Published : 03 Feb 2024 08:22 PM
Last Updated : 03 Feb 2024 08:22 PM
வடகிழக்குப் பருவமழை ஜனவரி 15இல் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து, பல்வேறு சிக்கல்களுக்கு இடையே மழையை நம்பிப் பயிர் சாகுபடிசெய்த காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகள் அறுவடைக்காக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். 15 லட்சம் ஏக்கர் சம்பா, தாளடிப் பயிர்கள் தப்புமா என்ற பதைபதைப்பில் இருக்கும் அவர்களுக்குத் தமிழ்நாடு அரசு என்ன உத்தரவாதத்தை வழங்கியிருக்கிறது?
இருமுறை விதைப்பு: தமிழ்நாட்டின் உணவுத் தேவையில், 40%-ஐப் பூர்த்திசெய்வது காவிரிப் பாசனப் பகுதி. நடப்பாண்டு காவிரி நீரை நம்பி சுமார் 15 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடிச் சாகுபடிப் பணிகளை விவசாயிகள் மேற்கொண்டனர். தென்மேற்குப் பருவமழை குறைவால் மேட்டூர் அணை வறண்டு பாசனத்துக்குப் பயன்படுத்தப்படும் தகுதியை இழந்தது. இதனால் 2023 அக்டோபர் 10 அன்றே அணை மூடப்பட்டுவிட்டது.
உணவு உற்பத்தியைக் கணக்கில் கொண்டும்,உழவர் நலனை முன்னிறுத்தியும் தமிழ்நாடுவேளாண்மை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் 2023 நவம்பர் 1 அன்று அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். விவசாயிகள் நவம்பர் 15 வரையிலும் கிடைக்கும் மழையைப் பயன்படுத்திக் குறைந்த கால நெல்மணிகளை விதைத்துச் சாகுபடி செய்ய அந்தக் கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார். அதை நம்பி வடகிழக்குப் பருவமழை நீரைப் பயன்படுத்தி விவசாயிகள் சாகுபடி செய்தனர்.
இந்நிலையில், ஒரு சில பகுதிகளில் பேரழிவுப் பெருமழை பெய்து, சாகுபடி செய்த பல லட்சம் ஏக்கர் பயிர்களை ஒருமுறைக்கு இருமுறை விதைப்பு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. டிசம்பர் 15 வரை சாகுபடிப் பணி நீடித்தது. இரண்டு மடங்கு செலவானாலும் மிகுந்த நம்பிக்கையோடு மனம் தளராது சாகுபடி செய்த பயிர்கள் தரமான பயிர்களாகக் கிராமங்கள்தோறும் வளர்ந்து, பசுமையாகக் காட்சியளிப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
வாக்கு தவறும் கர்நாடகம்: ஜனவரி முதல் வாரம் வரையில் மழை தொடர்ச்சியாகப் பெய்ததால், சுமார் 15 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடிப் பயிர்கள்தற்போதைய நிலையில் கருகாமல் பாதுகாக்கப்பட்டிருக்கின்றன. சுமார் 5 லட்சம் ஏக்கர் விளைநிலங்களில் கதிர் முதிர்ந்து படிப்படியாக அறுவடை தொடங்கும். பிறகு, பிப்ரவரி முதல் வாரம் முடிவடையும். சுமார் 5 லட்சம் ஏக்கரில் தற்போது கதிர் வந்துகொண்டுள்ளது. எஞ்சியுள்ள 5 லட்சம் ஏக்கரில் முதிர்ந்த பயிராகப் பச்சைப் பசேல் எனக் காட்சியளிக்கிறது. இதைப் பாதுகாத்து அறுவடை செய்ய வேண்டுமானால், பிப்ரவரி மாதம்இறுதிவரையிலும் நீர் தேவைப்படுகிறது. எனவே, தற்போது உள்ள மூன்று கட்டப் பயிர்களின் நிலையைக் கருத்தில் கொண்டு, உடனடியாக மேட்டூர் அணையைத் திறந்து பிப்ரவரி 15 வரை தண்ணீரை வெளியேற்ற வேண்டும்.
‘காய்ச்சலும் பாய்ச்சலும்’ முறையை விவசாயிகள் பின்பற்றியதால் குறுவை சாகுபடிக்கு நாள் ஒன்றுக்கு முக்கால் டிஎம்சி அளவில் திறக்கப்பட்ட தண்ணீரைக் கொண்டு, குறுவைப் பயிரைப் பாதுகாக்க முடிந்தது. தற்போதைய நிலையில் பாசனத் தேவையை உணர்ந்திருந்தாலும், அணையில் 33 டிஎம்சி அளவிலான நீர் இருப்பதால், கோடையின் குடிநீர் தேவையைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் அணையைத் திறப்பதற்கு மனமின்றி செய்வதறியாது திகைத்துப்போய் உள்ளனர். குறிப்பாக, 2023-24ஆம் ஆண்டுக்குக் கர்நாடக அரசு நமக்குத் தர வேண்டிய 177.25 டிஎம்சியில் இதுவரையிலும் 75 டிஎம்சி மட்டுமே கிடைத்திருக்கிறது. மீதம் உள்ள நீரைக் கர்நாடகம் தர மறுத்து, நிலுவையில் வைத்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையம் அக்டோபர் முதல் தண்ணீர் வெளியேற்றம் குறித்து வெளியிட்ட அறிவிப்புகள் அனைத்தும் யானைப் பசிக்குச் சோளப்பொரி போன்ற நிலையிலேயே உள்ளன.
தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியவை: தமிழ்நாட்டின் பயிர் நிலைமையை ஆய்வுசெய்வதோடு, கர்நாடகத்தில் இருக்கிற அணைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்து, பற்றாக்குறை காலத்தில் தண்ணீரைப் பகிர்ந்துகொள்வதற்கான வழிமுறைகளைச் செயல்படுத்தியிருக்க வேண்டும். அதில் முனைப்புக் காட்டாமல், வெறும் சடங்கு நிகழ்வுகளாகவே ஆணையக் கூட்டங்கள் நடந்துமுடிந்திருக்கின்றன. தமிழ்நாடு அரசும் ஏனோதானோஎன்கிற மனப் பான்மையோடு உரிய காலத்தில் நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்கிறது. இதனால், இதுநாள் வரையிலும் நமக்கான நீரைப் பெறத் தவறியதால் 91 டிஎம்சி நீர் நிலுவையில் உள்ளது. இதைக் கேட்டுப் பெறுவதற்கான முயற்சியைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளாமல் புறக்கணித்துள்ளது.
இப்படியான நிலையில், வானம் பார்த்த பூமியாக காவிரிப் பாசனப் பகுதி மாறிவிடுமோ என்கிற அச்சம் எழுந்திருக்கிறது. இந்நிலையில், பற்றாக்குறை காலத்தில் சுமார் 8 டிஎம்சி நீரைபவானிசாகர் அணையிலிருந்து காவிரி டெல்டாவுக்குப் பயன்படுத்திக்கொள்வதற்கு நடுவர் மன்றம் அனுமதி வழங்கியிருக்கிறது. அந்த நீரை விடுவித்து மேட்டூரில் இருக்கிற நீரையும் பயன்படுத்தி சுமார் 10 லட்சம் ஏக்கர் பயிர்களுக்கு பிப்ரவரி இறுதி வரையிலும் நாளொன்றுக்கு முக்கால் டிஎம்சி நீரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பிப்ரவரி இறுதி வரையிலும் தண்ணீர்த் தேவை உள்ளது என்பதை உணர்ந்து, தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி ஆணையம் கருணை காட்டட்டும்: காவிரி மேலாண்மை ஆணைய அதிகாரிகள் காவிரி டெல்டாவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களின் நிலையைப் பார்வையிட்டு, தண்ணீர்த் தேவை குறித்து அறிந்துகொள்வதற்குத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடக அணைகளில் இருக்கிற தண்ணீரை நேரில் ஆய்வுசெய்து தமிழ்நாட்டின் குடிநீர்த் தேவை, சாகுபடி தேவை குறித்தான கணக்கீடுகளை மேற்கொள்ள வேண்டும்.
ஆணையத்துக்கு உண்மை நிலையை எடுத்துரைக்க வேண்டும். இல்லையேல் மழையை நம்பிச் சாகுபடி செய்த விவசாயிகள், பயிர் அறுவடைக்கு வருமா என்கிற அச்ச நிலைக்குத் தள்ளப்படுவார்கள். எனவே, தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது. நீர்ப்பாசனத் துறை, வேளாண் அமைச்சர்கள், பாசனத் துறையின் உயரதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்து, மாவட்டங்களில் தண்ணீர் தேவைப்படும் இடங்களைக் கணக்கிட வேண்டும். தேவைக்கான தண்ணீரை நேரடிக் கண்காணிப்புடன் விடுவிக்க வேண்டும்.
பாசனப் பகுதிகளுக்குக் கொண்டுசெல்வதற்கு மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் நீர்ப்பாசனத் துறை, வேளாண், வருவாய்த் துறை அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழுக்களை அமைத்திட வேண்டும். இல்லையேல் மிகப் பெரிய இழப்பைக் காவிரிப் பாசன விவசாயிகள் சந்திக்க நேரிடும். தமிழ்நாடு முதலமைச்சர் விழித்துக்கொள்வாரா? காவிரி ஆணையமும் கர்நாடக அரசும் கருணை காட்டுமா? காவிரி பாசனப் பகுதி மீட்கப்படுமா? தை பிறந்தால் வழி பிறக்கும் என்னும் கனவுடன் விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.
- பி.ஆர்.பாண்டியன், பொதுச் செயலாளர், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம். | தொடர்புக்கு: p.r.pandi1968@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT