Published : 06 Feb 2018 09:06 AM
Last Updated : 06 Feb 2018 09:06 AM
இ
னி அகதிகளை அனுமதிக்கவே முடியாது என்று இந்தியா தன்னுடைய கதவுகளை இழுத்து மூடிவிட முடியாது. ரோஹிங்கியா முஸ்லிம்களுக்குப் புகலிடம் தருவது தொடர்பான பொதுநல வழக்கு விசாரணையில், அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மிக முக்கியமான ஒரு தகவலைத் தெரிவித்தார். அதை அவர் உளப்பூர்வமாகச் சொல்ல நினைத்தாரோ என்னவோ, அது எதிர்கால இந்தியாவைப் பற்றி ஒரு முடிவுக்கு வர உதவியது. இந்தியா எப்படி இருக்கக் கூடாது என்பதைக் கூறுவதாக அந்த அறிவிப்பு அமைந்தது.
“ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு இந்தியாவில் புகலிடம் தர ‘நாங்கள்’ விரும்பவில்லை. உலக அகதிகளின் தலை நகரமாக இந்தியா மாறுவதை ‘நாங்கள்’ விரும்பவில்லை. ரோஹிங்கியாக்களுக்குப் புகலிடம் கொடுத்தால் எல்லா நாடுகளைச் சேர்ந்த அகதிகளும் இந்தியாவுக்குள் நுழைவார்கள். இந்த விஷயத்தில் கருணை காட்ட ‘நாங்கள்’ விரும்பவில்லை’’ என்று கூறியிருக்கிறார்.
‘நாங்கள்’ யார்?
இந்த அறிவிப்பில் ‘நாங்கள்’ என்கிற வார்த்தை பயன்பட்ட விதத்திலிருந்து நான்கு நிலைகளை நாம் பிரித்தறிய முடி கிறது. இந்தியா சார்பில் ‘நாங்கள்’ பேசுகிறோம்; இந்தியா அகதிகள் வருகையை விரும்பவில்லை. எல்லா நாடுகளில் இருந்தும் அகதிகள் இந்தியா நோக்கிக் குவிந்துவிடுவார்கள். உலக அகதிகள் தலைநகரமாக இந்தியாவை அனுமதிக்க மாட்டோம். இந்தக் கட்டுரை ரோஹிங்கியாக்களைப் பற்றி விவாதிப்பது அல்ல; கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கூறியதைப் பற்றி விவாதிப்பதற்குத்தான்.
‘நாங்கள்’ என்று அவர் கூறியிருக்கிறார். இந்த ‘நாங்கள்’ யார்? அரசியல் சட்டத்தில், ‘இந்தியக் குடிமக்களாகிய நாங்கள்...’ என்று வருகிறதே அந்த ‘நாங்களா?’; எனக்கு அதில் சந்தேகம் இருக்கிறது. இந்த வார்த்தையைப் பயன்படுத்தும் அதிகாரம் நாடாளுமன்றத்துக்கு மட்டும்தான் உண்டு. மக்களவை, மாநிலங்களவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப் படும்போது கூட ‘இந்த அவை’ என்றுதான் குறிப்பிடுவார்கள். சட்ட அதிகாரி ‘நாங்கள்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது, ஆட்சியில் இருப்பவர்களைத்தான் குறிப்பிட்டிருக்க வேண்டும். அவர்கள்தான் அவருக்கு அறிவுரைகள் கூறும் அதிகாரமும் உரிமையும் படைத்தவர்கள். ஆனால், இந்த விவகாரத்தில் சொல்லப்படும் விஷயங்களைப் பார்க்கும்போது, அவருக்கு அறிவுரை வழங்கிய ஒரு சிலரைத் தாண்டி, இந்த அரசு முழுவதையுமே அது குறிப்பிடுவதாகத் தான் பொருள்கொள்ள முடியும்.
இனி, அகதிகளுக்கு இந்தியாவில் வரவேற்பு இருக்காது என்ற இரண்டாவது அம்சத்தைப் பரிசீலிப்போம். இதுதான் இன்றைய அரசின் சிந்தனை என்றால், சாதாரண மக்களுக்கு பாதுகாப்பையும் பரிவையும் கொடுக்க வேண்டிய தர்மத்திலிருந்து அரசு விலகுகிறது என்று பொருள். இந்த நாட்டில் இருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல், வேறு நாடுகளிலிருந்து வருகிறவர்களுக்கும் பாதுகாப்பையும் பரிவையும் கொடுப்பது என்ற பாரம்பரியமான தர்மத்திலிருந்தும் விலகுகிறோம் என்று பொருள். அப்படியொரு தர்மத்தைக் கடைப்பிடித்ததால்தான் 16-வது 17-வது நூற்றாண்டில் மத்திய ஆசியாவிலிருந்து வந்த பார்சிக்களுக்கு சூரத் நகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புகலிடம் அளித்து அவர் களுடைய மதத் தனித்தன்மையைப் பாதுகாத்தோம்.
எல்லாமே தவறா?
பழைய சாஸ்திரங்கள், தர்மங்கள், பிரமாணங்களைத் தவிர்த்து நவீன இந்தியாவில் கடைப்பிடிக்கப்பட்ட மரபுகளிலிருந்தும் விலகுகிறோம் என்பதையே கூடுதல் சொலிசிட்டரின் வார்த்தைகள் உணர்த்துகின்றன. புதிய கொள்கை களின்படி பார்த்தால் 1947-ல் நாடு பிளவுபடுத்தப்பட்டபோது இந்துக்கள், சீக்கியர்கள் அடங்கிய 70 லட்சம் பேருக்கு இந்தியாவில் புகலிடம் அளித்தது தவறு என்றாகிவிடும். இந்தியாவிலிருந்து சென்ற 70 லட்சம் பேரை (அவர்களில் பெரும் பாலானவர்கள் முஸ்லிம்கள்) பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டிருக்கக் கூடாது என்றாகிவிடும்.
அதே அடிப்படையில், தலாய் லாமாவை இந்தியாவில் நுழையவிட்டிருக்கவே கூடாது. அவருடன் 1,50,000 திபெத்தியர்களை அனுமதித்ததும்கூடத் தவறு. இதே அடிப்படையில், 1971-ல் அன்றைய கிழக்கு பாகிஸ்தானிலிருந்து ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று ஒரு கோடிப் பேர் பாகிஸ்தான் ராணுவத்தின் இனப் படுகொலையிலிருந்து தப்பிக்க இந்தியாவுக்கு அகதிகளாக வர அனுமதித்திருக்கவே கூடாது. சிங்களப் பேரினவாதிகளின் தாக்குதலுக்கு அஞ்சி இந்தியா வந்த 1,00,000 இலங்கைத் தமிழ் அகதிகளை அனுமதித்திருக்கக் கூடாது. அவர்களைப் பாக் நீரிணையிலேயே தடுத்து திருப்பி அனுப்பியிருக்க வேண்டும். ஆப்கானிஸ்தானிலிருந்து 10,000 பேரையும் பலுஜிஸ்தானிலிருந்து அரசு எதிர்ப்பாளர்களையும் அனுமதித்திருக்கக் கூடாது. ராணுவ சர்வாதிகாரி நீ வின் காலத்தில் மியான்மரின் ஊ நூவையும் வங்கதேசத்தில் தலைக்கு விலை வைக்கப்பட்ட தஸ்லிமா நஸ் ரீனையும் வெளியே தள்ளியிருக்க வேண்டும் என்றெல் லாம் ஆகிவிடும். ஜவாஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வி.பி. சிங், சந்திரசேகர், நரசிம்ம ராவ், தேவ கவுடா, இந்தர் குமார் குஜ்ரால், அடல் பிஹாரி வாஜ்பாய் போன்றோரெல்லாம் ஏமாளிகளாக இருந்தனரா? அவர்களுக்கெல்லாம் தேசப்பற்றே கிடையாதா? புகலிடம் தேடி வருவோருக்குத் தஞ்சம் தர வேண்டும் என்று நினைக்கும் நாமும் தவறான சிந்தனைகளுக்கு ஆட்பட்டிருக்கிறோமா?
துஷார் மேத்தாவின் அறிவிப்பு புதிய எதிர்காலக் கண்ணோட்டத்தைத் தெரிவிக்கிறது. இனி, இந்தியா எதிர்காலத் தில் தன்னுடைய எல்லைகளை எந்தக் காரணத்தைக் கொண்டும் அகதிகளுக்குத் திறந்துவைக்காது. இது அதிகாரியின் வெறும் வார்த்தையல்ல; வாடும் மக்களின் துயரம் கண்டு இரங்காத பாறை மனம் கொண்ட இந்தியாவின் நிலை பற்றியது. இனி, யார் நம் எல்லைக்கு வந்து புகலிடம் கேட்டாலும், ‘திரும்பிப் போ’ என்றுதான் நாம் கூறுவோம்.
மூன்றாவது, அகதிகள் வருகையால் இந்தியா திணறு கிறது. எல்லா நாடுகளிலிருந்தும் அகதிகள் இந்தியா வரத் துடிக்கிறார்கள். இது நம்ப முடியாத வியப்பை ஏற்படுத்து கிறது. அப்படியா.. உலக அகதிகள் இந்தியா வரத் துடிக்கின்றனர்? இதுவரை பார்க்கும்போது இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான் அகதிகளாக வந்துள்ளனர். இனரீதியான வெறுப்பால் அகதிகளானவர்கள்தான் இந்தியா வந்துள்ளனர்.
அகதிகளை இந்தியாவுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்பது இதயமற்ற தன்மையைத்தான் உணர்த்துகிறது. இனம், மதம், அரசியல் சித்தாந்தம் ஆகிய காரணங்களுக்காகப் பக்கத்து நாட்டிலிருந்து இந்துக்களை வெளியேற்றி னால் அவர்களுக்குப் புகலிடம் தருவது சரியாக இருக்கும். அதை உலக நாடுகள் கண்டிக்க வேண்டும் என்றுகூட நாம் கோரிக்கை விடுப்போம். இதுதான் மேத்தாவின் அறிவிப்பில் உள்ள நான்காவது அம்சம்.
முயல்களின் ஓலம்
நம்முடைய நில, கடல் எல்லைகளை அகதிகளுக்காகத் திறந்துவைப்பது பிரச்சினைகளை ஏற்படுத்தும். பயங்கர வாதிகளும் அகதிகள் என்ற போர்வையில் உடன் ஊடுருவிவிடுவார்கள். ஆனால், அதே பயங்கரவாதிகளும் உளவாளிகளும் தனி நபர்களாக அல்லாமல் கூட்டம் கூட்டமாக வரும்போது இந்தியாவுக்குப் பிரச்சினைகள் அதிகமில்லை!
அகதிகள் பிரச்சினையும் சர்வதேசச் சட்டமும் எனக்கு அத்துப்படியான விஷயங்கள் அல்ல. ஆனால், மனிதநேயம் பற்றித்தான் என்னுடைய கவலை. துப்பாக்கிக் குண்டுக்கு ஆளாகிவிடக் கூடாது என்ற அச்சமும், இருந்தால் சித்ரவதைக்கு ஆளாவோம் என்ற கவலையும்தான் அகதிகளின் படையெடுப்புக்கு ஒரே காரணம்.
வேட்டையாடப்படும் ஒவ்வொரு முயலின் ஓலமும் என்னுடைய மூளையின் இழையைக் குத்திக் கிழிக்கிறது என்று ஆங்கிலக் கவிஞர் வில்லியம் பிளேக் எழுதியிருக்கிறார். நூற்றுக்கணக்கான முயல்களைத் தன்னுடைய தலைவாசலில் சாவதற்கு இந்தியா இதுவரை அனுமதித்ததில்லை. அந்தக் கதவு இப்போது அடைக்கப்படுமானால், நம் அனைவருடைய மூளைகளின் இழையொன்றும் வெடித்துச் சிதறட்டும்.
தமிழில் சுருக்கமாக: சாரி,
©: ‘தி இந்து’ ஆங்கிலம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT