Published : 02 Feb 2018 09:44 AM
Last Updated : 02 Feb 2018 09:44 AM
பெ
யரோடு சாதிப் பட்டத்தை வழக்கமாகவே சேர்த்துக்கொண்ட காலத்தில்கூட இப்போதைய சாதி உணர்வு இருந்ததில்லை. போவதாகப் போக்குக்காட்டி, அந்த உணர்வு புது வேகத்தில் தலையெடுத்திருக்கிறது. ஒரு தேர்தல் உத்தியாகச் சாதிகளை உள்ளே இழுத்து, அவற்றைச் சீரணித்துக்கொள்ளலாம் என்று கட்சிகள் நம்புகின்றன. விளைவு என்னவென்றால், கட்சிகள் பெரும்பான்மைச் சாதிகளின் கூட்டமைப்புகளாக மாறிவிடுவதுதான். இந்த நிலையில் சிறிய சாதிகளை ஜனநாயக அரசியல் என்ன செய்கிறது என்பதை விவாதிக்க வேண்டும்.
ஊருக்கு ஒரு ஆச்சாரி. கொல்லர் ஒருவர். பத்தர், குயவர், மேளக்காரர், வாணியரும் ஒவ்வொருவர். இப்படியே வண்ணார், மருத்துவர் என்று ஊருக்கு ஒன்றிரண்டாக இறைந்து எண்ணிக்கை வலுவிழந்தவை இருநூறுக்கு மேலான சிறிய சாதிகள். கிராமங்கள் தன்னிறைவுபெற்ற குடியரசுகள் என்ற பெருமையைப் பெற்றது இந்தச் சாதிகளின் கைவினைப் பங்களிப்பால். ஆனால், அரசியல் கணக்குக்குள் இவை எப்போதுமே வராதவை. ஒரு பெரும்பான்மைக் கோட்பாடு என்ற அளவில் ஜனநாயகம் யாரையும் அரசியலிலிருந்து விலக்குவதில்லை.
ஆட்சியில் சிறுபான்மை பங்கேற்காது. அரசியலில் பெரும்பான்மை, சிறுபான்மை இரண்டுமே பங்கேற்கும். தமிழக நிலவரமோ வேறு. சிறிய சாதியினர் தேர்தலில் வாக்களிப்பதற்கு அடுத்த மேல் நிலைக்குச் சென்று அரசியலில் பங்கேற்க முடியாது.
தேர்தல் தொகுதி என்ற புவிப் பரப்பில் ஒத்தை வீட்டுச் சாதிகளுக்கு இருப்பு என்பதே இல்லை. இப்படி விலகி நிற்பது தனி நபர்களின் சுதந்திரமான முடிவு என்றால் அதில் குறையில்லை. ஆனால், சாதிகளாகவே பலர் அரசியலுக்குள் வர இயலாமல் இருப்பதை எப்படிப் புரிந்துகொள்வது? ஜனநாயகச் சிந்தனைக்கும் அதுவே வகுத்துக்கொண்ட தேர்தல் முறைக்கும் உள்ள முரண் இது.
எண்ணிக்கை நியாயம்
கி.ராஜநாராயணனின் கரிசல் கதைத் தொகுப்பில் ‘ஒத்தை வீட்டுக்காரர்’ என்று ஓர் ஆச்சாரி பற்றிய கதை. பொ.அழகுகிருஷ்ணன் எழுதியது. ஊராரோடு வந்த பிரச்சினையால் மனம் பொறாமல், நிலத்தை விற்றுவிட்டு, வீட்டையும் விற்றுவிடும்படி இன்னொரு ஒத்தைவீட்டுக்காரச் செட்டியாரிடம் சொல்லிவிட்டு, ஆச்சாரி ஊரைவிட்டுச் செல்கிறார். மாமா, அத்தை, மாப்பிள்ளை என்று முறை சொல்லிக் கூப்பிடுவார்கள். பிரச்சினை என்று வந்துவிட்டாலோ ‘ஆச்சாரி, அவன் இவன்னு சண்டைக்கு வருவார்கள்’ என்று ஒத்தை வீட்டுக்காரர்களோடு ஊர் கொண்டாடும் உறவின் பொய்மையைச் சொல்லி குமுறிக்கொண்டே செல்வார். அரசியல் பரப்பில் இந்த உறவுப் பொய்மைதான் பெரும்பான்மை என்ற எண்ணிக்கை நியாயமாகிறது.
இன்னின்ன சாதிகளுக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்தது, இன்னின்னவற்றுக்குக் கிடைக்கவில்லை என்று பேசாத அரசியல் விமர்சனம் உண்டா? அரசியல் நியாயத்தை இப்படியுமா அடையாளம் காண்பார்கள் என்பதல்ல நமது கவலை. இடம் கிடக்காதவை பட்டியலில் இடம்பெறும் தகுதியைக்கூட நூற்றுக்கணக்கான சாதிகள் பெறுவதில்லையே என்பதுதான் கவலை. அவற்றின் இருப்பை அரசியல் கணக்கு மறந்துவிடுவது அரசியல் விமர்சகர்களின் குறையல்ல. நமது அரசியல் உரையாடல் பயன்படுத்தும் மொழியின் குறை, அந்த மொழியின் கட்டமைப்புக் குறை.
சமீபத்தில் தேர்தல் முறை பற்றி தேசியக் கட்சிகளின் பழகிப் பழசாகிப்போன ஒரு விவாதம். மாநிலத்தில் பதிவான மொத்த வாக்குகளில் 40% பெற்ற கட்சி நாடாளுமன்றத்தில் 50 உறுப்பினர்களைப் பெறுகிறது. 30% பெற்ற கட்சி இரண்டு உறுப்பினர்களை மட்டுமே பெறுகிறது. 10% பெற்ற இன்னொரு கட்சி ஒருவரைக்கூடப் பெறுவதில்லை. மக்களில் இத்தனை பேர் பிரதிநிதிகளைப் பெறாமலே போகும் கேலிக்கூத்துக்கு என்ன முடிவு என்பது விவாதத்தின் கேள்வி. தொகுதியில் வென்றது யார் என்ற அடிப்படையில் அல்லாமல், கட்சியின் மொத்த வாக்கு சதவீத அடிப்படையில் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அமைய வேண்டும் என்பது விவாதம் சொல்லும் தீர்வு.
நிரந்தரப் பெரும்பான்மை
கட்சிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கானது மட்டுமே இந்த விகிதாச்சாரப் பிரதிநிதித்துவத் தீர்வு. மற்றொரு பிரச்சினை அரசியலுக்குப் புறத்தே நிற்கும் சாதிகளையும் அரசியலுக்குள் வரவிடுவது எப்படி என்பது. அரசியல் உரையாடலின் கட்டமைப்பு இந்தப் பிரச்சினையும் விவாதத்துக்குள் வருமாறு விரிவாக வேண்டும். ஒன்று, இரண்டு, மூன்று என்று தனி நபர்களை எண்ணி வருவதுதான் பெரும்பான்மை என்பது இன்றைய உரையாடலின் அனுமானம். தனி நபர்கள் சேர்ந்து உருவாகும் தொகுப்புதான் தேர்தலில் வரும் பெரும்பான்மை என்பது அதன் நம்பிக்கை. உண்மையில், அது எப்போதுமே இருக்கும் ஒரு தொகுதியின் சாதிப் பெரும்பான்மை. தேர்தலுக்கு முன்பும் அதுவேதான் பெரும்பான்மை. அந்த நிரந்தரப் பெரும்பான்மைக்கு தேர்தல் ஒரு சட்டரீதியிலான அங்கீகாரம். தேர்தல் தொகுதி என்ற ஜனநாயக ஏற்பாடு சாதியத்தை ஊட்டி வளர்க்கிறது. நிரந்தரப் பெரும்பான்மை என்பது எதேச்சாதிகாரத்தின் மறு வடிவம்தானே!
அரசியல் உரையாடலில் உயர் சாதிகள், தாழ்த்தப்பட்டவை, இடைநிலைச் சாதிகள் என்று ஒரு சமுதாய வகைப்பாடு. மற்றொரு வகைப்பாட்டையும் சோதிக்க வேண்டும். அரசியலை ஒரு களம், அரங்கம், வெளி என்று வைத்துக்கொண்டால் அந்த அரசியல் வெளிக்கு உள்ளே இருக்கும் பெரும்பான்மைச் சாதிகள் ஒரு வகை. அரசியலுக்குள் வர இயலாமல் வெளியே நிற்கும், எண்ணிக்கை முக்கியத்துவம் இல்லாத புறவெளிச் சாதிகள் மற்றொரு வகை. இந்த வகைப்பாட்டின் மாற்றுத் தளத்திலும் அரசியல் உரையாடல் கட்டமைய வேண்டும். உள்வெளிச் சாதிகள் என்ற ஒரு புது சத்திரிய வர்ணம் உருவாவதையும், புறவெளிச் சாதிகள் ஜனநாயகத்தில் ஒப்புக்குச் சப்பாணியாவதையும் கவனிக்க வேண்டும். ஜனநாயகம் என்னவென்றால், ஒரு சாதி என்ற அளவில் எதுவுமே அரசியலின் புறவெளிக்குச் சென்றுவிடக் கூடாது என்பதுதான். நாடு எடுக்கும் முடிவுகளில் எல்லோரும் பங்கேற்கவும் முடியும் பங்களிக்கவும் முடியும் என்பதுதானே குடியாட்சி!
பன்முகத்தன்மையின் வளம்
தன் ஊரின், நாட்டின் பொது விவகாரங்களில் ஒருவர் பங்கேற்க இயலாதபோது, அவர் முழுமை அடைவதில்லை. இது பிரச்சினையின் ஒரு பக்கம். எண்ணிக்கை வலு இல்லை என்பதற்காகவே நூற்றுக்கணக்கான சாதிகளின் பங்களிப்புக்கு வாய்ப்பு தராத முறை நமது அரசியலுக்கு இழப்பு என்பது அதன் மறு பக்கம். மற்றவரின் உடைமை என்றிருந்தவர்களையும், சொத்து இல்லாதவர்களையும், பெண்களையும் அரசியலிலிருந்து நீக்கிவைத்திருந்த பழைய நிலைமைக்கும் இதற்கும் என்ன வேறுபாடு? ஒற்றை என்ற ஏகத்தைத் தடுத்து பன்முகத்தன்மை என்ற அநேகத்தின் வளத்தை விரும்பும் நாம் கவலைப்பட வேண்டிய பிரச்சினை இது.
தொகுதிகளின் நிரந்தரப் பெரும்பான்மையை எது உடைக்கிறது? வர்க்கச் சிந்தனையால் அதை உடைக்க இயலும். இங்கே கவர்ச்சி அரசியல் அதை உடைத்திருக்கிறது. விடுதலைப் போர், மொழிப் போராட்டம் போன்ற பெரும் நிகழ்வுகளும், அவ்வப்போது வரும் உணர்வுப் பேரலைகளும் உடைத்தன. மற்ற நேரங்களில் ஜனநாயகத்தால் சாதிவழிப் பெரும்பான்மையை உடைக்க இயலவில்லை.
ஒரு சாதியின் எண்ணிக்கை வலுவுக்குத் தகுந்தபடி அதற்கு அரசியல் பலம் இருப்பதுதான் ஜனநாயகத்தில் முறை என்று நாம் நினைக்கலாம். எண்ணிக்கை வலு இல்லாத சாதிகளுக்கு அரசியல் பலம் இல்லாமல் இருப்பதும் இயற்கைதானே என்றும் நம்பலாம். இந்தத் தடத்திலேயே தர்க்கத்தைத் தொடர்ந்தால் அது எந்த இடத்தில் நிற்கும்? சாதி அடிப்படையில் அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வது முறை. அந்தப் பகிர்மானத்தில் பத்துப் பதினைந்து தவிர மற்ற சாதிகள் விலக்கப்படுவதும் முறை என்ற இடத்தில் வந்து நிற்போம். இந்த அளவுக்குத்தான் ஜனநாயகத்தின் பெரும்பான்மைக் கோட்பாட்டைப் புரிந்துகொண்டிருக்கிறோம். நல்லது, கெட்டது அடிப்படையில் அவ்வப்போது பெரும்பான்மையை உருவாக்கிக்கொள்வதுதான் ஜனநாயகம். நமது ஜனநாயகமோ நிரந்தரமாக இருக்கும் சாதிப் பெரும்பான்மையை உறுதிப்படுத்துவது. இதுதான் பிரச்சினையின் வடிவம் என்றாலும் இந்த வடிவத்தில் அதை நாம் விவாதிப்பதில்லை. பெருக்கிப், பெருக்கிப் படுக்கும் பாய்க்குக் கீழே தள்ளிவைக்கும் குப்பையைப் போல் இது நாம் பேசக் கூசும் பிரச்சினை.
- தங்க.ஜெயராமன்,
ஆங்கிலப் பேராசிரியர், ‘காவிரிக் கரையில் அப்போது...’ நூலின் ஆசிரியர், தொடர்புக்கு: profjayaraman@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT