Published : 26 Feb 2018 08:42 AM
Last Updated : 26 Feb 2018 08:42 AM

களங்கமின்மையே போய்வா!

மி

கத் தாமதமாக, 1991-ல் எனது பிளஸ் டூ கணித இறுதித் தேர்வுக்கு இரண்டு நாட் களுக்கு முன்னர் விஜி என்ற கதாபாத்திரமாக ஸ்ரீதேவி என்றைக்குமான தோழியாக அறிமுகமானார். பள்ளியில் சிறப்பு வகுப்புக்குப் போவதாக வீட்டில் சொல்லிவிட்டு, ஒரு சனிக் கிழமையில் ரத்னா திரையங்கில் காலைக் காட்சி யாக மறு வெளியீட்டில் வந்திருந்த ‘மூன்றாம் பிறை’க்குச் சென்றிருந்தேன்.

‘வானெங்கும் தங்க விண்மீன்கள் விழி இமை மூட... சூரியன் வந்து கடல் குளித்தேறும் நேரம்…’ என அப்படத்தில் ஸ்ரீதேவி அறிமுகமாகும் பாடலும் அதன் காட்சிகளும் ஒரு கல்மிஷமற்ற காலத்தின் மாலைச் சூரிய ஒளியால் நிரம்பியது. அந்தப் பொன்னொளி தன் முகத்தில் படர குழந்தைமையுடன் ஸ்ரீதேவி அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் பைத்தியக்காரத்தனமாகவும் சிறுபிள்ளைத்தனமாகவும் நடிக்காத கதாநாயகிகளே இல்லையென்று சொல்லிவிடலாம். கதைப்படி பைத்தியமாவதற்கு வாய்ப்பில்லாவிட்டாலும் கதைப்படி சிறுபிள்ளைத்தனமாக இருக்க வேண்டியதில்லாவிட்டாலும் பெரும்பாலான கதாநாயகிகளின் கதாபாத்திர முதிர்ச்சி என்பது 12 வயதைத் தாண்டாதது. விஜயகுமாரியிலிருந்து ஜெனிலியா வரை நமது ஞாபகத்துக்கு வந்துபோவார்கள். கதைப்படியே நினைவுகள் பாதிக்கப்பட்டு, பேதைமைக்குள் தள்ளப்பட்ட ஒரு பருவப் பெண்ணின் கதாபாத்திரத்தை நம்பகத்தன்மையுடன் செய்த அரிய நடிகைகளில் ஒருவர் ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவியின் சேட்டைகள் எதுவும் இத்தனை காலம் தாண்டியும் முகஞ்சுளிக்க வைக்கவில்லை. கழுதை மீது ஏறிச் சவாரி செய்யும் ஸ்ரீதேவியை கமல் முகம் சுளித்து இறக்கும்போதும் அந்தக் காட்சி இன்னும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. வண்ணப் படங்களில் அரிதாகப் பார்க்க இயலா மலேயே ஆகிவிட்ட கமல்ஹாசன் என்னும் கலைஞனின் வெகுளித்தன்மையும் அபூர்வமாக வெளிப்பட்ட படம் ‘மூன்றாம் பிறை’.

மனித குலம் எத்தனையோ கட்டங்களைக் கடந்தாலும் மனிதன் எத்தனையோ பருவங்களைப் பார்த்துவிட்டாலும் ‘காதல்’ என்ற உணர்வின் துவக்கம் கள்ளமின்மையின் ஒளியாலேயே இன்னும் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறது. தெரியாமை, களங்கமின்மை, நிஷ்களங்கம், விகற்பமின்மை, இன்னசென்ஸ் எனச் சொல்லிக்கொண்டே போகலாம். தெரியாமையிலிருந்து தெரிந்ததில் நுழையத் தொடங்கும்போது காதல் மீது கருப்பு படரத் தொடங்கிவிடுகிறது. பாற்கடலின் அமிழ்தத்தில் விடமேறிவிடுகிறது. ‘மூன்றாம் பிறை’யில் களங்கமின்மையின் பெயரில் விஜியாக நாயகன் சீனுவுக்கு அறிமுகமாகிறாள். அவள் மீண்டும் தன்னறிவு பெற்று பாக்கியலக்ஷ்மியாக உணரும்போது சீனு, அவளது நினைவுகளின் புதைசேற்றில் என்றைக்குமாகத் தொலைந்துபோன அந்நியனாக, ஞாபக ரணத்தில் வாதையுறப் போகும் குரங்காக மாறிப்போகிறான். ஒருவருக்குத் தெளிந்துவிடுகிறது; இன்னொருவருக்குப் பைத்தியம் தொடங்கிவிடு கிறது. இதுதான் வாழ்க்கை ஒரே கணத்தில் தரும் கசப்பும் இனிப்பும்.

மானுடர்கள் அனைவருக்குமான இந்தப் பொது அனுபவத்தை சினிமாவில் சார்லி சாப்ளினிலிருந்து கமல்ஹாசன் வரை நம் முன்னர் நடித்துக் காண்பித்திருந்தாலும், நமக்கு அந்த அனுபவம் கலையில் திரும்பத் திரும்ப வேண்டுவதாக இருக்கிறது. ‘ஊமை என்றால் ஒரு வகை அமைதி.. ஏழை என்றால் அதில் ஒரு அமைதி...’

காதலில் தோழமையின் இடம் சமபங்கு வகிப்பது. தோழமையும் களங்கமின்மையும் சேர்ந்துதான் ‘பூங்காற்று புதிரானது’ பாடலில் கடக்கும் மலை ரயிலை வேகமற்றதாக்குகிறது. சிக்கிக்கொண்ட ஸ்ரீதேவி யின் உடையின் முனை தண்டவாளத்திலிருந்து விடு பட்ட பிறகே மலை ரயில் கடக்கிறது. எனக்கு அந்த மெதுவாகக் கடக்கும் மலை ரயில் ஸ்ரீதேவியுடன் சேர்ந்தே எப்போதும் ஞாபகத்தில் உள்ளது. எனது 17 வயதில் அறிமுகமான நாள் தொட்டு, முகமே இல்லாத காதலிக்காகவும், பின்னர் முகங்களுடன் என்னைக் காதலித்தவர்களுக்காகவும், நான் காதலித்தவர்களுக்காகவும் என் மகளுக்குத் தாலாட்டுப் பாடலாகவும் ‘கண்ணே கலைமானே’ பாடலைப் பாடி அழுகையுடனேயே முடித்திருக்கிறேன்.

விஜி, நீங்கள் மறந்துபோயிருக்கலாம்; நீங்கள் வளர்த்த நாயின் பெயர் சுப்பிரமணி. அந்த நாயில் என்னுடைய சாயலை எப்போதும் நான் காண்பேன். நீங்கள் பாக்கியலக்ஷ்மியாக ரயிலில் ஏறும்போது சுப்பிரமணி ரயில் நிலையத்துக்கு வரவில்லை. நான் என் மகளுடன் ஏதேனும் ஒருநாள் அந்த மலை ரயிலில் ஊட்டிக்குச் செல்லக்கூடும். அப்போது நீங்களும் என்னுடன் இருப்பீர்கள் ஸ்ரீதேவி!

- ஷங்கர்ராமசுப்பிரமணியன்,

தொடர்புக்கு:

sankararamasubramanian.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x