Published : 09 Feb 2018 09:26 AM
Last Updated : 09 Feb 2018 09:26 AM
ம
த்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் நிகழும் வன்முறைச் சம்பவங்கள், படுகொலைகள் அதிரவைக்கின்றன. 1998 முதல் நடந்துவரும் உள்நாட்டுப் போரில் இதுவரை 54 லட்சம் பேர் இறந்துள்ளனர். மாதந்தோறும் 45,000 பேர் கொல்லப்படு கிறார்கள். கலகக் கும்பல்கள் இடையிலான ஆயுதமேந்திய சகோதர யுத்தமும் உள்நாட்டுப் போரும் உலகின் கவனத்தைப் பெரிதாக ஈர்க்கவேயில்லை.
அதிபர் ஜோசப் கபிலாவின் பதவிக்காலம் முடிந்தும் ராணுவத்தின் துணையுடன் ஆட்சி யில் நீடிக்கிறார். அவர் பதவிவிலக வேண்டும் என்று காங்கோ மக்கள் போராடிவருகிறார்கள். மக்கள் போராட்டத்தைக் கடுமையாக ஒடுக்கும் கபிலா, தன்னைப் பதவியிலிருந்து இறக்க வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் சதி நடக்கிறது என்கிறார்.
இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, அதிகம் பேரைப் பலிவாங்கிய ஒரு போர் அதுவும் உள்நாட்டுப் போர் நடப்பது காங்கோவில்தான். 200-க்கும் மேற்பட்ட பழங்குடி இனங்கள் வாழும் காங்கோ இயற்கை வளங்கள் மிக்க நாடு. பல்வேறு நாடு களுக்குக் கனிம வளங்களையும் இயற்கை வளங்களையும் ஏற்றுமதிசெய்கிறது.
பக்கத்தில் உள்ள நாடுகள் மட்டுமல்லாமல் தொலைவில் உள்ள பணக்கார நாடுகளும் ஆளுக்கொரு இனக் குழுவைக் கூலிக்கு அமர்த்தி, இயற்கை வளங்களைக் கொள்ளையடிக்கின்றன. தடுப்பவர்கள் தாக்கப்படுகிறார்கள். தாக்குவதும் தாக்குதலில் மடிவதும் காங்கோ மக்கள்தான் என்பது தான் வேதனை.
முதலில் பெல்ஜியத்தாலும் பிறகு பிரெஞ்சுக்காரர்களாலும் காலனியாகப் பிடிக்கப்பட்ட நாடு இது. மக்கள்தொகை 7.8 கோடி. நிலத்தின் பரப்பளவு 23,45,409 சதுர கிலோ மீட்டர். மோங்கோ, லூபா, கோங்கோ (பண்டுகள் என்றும் இக்குழுக்களை அழைக்கின்றனர்) மாங்பேடு, அசாண்டே என்பவை மிகப் பெரிய இனக்குழுக்கள். மொத்த மக்கள்தொகையில் இவர்கள் மட்டும் 45%. மக்களில் 80% கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் 10%, எஞ்சியவர்கள் பூர்வ குடிகள்.
நிமோனியா, வயிற்றுப்போக்கு, மலேரியா, ஊட்டச்சத்துக் குறைவு போன்றவற்றால் இறந்தவர்களே அதிகம். இந்த நோய் களுக்கு மருந்துகளும் மருத்துவமனைகளும் இருந்தும், இடைவிடாத சண்டைகளால் மக்களால் சிகிச்சைக்குச் செல்ல முடியாததாலும் அகதி முகாம்களின் சுகாதாரக் கேடுகளாலும் இறக்கின்றனர். 80% பேர் நிம்மதியாக வீட்டில் தங்க முடியாமல் அடிக்கடி பக்கத்து நாடுகளுக்குத் தப்பிச்செல்கின்றனர். அதே வேளையில், வேலை தேடி பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் காங்கோவுக்குள் வருவதும், அங்குள்ள சட்டவிரோத கனிமச் சுரங்கங்களில் வேலை செய்வதும் தொடர்கிறது!
நிலையான, நல்லரசு இல்லை. பழங்குடிகளின் தலைக்கட்டுகளுக்கு இடையில் ஒற்றுமை இல்லை. ஆயுதமேந்திய அராஜக கும்பல்கள் உதவியுடன் இயற்கை வளங்களைக் கொள்ளையடிப்பதிலேயே குறியாக இருக்கும் இனக் குழுக்கள். அவர்களுக்குத் தூபம் போடும் பன்னாட்டுத் தொழில் நிறுவனங்கள். இப்படிப் பல்வேறு காரணங்களால் காங்கோவில் ரத்த ஆறு ஓடுகிறது.
காங்கோவின் மொத்த மக்கள்தொகை யில் 19% பேர் 18 வயதுக்கும் குறைவான குழந்தைகள். அவர்களில் 47% பேர் ஊட்டச்சத்துக் குறைவாலும் தொற்றுநோய் களாலும் அற்ப ஆயுளில் மடிகின்றனர். உலக சுகாதார நிறுவனம், மனித உரிமை கள் அமைப்பு ஆகியவை மன்றாடிக் கேட்டும்கூட காங்கோவுக்குக் கைகொடுக்க யாரும் இல்லை.
கோரைப்புற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட குடிசைகளில் அகதிகள் தங்கியிருக்கின்றனர். அகதி முகாம்களில் சுகாதாரம் இல்லை, பாதுகாக்கப்பட்ட குடிநீர் இல்லை, சத்தான உணவு - ஏன் உணவே இல்லை. குளிருக்குப் போர்த்திக்கொள்ள கம்பளி ஆடைகளோ, வெயில் காலத்தில் காத்துக்கொள்ளப் பருத்தி ஆடைகளோ கிடையாது. படிப்பதற்கும் வசதியில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாகப் பாதுகாப்பும் இல்லை. 8 வயதுக்கு மேற்பட்ட ஆண் குழந்தைகளை அந்தந்த இனக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் கடத்திச் சென்று, போரில் ஈடுபட ஆயுதப் பயிற்சி அளித்து சேர்த்துக் கொள்கின்றனர். 10 வயதுக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளைக் கடத்திச் சென்று பாலியல்ரீதியாகத் துன்புறுத்துகின்றனர். அடிமைகளாக நடத்துகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதம் ஐநா சபை அனுப்பிய அமைதிப்படையைச் சேர்ந்த 14 பேர் ஆயுதம் தாங்கிய குழுக்களால் கொல்லப்பட்டனர். அது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் பேசப்பட்டன. அதைத் தாண்டி காங்கோவின் நிலவரம் யாருடைய கவனத்திலும் இப்போது இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT