Last Updated : 13 Feb, 2024 06:16 AM

7  

Published : 13 Feb 2024 06:16 AM
Last Updated : 13 Feb 2024 06:16 AM

தண்டிக்கப்படுகின்றனவா தென் மாநிலங்கள்?

‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்பது அண்ணாவின் முழக்கங்களில் முக்கியமானது. காலம் மாறிவிட்டது. இன்று தென் மாநிலங்கள் வளர்ந்துவருகின்றன. ஆனால், அந்த வளர்ச்சியின் காரணமாகவே மத்திய அரசு தென் மாநிலங்களுக்கு உரிய நிதியை ஒதுக்குவதில்லை என்பதுதான் இப்போதைய குற்றச்சாட்டு. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தார். எல்லா மாநிலங்களுக்கும் நிதி ஆணையத்தின் (Finance Commission) பரிந்துரையின்படியே நிதி பகிர்ந்தளிக்கப்படுகிறது என்றார் அவர். அமைச்சரின் கூற்றை எந்த மாநில அரசும் மறுத்ததாகத் தெரியவில்லை. அப்படியானால், அவர் பேசியது சரியானது என்று எடுத்துக்கொள்ளலாமா?

நடைமுறை என்ன? - நமது அரசமைப்புச் சட்டத்தின் 280ஆவது கூறு, ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை நிதி ஆணையம் நிறுவப்பட வேண்டும் என்று விதித்திருக்கிறது. இந்த ஆணையம்தான், மத்திய அரசு மக்களிடமிருந்து வசூலிக்கிற வரி வருவாயை மாநிலங்களுக்கு எவ்விதம் பங்கிட வேண்டும் என்று அறிவுறுத்துகிறது.

முதல் கட்டமாக வரி வருவாயிலிருந்து எத்தனை சதவீதம் மாநிலங்களுக்குக் கட்டாயமாக ஒதுக்கப்பட வேண்டும் என்றும், இரண்டாம் கட்டமாக அவ்விதம் ஒதுக்கப்பட்ட நிதியில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் எவ்வளவு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும் ஆணையம் பரிந்துரைக்கிறது.

13ஆவது நிதி ஆணையம் (2010-15) மாநிலங்களுக்கு ஒதுக்கிய நிதி 32% மட்டுமே. 14ஆவது நிதி ஆணையம் (2015-20) இதை 42%ஆக உயர்த்தியது. இப்போதைய 15ஆவது நிதி ஆணையம் (2020-26, ஆறு ஆண்டுகள்) இந்த விகிதத்தைக் கூட்டவில்லை. 14ஆவது ஆணையத்தின் பரிந்துரைப்படி மாநிலங்களுக்குக் கிடைத்த மொத்த நிதியில் 10% கூடியிருக்க வேண்டும். ஆனால், அது அப்படி நடக்கவில்லை.

மத்திய அரசு மாநில அரசுகளுடன் பகிர்ந்துகொள்ளத் தேவையற்ற சில ‘சிறப்பு வரி’ வகைகள் இருக்கின்றன. இவை ‘சிறப்பு மேல் வரி’ (செஸ்), ‘கூடுதல் மேல் வரி’ (சர்-சார்ஜ்) என்று அழைக்கப்படுகின்றன. 2011-12 நிதியாண்டில் இந்தச் ‘சிறப்பு’ வகைமைகளின் கீழ் வசூலிக்கப்பட்ட வரி, மொத்த வரி வருவாயில் 10.4%ஆக இருந்தது.

2019-20ஆம் நிதியாண்டில் மத்திய அரசு இதன் விகிதத்தை 20.2%ஆக உயர்த்தியது. அதாவது, ‘சிறப்பு வரி’யின் பங்கு சுமார் 10% உயர்த்தப்பட்டது. இதையே வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், வரி வருவாயில் மாநிலங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டிய நிதி 10% குறைந்தது. அப்படி குறைக்கப்பட்ட வருவாயில் மாநிலங்களுக்கான நிதி 10% கூட்டப்பட்டது. அதற்கு இது சரியாகப் போய்விட்டது. இப்படியாக 14ஆவது ஆணையம் பரிந்துரைத்த 10% கூடுதல் நிதி மாநிலங்களின் வாய்க்கு எட்டவில்லை.

இரண்டாம் கட்டம் - பகிர்வு: ஒவ்வோர் ஆணையமும் நிறுவப்படும்போது அவை நிதியை எங்ஙனம் பங்கிட வேண்டும் என்பதற்கான அடிப்படை விதிமுறைகளை (Terms of Reference-ToR) மத்திய அரசுதான் தீர்மானிக்கிறது. 15ஆவது நிதி ஆணையத்துக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட விதிமுறைகளில் (ToR) ஒன்றுதான் இப்போதைய பிரச்சினைகள் பலவற்றுக்கும் ஊற்றுக்கண்.

2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், மாநிலங்களுக்கு நிதியைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்பதுதான் சர்ச்சைக்குள்ளான அந்த விதிமுறை (ToR). அதற்கு முந்தைய ஆணையங்கள் 1971 மக்கள்தொகையைத்தான் கணக்கில் கொண்டன. மக்கள்தொகைக் கட்டுப்பாடு ஒரு பிரதான தேசியக் கொள்கையாக உருவெடுப்பதற்கு முன்னால், அந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது என்பதுதான் காரணம்.

இந்த இடத்தில் 2011க்கு முந்தைய 40 ஆண்டுகளின் மக்கள்தொகைப் பெருக்கத்தின் சில கூறுகளைப் பார்ப்பது மிகவும் அவசியம். 1971இல் இந்திய மக்கள்தொகை 54.8 கோடியாக இருந்தது. 2011இல் இது 121 கோடியாக உயர்ந்தது. 1971இல் மக்கள்தொகையில் உத்தரப் பிரதேசத்தின் வீதம் 16%ஆக இருந்தது. 2011இல் இது 16.5%ஆக உயர்ந்தது. இதே காலகட்டத்தில் பிஹாரின் மக்கள்தொகை 8.6%இலிருந்து 10.3%ஆக உயர்ந்தது.

அதாவது, சராசரி இந்திய மக்கள்தொகை கூடிவந்த விகிதத்தைவிட உத்தரப் பிரதேசம், பிஹார் போன்ற வட மாநிலங்களின் மக்கள்தொகைப் பெருக்கம் அதிகமாக இருந்தது. இதே 40 ஆண்டுகளில் அனைத்துத் தென் மாநிலங்களின் ஒட்டுமொத்த வீதம் 24.7%இலிருந்து 17.8%ஆகக் குறைந்தது.

அதாவது, தென் மாநிலங்களின் மக்கள்தொகை அதிகரிக்கும் விகிதம் கணிசமாகக் குறைந்து வந்தது. மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தென் மாநிலங்கள் தீவிரமாக அமல்படுத்தியதுதான் காரணம். கூடவே, அவை மக்களின் கல்வியிலும் உடல்நலத்திலும் வேலைவாய்ப்பிலும் கவனம் செலுத்தின. இதுதான் தென் மாநிலங்கள் வளர்ந்து வருவதற்கான காரணம்.

சொன்னதும் நடந்ததும்: ஆகவே, 2011 மக்கள்தொகையின் அடிப்படையில் நிதி பங்கிடப்பட்டால் மக்கள்தொகையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் தென் மாநிலங்கள் தண்டிக்கப்படும் என்பதும், அவ்விதம் கட்டுப்படுத்தாத பல வட மாநிலங்கள் பலன் பெறும் என்பதும் எல்லோருக்கும் தெரிந்தே இருந்தது. எனவே, பல வளர்ந்த மாநிலங்கள் 15ஆவது நிதி ஆணையத்திடம் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்தன.

அவர்களுக்கு ஆணையம் ஓர் உறுதிமொழி வழங்கியது. 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களுக்குப் புள்ளிகள் வழங்கப்படும். அதே வேளையில், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு அதற்கேற்ற வகையில் புள்ளிகள் வழங்கப்படும். இரண்டையும் கணக்கில் கொண்டே நிதி பகிர்ந்தளிக்கப்படும். இந்த உறுதிமொழியைத் தென் மாநிலங்கள் நம்பின. ஆனால், நடந்தது வேறு.

15ஆவது நிதி ஆணையம் மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக்கான அடிப்படை ஆண்டாக 1971ஐ அல்ல, 2011 மக்கள்தொகையை எடுத்துக்கொண்டது. இதனால், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு எந்தப் பலனும் விளையவில்லை. மாறாக, அவை பெறும் நிதி வெகுவாகக் குறைந்தது.

மக்கள்தொகை அதிகமுள்ள பல வட மாநிலங்களோ அதிகப் பலன் பெற்றன. ஐந்து தென் மாநிலங்களுக்கும் சேர்த்து 13.7% நிதியை ஒதுக்கிய 15ஆவது நிதி ஆணையம், உத்தரப் பிரதேசம் எனும் ஒரு மாநிலத்துக்கு மட்டும் 17.94% நிதியை ஒதுக்கியது. இந்த அடிப்படையில்தான், நிதிநிலை அறிக்கையில், 2024-25ஆம் நிதியாண்டுக்கு ஐந்து தென் மாநிலங்களுக்கும் சேர்த்து ரூ.1,92,722 கோடியும் உத்தரப் பிரதேசத்துக்கு மட்டும் ரூ.2,18,816 கோடியும் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

பாரபட்சமா? - வரி வருவாயில் 42% மட்டுமேஆணையத்தின் பரிந்துரைப்படி பகிர்ந்தளிக்கப்படுகிறது என்று பார்த்தோம். எஞ்சிய வருவாயில் ஒருபகுதியை மத்திய அரசு மானியங்களாகவும் நிவாரணங்களாகவும் திட்டப் பணிகளுக்காகவும் மாநிலங்களுக்கு வழங்குகிறது. இதிலும் தாங்கள் வஞ்சிக்கப் படுவதாகத் தென் மாநிலங்கள் குமுறுகின்றன.

ஒரு புள்ளிவிவரத்தின்படி மத்திய அரசுக்குத் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் 29 காசுகள் மட்டுமே திரும்பப் பெறுகிறது தமிழ்நாடு. அதே வேளையில், உத்தரப் பிரதேசம் ஒரு ரூபாய் செலுத்தி ரூ 2.73 பெறுகிறது; பிஹார் ரூ.7.06 பெறுகிறது. இது மக்கள்தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்குத் தண்டனையாக அமைகிறது.

பல மேலை நாடுகளில் பாதுகாப்பு, அயலுறவு, ரயில்வே, பேரிடர் நிவாரணம், மானியங்கள் முதலானவை மட்டுமே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இந்தியா அந்த நிலையை எட்டுவது இப்போதைக்கு சாத்தியமல்ல.

என்ன செய்யலாம்? - 16ஆவது நிதி ஆணையம் (2026-31) நிறுவப்பட்டுவிட்டது. மத்திய அரசு புதிய ஆணையத்துக்கு வழங்கவிருக்கும் விதிமுறைகளில் (ToR) மீண்டும் 1971 மக்கள்தொகை அடிப்படையில் வரி வருவாய் பகிர்ந்தளிக்கப்படுவதற்கு வகைசெய்ய வேண்டும்.

வளர்ச்சி குன்றிய, மக்கள்தொகை மிகுந்த மாநிலங்களுக்கு அதிக நிதி வழங்கலாம். அது தென் மாநிலங்களின் வளர்ச்சியைப் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும். கூடவே, மத்திய அரசு ‘சிறப்பு வரி’களைக் குறைத்து, மாநிலப் பங்கீட்டுக்கான நிதியை அதிகரிக்க வேண்டும். இவைதான் மக்கள்தொகையைக் கட்டுக்குள் கொண்டுவந்திருக்கும், வளர்ச்சிப் பாதையில் முன்னேறி வரும் தென் மாநிலங்களுக்கு மத்திய அரசு செய்யும் நீதியாக இருக்கும்.

- தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com

To Read in English: Are Southern states being penalized for achieving population control?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x