Published : 08 Jan 2024 06:13 AM
Last Updated : 08 Jan 2024 06:13 AM
விருதுநகர் மாவட்டத்தின் தொல்பழங்கால வரலாற்றை நமக்குத் தருவது திருத்தங்கல் அகழாய்வு. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் வெம்பக் கோட்டை அகழாய்வு, விருதுநகரின் வரலாற்றுச் சிறப்பை நாள்தோறும் துலக்கப்படுத்திவருகிறது.
இந்தப் பின்னணியில், கள ஆய்வாளர்களை ஒருங்கிணைத்துச் செயல்பட வைக்கும் முயற்சியாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் கருத்தரங்கில் வெளியிடப்பட்ட இத்தொகுப்பில், வரலாற்றுப் பேராசிரியர்கள், கள ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் பங்களித்த 51 ஆய்வுக் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
வைப்பாற்றங்கரையின் வரலாற்றுத் தடம்
வெளியீடு: மாவட்ட நிர்வாகம், விருதுநகர்.
இந்து தமிழ் திசை வெளியீடு: சி.வி.ராமனுக்குப் பிறகு, இந்தியாவில் பிறந்து, வளர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்ட யாரும் அறிவியல் நோபல் பரிசுகளை வென்றதில்லை. அந்தக் குறையைப் போக்க வேண்டுமென்றால், மாணவர்களுக்கு அறிவியல் ஆராய்ச்சி மீதான ஆர்வத்தைப் புகட்ட வேண்டும். புகழ்பெற்ற அறிவியலாளர்களின் வாழ்க்கைக் கதையை விவரிப்பது அதற்கான சிறந்த வழிகளில் ஒன்று. அதையே இந்த நூலில் செய்திருக்கிறார் என்.மாதவன்.
‘இந்து தமிழ் திசை’யின் பள்ளி மாணவர்களுக்கான ‘வெற்றிக்கொடி’யில் வெளிவந்த தொடர், புத்தகமாகத் தொகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அறிவியல் கண்டுபிடிப்புக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சுவாரசியமான கதைகளை எளிய நடையில் இதில் எடுத்துரைக்கிறார் என்.மாதவன்.
அறிவியல் ஸ்கோப்
என்.மாதவன்
விலை: ரூ.125
அயல்மொழி அலமாரி: வ.உ.சி-யை முழுமையாக அறிதல்! -‘கப்பலோட்டிய தமிழன்’ வ.உ.சிதம்பரனாரைப் பற்றிய தன்னுடைய முதல் ஆக்கத்தை (‘வ.உ.சி. கடிதங்கள்’) 1984இல் வெளியிட்டபோது, ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு வயது 17. வ.உ.சி. மீதான தீராக் காதலால், நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான தொடர் ஆராய்ச்சியில், ‘வ.உ.சி.யும் திருநெல்வேலி எழுச்சியும்’, ‘வ.உ.சி.யும் பாரதியும்’, ‘வ.உ.சி.யும் காந்தியும்: 347 ரூபாய் 12 அணா’, ‘திலக மகரிஷி: வ.உ.சி’, ‘வ.உ.சியின் சிவஞான போத உரை’, ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும்’, ‘வ.உ.சி: வாராது வந்த மாமணி’ என வ.உ.சி. இயலுக்கு அளப்பரிய பங்களிப்பைச் சலபதி வழங்கியுள்ளார்.
அவற்றின் தொடர்ச்சியாக, அவர் எழுதியிருக்கும் ஆங்கில நூல்தான், ‘Swadeshi Steam’. ‘வ.உ.சி-யின் மகள்’ என்று பாரதியால் போற்றப் பட்ட எஸ்.எஸ்.காலியா சுதேசக் கப்பல் வாங்கப்பட்ட நாளான டிசம்பர் 22 அன்று வெளியான இந்நூல், சுதேச கப்பல் கம்பெனியின் வரலாற்றை இதுவரை வெளிவராத முற்றிலும் புதிய தகவல்களின் அடிப்படையில் அங்குலம் அங்குலமாகப் பதிவுசெய்திருக்கிறது.
சென்னை, கொல்கத்தா, லண்டன், பாரிஸ் என வ.உ.சி. பற்றிய சலபதியின் 40 ஆண்டுக்காலத் தேடலும் ஆய்வும் நூலின் ஒவ்வொரு பக்கத்துக்கும் கனம் கூட்டுகின்றன. ‘கப்பலோட்டிய தமிழன்’ என்கிற பதத்துக்கான உண்மையான பொருளை உலகுக்கு எடுத்துச் சொல்லும் நூலாக Swadeshi Steam அமைந்துள்ளது.
Swadeshi Steam: V.O. Chidambaram Pillai and the Battle against the British Maritime Empire
ஆசிரியர்:
A.R. Venkatachalapathy
வெளியீடு: Penguin / India Allen Lane
புத்தகக் காட்சியில்: ஹிக்கின்பாதம்ஸ் F37; பெங்குவின் F-18
யதார்த்தக் கவிதைகள்: இயல்பான கவிதைகளைத் தொடர்ந்து முன்னிறுத்திவருபவரான அதியமான் தனது முதல் கவிதைத் தொகுப்பான ‘குடைக்காவல்’-லிலும் அதனையே தொடர்ந்திருக்கிறார். அந்த வகையில், ‘குடைக்காவல்’ கவிதைத் தொகுப்பு நிறைய யதார்த்தக் கவிதைகளைத் தன்னுள்ளே கொண்டிருக்கிறது. இருள்-ஒளி என வாழ்வின் நிஜத்தைத் தயக்கமின்றிப் பேசுகிறது.
குடைக்காவல்
வ.அதியமான்
சால்ட் பதிப்பகம்
விலை: ரூ.130
ஆஹா: திராவிட மின்னிதழ் தொகுப்பு - திராவிடக் கருத்தியலைப் பரப்பும் நோக்கில் தொடங்கப்பட்டது திராவிட வாசிப்பு மின்னிதழ். 2019 செப்டம்பர் மாதத்தில் முதல் திராவிட வாசிப்பு மின்னிதழ் பேரறிஞர் அண்ணா சிறப்பிதழாக வெளியானது. இதுவரை 43 மின்னிதழ்கள் வெளியாகியுள்ளன.
திறன்பேசியிலும் கணினியிலும் வாசிப்பதற்கு ஏதுவான மின்னிதழ்களை, அச்சு நூல்களை வாசிப்போருக்கும் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் திராவிட வாசிப்பு மின்னிதழ்களின் முதல் தொகுப்பு நூல் வெளியாகியுள்ளது. இதில் 141 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
தந்தை பெரியார், ஈ.வெ.ரா.மணியம்மையார், முன்னாள் முதல்வர்கள் அண்ணா, மு.கருணாநிதி, பேராசிரியர் க.அன்பழகன், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்த படைப்புகள் தனி இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளன; திராவிடம், அறிவியல் குறித்த படைப்புகள் தனி இயல்களாக உள்ளன.
திராவிட எழுத்தாளர்களின் பேட்டிகள் பகுதியில், கோவி.லெனின், மருத்துவர் பூவண்ணன் கணபதி, டான் அசோக் உள்ளிட்டோரின் பேட்டிகள் இடம்பெற்றுள்ளன. தொகுப்பின் பெரும்பான்மைக் கட்டுரைகளை எழுதியவர்கள் இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இளைய தலைமுறையின்
புதிய திராவிடம்
தொகுப்பாசிரியர்: ராஜராஜன் ஆர்.ஜெ
நிகர்மொழி பதிப்பகம்
விலை: ரூ.500
அம்பேத்கரின் இறுதி ஆண்டுகள்: இந்திய அரசமைப்பின் முதன்மைச் சிற்பி அம்பேத்கர். திருமண உறவிலும் சொத்துரிமையிலும் பெண்களுக்கான உரிமைகளைச் சட்டபூர்வமாக உறுதிசெய்திருக்கும் இந்து தனிநபர் சட்டங்களுக்கு முன்னோடியான இந்து சட்டத் தொகுப்பை உருவாக்கியவரும் அவரே.
அரசமைப்பையும் இந்து சட்டத் தொகுப்பையும் அம்பேத்கர் வடிவமைத்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில், அவர் உடலளவில் எவ்வளவு நலிவுகளைச் சந்தித்தார், தேர்தல் தோல்விகள் அவர் மனதை எந்தளவுக்குத் துவளச் செய்தன என்பனவற்றை, உடனிருந்து உதவிய அவரது இரண்டாவது மனைவி சவிதாவின் இந்த சுயசரிதை படம்பிடித்துக் காட்டுகிறது.
உடல்நிலை ஒத்துழைக்காத நிலையிலும் ஒடுக்கப்பட்டோருக்குக் கல்வியைக் கொண்டுசேர்க்கவும் பெளத்தத்தைப் பரப்பவும் அம்பேத்கர் மேற்கொண்ட பெருமுயற்சிகளை இந்நூல் வழியாக அறிந்துகொள்ள முடியும். ஒரு மாபெரும் அறிஞரின் உடல்நலத்தைக் காப்பதற்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்துக்கொண்ட மருத்துவர் சவிதா, தனிப்பட்ட வாழ்வில் சந்தித்த துரோகங்களும் பொதுவாழ்வில் எதிர்கொண்ட அவதூறுகளும் மனதை நெகிழச் செய்யும்.
அம்பேத்கரின் இறுதி ஆண்டுகளைக் குறித்த மிக நெருக்கமான சித்திரத்தை அளிக்கிறது இந்நூல். மராத்தியில் வெளிவந்து, ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இந்நூல், உடனடியாகத் தமிழில் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாபாசாஹேப்: டாக்டர் அம்பேத்கருடன் என் வாழ்க்கை
சவிதா அம்பேத்கர்
தமிழில்: த.ராஜன்
எதிர் வெளியீடு
விலை: ரூ.699
செல்ஃபி பாயிண்ட்
‘சுட்டி யானை - தி ஸ்பேஸ் ஃபார் சில்ட்ரன்’ என்னும் பதிப்பகம்
(அரங்கு எண்: 288) சிறார் நூல்களை விற்பனைக்கு
வைத்துள்ளது. அங்கு சுட்டி யானையுடன் குழந்தைகள் செல்ஃபி
எடுத்துக்கொள்வதற்கான செல்ஃபி பாயிண்ட் இது.
முத்துகள் 5
கிறிஸ்தவ தமிழ் வேதாகமத்தின் வரலாறு
சபாபதி குலேந்திரன்
குமரன் புத்தக இல்லம்
விலை: ரூ.325
நசிகேதன் (நீள்கவிதை)
பி.ரவிகுமார்
தமிழில்: சுகுமாரன்
மலர் புக்ஸ்
விலை: ரூ.90
இடையிலாடும் ஊஞ்சல்
ச.தமிழ்ச்செல்வன்
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.140
குழந்தைகளே
இது உங்கள் காலம்
சூ.ம.ஜெயசீலன்
கனலி
விலை: ரூ.150
உன் தோலுக்கு
அடியில் நீ
தமயந்தி பிஸ்வாஸ்
தமிழில்: க.பூரணச்சந்திரன்
அடையாளம்
விலை: ரூ.430
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT