப்ரவரி 6-ல் கடன் பத்திர ஊழல் மற்றும் இதர மோசடிகள் - ஊழல்கள் குறித்து இரண்டு அறிக்கைகள் மீது இலங்கை நாடாளுமன்றம் விவாதிக்கவிருக்கிறது.
ஊழல் விவகாரங்களை அதிபர் சிறிசேனா பேசுவதில் தவறில்லை என்கின்றனர் அவருடைய ஆதரவாளர்கள். இந்தத் தேர்தலில் அவர் இலங்கை சுதந்திரக் கட்சியின் தலைவர் பங்கையும் ஆற்ற வேண்டியிருப்பதை சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால், சிறிசேனாவின் பேச்சு ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரை எரிச்சலடைய வைத்திருக்கிறது. சட்டம் இயற்றும் நிர்வாக அதிகாரமுள்ள அதிபர் பதவி யைக் கைவிடுவேன் என்றும் பதவிக் காலத்தைக் குறைத்துக்கொள்ளத் தயார் என்றும் மூன்று ஆண்டு களுக்கு முன்னால் முழங்கியவர் சிறிசேனா. ஆனால், இப்போது தனது பதவிக் காலம் ஆறு ஆண்டுகளுக்கா, ஐந்து ஆண்டுகளுக்கா என்று உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டதிலிருந்தே அவருடைய பதவி ஆசை அம்பலமாகிவிட்டது என்று அவர்கள் சாடுகின்றனர்.
மும்முனைப் போட்டி
உள்ளாட்சி மன்றத் தேர்தல் இவ்விரு கட்சிகளுடன் முடிந்துவிடவில்லை. இலங்கை சுதந்திரக் கட்சியில் இருந்து பிரிந்த ஒரு பகுதிக்குத் தலைமை வகிக்கும் மகிந்த ராஜபக்ச ‘இலங்கை பொதுஜன பெரமுன’ (எஸ்எல்பிபி) என்ற கட்சிக்குத் தலைமை வகிக்கிறார். இதை இலங்கை மக்களின் முன்னணி என்றும் அழைக்கிறார். எனவே, உள்ளாட்சி மன்றத் தேர்தலில் வலுவான மும்முனைப் போட்டி, மூன்று கட்சிகளுக்கிடையே நடக் கிறது. கடன் பத்திர ஊழலால் ஐக்கிய தேசியக் கட்சி தோல்விகளைச் சந்திக்குமா அல்லது வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததால் சிறிசேனாவின் கட்சிக்கு இழப்பு அதிகமாகுமா அல்லது மகிந்த ராஜபக்சவின் கட்சி இலங்கை சுதந்திரக் கட்சியின் வாக்குகளைப் பிரித்துவிடுமா என்றெல்லாம் பார்க்க வேண்டும்.
மேலும், தேசிய அரசால் புதிய அரசியல் சட்டத்தை வகுக்க முடியவில்லை. தமிழர்களின் பிரச்சினை களுக்குச் சுமுக தீர்வு காண முடியவில்லை, போர்க் குற்றம் செய்தவர்களை அடையாளம் கண்டு சிறையில் தள்ள முடியவில்லை, வேலை இல்லாத இளைஞர் களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. விஷம்போல் ஏறும் விலைவாசியால் கிராமப்புற - நகர்ப்புற ஏழைகளின் வாழ்க்கை நிலை மோசமாவதைத் தடுக்க முடியவில்லை. இவையும் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் முக்கிய காரணிகளாக இருக்கும்.
மறக்கப்பட்ட பிரச்சினைகள்
உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தலாக இருந்தாலும் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களுமே தங்களுடைய அரசியல் எதிர்காலத்துக்காகத்தான் இதில் தீவிரம் காட்டுகின்றனர். எனவே, சட்ட விரோத கனிமக் கொள்ளை, பணத்துக்காகக் காடுகள் அழிப்பு, பாசன வசதி பற்றாக்குறை, குடிநீர்த் தட்டுப்பாடு ஆகியவை குறித்து அதிகம் பேசுவதில்லை. ‘போரினால் மிகவும் பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்களில் மட்டுமல்லாது, நாடு முழுவதும் மக்களைப் பெரிதும் வாட்டிவரும் பிரச்சினை வேலைவாய்ப்பின்மை. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம் என்று வாக்குறுதி தந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அதை நிறைவேற்றவில்லை’ என்று சுட்டிக்காட்டுகிறது இலங்கையில் அதிகம் விற்பனையாகும் ‘தி சண்டே டைம்ஸ்’ பத்திரிகை.
எஞ்சியிருக்கும் இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற நெருக்கடி அரசுக்கு உள்ளேயும் வெளியேயும் தீவிரமடைந்துவருகிறது. இலங்கையின் தென் மாவட்டங்களில் ராஜபக்சக்களுக்கு இன்னமும் ஆதரவு குறையாமல் இருப்பதால், இப்போதைய அரசின் தோல்வி கள் அந்தக் கட்சி செல்வாக்கு பெற வழிவகுத்துவிடும். உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிந்த பிறகு, இலங்கை சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி இரண்டும் முடிவுகளைப் பற்றிக் கவலைப்படாமல், தேசிய ஆட்சி அமைத்தபோது கொடுத்த வாக்குறுதிகளை விரைந்து செயல்படுத்தினால்தான் செல்வாக்கைத் தக்க வைத்துக்கொள்ள முடியும்.
இரண்டும் சேர்ந்த கலவை
உள்ளாட்சி மன்றத் தேர்தல் முழுவதுமே பாதகமான அம்சங்களுடன் இல்லை. 1.6 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கப்போகும் இந்தத் தேர்தலில், 25% இடங்கள் மகளிருக்காக முதல் முறையாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் 60% இடங்களில் வார்டுகளில் போட்டியிட்டு வென்றவர்களாலும், 40% இடங்கள் கட்சிகளுக்குக் கிடைத்த வாக்குகளின் பேரில் விகிதாச்சார அடிப்படையிலும் நிரப்பப்படும்.
இந்தத் தேர்தல் மூலம் மகிந்த ராஜபக்சவுக்கு அரசியல் மறுவாழ்வு கிடைத்துவிட்டால், அதற்கு இரண்டு தேசியக் கட்சிகளும்தான் பொறுப்பு. கடந்த மூன்று ஆண்டுகால ஆட்சி தமிழர்கள் உட்பட அனைத்துத் தரப்பினருக்குமே ஏமாற்றத்தைத் தந்துள்ளது. தேச நலனில் அக்கறைகொண்டு, இரு பெரிய கட்சிகள் இணைந்து ஆட்சி அமைத்தும்கூடச் செயல்படும் தன்மையுடன் அரசு இல்லை. அடிக்கடி கூட்டணிக் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட பதற்றத்தைத் தணிப்பதிலேயே பெரும்பாலான நேரம் வீணாகிவிட்டது. தேர்தலின் முடிவுகளால் இலங்கை அரசுக்கு உடனடி ஆபத்து இல்லையென்றாலும், பல வகைகளில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்தத் தேர்தல்!
தமிழில்: சாரி,
©: ‘தி இந்து’ ஆங்கிலம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT