Published : 13 Feb 2018 09:37 AM
Last Updated : 13 Feb 2018 09:37 AM
பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும் காலம் இது. உயர் கல்வித் துறையில் நிலவும் முறைகேடுகள் தற்போது பரபரப்பாகப் பேசப்படுகின்றன. ஒரு துணைவேந்தர் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். எப்படியெல்லாம் இருந்தார்கள் என்பதையும் தெரிந்துகொள்வோம்.
பல பத்தாண்டுகளுக்கு முன்பு, ஒரு துணைவேந்தரின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாய் வாழ்ந்துகாட்டியவர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் வ.அய்.சுப்பிரமணியம். அவரது தனிச் செயலராகப் பணிபுரிந்தவன் எனும் முறையில் நேர்மையான அவரது வாழ்விலிருந்து சில பக்கங்களைப் பதிவுசெய்கிறேன்.
80-களில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராக வ.அய்.சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டபோது, அந்நியமனம் குறித்து எவ்வித சர்ச்சையும் எழவில்லை. மாறாக, அவரது நேர்மை, கண்டிப்பு, காலம் தவறாமை, கடமை உணர்வு போன்ற நற்பண்புகள் குறித்துப் பல செய்திகள் உலவத் தொடங்கின. தமிழகத்தில் பரவலாக அறியப்படாத வ.அய்.சு., தமது ஆய்வுப் பணியைத் திருவனந்தபுரத்தில் அமைதியாக மேற்கொண்டிருந்தார்.
அவரது கடமை உணர்ச்சியைப் பற்றி அக்காலத்து பிரபல வார ஏடு குறிப்பிட்ட செய்தி இது: ‘திருவனந்தபுரத்தில் தமது மகள் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டபோது, அலுவலகம் செல்லும் வழியில் மகளைப் பார்த்துவிட்டு, சிறிது நேரத்தில் அலுவலகம் சென்று தமது பணியில் ஆழ்ந்துவிட்டாராம். கேட்டபோது, “என் மகளைக் காப்பது மருத்துவர் கடமை. அலுவலகப் பணியைத் தொய்வின்றித் தொடர்வது என் கடமை” என்றாராம்.
சிம்மாசனம் வேண்டாம், பெஞ்சு போதும்!
தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்குப் பொருத்தமான துணைவேந்தரை நியமிக்க ஏற்படுத்தப்பட்ட ஆய்வுக் குழுவின் முடிவில், எவ்வித அரசியல் தலையீடும் இருக்கவில்லை. அப்போது எம்ஜிஆர்தான் முதலமைச்சர். எம்ஜிஆர் வ.அய்.சு.வை ஆரத்தழுவி, துணைவேந்தர் இருக்கையில் அமரவைத்து சற்று நேரம் உரையாடி விடைபெற்றுச் சென்றார்.
அடுத்து, துணைவேந்தர் செய்த காரியம் பல்கலைக்கழக நிர்வாகிகளை அதிரவைத்தது. ஆடம்பரமான துணைவேந்தரின் சுழல் நாற்காலியிலிருந்து எழுந்த வ.அய்.சு., அந்தப் பெரிய அறையின் தூணுக்கு மறுபுறம் போட்டிருந்த நீளமான மரபெஞ்சில் போய் உட்கார்ந்துவிட்டார். அங்கிருந்த நீள மேசையில் வைத்து கோப்புகளைக் கவனிக்க ஆரம்பித்தார்.
பல்கலைக்கழகத் தனி அலுவலர் துணைவேந்தரிடம் ஆங்கிலத்தில், “ஐயா! இந்த நாற்காலி உங்களுக்காகவே உருவாக்கப்பட்டது” என்றார். துணைவேந்தர் புன்னகைத்தார். “இருக்கலாம், ஆனால் நான் இந்த நாற்காலிக்காக உருவாக்கப்படவில்லையே!”
வெறும் தரையில் படுத்தார்!
துணைவேந்தர் இல்லக் கட்டுமானப் பணிகள் முடிவுறாத நிலையில், அவர் தங்குவதற்கு தமிழ்நாடு ஓட்டலில் சொகுசு அறை ஒன்று ஏற்பாடுசெய்யப்பட்டது. துணைவேந்தர் தன் பெட்டியுடன் நேராகப் பல்கலைக்கழக அலுவலக வளாகத்துக்கு வந்தார். அங்கே விருந்தினர் இல்லம் ஒன்று இருந்தது. தூசும் தும்புமாகப் பயன்படுத்தப்படாதிருந்த அந்த இல்லத்தைத் திறக்கச்செய்து, பயணக் களைப்பு தீர செய்தித்தாளை விரித்துப் படுத்துவிட்டார்.
பல்கலைக்கழகப் பொறியாளர் திகைத்தார். “பல்கலைக் கழகத்துக்கு வீண் செலவு ஏன்? இருக்கிற வசதியைப் பயன்படுத்துவோம்” என்றார். துணைவேந்தர் கையாண்ட இதுபோன்ற அதிர்ச்சி வைத்தியங்கள் பலனளிக்கவே செய்தன. துணைவேந்தர் இல்லம் ஓரிரு தினங்களில் தயாராகிவிட்டது.
தமது காரிலோ பல்கலைக்கழக வாகனங்களிலோ தமது குடும்பத்தார் பயணிப்பதை அவர் அனுமதிப்பதில்லை. அவசர காலங்களில் பயணம் செய்ய நேர்ந்தால், அதற்கான தொகையைக் கணக்கிட்டுப் பல்கலைக்கழக நிதியில் சேர்த்துவிடுவார். பள்ளியில் படித்துக்கொண்டிருந்த அவரது மகன், பல்கலைக்கழக வேனில் பயணம் செய்து வீடு திரும்புவதைக் கண்டு கடிந்துகொண்டார். இதற்குத் தனியாக ஊர்தியை ஏற்பாடுசெய்தார். சொந்தப் பயணங்களுக்கு அவர் வாடகை காரையே பயன் படுத்துவார்.
வெளியூர்ப் பயணங்கள் மேற்கொண்டால் திரும்பிய கையோடு தாம் பயணத்துக்குப் பெற்ற முன்பணத்துக்குப் பயணப் பட்டியல் அளிப்பதோடு, எஞ்சிய தொகையை உடனே செலுத்திவிடுவார். பேராசிரியர்களும் ஆய்வாளர்களும் தமது பயணங்களுக்குப் பெற்ற முன்பணத்தொகை குறித்து, தாமதமின்றி பயணப்படி பட்டியல்கள் அளிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். முன்பணத் தில் எஞ்சிய தொகையை உடனே செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை பாயும்.
ஒரு ஆய்வாளர் தமது களப்பணி குறித்து அளித்த கட்டுரை மிகச் சிறப்பாக இருந்தது. அதனை உடனடியாக நூலாக வெளியிட துணைவேந்தர் விரும்பினார். அதற்கான ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்றன. இதற்கிடையில் பல்கலைக்கழக நிதிப் பிரிவிலிருந்து பெறப்பட்ட கோப்பில், பயண முன்பணம் பெற்று நீண்ட நாட்களாகப் பயணப்படிப் பட்டியல் சமர்ப்பிக்கப்படாதவர்கள் குறித்த விவரத்தில் அந்த ஆய்வாளர் பெயரும் இருந்தது. அவர் பெயருக்குக் கீழே கோடு இழுத்து, பயணப் பட்டியல் தந்த பிறகு அவர் நூலை வெளியிடலாம் என்று எழுதிவிட்டார்.
மனச் சான்றின் உத்தரவு
பல்கலைக்கழகத்துக்குத் தளவாடங்கள் வாங்க ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, சென்னையைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டது. அந்நிறுவனத்தின் இயக்குநர் மரியாதை நிமித்தம் துணை வேந்தரைச் சந்தித்தார். சற்று நேரம் பேசியவர் நாக்கில் சனி விளையாடிவிட்டது. துணைவேந்தரைப் பார்த்து, “சார், சென்னைப் பல்கலைக்கழகத்தில் உங்கள் சகோதரர் வி.ஐ.மகாதேவனுடைய ஆய்வு மையத்துக்கும் நான்தான் தளவாடங்கள் சப்ளை செய்கிறேன்” என்றார்.
வ.அய்.சு. முகம் சுருங்கியது. பதிவாளரை அழைத்து, “இவரது ஒப்பந்தத்தை உடனே ரத்துசெய்துவிடுங்கள்” என்று கூறிவிட்டார். இயக்குநர் வருத்தத்துடன் வெளியேறினார். அவர் நிறுவனத்துடன் வ.அய்.சு.வின் சகோதரர் சம்பந்தப்பட்டிருப் பதும், அதை இயக்குநர் சுட்டிக்காட்டியதும் துணை வேந்தரின் மனச் சான்றுக்குப் பிடிக்காததே காரணம்.
தனிச் சலுகை கிடையாது
அப்போது நான் தஞ்சை நகரில் குடியிருந்தேன். அதில் நிறைய சிக்கல்கள், பிரச்சினைகள். அப்போது பல்கலைக்கழகக் குடியிருப்பு வளாகத்தில் புது வீடுகள் ஒதுக்கீடு நடைபெற்றுக்கொண்டிருந்தது. என் விண்ணப்பத்தின் பேரில் எனக்கும் ஒரு வீடு வாடகைக்குக் கிடைத்தது. பட்டியலில் என் பெயரைப் பார்த்த வ.அய்.சு., உடனே பொறியாளரை அழைத்து “இவருக்கு முன்னால் முன்னுரிமைப்படி ஏதேனும் விண்ணப்பங்கள் உள்ளனவா ?” என்று கேட்டார்.
ஒரு ஆய்வாளரின் விண்ணப்பம் உள்ளதாகப் பொறியாளர் தெரிவித்தார். “என் தனிச் செயலருக்கான வீடு ஒதுக்கீட்டை ரத்துசெய்து, முன்னரே காத்திருக்கும் ஆய்வாளருக்கு வழங்குங்கள்” என்று சொல்லிவிட்டார் வ.அய்.சு. புதிய வீட்டுக்காக நான் ஓராண்டு காத்திருக்க நேர்ந்தது.
முதலமைச்சர் எம்ஜிஆர் குறித்த நேரத்தில் வராததால் அவரையே சந்திக்க மறுத்துத் திரும்பியது, அறிவுலகில் பணிபுரிவோர் அரசியலாளரைவிட மேம்பட்டோர் என்பதைப் புரியவைக்க வேண்டும் என்று அதிரடிச் சிரிப்புடன் சொன்னது, அதன் விளைவுகளை கம்பீரமாக எதிர்கொண்டது, தனது ராஜினாமாக் கடிதத்தை பலர் அறிய எழுதிவைத்து, தமது பணியில் குறைகாணும் எவர் வேண்டு மானாலும் அதை அஞ்சலில் சேர்க்கலாம் என்றது, சின்னஞ்சிறு பரிசுப் பொருட்களைக்கூட பல்கலைக்கழகத்தில் சேர்ப்பித்தது, பல்கலைக்கழக நேரடி நியமனத்தின்போது என் மனைவிக்குத் தகுதியிருந்தும், எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்றும் நான் தனிச் செயலராக இருந்ததால் பணி தர மறுத்தது, தான் மறைந்த பிறகும் தன் கண்முன் வளர்ந்த மரத்தடியில் தன் சாம்பலை புதைக்கச் சொல்லி நிறுவனத்தின் மண்ணோடு மண்ணாக இரண்டறக் கலந்தது என வ.அய்.சு. தொடர்பாக இப்படி எத்தனையோ நினைவுகளைச் சொல்லலாம்.
துணைவேந்தர் வ.அய்.சு.வின் வாழ்க்கைப் புத்தகம், நேர்மையாலும் தன்னலமற்ற தொண்டாலும் நிரம்பியது. தனிச் செயலர் என்ற முறையில் நான் அறிந்ததைவிடவும் தமிழகமெங்கும் அவரை அறிந்த அறிஞர் பெருமக்கள், அவரது மாணவர்கள் எத்தனையோ செய்திகளைச் சொல்லி வியப்பது உண்டு. வியப்பதோடு நின்றுவிடாமல் வ.அய்.சு.வின் பண்பு நலன்களை அவர்களும் பின்பற்ற முனைந்து பெருமை பெற்றதுண்டு.
பெருஞ்செயல்களை ஓசையின்றிச் செய்து பெயரிலி யாக மறைய வேண்டும் என்பது அவர் வாக்கு. பொது வாழ்விலும், கல்விப் பணியிலும் இத்தகைய துறவு நோக்கு உடையோர் பெரும் பொறுப்பில் அமர்தல் வேண்டும். வ.அய்.சு.வின் வாழ்க்கை உணர்த்தும் செய்தி இதுதான்!
- தஞ்சாவூர்க் கவிராயர், ‘காலத்தின் வாசனை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.
தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT