Last Updated : 28 Feb, 2018 10:01 AM

 

Published : 28 Feb 2018 10:01 AM
Last Updated : 28 Feb 2018 10:01 AM

நீரவ் மோடி: ஒரு பெருமோசடியின் கதை!

ந்தியாவின் வங்கித் துறை, நிதித் துறை, தணிக்கைத் துறை, பங்குச்சந்தைகள், வைரத் தொழில், ஏற்றுமதித் துறை என்று அனைத்தையுமே தன்னம்பிக்கை இழக்க வைக்கும் பெரிய மோசடியைத் தொழிலதிபர் நீரவ் மோடி நிகழ்த்திவிட்டுத் தலைமறைவாகிவிட்டார். ‘பஞ்சாப் நேஷனல் வங்கி’ (பிஎன்பி) அவரால் ரூ.12,651 கோடியையும் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையையும் ஒருங்கே இழந்திருக்கிறது. எப்படி நடந்தது இது?

மும்பையில் ஃபயர் ஸ்டார் இன்டர்நேஷனல் லிமிடெட் உள்ளிட்ட 9 தங்க-வைர நகை நிறுவனங்களை நடத்திவந்தார் நீரவ். உள்நாட்டில் வைரம், நவரத்தின நகைகளை விற்பனை செய்த அந்நிறுவனம், வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்படும் கச்சா வைரங்களைப் பட்டை தீட்டி, மதிப்புக் கூட்டி வைர நகைகளாக ஏற்றுமதிசெய்தது. தனது தொழிலுக்காகத் தேவைப்படும் நிதியை பிஎன்பியின் மும்பைக் கிளையிலிருந்து பெற்றுவந்தது.

எப்படி நடந்தது?

ஏற்றுமதி நிறுவனங்கள் தங்களுக்குத் தேவைப்படும் நிதியை வங்கிகளில் கடனாகப் பெறுவது வழக்கம். வெளிநாடுகளில் தொழில்செய்யும் நிறுவனங்கள் தங்களுடைய வங்கி மட்டுமல்லாமல், வெளிநாட்டில் உள்ள பிற இந்திய வங்கிகளிலும்கூடக் கடன் வாங்கும். அந்தக் கடனுக்கு, நிறுவனங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி, பிணை நிற்க வேண்டும். இதற்காகக் ‘கடன் உறுதியேற்புக் கடிதம்’ (எல்ஓயு) ஒன்றையும் அந்த வங்கி தர வேண்டும். இப்படிக் கடிதம் கொடுப்பதற்கு முன்னால், அந்த வங்கியின் கிளை அதிகாரி தன்னுடைய மேல் அதிகாரியின் ஒப்புதல் பெற வேண்டும். ஆனால், இந்த விவகாரத்தில் மேலதிகாரியின் ஒப்புதல் பெறாமலும் அவருடைய கவனத்துக்குக் கொண்டு செல்லாமலும் கிளை அதிகாரிகளே தங்களுக்குள் பேசி வைத்துக்கொண்டு, நூற்றுக்கும் மேற்பட்ட ‘கடன் உறுதியேற்புக் கடிதங்க’ளை அளித்துள்ளனர்.

வழக்கமாக இப்படிக் கடனையோ, கடன் உறுதியேற்புக் கடிதத்தையோ கொடுப்பதற்கு முன்னால், அத்தொகைக்கு ஈடாக, வாடிக்கையாளரின் பெயரில் உள்ள நிலப் பத்திரம் அல்லது பெரிய சொத்துப் பத்திரம் அல்லது வங்கியில் செலுத்தப்பட்ட நிரந்தர வைப்புத்தொகை ரசீது போன்றவற்றைப் பிணையாக வாங்கி வைத்துக்கொள்வார்கள். அத்துடன் வாடிக்கையாளரின் தொழில் மதிப்பைக் கொண்டு கடன் தொகைக்கும் வரம்பு நிர்ணயிப்பார்கள். இந்த நடைமுறைகளையும்கூட பிஎன்பி கிளை அதிகாரிகள் கடைப்பிடிக்கவில்லை. அத்துடன் அதை ‘சிபிஎஸ்’ (கோர் பேங்கிங் சர்வீஸ்) என்ற நடைமுறையிலும் பதிவேற்றவில்லை.

இந்தக் கடன் உறுதியேற்புக் கடிதம், ‘ஸ்விஃப்ட்’ என்ற நவீனத் தகவல் தொழில்நுட்ப நடைமுறை மூலம் வழங்கப்பட்டிருக்கிறது. இது ‘உலக அளவில் வங்கிகளுக்கு இடையிலான தகவல்தொடர்புக்கான சங்கம்’ என்ற அமைப்பின் செயல்வடிவமாகும். 2011 மார்ச் முதல் 2018 வரை நூற்றுக்கும் மேற்பட்ட ‘எல்ஓயு’க்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தொகைகளை அந்நிறுவனம் வைர ஏற்றுமதிக்குப் பயன்படுத்தாமல் வேறு செலவுகளுக்குத் திருப்பிவிட்டிருக்கிறது. சில சமயம் பழைய கடன் நிலுவையையும் அடைத்திருக்கிறது.

அம்பலமானது எப்படி?

மும்பை பிஎன்பி வங்கியின் மூத்த துணைப் பொது மேலாளர் கோகுல்நாத் ஷெட்டி ஓய்வுபெற்றதும், புதிய அதிகாரி பொறுப்புக்கு வந்தார். அப்போது நீரவ் மோடியின் நிறுவன அதிகாரி வழக்கம்போல ‘எல்ஓயு’ தருமாறு கேட்டார். அதற்குப் பிணை எங்கே என்று புதிய அதிகாரி கேட்டார். பிணை தருவது வழக்கமில்லை என்றார் நீரவ் மோடியின் அதிகாரி. இதனால், எச்சரிக்கை அடைந்த அதிகாரி, தங்களுடைய வங்கிக் கணக்குகளை ஆராய்ந்தார். தொடர்ந்து நடந்துள்ள இந்த முறைகேட்டை அறிந்ததும் மேல் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தார். அதையடுத்து, வங்கி ஊழியர் களிடம் விசாரணை தொடங்கியது. பிறகு, மத்தியப் புலனாய்வுக் கழகம் (சிபிஐ), வருவாய் புலனாய்வுத் துறையின் அமல்பிரிவு இயக்குநரகம் (இடி) ஆகியவற்றுக்குத் தகவல்கள் பறந்தன.

இதுவரை இந்த மோசடி தொடர்பாக வங்கி ஊழியர் கள் 12 பேரை சிபிஐ கைதுசெய்துள்ளது. நீரவ் மோடி, அவரது மனைவி அமி, சகோதரர் நிஷால், தாய் மாமன் மெகுல் சோக்சி ஆகியோர் ஜனவரி மாதம் முதல் வாரத்திலேயே இந்தியாவிலிருந்து வெளியேறிவிட்டனர். அவர்கள் எங்கே என்று தெரியவில்லை. அவர்களைக் கண்டுபிடிக்க ‘இன்டர்போல்’ சர்வதேச போலீஸ் படையின் உதவியை சிபிஐ நாடியிருக்கிறது. இந்த 4 பேரின் பாஸ்போர்ட்டுகள் 4 வாரங்களுக்குச் செல்லாது என்று வெளியுறவு அமைச்சகம் அறிவித்திருக்கிறது.

நீரவ் மோடியின் நிறுவனம் கையாண்ட தொகை சாமானியமானதல்ல. ஒரேயொரு நகரக் கிளையிலேயே அனைத்தும், சுமார் ஏழு ஆண்டுகளாக நடந்துள்ளன என்பதை நம்பவே முடியவில்லை. ஆனால், நீரவ் மோடியின் நிறுவனம் மட்டுமல்ல அவருடைய தாய் மாமன் மெகுல் சோக்ஸியின் நிறுவனமும் அப்படித்தான் ஈடு ஏதும் தராமல் கடன் பெற்று வியாபாரம் செய்திருக்கிறது என்ற அதிர்ச்சிதரும் தகவல், விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மோசடி அம்பலமாவதற்கு முன்னால் நீரவ் மோடி நிறுவனத்தின் கணக்குகளை ஆராய்ந்த வருவாய்ப் புலனாய்வுப் பிரிவின் அமலாக்கத் துறை, ஏற்றுமதி செய்வதற்காகத் தருவிக்கப்பட்ட விலையுயர்ந்த வைரங்களும் முத்துக்களும் மதிப்புக் கூட்டப்பட்ட பிறகு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படாமல், உள்நாட்டிலேயே விற்கப்பட்டதைக் கண்டுபிடித்தது. ஏற்றுமதி-இறக்குமதி நடைமுறைகளை மீறியதற்காக அந்நிறுவனத்துக்கு அபராதம் விதித்தது. இப்போது புதிய மோசடி அம்பலமான பிறகு, நீரவ் மோடியுடன் தொடர்புள்ள 35 இடங்களில் அமல் பிரிவு இயக்குநரகம் சோதனையிட்டு ரூ.5,300 கோடி மதிப்புள்ள நகைகள், வைரங்கள் உள்ளிட்ட சொத்துகளை அடையாளம் கண்டு சீல் வைத்திருக்கிறது.

பிஎன்பி பொறுப்பேற்குமா?

நீரவ் மோடியின் நிறுவனத்துக்காகக் கடன் உறுதியேற்புக் கடிதத்தை பிஎன்பி அளித்ததால், தாங்கள் அளித்த கடனை அதுதான் திருப்பித் தர வேண்டும் என்று வெளிநாடுகளில் உள்ள இந்திய வங்கிகள் கோரியுள்ளன. நாங்கள் உறுதியேற்புக் கடிதம் கொடுத்தாலும் அதை ஆராய்ந்து பார்த்திருக்க வேண்டும், பிணை வாங்கிக்கொண்டு கடனை வழங்கியிருக்க வேண்டும் என்று பிஎன்பி சார்பில் பதில் தரப்பட்டிருக்கிறது.

பிஎன்பி அளித்த கடன் ஏற்புக் கடிதத்திலேயே இன்னொரு விதிமீறலும் நடந்திருக்கிறது. சாதாரண மாக இப்படிக் கடிதம் தரும்போது 90 நாட்களுக்கு மட்டுமே அது செல்லும்படி தருவார்கள். பிஎன்பியோ ஓராண்டுக்குச் செல்லும் அளவுக்குக் கடன் உறுதியேற்புக் கடிதம் தந்திருக்கிறது. அந்த வங்கிகள் அளித்த தொகை முழுவதும் பிஎன்பியின் ‘நாஸ்ட்ரோ’ கணக்குக்கு வந்த பிறகே நீரவ் மோடி நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. எனவே, பிஎன்பி இந்தக் கடன்களுக்கு ஈடுசெய்யாமல் தப்ப முடியாது என்று வங்கித் துறை மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பிஎன்பியை மோசடிசெய்த நீரவ், இப்போது அதன் மீதே குற்றம்சாட்டியிருக்கிறார். ‘‘பிஎன்பியில் நான் வாங்கியுள்ள கடன்களின் மதிப்பு ரூ.5,000 கோடிதான். என்னிடமிருக்கும் நகைகளை விற்றே அதைத் திருப்பிச் செலுத்தியிருப்பேன். பிஎன்பி என் நிறுவனத்தின்மீது பழிசுமத்தியமையால் சர்வதேச அரங்கில் என்னுடைய நிறுவனத்தின் மீதான நன்மதிப்பு குலைந்து, நான் இனி வியாபாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. என்னால், இனி கடனைக்கூட அடைக்க முடியாது’’ என்று தலைமறைவாக இருந்துகொண்டே அறிக்கை விட்டிருக்கிறார் நீரவ் மோடி.

- வ.ரங்காசாரி,

தொடர்புக்கு: rangachari.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x