Published : 27 Aug 2014 08:40 AM
Last Updated : 27 Aug 2014 08:40 AM
‘சிறார் நீதி-பாதுகாப்புச் சட்ட’த்தில் திருத்தம் மேற்கொள்வது குழந்தைகளின் உரிமைகளுக்கு எதிரானது.
நமது குற்ற விசாரணை முறையில் ‘சிறார் நீதி மற்றும் பாதுகாப்புச் சட்டம்-2000’ என்று ஒரு சட்டம் இருக்கிறது. இதன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஒரு சிறார் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை என்பது மூன்று ஆண்டுகள். குற்றம்சாட்டப்பட்ட சிறுவர்களைக் குற்றவாளிகள் என்று பார்க்காமல் சட்டத்துடன் முரண்படும் குழந்தை என்று பார்ப்பதுதான் நமது நீதிமுறையின் சிறப்பு. ஆனால், இதற்கு ஆபத்து ஏற்படுத்தும் வேலையில் மத்திய அரசு இறங்கியிருக்கிறது. ‘சிறார் நீதி மற்றும் பாதுகாப்புச் சட்ட’த்தில் திருத்தம் செய்து, வயதுவந்த குற்றவாளிகளை நடத்துவதுபோல, மோசமான குற்றச்செயல்களில் ஈடுபடும் சிறார்களையும் நடத்துவது என்று சமீபத்தில் மத்திய அரசு முடிவுசெய்திருக்கிறது. அதற்காக, மோசமான குற்றங்களுக்கு வயதுவரம்பை 18 வயதிலிருந்து 16-ஆகக் குறைப்பதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
பொதுப்புத்தியின் குரல்
டெல்லியில் கடந்த 2012 டிசம்பர் மாதம் மருத்துவக் கல்லூரி மாணவி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட மோசமான சம்பவத்தில் குற்றம்சாட்டப் பட்டவர்களில் ஒருவர் 18 வயதுக்குக் குறைவான சிறுவன். அவன் மீதுள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால்கூட அந்தச் சிறுவன் மூன்று ஆண்டுகள் தண்டனை அனுபவித்துவிட்டு அதற்குப் பிறகு விடுவிக்கப்படுவான் என்ற கருத்தில் அந்தச் சிறுவனுக்கு மரண தண்டனை தர வேண்டும் என்ற கோரிக்கை டெல்லியின் வீதியில் குழுமியிருந்த கூட்டத்தின் பொதுப்புத்தியின் குரலாக இருந்தது. அதனைத் தொடர்ந்து சுப்பிரமணியன் சுவாமி உட்பட பலரும் இதே கோரிக்கைக்காக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்தார்கள். இந்த வழக்குகளை மார்ச் 2014-ல் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதற்கு முன்பு 2013-லும் இதே போன்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்திருந்தது. இந்தப் பின்னணியில், புதிய அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சிறார் குற்றவாளிகளின் வயதைக் குறைப்பதற்கான முடிவை, குழந்தைகளுக்கும் பெண்களுக்குமான மத்திய அமைச்சகம் எடுத்திருந்தது. அதற்காக அமைச்சர் மேனகா காந்தி கூறிய காரணம்: “பெண்கள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் குற்றங்களில் பாதியளவு, சிறார் குற்றவாளிகளால் நிகழ்த்தப்படுகிறது.” இதன் காரணமாக, சிறார் குற்றவாளிகளுக்கான வயது வரம்பைக் குறைத்து பெரியவர்களைப் போலவே அவர் களுக்கும் தண்டனை வழங்க வழிவகை செய்துள்ளதாக அவர் கூறியிருந்தார். ஆனால், ஒட்டுமொத்தப் பாலியல் குற்றங்களில் 5.6% மட்டுமே 18 வயதுக்குக் கீழே உள்ளவர் களால் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பதுதான் உண்மை. மேலும், மொத்த குற்றங்களில் 1.2% மட்டுமே சிறாரின் பங்கு இருந்திருக்கிறது என்ற உண்மை வசதியாக மறைக்கப்பட்டுள்ளது.
உரிமைகள் மறுக்கப்பட்ட குழந்தைகள்
உலகிலேயே அதிகக் குழந்தைகளைக் கொண்ட நாடு இந்தியாதான். இங்குள்ள குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் கண்ணியமான சூழலில் அவர்கள் பெற்றிருக்க வேண்டிய வாழும் உரிமை, ஆரோக்கியமாக வளரும் உரிமை, சமூகத்தின் தீங்கு களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் உரிமை, சமூகத்தின் வளர்ச்சியில் பங்கேற்கும் உரிமை போன்றவை மறுக்கப்பட்டவர்களாக உள்ளனர். இந்த உரிமைகளை உத்தரவாதப்படுத்த வேண்டிய அரசு தனது பொறுப்பை நிறைவேற்றாமல் அந்தக் குழந்தைகளைக் கைவிட்டிருக்கிறது. இப்படிப்பட்ட பாதுகாப்பற்ற புறக்கணிப்புச் சூழலிலேயே சிறார் குற்றவாளிகள் உருவாக்கப்படுகின்றனர். இந்தச் சமூகச் சூழலை மாற்ற முயற்சிக்காமல் தண்டனைகளை மட்டும் கடுமையாக்குவது பாரபட்சமானது.
18 ஏன்?
நமது ஜனநாயக சமூகத்தில் வாக்களிக்கும் உரிமை 18 வயது பூர்த்தியானவர்களுக்கே வழங்கப்படுகிறது. ஏனெனில், சுயசிந்தனை என்பது ஏறக்குறைய அந்த வயதிலிருந்தே தொடங்குவதாகக் கருதப்படுகிறது. மனிதர்களின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தும் சிந்தனை, பகுத்தாய்வு செய்யும் மனநிலை போன்றவற்றுக்கு அடிப்படையாக உள்ள மூளையின் முன் பகுதி (ஃப்ரான்டல் லோப்) கிட்டத்தட்ட 18 வயது வரை வளர்ந்து வருகிறது. எனவே, 17 வயதுடைய ஒரு சிறுவனுக்கு வயதுவந்த இளைஞனைப் போல உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் சிரமங்கள் உள்ளன. ஒரு செயலின்போது ஏற்படும் பாதிப்புகளைப் பற்றிப் புரிந்துகொள்வதிலும், அந்த பாதிப்புகளை உணர்ந்து அந்தச் செயலைக் கைவிடுவதிலும், பின்விளைவுகளைப் பற்றி எச்சரிக்கை கொள்வதிலும், நியாய உணர்வுகளின் வழியில் பகுத்தாய்வு செய்வதிலும் தடுமாற்றமும் குழப்பமும் ஏற்படும் வயதாக 18 வயதுக்குக் குறைந்த வயதுகள் இருக்கின்றன. எனவே, 18 வயதுக்குக் கீழே உள்ள சிறார்கள் உடலாலும் மனதாலும் 18 வயது பூர்த்தியானவர்களுக்குச் சமமாக முடியாது என்பது அறிவியல்பூர்வமாக உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவின் உச்ச நீதிமன்றம் ‘கிரகாம் எதிர் புளோரிடா’ என்ற வழக்கில் 2010 ஆண்டில் இந்தக் கருத்தை உறுதிசெய்துள்ளது. குற்றம் செய்த சிறார்களில் 90 சதவீதத்துக்கும் மேலானவர்கள் மறுவாழ்வுக்கு வாய்ப்பு தரப்பட்டு கண்காணிக்கப்படும் சூழலில், மீண்டும் எந்தக் குற்றத்திலும் ஈடுபடாமல் நல்லவர்களாக வாழ்கிறார்கள் என்பதை அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலத்தின் குற்ற ஆய்வு ஒன்று உறுதிசெய்திருக்கிறது.
பெண்களுக்கு எதிரானவர்களா?
இந்தியாவின் தேசிய மனநல மற்றும் நரம்பியல் நிறுவனமும் தேசிய சட்டப் பல்கலைக்கழகமும் இணைந்து மத்திய அரசுக்கு வழங்கிய பரிந்துரையில் 18 வயதுக்குக் குறைவான சிறார்களை வயதுவந்தவர்களுக்கு இணையாக வைத்துக் குற்றவிசாரணை நடத்தக் கூடாது என்று பரிந்துரைத்திருக்கின்றன. மேலும், இந்திய அரசு ஒப்புக்கொண்டுள்ள ஐ.நா-வின் குழந்தைகள் உரிமைகளுக்கான மாநாட்டு வரைவின்படி 18 வயது பூர்த்தியடையாத அனைவரும் குழந்தைகளாகவே கருதப்பட வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக நமது ஆட்சியாளர்கள் பொதுப்புத்தியின் மனநிலைக்கும் அதன் கூச்சலுக்கும் செவிமடுத்து, எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்ததன் வெளிப்பாடே, குழந்தைகளைப் பெண்களுக்கு எதிரானவர்களாகச் சித்தரிக்கும் செயல். மேலும், குற்றத்தின் தன்மையைப் பொறுத்து ஒரு சிறுவன் எந்த வகையிலும் இளைஞனாக மாறிவிடுவதில்லை.
இளைஞர்களைப் போலச் சிறாரைத் தண்டிப்பதால் குற்றம் குறைந்துவிடாது. மேலும் அவர்கள் குற்றச் சூழலில் வாழும் நிலையையே அது உறுதிசெய்யும். இளம் சிறாரைப் பிற குற்றவாளிகளுடன் கலந்து விசாரிக்கும் சூழலில் அந்தச் சிறார்கள் உடலாலும் மனதாலும் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளது. அது சமநீதி விசாரணையாக இருக்க முடியாது. தற்போது நடைமுறையில் உள்ள ‘சிறார் நீதி மற்றும் பராமரிப்புச் சட்டம்-2000’ குழந்தைகளின் மறுவாழ்வை உத்தரவாதப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது. ஆனாலும், சமூகத்தில் இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவது குறித்துப் பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. இந்த நிலையில் இந்தச் சட்டத்தின் நோக்கத்துக்கு மாறாக ஒரு சட்டத்திருத்தம் வருவது, அந்தச் சட்டத்தின் அடிப்படையைத் தகர்ப்பதாக உள்ளது.
2012-ல் டெல்லி பாலியல் வன்செயலை ஒட்டி அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிஷன் சுட்டிக்காட்டியதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்: “கடுமையான தண்டனை என்பதைவிட, மறுவாழ்வு நடவடிக்கைகளே சமூகத்தில் குற்றத்தைக் குறைக்கும். மேலும், நமது சிறைகள் குற்றவாளிகளை நல்ல மனிதர்களாக மாற்றுவதற்குப் பதிலாக மேலும் குற்றவாளிகளாக்கும் நிலையில்தான் இருக்கின்றன.”
சிறார் குற்றவாளிகளின் வயது வரம்பை 18-லிருந்து 16-ஆகக் குறைக்கும் மத்திய அரசின் செயல் பொறுப்பற்றது; அறிவியல் பார்வையற்றது. ஜனநாயகச் சமூகம் மத்திய அரசின் இந்தச் செயலைத் தடுக்க முன்வர வேண்டும்.
- ச. பாலமுருகன்,‘சோளகர் தொட்டி’ என்ற நாவலின் ஆசிரியர், மனித உரிமைகள் செயல்பாட்டாளர்;
தொடர்புக்கு: balamuruganpucl@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT