Published : 01 Feb 2018 09:57 AM
Last Updated : 01 Feb 2018 09:57 AM
டெ
ல்லியில் ஒரு அனிமேஷன் ஸ்டுடியோவில் பணிபுரிந்த சமயத்தில், புகழ்பெற்ற இசையமைப்பாளர் ரவீந்திர ஜெயினைச் சந்தித்தேன். ஜேசுதாஸ் பாடிய ‘கோரி தேரா காவ் படா ப்யாரா’ (சித்சோர்) உள்ளிட்ட ஏராளமான பாடல்களைத் தந்தவர். கண் தெரியாத இசைக் கலைஞர். அலுவலகத்தின் கீழ்த்தளத்தில் இயங்கிவந்த ஒலிப்பதிவுக் கூடத்துக்கு வந்திருந்தார். “நான் இளையராஜாவின் ரசிகன்” என்றேன். என் கைகளைப் பற்றியிருந்த அவரது கரங்களில் இறுக்கம் கூடியது. “அச்சா.. அவர் ஒரு ஜீனியஸ்” என்றார் மகிழ்ச்சியுடன். இந்தியாவின் இசை மேதைகளால் பெரிய அளவில் மதிக்கப்படும் இசைக் கலைஞனின் ரசிகன் எனும் பெருமிதத்துடன் நின்றுகொண்டிருந்தேன்.
வட இந்தியாவைப் பொறுத்தவரை, இந்தியத் திரையுலகின் இசையைத் தீவிரமாகக் கவனித்துவருபவர்களைத் தவிர, பெரும்பாலான ரசிகர்களுக்கு இளையராஜாவைத் தெரிந்திருக்க நியாயம் இல்லை. ஆனால், மிகச் சிறந்த 10 இந்திப் பாடல்கள் என்று இந்தியாவின் எந்த மூலையைச் சேர்ந்த ரசிகர் பட்டியலிட்டாலும் அதில் ‘சத்மா’ படத்தின் ‘ஏ ஜிந்தகி கலே லகா லே’ பாடல் நிச்சயம் இருக்கும். பல அடுக்குகள் கொண்ட நுட்பமான நிரவல் இசை, ஒவ்வொரு இசையிழையையும் நிறம் பிரித்துக் காட்டும் துல்லிய ஒலிப்பதிவு, இயற்கையின் பேருருவுக்கு நிகரான கற்பனை வளம் என்று பல அற்புதங்களைக் கொண்ட பாடல் அது. ‘சத்மா’வின் இசை பாலிவுட் இசையுலகை வியப்பில் ஆழ்த்தியிருக்கும். எனினும், இளையராஜாவுக்கு ஏனோ இந்திப் படங்களுக்கு இசையமைப்பதில் பெரிய ஆர்வம் இருந்ததாகத் தெரியவில்லை. அவரது இசைப் பாணி கர்னாடக இசை, நாட்டுப்புற இசை, மேற்கத்திய சாஸ்திரிய இசையை அடிப்படையாகக் கொண்டது என்பதும், அவரது வேர் தமிழக மண்ணில் ஆழ ஊடுருவியது என்பதும் காரணமாக இருக்கலாம்.
எனினும், அவரது பல பாடல்கள் இந்தியில் நகலெடுக்கப்பட்டிருக்கின்றன. கல்யாண்ஜி - ஆனந்த்ஜி முதல் ஆனந்த் - மிலிந்த், அமித் திரிவேதி வரை பல இசையமைப்பாளர்கள் ராஜாவின் மெட்டுக்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். சிரஞ்சீவி நடித்த ‘ஜகதேக வீருடு அதிலோக சுந்தரி’ படத்தின் ‘அப்பானி தீயானி’ பாடலை ஆனந்த் - மிலிந்த் இருவரும் ‘தக் தக் கர்னே லகா’ என்று நகலெடுத்தார்கள். அந்தப் பாடலின் வித்தியாசமான தாளக்கட்டு இன்றைக்கும் பல மொழிப் பாடல்களில் பயன்படுத்தப்படுகிறது. ‘ராக்கம்மா கையத் தட்டு’ பாடலை ‘துத்துத்தூ துத்துத்தாரா’ என்று நகலெடுத்தார்கள். பாகிஸ்தான் பிரச்சாரப் பாடல்கள் வரை அந்தப் பாடலின் மெட்டு பிரபலம். ப்ளாக் ஃப்ரைடே’, ‘மஸான்’ போன்ற படங்களுக்கு இசையமைத்த ‘இந்தியன் ஓஷன்’ இசைக் குழுவினர் ராஜாவிடம் பணி புரிந்த அனுபவத்தைச் சொல்லும்போது, இசையமைப்பில் அவர் காட்டும் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் வியந்திருக்கிறார்கள். மராத்தியப் படமான ‘சய்ராட்’டுக்கு இசையமைத்த அஜய்-அதுல் ராஜாவைத் தங்கள் ஆதர்சமாகக் கருதுகிறார்கள்.
‘சிகப்பு ரோஜாக்கள்’ இந்தியில் ‘ரீமேக்’ செய்யப்பட்டபோது, ராஜாவின் இசைக்கோவையைப் பயன்படுத்திக்கொள்ள முடியுமா என்று பாரதிராஜாவிடம் ஆர்.டி.பர்மன் கேட்டிருக்கிறார். ‘பூவிழி வாசலிலே’ இந்தியில் ரீமேக் செய்யப்பட்டபோது, அந்தப் படத்தின் பின்னணி இசைக்கோவையை அட்சரம் பிசகாமல் பயன்படுத்திக்கொண்டார் பப்பி லஹிரி. ‘இஞ்சி இடுப்பழகி’யை ‘பாயலே சுன்முன்’ பாடலாக உருவாக்கினார் அனு மாலிக். இப்படி நிறையச் சொல்லலாம். எஸ்பிபி ஒரு முறை ராஜாவிடம் இப்படிக் குறிப்பிட்டாராம்: “பாம்பேல ஒரு ரெக்கார்டிங். உன் பாட்டைத்தாண்டா பாடிட்டு வர்றேன்!”
பல்வேறு நிலப்பரப்புகளைக் காட்சியாக விரிக்கும் இசைக்கூறுகள் கொண்டவை ராஜாவின் பாடல்கள். நீண்ட பயணங்களின்போது ரசிகர்களின் வழித் துணையாக அவரது இசை இருப்பதற்கு இது முக்கியக் காரணம். இமய மலைத் தொடர் முதல், கேரளத்துக் கடலோரம் வரை பல நிலப் பகுதிகளைத் தனது இசை மூலம் காட்சிப்படுத்தியிருக்கிறார் அவர். 80-களின் திரையிசை வரைபடத்தைப் பார்த்தால், ராஜாவின் பேரரசு தென்னகம் முழுவதும் பரவியிருந்ததை உணர முடியும். தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் அவர் நூற்றுக்கணக்கான படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
கன்னடத் திரையுலகில் ராஜா கிட்டத்தட்ட ஒரு கடவுள் என்றே சொல்லலாம். அவரது திரையிசைப் பயணத்தின் தொடக்கப்புள்ளியே கன்னடப் பாடல்கள்தானே! ஜி.கே.வெங்கடேஷின் உதவியாளராகப் பணி புரிந்தவர் ராஜா. ஜி.கே.வி.யின் மெட்டுக்களைப் பாடகர்களுக்குப் பாடிக்காட்டுவது முதல் ஆர்கஸ்ட்ரேஷனை முன்னின்று நடத்துவது வரை பிரதானமான பணி அவருடையது. அப்போதுதான் கன்னடத் திரையுலகின் மிகப் பெரும் ஆளுமையான நடிகர் ராஜ்குமாரின் அபிமானத்தை ராஜா பெற்றார். பின்னாட்களில் அவரது பல படங்களுக்கு இசையமைத்த ராஜா, தனது இசையில் அவரைப் பல பாடல்கள் பாடவைத்தார். மணிரத்னத்தின் முதல் படமான ‘பல்லவி அனுபல்லவி’ படத்தின் ‘நகுவா நயனா’ பாடலுக்கு பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. மறைந்த இயக்குநர் (‘மால்குடி டேஸ்’ புகழ்) சங்கர் நாக் படங்களுக்கு அவர் தந்த பாடல்களும் பின்னணி இசையும் இன்றுவரை கன்னட மக்களால் கொண்டாடப்படுகின்றன.
அவரது ‘கீதா’ படத்தில் ராஜா இசையமைத்த ‘ஜோதியலி’ பாடலைப் பாடாமல் எஸ்.பி.பி. கன்னடத் திரையிசை நிகழ்ச்சியை நிறைவுசெய்ய மாட்டார் (இப்போது அதற்கான வாய்ப்பு இல்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம்தான்). கன்னடத்தின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் அம்சலேகா, ராஜா இசையில் பாடல் எழுதியிருக்கிறார். தெலுங்கைப் பொறுத்தவரை ரசிகர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் திரையுலகமும் ராஜா மீது வைத்திருக்கும் மதிப்பு பிரமிக்கவைப்பது. அவர் இசையமைத்த படங்களின் இசை வெளியீட்டு விழாக்களில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்கள் கலந்துகொள்வார்கள். மரகத மணி முதல் தேவி ஸ்ரீபிரசாத் வரை அத்தனை பேரும் ராஜா ரசிகர்கள். ராஜாவின் தொடக்ககாலத்திலேயே தெலுங்கில் அவரது கொடி பறக்கத் தொடங்கிவிட்டது. வம்சி தொடங்கி ராம்கோபால் வர்மா வரை அவருடன் இணைந்து பணிபுரியாத முன்னணி இயக்குநர்கள் இல்லை எனலாம். மணிரத்னம் இயக்கிய ‘கீதாஞ்சலி’ (தமிழில் - ‘இதயத்தைத் திருடாதே’) படத்தில் அவர் தந்த பாடல்கள் ஆந்திர, தெலங்கானா ரசிகர்களால் ஆராதிக்கப்படுபவை.
மலையாளத் திரையுலகுக்கும் ராஜாவுக்கும் இருக்கும் உறவு மிக நுட்பமானது. இயற்கை வளங்கள் நிறைந்த கேரளப் பகுதிகளுக்குப் பொருத்தமான பல பாடல்களைத் தந்திருக்கிறார். பாலுமகேந்திரா இயக்கிய ‘ஓளங்கள்’ படத்தின் ‘தும்பி வா’, பத்மராஜனின் ‘மூணாம் பக்கம்’ படத்தின் ‘உணருமீ கானம்’ என்று அவரது முத்திரை பதித்த 80-களின் பாடல்கள் நூற்றுக்கணக்கானவை. தமிழை விட மிக நுட்பமான இசைக்கோவைகளை மலையாளப் படங்களுக்குத் தந்திருக்கிறார். ராஜீவ் அஞ்சல் இயக்கிய ‘குரு’ படத்தில்தான் முதன்முறையாக ஹங்கேரி சிம்பொனி இசைக் கலைஞர்களைப் பயன்படுத்தினார். அதில் வரும் ‘அருண கிரண தீபம்’ பாடலின் ஆர்க்கஸ்ட்ரேஷன் அழகியலும் பிரம்மாண்டமும் கலந்தது.
சத்யன் அந்திக்காடு கேமரா இல்லாமல்கூடப் படம் எடுத்துவிடுவார்; ராஜா இல்லாமல் எடுக்க மாட்டார் எனும் அளவுக்கு ஒரு காலத்தில் இளையராஜாவுடன் தொடர்ந்து பணிபுரிந்தார். ஜான்சன் முதல் ஜாஸி கிஃப்ட் வரை பெரும்பாலான மலையாள இசையமைப்பாளர்கள் ராஜாவின் பரம ரசிகர்கள்.
90-களின் இறுதியில் தமிழில் இளையராஜா இசை யமைத்த படங்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வந்தாலும், தென்னிந்திய மொழிகளில் முக்கியமான இயக்குநர்கள் தொடர்ந்து இளையராஜாவுடன் இணைந்து பணிபுரிந்தார்கள். அது இன்றுவரை தொடர்கிறது. தமிழகம் தாண்டி, தென்னகம் தாண்டி இந்தியாவின் எல்லா மூலைகளிலும் ராஜாவின் இசை ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வகையில், நாட்டின் இரண்டாவது உயர்ந்த விருதான ‘பத்ம விபூஷண்’ ராஜாவுக்கு வழங்கப்பட்டிருப்பது தமிழர்களுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் கிடைத்திருக்கும் கெளரவம்!
- வெ.சந்திரமோகன்,
தொடர்புக்கு: chandramohan.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT