Published : 15 Feb 2018 09:03 AM
Last Updated : 15 Feb 2018 09:03 AM
எ
ந்த ஒருவரும் அழியாப் புகழ் பெறுவதை இந்த உலகம் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளாது; ஷேக்ஸ்பியர் மட்டும் விதிவிலக்கா? எத்தனை நாளைக்குத்தான் அவரைப் புகழ்ந்துகொண்டிருப்பது? அவரே சொந்தமாக எல்லாவற்றையும் இயற்றினாரா அல்லது யாராவது 'மண்டபத்திலிருந்து' எழுதிக்கொடுத்தார்களா என்று ஆராய முற்பட்டார்கள் அறிஞர்கள் சிலர். பாட்டெழுதி பெயர் வாங்கும் புலவர்களுக்கு நடுவில் 'மூலம் எது?’ என்று கண்டுபிடிக்கும் புலவர்கள் இவர்கள். அப்படி மூலத்தைக் கண்டுபிடிக்கவும் மூளை தேவையல்லவா, இவர்களுக்கு உண்டா என்று நீங்கள் கேட்கலாம். அதற்குத்தான் இப்போது நவீன கணினி மென்பொருள் வந்துவிட்டதே? அதை மட்டும் வைத்துக்கொண்டால் போதுமா? ஷேக்ஸ்பியருடைய காலத்துக்கு முன்னால் வாழ்ந்த ஜார்ஜ் நார்த் 1576-ல் எழுதிய, இதுவரை பிரசுரத்துக்கே வராத கையெழுத்துப் பிரதி வடிவிலான 'புரட்சி மற்றும் புரட்சியாளர்கள் பற்றிய சிறு விவாதம்' (A Brief Discourse of Rebellion and Rebels) என்ற ஆக்கம் இவர்கள் கையில் கிடைத்தது. ஒரு மன்னனுக்கு எதிராகப் புரட்சி செய்யும்போது ஏற்படக்கூடிய அபாயங்களை விளக்குகிறது அது.
கல்லூரி, பல்கலைக்கழக ஆய்வு மாணவர்களும் பேராசிரியர்களும் எழுதித்தரும் ஆய்வுக் கட்டுரைகள் 'ஒரிஜினல்'தானா என்று சோதிக்கப் பயன்படும் மென்பொருளைப் பயன்படுத்தி இந்த ஆக்கத்தையும் பிறகு ஷேக்ஸ்பியரின் ஆக்கங்களையும் ஒப்பிட்டு ஆராய்ந்தார்கள். ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் வரும் தன்னுரைகள் மற்றும் பத்திகளில் 20 அதில் இருந்தன. ரிச்சர்ட்-3 என்ற நாடகத்தில் கிளொவ்சஸ்டரின் உரத்த சிந்தனை, மேக்பத் நாடகத்தில் இடம் பெறும் வெவ்வேறு ஜாதி நாய் இனங்களை மனிதர்களுடன் ஒப்பிடுவது, கிங் லியர் நாடகத்தில் வரும் கோமாளியின் தீர்க்கதரிசனம், ஹென்றி-6 நாடகத்தில் ஜேக் கேட் கதாபாத்திரம் அலெக்சாந்தர் ஐடனுடன் சண்டையில் மரணம் அடைவது போன்றவை உட்பட.
ஷேக்ஸ்பியரின் ஆக்கங்களை ஆய்வு செய்த அறிஞர்கள் யாருமே ஜார்ஜ் நார்த்தின் இந்தக் கைப்பிரதியை வாசித்ததே இல்லை. 'டிஸ்கோர்ஸ்' என்ற இந்த ஆக்கம் மட்டுமல்ல; இதைப்போல ஏராளமானவை ஷேக்ஸ்பியரின் ஆக்கங்களுக்கு ஆதர்சங்களாக இருந்துள்ளன என்று அறிஞர்கள் டென்னிஸ் மெக்கார்த்தி, ஜுன் ஷ்லுட்டர் இருவரும் தெரிவிக்கின்றனர். ஜார்ஜ் நார்த்தின் இந்த நூல் பாய்டெல் அண்ட் ப்ரூவர் ஆகியோரால் பிரிட்டிஷ் நூலக உதவியுடன் இம் மாதம் 16-ல் (நாளை) வெளிவருகிறது.
டிஜிட்டல்மயம் ஏற்படுவதற்கு முன்னால் இருவேறு ஆக்கங்களை ஒப்பிட்டு, ஒன்றிலிருக்கும் வார்த்தைகள் இன்னொன்றில் எத்தனை முறை வருகிறது, எந்த விகிதத்தில் அவை இடம் பெறுகிறது என்றெல்லாம் அளந்து கண்டுபிடிக்கவே முடியாது.
இம் மாதிரியான காட்சிகள் இருவேறு எழுத்தாளர்களுக்குத் தோன்றும், அப்போது அதற்கேற்ற வார்த்தைகளும் அப்படியே தோன்றியிருக்கும் என்றுதான் எண்ணத்தோன்றும். ஷேக்ஸ்பியரின் ஆக்கங்களுக்கு மூலங்களாக இருந்தவை தினந்தோறும் கிடைத்துவிடுவதில்லை. இது கிடைத்தது அரியதொரு நிகழ்ச்சி.
ஷேக்ஸ்பியரின் நாடகங்கள், கவிதைகளின் மூலங்கள் என்று தொகுக்கப்பட்ட நூல் வரிசைகள் மட்டுமே எட்டு தொகுப்புகள் என்று தெரிகிறது. இந்த மூல நூல்கள் அடிக்குறிப்புடன் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஷேக்ஸ்பியர் பல நூல்களைப் படித்துள்ளார், அவற்றின் உந்துதலால் பல புதிய படைப்புகளை இயற்றினார், அப்போது மூலத்தின் சில வார்த்தைகளையும் காட்சிகளையும் கையாண்டார் என்று கொள்வதில் தவறேதும் இல்லை. எத்தனை மூலங்களிலிருந்து எடுத்திருந்தாலும் ஷேக்ஸ்பியரின் திறமையையும் நேர்மையையும் சந்தேகிக்க இடமில்லை. அத்தனை நூல்களையும் படித்த பிறர் ஷேக்ஸ்பியரைப்போல படைக்க முடியவில்லை, காலம் கடந்தும் நிற்க முடியவில்லை என்பதே அவருடைய சிறப்பு.
- வ.ரங்காசாரி, தொடர்புக்கு:
rangachari.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT